பிற்காலப் பாண்டியரின் வீழ்ச்சியை அடுத்து டில்லி சுல்தான்களின் ஆட்சி மதுரையில் நிலை பெற்றது. பின்னர் விசய நகரப் படையெடுப்பால் சுல்தான்கள் ஆட்சி மறைந்து மதுரை, தஞ்சை, செஞ்சி ஆகிய மூன்று ஊர்களைத் தலைநகராக் கொண்டு நாயக்கர் ஆட்சி உருவானது. விஜயநகரப் பேரரசின் ஆளுநர்கள் போன்ற நிலையில் மூன்று நாயக்க மன்னர்களும் செயல்பட்டனர். இதன் அடிப்படையில் கிட்டத்தட்ட விசய நகரப் பேரரசின் நிர்வாக முறை நடைமுறைப் படுத்தப்பட்டது. நாடு என்ற பெயரிலான பெரிய பிரிவு மண்டலம் எனப்பட்டது. மண்டலம் பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது. பாளையக்காரர் என்பவர் பாளையங்களின் நிர்வாகியாக இருந்தார். குடிகளிடம் வரிவாங்கி நாயக்க மன்னர்களுக்கு அனுப்பி வைப்பது இவர்களது பொறுப்பாயிற்று தாங்கள் வாங்கும் வரியில் மூன்றில் ஒரு பங்கை நாயக்க மன்னருக்கு அனுப்பி வந்தனர்.

                பிற்காலச் சோழர் காலத்தைப் போன்று நன்செய், புன்செய் என நிலங்கள் தரம் பிரிக்கப்பட்டு நிலவரி வாங்கப்பட்டது. வீடு, காலி மனை, தோட்டம் என்பனவற்றிற்கும் ஆடு, மாடு ஆகிய கால்நடைகளுக்கும் வரி விதிக்கப்பட்டது. கருமார், தச்சர், கம்மாளர், குயவர், நெசவாளர் போன்ற கைவினைஞர்களும் வண்ணார், நாவிதர் ஆகிய குடி ஊழியக்காரர்களும் மீன் பிடிப்போர் ஆடு வளர்ப்போர் ஆகியோரும் தனித் தனியாக வரி செலுத்தினர். பரத்தையர்களிடமும் தொழில் வரி வாங்கப்பட்டது! பிடாரி வரி என்ற பெயரில் கோவில் விழாக்களுக்கு வரி வாங்கப்பட்டது.

                பொது நீர் நிலைகளில் மீன் பிடிப்போர் ‘பாசை வரி’ என்ற வரியையும், மக்கள் ஆறுகளை கடப்பதற்கு உதவும் வகையில் ஓடம் அல்லது படகு விடுவோர் ‘வத்தை வரி’ என்ற வரியையும் செலுத்தினர். ஊர்க்காவல் செலவுக்காகப் பாடிகாவல் என்ற பெயரில் வரி வாங்கப்பட்டது.

                இவை தவிர உப்பு உற்பத்தி செய்வோரும் முத்து, சங்கு ஆகியனவற்றை கடலிலிருந்து எடுப்போரும் வரி செலுத்தினர். இவ்வரிகளில் நெல்லாக செலுத்தப்பட்டவை நெல் முதல் என்றும் பொன்னாக செலுத்தப்பட்டவை பொன் முதல் என்றும் அழைக்கப்பட்டன. 

                இன்றையக் கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குப் பகுதியிலுள்ள செங்கோட்டை நகரமும் அதைச் சுற்றியுள்ள சில கிராமங்களும் அன்றையச் சென்னை மாநிலத்திற்குள் இடம் பெறவில்லை. திருவனந்தபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட திருவிதாங்கூர் மன்னராட்சியின் கீழ் இப்பகுதிகள் இருந்தன. மக்களின் அடிப்படைத் தொழிலாக வேளாண்மை இருந்ததன் அடிப்படையில் நிலவரி அரசின் முக்கிய வருவாய் இனமாக இருந்தது. நிலவரி தவிர வேறு சில வரிகளும் குடி மக்களிடம் இருந்து, குறிப்பாக அடித்தன மக்களிடமிருந்து வாங்கப்பட்டன. அவற்றுள் சில வருமாறு:

                தலைக்காணம் (தலைவரி – ஞழடட – வயஒ) என்ற வரி ஒருவன் நாட்டில் வாழும் காரணத்திற்காகவே வாங்கப்பட்டது. ‘குப்பக் காசு’ என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒலைச் குச்சில்களுக்கும் வரி வாங்கப்பட்டது. கள் இறக்குவோரிடம் ‘குட்ட நாழி’ என்ற பெயரில் கள்ளாகவே வரி வாங்கப்பட்டது. ஒரு பானைக் கள்ளிற்கு ஒரு நாழி என்ற அளவில் கள் இறக்குவோர் வரியாகச் செலுத்தியுள்ளனர். இதை விடக் கொடுமையாக, பனை ஏறப் பயன்படுத்ததும் சிறிய ஏணிக்கு ‘ஏணிக் காணம்’ என்ற பெயரில் வரி வாங்கப்பட்டது. மரங்களுக்கும் வரி விதிக்கப்பட்டது. முடி வளர்க்கவும், மீசை வைக்கவும் கூட வரி செலுத்தியாக வேண்டும். தங்க அணிகலன்கள் அணிவோரிடமிருந்து ‘மேனிப் பொன்’ என்ற வரி வாங்கப்பட்டது. ஆளுவோர்கள் எவ்வளவு இழிவான முறையில் வரி விதிப்பார்கள் என்பதற்கு பெண்களின் முலை மீது விதிக்கப்பட்ட ‘முலை வரி’ என்ற வரி சான்றாகும்.

                ஒவ்வொரு குறிப்பிட்ட மீன் வகையைப் பிடிப்பதற்கு மீனவர்கள் வெள;வேறு வலைகள் வைத்திருப்பார்கள். இம் மீன் வலைகளுக்கும், கடலில் செல்லப் பயன்படுத்தும் பாய்மரத் தோணிகளுக்கும் வரி விதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முட்டம் என்ற கடற்கரைக் கிராமத்தில் கிடைத்த 1494 ஆம் ஆண்டுக் கல்வெட்டு

                கடமை வகையில் மடிவலை

                ஒன்றும் வாளை வலை ஒன்றும்

                சாளை வலை ஒன்றும்

                சண வலை ஒன்றும்

                முட்டங் கோவை குளத்தில்

                ஏற்று இறக்க உரு ஒன்றுக்கு

                பணம் ஒன்றாகவும்

 என்று இவ்வரி விதிப்பைக் குறிப்பிடுகிறது. இத்தகைய வரி இனங்களில் நூறு வரியினங்களை நீக்கிய பின்பும் கூட 1864–65 இல் இரு நூறு வரிகள் வழக்கிலிருந்துள்ளதாக டி.கே. வேலுப்பிள்ளை எழுதியுள்ளார்.

தொடரும்…