ஒருநாள் ஒரு பொழுதாவது தானும் அந்த பூசாரிநாயக்கர் மாதிரியே பெரிய்ய சாமி கொண்டாடியா வரணும்னு உள்ளியனுக்கு ஆசை. சும்மா சொல்லக் கூடாது டேயப்பா ஆளைப் பார்த்தாலே அந்த மனுசன்ட்ட ஒரு அரற்றி இருந்தது. செவத்த உடம்பு கிடாமீசை புருவத்துக்கு உள்ளடிச்சி முழிச்ச பளிங்குமாதிரி பூனைக்கண்ணுக. காவியில வேட்டி துண்டு, நால்வழிச்சாலை மாதிரி திருநீற்றுப்பட்டை, ருத்திராட்ச கொட்டை.

சாப்பாட்டுக்கென்ன கொறச்ச. சம்சாரி வீடுகள்ல பலகாரம்ன்னு செய்திட்டா தலைவாழையில வச்சு இவருக்கு பரிமாறிட்டுத்தான் மத்தவேல. உடம்புல எங்கெயாவது எலும்பு தெரியட்டுமே ம்ஹூம். வெண்ணெ உருண்ட மாதிரி அலைவார்.
சக்திமாரியம்மன் பெரிய கோவில்ல பூசாரிநாயக்கர் காலடி வைக்கிற நேரந்தான் சாமியே வந்த மாதிரி சனங்க பரவசப்படுவாங்க. திருநீறு வாங்க நீயி நானுன்னு முந்துவாங்க. சாமியெல்லாம் பிறகுதான். இவரு பார்வைபட்டா போதும். அதோட கொஞ்சம் சித்து வேலைகளும் மை வச்சு வசியம் பண்ணுற தொழில் ரகசியமும் மலையாளத்திக்கம் போய் படிச்சு வந்ததாக சனங்கள் பயந்து பேசிக் கொள்கிறார்கள்.

கார்த்திகை பிறந்தால் சபரிமலைக்கு மாலை போடுகிற ஆளுகள் வந்து குமியுங்க. கன்னிபூசையில் இவர்தான் அர்ச்சிக்கிறவர். கடைசியில் கருப்பன் வந்து ஆடுவதைப் பார்க்க கூட்டம் ஹொகே கொள்ளேன்னு கூடிப்போகும்.

அடுத்த வாரம் திருவிழா. பங்குனிப் பொங்கலுக்கு காப்பு கட்டியாச்சு. அடடா பொங்கலுக்கு முதல்நாள் பார்க்கணுமே. சக்தி மாரியம்மன் சன்னதியிலிருந்து ஊர் முன்னோடி சாமி கருப்பனா அருளாகி ஊர்க்காவல் தெய்வம் அய்யனாரை அழைக்க அந்த வல்லயக்கம்பை எடுத்து மணிகள் கலகலங்க கூரான வேல் யார் மேலயாவது பாய்ஞ்சிருமோன்னு ஜனம் பதற நாலாபுறமும் வீசுவார்.

இருபத்தோரு பச்சை முட்டைகளை நறநறன்னு மென்னு தின்னு கருப்பன் களைகட்டி நிற்கும் போது சம்சாரிகள் அருள் வாக்கு கேட்பார்கள்.

"இந்த வருசம் மழை தண்ணிக்கு குறைவில்லாம பயிர் பச்சைகள், ஆடு மாடுகள்க்கு எந்தக்குறைவும் இருக்கக் கூடாது. முன்னோடிதான் துணை".

"ஹஹ்ஹா.. ஹஹ்ஹா.... ஹஹ்ஹா...

வானத்தைப் பார்த்து பலம்மா சிரிப்பார். பூசாரிநாயக்கர். அந்த வருசம் விளைஞ்சாலும் அந்த சிரிப்புக்கு ஒரு அர்த்தம் சொல்லிக் கொள்வார்கள். விளையாவிட்டாலும் வேறொரு அர்த்தம் சொல்லிக் கொள்வார்கள். சக்திக்கு ராத்திரி ஒரு மணிக்கு காவு கொடுத்த வெள்ளைச் சேவல் குழம்பும் ஒண்ணே கால் சின்னப்பக்கா பச்சரிசிச் சோறும் ஒரு பருக்கை விடாமச் சாப்புட்டு மதியம் ஒரு மணிக்கு மேல நாக்கைத் துருத்தி ஒரு ஆட்டம் போட்டு மேளச் சத்தம் முழங்க ஓடுவாரு பார் ஓட்டம்.
பின்னாடி யாரும் தொயர முடியாது. அது சமயம் யாரும் குறுக்காகப்பட்டால் அவ்வளதான் சாமி காவு வாங்கிரும்னு சொல்வாங்க.

ஓடுன ஓட்டம் கிழக்கே தம்புரான் ஆலமரந்தாண்டி செந்நாக்குளம் போறவரைக்கும் தான் நாயக்கர் உருவம் தெரியும். சடச்சியூரணிக்குள்ள என்ன நடக்கும்ன்னு யாருக்கும் தெரியாது. அந்த எல்கையிலிருந்துதான் கருப்பன் இறங்கிக்கிட்டு அய்யனார் அருளாகி அந்த தெய்வத்தை சுமந்துக்கிட்டு வரும்போது இங்கே ஊர்ச்சனம் பூராவும் வேப்பங்குலையோட மாரியாத்தா ஐயனாரை வரவேற்கிற ஐதீகமா குலவைபோட்டு நிப்பாங்க. சனமே காலில கையில விழுந்து எழுந்திருக்கும்.
உள்ளியனும் ஒரு சாமி கொண்டாடிதான். இவன் அந்த ஊர் தெற்குப் பக்கம் காலனியிலிருக்கிற பகடை மாரியம்மன் கோவில் பூசாரி.கோயில் பேரிலேயே தெரிஞ்சுக்கிடலாம் அந்தக் கோயிலுக்கான மரியாதையை பகடை சாதிக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பகடை மாரியம்மன் கோயிலை சுற்றித்தான் ஊர் சம்சாரிகள் 'வெளிக்கு' இருக்கிறது.

தெய்வத்தை சுமந்துட்டு திரிகிற பூசாரி நாயக்கர் கூட ஒருநாளைக்கு அஞ்சு ஆறு தடவை இந்தக்கோயிலுக்கு பின்புறம்தான் 'உக்காந்துட்டு' கோவணத்தை பெரிய மகாராஜா மாதிரி இடது கையில போட்ட மட்டுல வந்து கோயில் முன்புறமா இருக்கிற அடி குழாயில அங்கிருக்கிறவங்களை அதிகாரம் பண்ணி தண்ணி அடிக்கச் சொல்லி கால் கழுவிவிட்டு பிறகு கோவணத்தை இறுக்கி கட்டுன மட்டுல போவார்.

உள்ளியன் சாதிக் காலனி பொம்பளைகளை பொம்பளைகளாகவே நெனக்கிறதில்லே. கோயில்ல எத்தனை பொம்பளைகள் கூடி நின்னுக்கிட்டிருந்தாலும் சரி. ஆளுகள் வரிசை வரிசையா அடி குழாயை மாத்தி மாத்தி அடிச்சி கால் கழுவிக் கிட்டேதான் இருப்பார்கள்.

ஒரு சிலபேர், மேலே திரச்சி விட்ட வேட்டியை இறக்கிவிடாமல் கோவிலை விட்டு தார்ரோடு போகிறவரைக்கும் பகடை மாரிக்கு 'பின்னாடி' காட்டிக் கொண்டே தான் போகிறார்கள். பகடைப் பயக சாமிக்கெல்லாம் என்ன பெருசா துடி இருக்கப் போகுதுன்னு இளக்காரந்தான்.

பூசாரி நாயக்கர் வீட்டுக்குள் யாரும் இதுவரை போனதில்லை. உள்ளே என்ன மந்திரம் வச்சிருக்காரோ மை மாய்மாலம் இருக்குமோ என்ற பயந்தான். உள்ளியன் அவரோட வீடு கூட கோயில் மாதிரிதான் இருக்கும் என்ற உத்திப்பாட்டில் இவனுடைய எட்டுக்கெட்டு அளவுள்ள கூரை வீட்டில் அவனுக்கு தெரிஞ்ச அளவு பக்திப் பரவசப்படுத்தி வைத்திருந்தான்.
சிவாஜிகணேசன், சாவித்திரி சிவன் - பார்வதி வேஷம் போட்ட திருவிளையாடல் படமும் தனிப்பிறவி படத்தில் எம்ஜிஆர் முருகன் வேஷம்போட்டு அவர் காலடியில் வள்ளி ஜெயலலிதா அமர்ந்து கையுயர்த்தி நிற்கும் படமும் ஒட்டப்பட்டு ரெண்டாவது மூணாவது தலைமுறையாய் அடுப்படி புகைபட்டு மங்கலாய்க் கிடந்தது.

எப்பவோ இருக்கன்குடி போய் வரும்போது வாங்கி வந்த கண்ணாடி பிரேமுக்குள் மாரித்தாயி பூச்சி அரித்துப் போய் கிடந்தாள். அவைகளுக்கு காவலிருந்ததுபோல் இப்பொ இருக்கிற சினிமா ஸ்டார்களின் படங்களை அவன் ஐந்து வயது மகன் ரசினி வளைத்து வளைத்து ஒட்டி வைத்திருந்தான்.

இவனும் பூசாரி என்கிற முறையில் பூசாரிநாயக்கரைப் பார்த்து பலமுறை கும்பிடுபோட்டுப் பார்த்தான். அவரை வச்சுத்தானே அவங்க சாமிக்கு மரியாதை. எதோ நாமளும் ஒண்ணுக்கு பேர்பாதியா அவர்கிட்டெ தொழில் ரகசியம் கத்துக்கிட்டா நம்மளை வச்சி பகடை மாரியம்மாளுக்கு ஒரு விமோசனம் வராதான்னுதான்

அவரென்னடான்னா இவனை ஏறெடுத்தே பார்க்கிறதில்லெ. நாமளும் பூசாரி, இவனும் பூசாரியான்னு பூசாரி சாதிக்குள் அவனை சேர்க்கவே கிடையாது. அப்படியொரு நெனப்பு அவனுக்கு வந்திராதபடி இலைமறைகாயா இடைஞ்சல் வேற பண்ணுவார்.
சக்தி மாரியம்மன் கோயில் பொங்கல் முடிஞ்சா அடுத்த வாரம் பகடை மாரியம்மன் கோவில் பொங்கல் நடக்கும்.
பூசாரி நாயக்கர் மாதிரியே இவனும் கருப்பனா அருளாகி வல்யக்கம்பு எடுத்து வீசி அய்யனார் அழைச்சி வர ஆசை.
சம்சாரிகள்ன்னா கோயிலிலிருந்து செந்நாக்குளம் சடைச்சியூரணி வரைக்கும் சாமி போய் வர்றதுக்காக அவங்க நிலங்கள்ல வண்டிப்பாதை விட்டுருக்காங்க. காலனி ஆளுகளுக்கு ஏது பாதை?

அந்த வருசம் உள்ளியன் வல்லயக் கம்புக்கு பதிலா அவங்களுக்கு தக்கன ஆட்டுக்குலை ஒடிக்கிற தொறட்டிய வச்சு சக்கிலிய சனங்க சூழ நின்னு குலவைபோட பூசாரி நாயக்கர் மாதிரியே சுழட்டுனான். வெள்ளைச் சேவல்க்கறியும், பக்காச் சோத்துக்கு பதிலா சூடக்கருவாட்டு உப்புச்சாறும் கேப்பைக் களியும் பெண்ஜாதி மணக்க மணக்க செய்து கொடுக்க அந்தக் கவிச்சை சாப்பிட்டு ஆத்தாளுக்கு ஆசாரமானான்.

ஆத்தா எல்லாத்தையும் ஏற்றுக்கிட்ட மாதிரி எல்லாம் சரியாத்தான் நடந்துக்கிட்டிருந்தது. பூசாரிநாயக்கர் மாதிரியே 'ஆன்னு' அலறிக்கிடடே கிழக்காம ஓட காலை எடுத்து வச்சான்.

"ஏலேய் உள்ளியா! மந்தைப் புஞ்சை மக்காச்சோளத்துல ஒலப்பி ஒரு தட்டை ஒடிஞ்சாலும் காலனியில ஒரு ஆடு கோழி இருக்காது. பாத்துக்கோ"

கீழவீட்டு கிருஷ்ணசாமி நாயக்கர் மொதலாளி வரப்புல நின்னுக்கிட்டு சொன்னார். அப்படியே ஆடிக்கிட்டே திரும்பிட்டான்.
பழையபடிக்கும் அருந்ததிய சனங்க குலவை போட ஏய்...ம்.... ஆய்ன்னு கையில கம்பை சுழட்டுன மானிக்கி அய்யனார்தான் அழைக்க முடியாமப் போச்சி. கொடுத்த துட்டுக்கு வந்த மேளகாரங்களுக்கு வேலை கொடுக்கணுமேன்னு தார்ரோடு வரைக்கும் சாமியை ஆடவிட்டு ஆணுபொண்ணு சின்னஞ்சிறிசு சந்தோசமா ஆடிக்கிட்டுப் போனாங்க.

தார்ரோடுதான் ஏறியிருப்பாங்க. கரெக்டா அந்நேரம் சப் இன்ஸ்பெக்டர் ஒரு போலீஸோட பைக்குல வந்தார்.
"டேய் என்ன கூட்டம்? எங்கே மொத்தமா திரண்டு போறீங்க?"

"பொங்கலு சாமி!"

"அதெல்லாம் உங்க தெருவுக்குள்ளயே வச்சுக்கிடணும். ரோட்டுப்பக்கம் வர்ற வேலை வச்சுக்கிட்டீங்க மொத்தமா கொண்டு போய் உள்ளே தள்ளிருவேன். அந்தா அங்கெ ஆடுறவனைக் கூப்பிடு"

உள்ளியன் பொசுக்குன்னு ஆக்ரோசத்தை கொறச்சி ஆடுன உடம்பு நடுக்கங்கொடுக்க கும்பிட்ட மட்டுல வந்தான்.
"தண்ணி போட்டுருக்கயாடா"

உள்ளியன் இல்லைன்னு தலைய ஆட்டுனான்.

"ஏன் வாயைத் திறந்து சொல்ல மாட்டயோ மயிரு. உதைபடுவே படுவா"

லத்தியை உருவி ஓங்கினார்.

"போங்கடா திரும்பி...ம்...."

உள்ளியன் உக்கிப்போனான். ரொம்ப தூரம் போய்த் திரும்பிப் பார்த்தான். எல்லாரும் ஒழுங்கா திரும்பிப் போறாங்களா என்று பைக்கில் நின்றவாறு கவனித்துக் கொண்டிருந்தது போலீஸ். தள்ளி பூசாரிநாயக்கரும் சில சம்சாரிகளும் நின்று வேடிக்கை மாதிரி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பகடை மாரியம்மாளுக்கு சக்தி அவ்வளவுதான். அதுக்கென்ன செய்ய முடியும் நம்மள மாதிரித்தான இருக்கும் நம்ம சாமியும்.
இந்த வருசம் சடச்சியூரணியில பூசாரி நாயகர் என்னதான் பண்ணுறார்ங்கிறதை பார்த்தே ஆகணும். அந்த வித்தைய மட்டும் தெரிஞ்சுக்கிட்டா நம்ம கோயிலுக்கு நம்ம மூலியமா ஒரு மருவாதி வந்துதான் தீரும். உள்ளியன் ஒரு வாரமா கடுமையா விரதமிருந்தான்.

இன்றைக்கு மதியம் ஒரு மணிக்குத்தான் பூசாரி நாயக்கர் அய்யனார் அழைக்கிற நாள். சடச்சியூரணியில் போய் பாக்கும்போது சாமி குத்தம் வந்திரக் கூடாதில்லையா. கோபத்துல அய்யனாரோ கருப்பனோ காவு வாங்கீட்டா?

ஆத்தாளை நெனச்சு விரதமிருந்த உள்ளியன் சாப்பிட்டும் சாப்பிடாம ஆளுகூட கொஞ்சம் மெலிவுதான்.

சக்திமாரியம்மன் கோயில்ல நகரா அடிக்கிற சத்தங்கேட்டது. கொட்டு மேளம் கட்டி முழங்குனது. பெண்களெல்லாம் குளிச்சு மொழுகி குலவை போட கிளம்பி வந்துட்டாங்க.

காலை மணி ஒன்பது. சின்ன பக்காவுக்கு ஒரு பக்கா பச்சை அரிசிச்சோறும் ஒரு சேவலும் ஒத்தையாளா தின்னு முடிச்சார் பூசாரி நாயக்கர். இப்பொவிருந்தே ஒவ்வொரு சாஸ்திரமா நடத்தி பன்னிரெண்டு மணி வாக்குல வல்லயக் கம்பெடுத்து கிளம்புனா ஆலமரம் செந்நாக்குளம்ன்னு சடச்சியூரணி வர மணிசரியா ஒண்ணாகும்.

உள்ளியன் பகடை மாரியம்மன் கோயில் மண்ணெடுத்து பூசிக்கிட்டு குறுக்குப் பாதையா யாரும் பார்க்காம வெயிலான வெயிலில் நடந்து சடைச்சியூரணி தெற்குக் கரையில கள்ளிச்செடிகளுக்கு ஊடே உக்காந்துட்டான். இருக்க இருக்க வெயில் உக்கிரமா அடிச்சது. தண்ணீர் தாகம் நா வறண்டது. சுத்து முத்து ஒரு பொட்டுத் தண்ணியில்லை. ஆத்தாளை நெனச்சுக்கிட்டான்.
"தாயி இந்த ஒரு வித்தைய கத்துக்கிடற வரைக்கும் நீ என்ன சோதித்தாலும் தாங்குவேன் ஆத்தா மாரி"

"ஆத்தாமேல பழிபோட்டு பசியுந்தாகமுமா உசிரைப்பிடிச்சி உட்கார்ந்திருந்தான். திடீர்ன்னு ஊருக்குள்ளிருந்து ஆதாளி மேளம் கேட்டது. குலவையும் கேட்டது. நகரா அதிர அதிர முழங்குனது.

இப்படி ஒண்ணு சேர்ந்து முழங்குனால் கருப்பசாமி கிளம்பிட்டார்ன்னு அர்த்தம். உள்ளியன் எழுந்திருச்சி மேற்கே பாத்தான். தூரத்துல பூசாரி நாயக்கர் வல்லயக் கம்போடு ஓடி வர்றது தெரிஞ்சது.

பொழுது உச்சிக்கு வந்தது. திடீர்ன்னு ஒரு சூறாவளி போல காற்று காற்றாடி சுற்றுனது. அந்த வெயிலுக்கும் காற்றுக்கும் உள்ளியனுக்கு புல்லரிச்சது. அம்மா அம்மா என்று மொணங்கி என்னம்மோ நடக்கப்போகுதுன்னு கண்ணீரை கண்ணுக்குள் முட்டச் சேர்த்து பரவசமானான்.

ரொம்பத்தூரம் கிழக்கே வந்துவிட்ட பூசாரிநாயக்கர் ஊரை திரும்பித் திரும்பிப் பார்த்தார்.

பார்வை ஆளை மறைக்கிற அளவு வந்துவிட்ட தெளிவில் சாவகாசமாய் நடந்து வந்தார்.

ஊரணிக்கு நடுவிலே காட்டாமணக்கும் அரளிச் செடியும் மரம்போல் வளர்ந்து நல்ல நிழலோட்டமாயிருந்தது. வல்லயக் கம்பை பொத்துன்னு போட்டதும் இடுப்புல கட்டியிருந்த துண்டையெடுத்து உடம்பெல்லாம் வியர்வையை துவட்டிய பிறகு மடியிலிருந்து ஒரு சுருட்டை எடுத்து பத்த வச்சதும் புகையை சப்பி சப்பி சாவகாசமா வெளியே விட்டார்.

உள்ளியன் கூர்மையானான். சுருட்டும் சாராயமும் கருப்பனுக்கும் அய்யனார்க்கும் உதகந்ததுதானே.

பிறகு காவி வேட்டியை இடுப்புக்கு உயர்த்தி கோவணத்தை பின்புறம் உருவி விட்டதும் வல்லயக் கம்பை எடுத்து வலது கை தாங்கலா ஊன்றிய மட்டுல நிழலோட்டத்தில் உட்கார்ந்து வழக்கம்போல் பகடை மாரியம்மன் கோயிலில் இந்நேரம் ஐந்தாறு முறை செய்வதை ஒரே தடவையா இங்கே உட்கார்ந்து செய்ய ஆரம்பித்தார்.

உள்ளியனுக்கு கண்ணைக் கட்டுனது. அடடா இதுக்குத்தான் அந்த ஓட்டம் ஓடி வந்தாரா? பின்னே அவருதான் கலையிலிருந்து எவ்வளவு நேரந்தான் தாக்கட்டுவார்.

இருந்தாலும் உள்ளியனுக்கு இன்னும் அவர் மேல் நம்பிக்கை போகவில்லை. அவ்வளவு ஜனங்க இவரை நம்புறாங்கன்னா எதோ வித்தை இவருகிட்ட இல்லாமலா?

அப்படியே எழுந்திருச்சி கோவணத்தை இறுக்கி பின்புறம் செருகினதும் வல்லயக் கம்பை ஊன்றி ஊன்றி ஊரைப் பார்த்து மெல்ல மெல்ல நடந்தார். கொஞ்ச தூரம் நடந்த பிறகு ஊரிலிருந்து குறிப்பாய் பார்த்தால் ஆள் உருவம் தெரியும் என்று நிதானித்தவுடன் மெதுவாக ஓட ஆரம்பித்தார்.

ஊர் நெருங்க நெருங்க ஆரவாரமாய் ஆட்டத்தோடு ஓடத் தொங்கினார். இதுதான் கருப்பசாமியை இறக்கிட்டு அய்யனாரை ஏற்றிக்கிட்டு போகிற வித்தை லட்சணமாக்கும் அட நாதாரி நாக்கரே! நீ நாசமாப்போக. இதை பாக்கவா விரதம் விரதம்ன்னு ஒருவாரம் குலை பட்டினியா கிடந்தேன். இந்த மத்தியான வெய்யிலிலே பசியும் நா வறச்சையுமா கத்தாளைக்குள்ள கிடந்து ஐயையே!

சக்தி மாரியம்மன் கோயில் பொங்கல் முடிஞ்சு அடுத்த வாரம் பகடை மாரியம்மன் கோயில் பொங்கல் ஆரம்பமானது. உள்ளியன் மேற்கண்ட விசயத்தைய யார்கிட்டயும் சொல்லிக்கிடலை. நல்ல கனாக்கண்டா சொல்லலாம்.

அன்றைக்கு நல்லா விடிஞ்சும் விடியாம சாம்பல் பூத்திருந்த நேரம் அருந்ததிய பெண்கள் பகடை மாரியம்மன் கோயிலுக்கு முன்னாடி பொங்கல் வச்சுக்கிட்டிருந்தாங்க.

பூசாரி உள்ளியன் கோயில் படிக்கட்டுல அமைதியா உட்கார்ந்திருந்தான். பொம்பளைகளே பெண்டுகளேன்னு கொஞ்சங்கூட தாட்சண்யமில்லாம பூசாரி நாயக்கரும் நாலு முக்கிய பெரிய மனுஸங்களும் வழக்கம்போல் கோயிலைச் சுற்றி அவங்க வேலைய முடிச்சிட்டு அடி குழாய்க்கு வந்தாங்க.

"டேய்.. ஏய்... அடிராமேளம்"

உட்கார்ந்திருந்த உள்ளியன் திடீர்ன்னு கூச்சல் போட்டான். அவன் கையில சக்தி மாரியம்மன் கோயிலில் உள்ள மாதிரியே மணிகள் பொருத்தி வேல் தாங்கிய கரும் வல்லயக் கம்பு சுழன்று கொண்டிருந்தது.

அரைத் தூக்கத்தில் உட்கார்ந்திருந்த கொட்டுக்காரர்கள் அடியும் பிடியுமாய் எழுந்து கொட்டு உறைகளை உருவிவிட்டு ஜின்னன்டிகுண்டா... ஜின்னன்டிகுண்டா... என்று முழக்கினார்கள்.

அதை சட்டை பண்ணாமல் அடி குழாய்ப் பக்கம் இடது குடங்கையில் கோவணத்தை போட்டு மகாராஜா மாதிரி நின்று கொண்டிருந்த பூசாரிநாயக்கர் முன் நின்ற உள்ளியன் "ஏய்... ச்சீ நீசப்பயலே" என்று புரட்டி புரட்டி அடிக்க ஆரம்பிச்சான்.
"டேய் உள்ளியா.. உள்ளியா..."

சம்சாரிகள் பதட்டமாய் கத்தி கூச்சல்போட்டு அங்குட்டும் இங்குட்டுமாக ஓடி தள்ளிப் போய் நின்று கொண்டார்கள்.
கொட்டுக்காரர்கள் பதட்டத்தில் மேளம் அடிப்பதை நிறுத்தினார்கள். உள்ளியன் அவர்களைப் பார்த்து கண்கள் தெறிக்கிற மாதிரி முழிச்சி "அடிரா மேளம்... ஏய்... ம்... நிறுத்தாதே அடி... ஏய்"

ஜின்னன்டிகுண்டா... ஜின்னன்டிகுண்டா....

நிறுத்துடா மேளத்தை என்ற பாவனையில் கையை மேல் நோக்கி உயர்த்திய உள்ளியன் அடி விழுந்து கீழே கிடக்கும் பூசாரி நாயக்கரை வல்லயக் கம்பின் வேல் கொண்டு குத்துவது போல பாவனையில் நின்று கொண்டு பாட ஆரம்பித்தான். "எம் முன்னோடியா வாழுற திருமண்ணல செந்நாக்குளம் மண்ணுல" இப்போது கையை மலர்த்தி ஆட்டுனான் அடிராமேளம் என்கிற மாதிரி ஜின்னன்டிகுண்டா... ஜின்னன்டிகுண்டா....

கையை உயர்த்தி ஆட்டி கண்களை சிவப்பாக்கி பூசாரிநாயக்கரை வெறித்தவாறு "கருப்பனை இறக்கிவிட்டு காவலனை அழைக்கச் சொன்னேன் ஆத்தா" கைகளை உயர்த்தி பொலபொலவென ஆட்டினான்.

ஜின்னன்டிகுடிகு ஜின்னன்டிகா ஜின்னன்டிகுடிகு ஜின்னன்டிகா.

"தரணி பிறந்தபோது பிறந்த தம்புரான் ஆலம்கலங்க மரம் குலுங்க மனம் கலங்க"

ஜின்னன்டிகுண்டா... ஜின்னன்டிகுண்டா.

சுந்தரமான சேலையாம். மதிய வேளையாம் தாயின் பேரிலே ஒரு நீசன் துர்ர்ர் வாசன் பூசாரி நாயக்கர் அதுக்கு மேல் தாமரிக்காமல்.

"ஆத்தா ஒம் புள்ளெய நீதான் மன்னிக்கணும். நாந்தப்பு பண்ணிட்டேன் ஆத்தா" பேயைப் பார்த்து அரண்டு போன முகத்தோடு கை கால்கள் நடுங்க உள்ளியனைப் பார்த்துக் கும்பிட்டு ஆடிப்போய் நின்னார்.

"ஆத்தாளுக்கு காலமெல்லாம் பண்ணுன அசிங்கத்தை உணர்றியா... ம்..."

"ஆமாதாயி ஆமாதாயி!"

"அப்படீன்னா நான் அமைதியாகி.. உன்னை மன்னிச்சு மலையேர்றேன். என் ஆலயத்தை ஒரு அஞ்சல்ல சுத்தம் பண்ணுவியா..."
"ஆகட்டும் தாயி"

"இல்லேன்னா இன்னையிலிருந்து எண்ணிக்கோ வர்ற எட்டாம் நாள் பொங்கல்ள..."

"வேண்டாந்தாயி... ஏய் வாங்கப்பா...."

பூசாரிநாயக்கரின் சிநேகிதர்கள் ஓடி வந்து விபரம் கேட்குமுன்னே அவர்களை கூட்டிக் கொண்டு போய் கோயிலைச் சுற்றி சுத்தம் பண்ண ஆரம்பிச்சார்.

பூசாரிநாயக்கர் பதறுவதை பார்த்தால் எதோ ஆகிப்போச்சுன்னு அவங்களுக்கு தெரிஞ்சு போச்சு.

ஒருத்தர் பொங்கலுக்கு வைத்திருந்த பருத்திமாரை எடுத்துக் கொண்டு ஓடினார்.

இன்னொருத்தர் செடி செத்தைகளை பிடுங்கி ஒதுங்க வச்சார். இன்னொருத்தர் ரெண்டு கையிலயும் மண்ணள்ளிக் கொண்டு ஓடினார்.

"ஆமா நீ மூணுமாத்தப் பிள்ளை நீ இருந்த இடத்துல இம்புட்டு மண்ணைப் போட்டு மூட அட எங்கேயாவது மண்வெட்டி இருந்தா எடுத்தாப்பா"

யாராவது ஒருத்தர் சுத்தத்தில குறை வச்சாலும் அது எல்லாரையும் பாதிக்குமேன்னு ஒரே தள்ளுமுள்ளில் கோயில் சுத்தமானது.

உள்ளியன் தூங்கி எழுந்திருச்ச மாதிரி "என்ன.. என்ன நடந்தது". அப்படீன்னு தலையை சொறிந்த மட்டுல நின்னான்.
எல்லாருக்கும் இந்த வேடிக்கையைப் பார்க்க அதிசமாய் இருந்தது. உள்ளியனுக்கு விளக்கம் சொல்ல நேரமில்லை.
ஒதுங்க வைத்தவர்கள் அடி குழாயில் கை கழுவ வந்தார்கள்.

"அட போங்கப்பா நேரங்காலந்தெரியாம" என்று பூசாரிநாயக்கர் அவர்களைத் தள்ளிக் கொண்டு போனார்.
யாரும் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கிடலை. அருந்ததியர் தெரு கூட என்னம்மோ நடந்து போச்சு என்று அன்றைக்கு ராத்திரி கம்முன்னு அடங்கிப்போச்சு. சாமம் போல இருக்கும்.

பூசாரி நாயக்கருக்கு தூக்கம் புடிக்கல. கோயில் திசையை நோக்கி அடிக்கடி கும்பிட்டார். "என்னமோ நான் ஆத்தாளை குளிப்பாட்டுற நேரமெல்லாம் வெறுங்கல்லை குளிப்பாட்டுறேன்னுதான் நெனச்சேன். கும்பிடுற சனங்க பேகொண்ட கழுதைகள்ன்னு நெனச்சேன். ஆத்தா தாயி நீ இருக்கே நீ இருக்கே. இந்த கிராமத்துல நீ துடியா இருக்கே. எனக்கு நல்ல புத்தி கொடுத்தே. ஒரு எளிய சாதிக்காரன் வாயில ஒரு அத்துவான காட்டுல நடந்த சமாச்சாரத்தை சொல்ல வச்சயே நீ தெய்வம் நீ தெய்வம்."

உள்ளியனுக்கு இப்பொதான் எல்லாமே புடிபட்டிருக்கு.

"சே, என்னம்மோ ஏதோன்னு நெனச்சி காலமெல்லாம் பாழாக்கிட்டமே. அட! துடி துடிங்கிறாங்களே அது நம்ம கையில இருக்கு. இன்னும் என்ன நம்ம சாமிக்கு துடி வந்த மாதிரிதான்."

"யய்யா.. யய்யா..."

ரசினி திடீர்ன்னு எழுந்திருச்சி உட்கார்ந்து கத்துனான்.

"என்னடா ரசினி நீ இன்னும் தூங்கலையா"

"யய்யா உனக்கு ஒரு ஆளுக்கு துடி வந்தே நம்ம கோயிலு அஞ்சு நிமிசத்துல சுத்தமாயிருச்சே; நம்ம காலனி ஆளுக எல்லார்க்கும் துடி வந்தா?

Pin It