ஒரு இனப்பாகுபாடு மிக்க சமூகத்தில் ஆப்பிரிக்க அமெரிக்கராக இருந்தபோதிலும் கூட தேர்தலில் வெற்றிபெற்றதற்காக திருவாளர் ஒபாமாவுக்கு நோபல்பரிசு வழங்கப்படுமானால், ஈவோ மொரேல்ஸ் தனது சொந்த நாட்டின் குடிமகன் என்ற முறையில் தேர்தலில் வெற்றி பெற்றதற்காகவும், வெற்றிக்குப்பிறகு தனது வாக்குறுதிகளையெல்லாம் செயல்படுத்திக்கொண்டிருப்பதற்காகவும் இந்தப் பரிசை பெறுவதற்கு உரிய தகுதி பெறுகிறார். முதல்முறையாக இரண்டு நாடுகளிலுமே அவரவர் இனக்குழுக்களைச் சேர்ந்த ஒரு நபர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்.

நான் பலமுறை கூறியிருக்கிறேன், ஒபாமா, தான் விரும்புகிற சமூக மற்றும் அரசியல் கட்டமைப்பிற்குள் ஒரு நவீனமான, நாகரிகமான மனிதர். அவர் சுமார் 50 மில்லியன் அமெரிக்கர்களுக்கு சுகாதார வசதியைக் கொண்டுவர விரும்புகிறார்; தனது நாடு அடைந்துள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து அதை மீட்டெடுக்க விரும்புகிறார்; படுகொலைகளை அரங்கேற்றிய போர்களையும், கொடிய சித்ரவதைகளையும் நடத்தியதன் விளைவாக சீர்குலைந்து போயிருக்கும் அமெரிக்க தேசத்தின் நற்பெயரை மீட்டுக்கொண்டுவர முயற்சிக்கிறார். ஆனால் அவர் ஒருபோதும் தனது நாட்டின்அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புமுறையை மாற்றுவதற்கு விரும்பவில்லை; அந்த சிந்தனைகூட அவருக்கு இல்லை; அது அவரால் முடியாது.

நமது ஊடகங்களிலும், கியூப விவாதக்களத்திலும் மதிப்புமிக்க புரட்சிகர தோழர்கள் தங்களது விமர்சனத்தை வெளிப்படுத்தினார்கள். அவர்களில் ஒருவர் இப்படி எழுதினார்: “ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட அதே வாரத்தில், அமெரிக்க செனட் சபை அதன் வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவிற்கான ராணுவ பட்ஜெட்டை நிறைவேற்றியிருக்கிறது; 626 பில்லியன் டாலர்கள்.”டி.வி. செய்தியின்போது மற்றொரு பத்திரிகையாளர் இவ்வாறு கருத்து கூறினார்: “இந்த விருதை பெறும் அளவிற்கு ஒபாமா அப்படி என்ன செய்துவிட்டார்?”. மற்றொருவர் கேட்கிறார் : “ஆப்கன் போர் தொடர்கிறதே, அங்கே குண்டு வீச்சுகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறதே?’’ இத்தகைய கருத்துக்கள் எதார்த்த நிலைமையின் அடிப்படையில் எழுகின்றன. ரோம் நகரில் திரைப்படத் தயாரிப்பாளர் மைக்கேல் மூர் இப்படி ஒரு கருத்தை வெளியிட்டார்: “பாராட்டுக்கள், ஜனாதிபதி ஒபாமா அவர்களே, நீங்கள் நோபல் பரிசு பெற்றதற்காக; இப்போது, தயவு செய்து, அதை பெறுவதற்கான தகுதியை ஈட்டிக்கொள்ளுங்கள்’’. மூரின் இந்தக் கருத்தை ஒபாமா ஏற்றுக்கொள்வார் என்று நான் நம்புகிறேன்.

இந்தப் பிரச்சனையில் எழுந்துள்ள நிலைமைகள் குறித்து மிக எளிதாக புரிந்துகொள்ளும் அளவிற்கு அவர் புத்திசாலி. இந்த விருதை பெறும் அளவிற்கு எதையும் செய்துவிடவில்லை என்பதை அவர் அறிவார். அன்றைய தினம் காலையில், இந்தப் பரிசால் மிகவும் ஈர்ப்புமிக்க தலைசிறந்த நபர்கள் கவுரவப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அவர்களது வரிசையில் நின்று அதை பெறும் அளவிற்கு பொருத்தமான காரியத்தை இன்னும் செய்துவிடவில்லை என்ற கருத்திலேயே தான் இருப்பதாக அவர் கூறினார். அமைதிக்கான நோபல் பரிசை தீர்மானிக்கிற குழுவில் 5 பேர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஸ்வீடன் நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் இந்தத் தேர்வு ஏகமனதான ஒன்றே என்று ஒரு செய்தித் தொடர்பாளர் கூறினார். பரிசு அறிவிக்கப்பட இருப்பது குறித்து, அவரிடம் முன்கூட்டியே ஆலோசனை நடத்துகிறார்களா, இல்லையா; முன்கூட்டியே அவரது கவனத்திற்கு கொண்டுவராமலேயே இத்தகைய முடிவு எடுக்கப்படுமா என்பதெல்லாம் ஆச்சரியத்திற்குரிய கேள்விகளே.

தனது 6வது பிறந்தநாளுக்கு முன்பு, ஈவோ மொரேல்ஸ், மிக மிக வறிய உள்ளூர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தார்; தனது சொந்த சமூகமான இல்லமா சமூகக்குழுவினரோடு, தனது தந்தையின் கைகளைப் பிடித்துக் கொண்டு ஆண்டிஸ் மலைத்தொடர் வழியாக கால்நடையாகவே பஞ்சம் பிழைக்க சென்றவர். அவர்களோடு 15 நாட்கள் நடந்து சென்று வெகுதூரத்தில் உள்ள சந்தையை அடைந்தார்கள். அங்கே இவரது சமூகத்தினரின் உணவை வாங்குவதற்காக இவரைப்போன்ற சிறுவர்கள் விற்கப்பட்டார்கள். இந்த கொடுமையான அனுபவம் குறித்து ஒருமுறை நான் கேட்டபோது ஈவோ என்னிடம் கூறிய பதில் அதிர வைத்தது. “அவர் ஓராயிரம் நட்சத்திரங்கள் ஜொலிக்கும் ஹோட்டலில் தங்கியிருந்தேன்’’ என்று கூறினார். மலை உச்சிக்கு மேலே தெரியும் மிகத்தெளிவான வானத்தைத்தான் ஈவோ அவ்வளவு அழ கான வார்த்தைகளில் சொன்னார். தனது குழந்தைப்பருவத்தில் மிகமிகக் கடினமான வாழ்க்கையை அனுபவித்த மொரேல்சின் சமூகத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு அன்றைய காலகட்டத்தில் இருந்த ஒரே மாற்றுவழியாக அர்ஜென்டினா நாட்டின் ஜூஜூய் மாகாணத்தில் கரும்புகளை வெட்டும் வேலை கிடைத்தது என்பது மட்டுமே இருந்தது.  அய்மாரா என்ற பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த அந்த மக்களுக்கு இங்கே அறுவடை காலத்தில் கொஞ்சம் வேலை கிடைத்தது.

லா ஹிகுவேரா. 1967ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி சே குவேரா நிராயுதபாணியாக்கப்பட்டு. மிகக்கொடூரமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இடம். இந்த இடத்திலிருந்து சற்று தொலைவில் 1959ஆம் ஆண்டு அதே மாதத்தில் 26ஆம் தேதி ஈவோ பிறந்தார். சே கொல்லப்பட்டபோது இவர் 8 வயதைக்கூட தாண்டியிருக்கவில்லை. மிகச்சிறிய ஒரு பொதுப்பள்ளியில் ஸ்பானிய மொழியை படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டார். அந்தப் பள்ளிக்கூடம், தனது பெற்றோரும் உடன் பிறந்தவர்களும் வசித்த ஒற்றை அறை குடிசையிலிருந்து 3.2 மைல் தூரத்தில் அமைந்திருந்தது. தினந்தோறும் நடந்தே சென்று படித்து வந்தார். மிகக்கொடூரமான தனது குழந்தைப்பருவத்தில் ஈவோ ஆசிரியர் எங்கே இருந்தாரோ அங்கேயெல்லாம் சென்று படித்தார். அவரது பழங்குடி இனம் அவருக்கு 3 பாரம்பரியக் கோட்பாடுகளைக் கற்றுக்கொடுத்தது: பொய்சொல்லாதே, திருடாதே, எப்போதும் பலவீனம் அடையாதே. 13 வயதில் அவரது தந்தை அவரது உயர் கல்விக்காக சான் பெட்ரோ தி ஒருரோ எனும் நகருக்கு அனுப்பி வைத்தார்.

ஈவோவின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்களில் ஒருவர், அவர் புவியியல், வரலாறு ஆகியவற்றிலும், இயற்பியல் மற்றும் கணிதத்தைவிட தத்துவயியலிலும் மிகச்சிறந்த மாணவராக விளங்கினார் என்று கூறுகிறார். இதில் முக்கியமானது என்னவென்றால் பள்ளிக்கூடத்திற்கு கட்டணம் செலுத்துவதற்காக ஈவோ தினந்தோறும் அதிகாலை 2 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார். அந்த சிறுவயதிலேயே ஒரு பேக்கரி தொழிலாளியாக, ஒரு கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்தார். எல்லாவிதமான உடல் உழைப்பையும் தனது பள்ளிக்கட்டணத்திற்காக செய்தார். இந்த வேலையைச் செய்துவிட்டு மதியம் போய் பள்ளிக்கூடத்தில் பாடம் படித்தார். அவரது சக மாணவர்கள் பெரிய அளவிற்கு உதவினார்கள். தனது குழந்தைப் பருவத்திலேயே காற்று இசைக்கருவிகளை எப்படி இசைப்பது என கற்றுக்கொண்டார். ஒருரோ நகரில் அறியப்பட்ட மிகச்சிறந்த டிரம்பெட் கலைஞராகக் கூட அவர் மிளிர்ந்தார்.

கடந்த 50 ஆண்டுகளில் பொலிவியாவில் ஒரு சமூகப்புரட்சிக்கான நிலைமைகள் கனிந்து வந்துள்ளன. 1952 ஏப்ரல் 9ஆம் தேதி தேசியவாத புரட்சிகர இயக்கத்தின் தலைவர் விக்டர் பாஸ் எஸ்டன்சோரோ தலைமையில் பொலிவியா நாட்டில் ஒரு புரட்சி வெடித்தது. இது கியூபாவில் எங்களது ஆயுதமேந்தியப் போராட்டத்திற்கு முன்னர் நடந்தது. புரட்சிகர சுரங்கத்தொழிலாளர்கள் அரசின் அடக்குமுறை படைகளைத் தோற்கடித்தனர்; தேசியவாத புரட்சிகர இயக்கம் அதிகாரத்தை கைப்பற்றியது.

ஆனால் பொலிவியாவில் புரட்சிகர நோக்கங்கள் ஈடேறவில்லை. 1956இல்  இந்த நடவடிக்கைகள் வீழ்ச்சியடையத் துவங்கின. 1959 ஜனவரி 1ஆம் தேதி, கியூபாவில் புரட்சிகர இயக்கம் வெற்றிக்கொடி நாட்டியது; மூன்று ஆண்டுகள் கழித்து 1962இல் எங்களது தேசம் அமெரிக்க நாடுகள் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டது. அதற்காக நடந்த வாக்கெடுப்பை பொலிவியா புறக்கணித்தது. பிற்காலத்தில் மெக்சிகோவைத் தவிர இதர எல்லா  அரசுகளும் கியூபாவுடனான உறவுகளை துண்டித்துக்கொண்டன. சர்வதேச புரட்சிகர இயக்கத்தில் ஏற்பட்ட பிளவுகளும் பொலிவியாவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. கியூபா மீதான 40 ஆண்டுகால பொருளாதாரத் தடைகளோடு காலம் உருண்டோடியது; புதிய தாராளமயக் கொள்கைகளும் அதன் கொடூரமான தொடர் விளைவுகளும் நாடுகளை உலுக்கின. வெனிசுலாவில் பொலிவாரியன் புரட்சி ஏற்பட்டது; லத்தீன் அமெரிக்காவின் சில நாடுகளிலும் இது பரவியது; அனைத்திற்கும் மேலாக ஈவோ பொலிவிய தேசத்தின் தலைவராக உயர்ந்தார். அவரது இந்த மகத்தான ஒரு வரலாற்றை ஒரு சிலபக்கங்களில் சுருக்கி எழுதுவது மிகக்கடினமானது.

நான் இங்கே மிகக்கொடிய ஏகாதிபத்திய சதிகளையெல்லாம் முறியடித்து எப்படி ஈவோ நிலைத்து நிற்கிறார் என்பதையும், பொலிவிய நாட் டின் உள் விவகாரங்களில் தலையிடவும், கலகங்கள் செய்யவும் ஏகாதிபத்தியம் மேற்கொண்ட முயற்சி களை தாண்டி பொலிவியாவின் இறையாண்மையை பாதுகாத்து அவர் எப்படி மிளிர்ந்து நிற்கிறார் என்பதையும், ஆயிரம் ஆண்டு பழமையான பாரம்பரியம் கொண்ட தனது தேசத்தின் மக்களது மாண்புகளை அவர் எப்படி உயர்த்திப்பிடிக்கிறார் என்பதையும்தான் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.

இப்போது இந்த போதைப்பொருள் கடத்தல் வலைப்பின்னலில் இருந்து கியூபாவைப் போலவே புரட்சிகர நாடுகளான பொலிவியாவும் வெனிசுலாவும் ஈக்வடாரும் வெளியேறி இருக்கின்றன; அவர்களது வலையில் விழாமல் தங்களது மக்களுக்கான சுகாதார வசதிகளையும் கல்வி வசதிகளையும் இதர பல்வேறு அடிப்படை வசதிகளையும் செய்வதில் மிகப்பெரும் கவனம் செலுத்தி வருகின்றன. போதைப்பொருள் கடத்தலை வீழ்த்துவதற்கு இவர்களுக்கு அந்நிய நாட்டு துருப்புகள் நீடித்திருக்கத் தேவையில்லை. அய்மாரா பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரு ஜனாதிபதியின் தலைமையில் மக்களின் பேராதரவோடு பொலிவியா ஒரு அற்புதமான செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைமையைவிட எழுத்தறிவின்மை மிகக் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது: 8 லட்சத்து 24 ஆயிரத்து 101 பொலிவியர்கள் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டிருக்கிறார்கள்; இவர்களில் 24 ஆயிரத்து 699 பேர் அய்மாரா இனத்தைச் சேர்ந்தவர்கள், 13 ஆயிரத்து 599 பேர் கொச்சுவா பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். கியூபா, வெனிசூலாவைத் தொடர்ந்து லத்தீன் அமெரிக்காவில் எழுத்தறிவின்மையை ஒழிக்கிற மூன்றாவது நாடு பொலிவியா.

தனது லட்சக்கணக்கான மக்கள் இதற்கு முன்பு எப்போதும் பெற்றிராத இலவச சுகாதார வசதியை ஈவோ அரசு அளித்திருக்கிறது.  கடந்த 5 ஆண்டுகளில் இந்த உலகத்திலேயே குழந்தை இறப்பு விகிதத்தை மிகப்பெரும் அளவிற்கு கட்டுப்படுத்தியிருக்கிற முதல் 7 நாடுகளில் ஒன்றாக பொலிவியா மாறியிருக்கிறது. ஐ.நா. சபை வகுத்த 21ஆம் நூற்றாண்டின் இலக்குகளை உண்மையிலேயே பூர்த்தி செய்கிற ஒரு நாடாக 2015இல் பொலிவியா மாறியிருக்கும். பேறுகால இறப்பை தடுப்பதிலும் பெரிய அளவிற்கு பொலிவியா முன்னேறியிருக்கிறது. 4 லட்சத்து 54 ஆயிரத்து 161 பேருக்கு கண் ஆபரேசன் செய்து சாதனை படைத்துள்ளது பொலிவியா. இவர்களில் 75 ஆயிரத்து 974 பேர் பிரேசிலியர்கள், அர்ஜென்டினியர்கள், பெருவியர்கள், பராகுவே நாட்டவர்கள். பொலிவியா உலகிற்கே முன்மாதிரியாக திகழும் ஒரு சமூகத் திட்டத்தையும் வகுத்துள்ளது. முதல் வகுப்பிலிருந்து 8ஆம் வகுப்பு முடிய படிக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்விக் கட்டணம் உட்பட அனைத்து கல்வி பொருட்களும் இலவசமாக வழங்கப்படுகிறது.  இதன்மூலம் 20 லட்சம் குழந்தைகள் தங்களது படிப்பை இடைவிடாமல் தொடர்கிறார்கள். 60 வயதைத் தாண்டிய 7 லட்சத்திற்கும் அதிகமான மூத்த குடிமக்கள் ஆண்டுதோறும் 342 டாலருக்கு இணையான போனஸ் பெறுகிறார்கள். ஒவ்வொரு கர்ப்பிணித்தாயும். 2வயதுக்கு உட்பட்ட ஒவ்வொரு குழந்தையும் கூடுதல் உதவியாக 257 டாலருக்கு இணையான நிதி உதவியை பெறுகிறார்கள்.

அமெரிக்க கண்டத்தில் இருக்கிற மிகவும் ஏழ்மையான மூன்று நாடுகளில் ஒன்று பொலிவியா. இத்தகைய சூழலில், நாட்டின் மிக முக்கியமான அனைத்து எரிசக்தி மற்றும் சுரங்க வளங்களையும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கிறது. இதில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய நிவாரணமும் அளிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு அடியையும் மிக கவனமாகவே ஈவோவின் அரசு எடுத்து வைக்கிறது. ஏனென்றால் ஒரு சிறு சறுக்கலைக் கூட அது சந்திக்க விரும்பவில்லை. பொலிவியாவின் பண கையிருப்பு விகிதம்  அதிகரித்துக் கொண்டே வருகிறது. முதன்முதலில் ஈவோவுக்கு வாக்களித்த மக்களைப்போல மூன்று மடங்கு மக்கள் இப்போது அவருக்கு வாக்களிக்க விரும்புகிறார்கள். வெளியுறவு கொள்கையிலும் சரி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் சரி பொலிவியா முன்னிற்கிறது.

எதிர்வரும் டிசம்பர் 6ஆம் தேதி அங்கே தேர்தல் நடைபெற இருக்கிறது.  உறுதியாக, மக்களின் ஜனாதிபதி மீண்டும் வெல்வார். அவரது மதிப்பு அதிகரித்து வருவதை எவராலும் தடுத்துநிறுத்த முடியாது. ஆனால் அவருக்கு நோபல் பரிசு மட்டும் கிடைக்காது. ஏன் அந்தப் பரிசு கிடைக்காது? நான் நினைக்கிறேன், அவரது மிகப்பெரிய பலவீனம்: அவர் அமெரிக்காவின் ஜனாதிபதி இல்லை.

தமிழில்: எஸ்.பி.ராஜேந்திரன்