2008-09 நிதிநிலை அறிக்கையில் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், தலித்துகளுக்கு சேர வேண்டிய பணத்தில் 71 சதவிகிதத்தை மறுத்துள்ளார். அதாவது 29,801 கோடி ரூபாய் மறுக்கப்பட்டுள்ளது.

பொய்யான வாக்குறுதிகளுடன் இந்திய அரசு இந்த ஆண்டும் தலித்துகளை வஞ்சித்துள்ளது. அனைவரையும் அரவணைக்கும் ஒருங்கிணைந்த வளர்ச்சி என்று பறைசாற்றியது மீண்டும் பொய்யாகி இருக்கிறது. 2008-09ஆம் ஆண்டிற்கான மொத்த திட்ட வரைவுத் தொகை ரூ. 2,43,385.5 கோடி. பட்டியல் சாதியினருக்கான துணைத்திட்டத்தின்படி மொத்த திட்ட வரைவுத் தொகையில் 16.7%அய் இந்திய அரசு தலித்துகளுக்கு என்று தனியாக ஒதுக்க வேண்டும். அதாவது, இந்த ஆண்டு ரூ. 40,090.90 கோடி தலித்துகளுக்கு ஒதுக்கியிருக்க வேண்டும்.

ஆனால் வெறும் ரூ. 11,715.07 கோடியை மட்டுமே பட்டியல் சாதியினரின் நலனிற்காக ஒதுக்கியிருக்கிறது. அப்படியானால் ரூ. 29,801.89 கோடி அளவில் பட்டியல் சாதியினர் ஏமாற்றப்பட்டுள்ளனர். அதாவது பட்டியல் சாதியினருக்கான துணைத் திட்டத்தின்படி அவர்களுக்கு வர வேண்டிய தொகையில் 71% தொகையை இந்திய அரசு பிற பணிகளுக்குத் திருப்பிவிட்டுள்ளது. நிதி அமைச்சகத்திலும், ஒட்டுமொத்த மத்திய நிதிநிலை அறிக்கையிலும் நிலவும் தீண்டாமையை இது வெளிப்படுத்துகிறது.

மறுக்கப்பட்ட இந்த 29,801 கோடி ரூபாயைக் கொண்டு கீழ்க்காணும் அனைத்தையும் செய்யலாம் :

1. ஒரு கோடி பட்டியல் சாதி குழந்தைகளுக்கு கல்வி கிடைத்திருக்கும்.
2. ஒரு லட்சம் அடிப்படை சுகாதார நிலையங்களை கிராமப்புறங்களில் அமைத்திருக்கலாம்.
3. இரண்டு லட்சம் சிறு தொழில் நிறுவனங்களை அமைத்திருக்கலாம்.
4. அய்ந்து லட்சம் பட்டியல் சாதியினர் குடும்பங்கள் ஒவ்வொருவருக்கும் 5 ஏக்கர் நிலம் அளித்திருக்கலாம்.

இவை அனைத்தையும் ஒரே ஆண்டில் செய்திருக்கலாம். இந்த சிறப்பு உட்கூறுத்திட்டம் மட்டும் கடந்த 27 ஆண்டுகளில் சரிவர செயல்படுத்தப்பட்டிருக்குமானால், இந்தியா ஒட்டுமொத்தமாக வறுமையின் பிடியிலிருந்து விடுபட்டிருக்கும்.

நிதி ஒதுக்கீட்டில் தலித்துகள் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து மறுத்து வந்ததற்கு எதிரான மவுன சாட்சியாக மேற்காணும் புள்ளி விவரங்கள் இருக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளாக மட்டுமல்ல, சிறப்பு உட்கூறுத் திட்டம் என முன்பு சொல்லப்பட்ட பட்டியல் சாதியினருக்கான துணைத் திட்டம், 1979-80இல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து கடந்த 27 ஆண்டுகளாகவே மத்திய மற்றும் மாநில அரசுகள் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை மதிக்காமலும் அதை மீறியுமே செயல்பட்டு வந்திருக்கின்றன. இந்த செயல், திட்டமிட்ட புறக்கணிப்பாகக் கருதப்பட்டு இதற்கு பொறுப்பானவர்கள் இந்த குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட வேண்டும்.

பொது மக்களோடு ஒப்பிடுகையில் தலித்துகளிடையே பரவலான வேறுபாடுகளும் சமமற்ற வளர்ச்சியும் நிலவுவதை அரசின் அறிக்கையே எடுத்துக்காட்டுகிறது. வளர்ச்சியின் பரிமாணங்களில் தலித்துகளை உள்ளடக்குவதற்கான முன் முயற்சிகளை எடுக்க இந்த நிதிநிலை அறிக்கையும் தவறிவிட்டது.

2001 மக்கள் தொகை கணக்கெடுப்பு, NFHS கணக்கெடுப்பு மற்றும் பிற கணக்கெடுப்புகள் தலித்துகளுக்கு நாட்டின் வளங்களைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் மறுக்கப்பட்டுள்ளதைக் காட்டுகின்றன. இதன் காரணமாக தலித்துகள் இடையே குழந்தைகள் இறப்பு விகிதம் 83 ஆகவும் சிறுவர்கள் இறப்பு விகிதம் 39 ஆகவும் இருக்கிறது. இதற்கு மாறாக தலித் அல்லாதவர்களில் குழந்தைகள் இறப்பு விகிதம் 61 ஆகவும், சிறுவர்கள் இறப்பு விகிதம் 22 ஆகவுமே இருக்கிறது.

தலித் பெண்களில் 56% ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் ஒட்டுமொத்த கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 65% என்றால் தலித்துகளில் கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 55% மட்டுமே. தலித் அல்லாதவர்களில் கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 69% ஆகும்.

இந்திய அளவிலான கணக்கின் படி, தலித்துகளின் சராசரி ஆண்டு செலவினம் ரூ.285 மட்டுமே. ஆனால் தலித் அல்லாதவர்களின் சராசரி ஆண்டு செலவினம் ரூ.393 ஆகும். கிராமப்புறங்களில் 45% தலித்துகள் ஏழைகளாக இருக்கின்றனர். ஆனால் 21% தலித் அல்லாதவர்கள் மட்டுமே ஏழைகளாக உள்ளனர். தலித் அல்லாதவர்களோடு ஒப்பிடுகையில் வறுமையினால் பாதிக்கப்படும் தலித்துகளின் எண்ணிக்கை 70% அதிகமாக இருக்கிறது. இத்தனை இருந்தும், தலித்துகளின் வளர்ச்சிக்குத் தேவையான நிதியை அரசு ஒதுக்க மறுக்கிறது.

பட்டியல் சாதியினருக்கான துணைத் திட்டத்தின்படி, 19 துறைகள் - அமைச்சகங்கள் நிதி ஒதுக்கியுள்ளன. அவற்றில் 13 வெறும் பெயரளவில் மட்டுமே சிறு தொகையை ஒதுக்கியுள்ளன. சமூக நீதி மற்றும் அதிகாரப் பரவலாக்கல் அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, உயர் கல்வித் துறை, மிகச் சிறிய, சிறிய மற்றும் மத்திய தர நிறுவனங்களுக்கான அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் மேம்பாட்டுத் துறை ஆகிய 6 துறைகள்,அமைச்சகங்கள் மட்டுமே உண்மையில் குறிப்பிடத்தக்க தொகையை ஒதுக்கியுள்ளன.

பிற அனைத்து துறைகளும், குறிப்பாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, நில வளத்துறை, கிராமப்புற வளர்ச்சி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு, உழவு ஆய்வு, வணிகம், நகர்ப்புற மேம்பாடு, நீர்வளத் துறை ஆகியவை மிகக் குறைந்த ஒதுக்கீடு அல்லது ஒதுக்கீடே செய்யாமல் இருக்கின்றனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும் துறைகளில் பட்டியல் சாதியினருக்கு எந்த பங்கும் இருக்காது என்பதனையே இது தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

சமூக நீதி மற்றும் அதிகாரப் பரவலாக்கல் அமைச்சகம், பள்ளி மற்றும் மேற்படிப்பிற்கான உதவித் தொகையை சென்ற ஆண்டு ஒதுக்கிய அளவான 811 கோடி ரூபாயிலிருந்து இந்த ஆண்டு 731 கோடி ரூபாயாக குறைத்திருப்பது மிக மோசமான நடவடிக்கையாகும். நுண் உயிரியல் துறை சென்ற ஆண்டு ஒதுக்கிய 2.5 கோடியை விட குறைவாக 2.01 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது.

பஞ்சாயத்து அமைச்சகமும் சென்ற ஆண்டை விட குறைவாகவே ஒதுக்கியுள்ளது. சென்ற ஆண்டு 26.7 கோடியாக இருந்தது தற்போது 20.1 கோடியாக இருக்கிறது. இதைப் போலவே, பெண்கள் மற்றும் குழந்தைகளின் மேம்பாட்டிற்கான அமைச்சகமும் சென்ற ஆண்டு ஒதுக்கீடான 1,501 கோடியை விட குறைவாக 1,139 கோடியை மட்டுமே இந்த ஆண்டு ஒதுக்கியுள்ளது.

பட்டியல் சாதியினருக்கான உரிமைகளையும் உரித்தானவற்றையும் ஒட்டுமொத்தமாக மறுப்பதும், மீறுவதும், மேம்பாட்டு உரிமையிலிருந்து அவர்கள் விலக்கி வைக்கப்படுவதும் நிச்சயமாக தொடரக் கூடாது. பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் பெண்கள் தொடர்ந்து விலக்கி வைக்கப்படுவதற்கான தார்மீகப் பொறுப்பை அய்க்கிய முற்போக்கு கூட்டணி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தவறானவற்றை சரி செய்வதற்காக, பாதிக்கப்பட்ட மக்களாகிய நாங்கள், தலித் சமூக அமைப்பினர் மற்றும் பிற ஜனநாயக சக்திகள், அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசிடம் கீழ்க்காணும் கோரிக்கைகளை முன் வைக்கிறோம்:

1. பட்டியல் சாதியினருக்கான துணைத் திட்டம் மற்றும் பழங்குடியினருக்கான துணைத் திட்டம் குறித்த வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்.

2. 200809ஆம் ஆண்டின் மொத்த நிதி ஒதுக்கீட்டில் பட்டியல் சாதியினருக்கான துணைத்திட்டத்திற்கு 16.7 சதவிகிதமும், பழங்குடியினருக்கான துணைத் திட்டத்திற்கு 8.2 சதவிகிதமும் ஒதுக்கப்பட வேண்டும். இது, அனைத்து துறைகள் மற்றும் அமைச்சகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான தனி மனித மற்றும் குடும்ப அளவிலான வளர்ச்சித் திட்டங்கள் தெளிவாக உருவாக்கப்பட வேண்டும்.

3. பட்டியல் சாதியினரின் நலன் மற்றும் மேம்பாட்டிற்கென தனி அமைச்சகம் பட்டியல் சாதியினர் மேம்பாட்டு அமைச்சகம் - மத்திய அரசிலும் மாநில அரசுகளிலும் ஏற்படுத்தப்பட வேண்டும். நாட்டில் உள்ள 75 அமைச்சகங்கள் மற்றும் துறைகளும் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினரை வளர்ச்சித் திட்டங்களில் இணைப்பது குறித்து ஆலோசனை வழங்குவதற்கென சிறப்பு ஆலோசகர்களை நியமிக்க வேண்டும். இந்த ஆலோசகர்கள் பெரும்பாலும் பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினராகவே இருத்தல் வேண்டும்.

4. எந்த துறையிலாவது செலவழிக்கப்படாத தொகை ஏதும் இருப்பின், அது அந்த ஆண்டோடு கணக்குத் தீர்க்கப்படாமல், ஒரு சுழல் நிதியில் இணைக்கப்பட வேண்டும்.

5. பொருளாதார வளர்ச்சியின் அனைத்துப் பரிமாணங்களிலும் பெண்கள் சம அளவில் பங்களிக்கின்றனர். எனவே மக்கள் தொகையில் பெண்களின் விகிதாச்சாரத்திற்கு ஏற்ற அளவில் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கான ஒதுக்கீடு சிறப்பான முறையில் நடைபெற வேண்டும். பெண்களுக்கான தொழில் முனைப்பு, சுகாதாரம், கல்வி, திறன் மேம்பாடு, நிலம் மற்றும் வளங்கள் நிர்வாகம், மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு சிறப்பு கவனம் அளிக் கப்பட வேண்டும்.

நன்றி : National Campaigh on Dalit Human Rights (NCDHR)
தமிழில் : பூங்குழலி
Pin It