நெடுங்காலத்திற்கு முன்பு நாம் நமது விதியைச் சந்திப்பதற்கான நாளைக் குறித்திருந்தோம். அந்த நாள் இன்று வந்திருக்கிறது. நாம் முன்னரே எடுத்துக் கொண்டுள்ள உறுதிமொழிகளை முழுமையான அளவில் அல்ல, மிகச்சிறந்த முறையில் நிறைவேற்றுவதற்கான நேரம் வந்திருக்கிறது. இந்த நள்ளிரவு வேளையில் உலகமே தூங்கிக்கொண்டிருக்கும் தருணத்தில், இந்தியா புதிய வாழ்விற்காகவும், விடுதலைக்காகவும் விழித்துக்கொண்டிருக்கிறது. வரலாற்றில் மிகவும் அரிதாக வரக்கூடிய ஒரு தருணம் தற்போது வந்துள்ளது. இத்தருணத்தில் நாம் பழமையிலிருந்து புதுமையை நோக்கி அடியெடுத்து வைக்கிறோம். ஒரு சகாப்தம் முடிந்துள்ள இத்தருணத்தில் மிக நீண்ட காலமாக அடக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு நாட்டின் ஆன்மா பேசத்துவங்கியுள்ளது. இந்த முக்கியத் தருணத்தில் இந்திய நாட்டிற்கும்,அதன் மக்களுக்கும், மேலும் ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் தன்னலமற்ற முறையில் சேவை செய்வது என்ற உறுதிமொழியை ஏற்றுக்கொள்வது பொருத்தமாக இருக்கும்.

வரலாறு புலரும் இந்த நேரத்தில் இந்தியா அதன் முடிவிலாத் தேடல்களை நோக்கி பயணப்பட்டிருக்கிறது. பாதைகளற்ற கடந்த பல நூற்றாண்டுகள் போராட்டங்களும், சிறப்பான வெற்றிகளும், தோல்விகளும் நிறைந்தவை. மகிழ்ச்சியான நேரங்களிலும் சரி, துன்பமான நேரங்களிலும் சரி இந்தியத்தாய் தனது தேடல்களை விட்டு விடவில்லை; தனக்கு வலிமை கொடுத்த கொள்கைகளையும் மறந்து விடவில்லை. துரதிருஷ்டமான, துன்பம் நிறைந்த காலத்தை நாம் இன்று முடிவுக்குக் கொண்டு வந்து விட்டோம்; இந்தியத்தாய் தன்னை மீண்டும் அடையாளம் கண்டு கொண்டிருக்கிறாள். நாம் இன்று கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்தச் சாதனை நிகழ்வானது, காத்துக்கொண்டிருக்கும் மிகப்பெரிய வெற்றிகளையும், சாதனைகளையும் நோக்கிய ஒரு சிறிய அடிவைப்புதான்; ஒரு நல்வாய்ப்பின் துவக்கம்தான். இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதற்கும், எதிர் காலத்தின் சவாலை ஏற்றுக்கொள்வதற்கும் ஏற்ற வகையில் போதுமான துணிவுடையவர்களாகவும் போதுமான அறிவுடையவர்களாகவும் நாம் இருக்கிறோமா?

விடுதலையும், அதிகாரமும் பெரும் பொறுப்பை கொடுத்துள்ளன. இப்பொறுப்பு இறையாண்மை மிக்க இந்தியக் குடிமக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தச் சட்டமன்றத்தினுடையது. சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பு வலிகள் நிறைந்த பல அனுபவங்களை நாம் தாங்கியுள்ளோம். இன்னும் அத்துன்பமான தருணங்களின் நினைவு நம் இதயங்களை கணக்கச் செய்து கொண்டிருக்கிறது. சில வலிகள் இன்றும் கூட தொடர்ந்து கொண்டிருக்கின்றன. என்ன இருந்தாலும் இறந்தகாலம் இப்போது முடிந்து விட்டது; எதிர்காலம் நம்மை அழைத்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் அந்த எதிர்காலம் எளிமையானதாகவோ, ஓய்வானதாகவோ இருக்கப்போவதில்லை. இதற்கு முன்பு பல நேரங்களில் நாம் எடுத்துக்கொண்ட உறுதிமொழிகளையும், இப்போது எடுக்கப்போகும் உறுதிமொழியையும் நிறைவேற்றும் வகையில் முடிவற்ற போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும். இந்தியாவிற்குச் செய்யும் சேவை என்பது துன்பத்தில் உழலும் லட்சக்கணக்கான மக்களுக்குச் செய்யும் சேவையாகும். அதாவது வறுமையையும், அறியாமையையும், நோயையும், அசமத்துவத்தையும் முடிவுக்குக் கொண்டு வருவதாகும். ஒவ்வொரு தனிமனிதனும் சிந்தும் ஒவ்வொரு சொட்டுக் கண்ணீரையும் துடைப்பது என்பதே நமது தலைமுறையில் வாழும் மிகப்பெரிய மனிதரின் கனவாகும். அது ஒருவேளை மிகப்பெரிய கனவாக இருக்கலாம்; ஆனால் கண்ணீரும் துன்பமும் இருக்கும் வரை நமது பணி முடிவடையாது.

இக்கனவுகளை நனவாக்க நாம் உழைக்க வேண்டும்; கடுமையாக உழைக்க வேண்டும். இவை இந்தியாவுக்கான கனவுகள் மட்டுமல்ல; உலகத்திற்கான கனவுகளுமாகும். ஏனெனில் இவ்வுலகத்தின் ஒவ்வொரு நாடும், மக்களும் தனியே வாழ முடியும் என்று நினைத்துக்கூடப் பார்க்க முடியாத வகையில் மிகவும் நெருக்கமாக ஒருவரோடொருவர் பிணைக்கப் பட்டிருக்கிறார்கள். அமைதி என்பது (மக்களின் வாழ்க்கையில் இருந்து) தனியே பிரிக்கப்பட முடியாதது என்று கூறப்படுகிறது; அதுபோலத்தான் விடுதலையும், வளமும். பேரழிவுகளும் கூட பிரிக்க முடியாதவையே. இனிமேல் இந்த உலகை தனித்தனி பகுதிகளாகப் பிரிப்பது என்பது எப்போதும் நடக்காது.

இந்திய மக்களின் பிரதிநிதிகளாகிய நாங்கள் இந்திய மக்களுக்கு ஒரு கோரிக்கை விடுக்கிறோம்: இந்தத் துணிச்சலான பயணத்தில் நம்பிக்கையோடு எங்களோடு சேர்ந்து கொள்ளுங்கள். அழிவை ஏற்படுத்தும் மிகச்சிறிய விமர்சனங்களுக்கோ, விஷமத்தனமான குற்றச்சாட்டுகளுக்கோ இது ஏற்ற நேரமல்ல. இந்திய நாட்டின் எல்லாப் புதல்வர்களும் வாழக்கூடிய வகையில் நல்ல, மிகச்சிறந்த வீட்டை நாம் கட்ட வேண்டும். விதி நிர்ணயம் செய்திருந்த அந்தக் குறிப்பிட்ட நாள் வந்து விட்டது. நீண்ட தூக்கம் மற்றும் போராட்டத்திற்குப் பிறகு இந்தியா மீண்டும் எழுந்து நிற்கிறது விழிப்புடனும் விடுதலையுடனும். ஆனால் இறந்தகாலம் இன்னும் நம்மைப் பற்றிக் கொண்டிருப்பதால் நம் உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு முன்பு நாம் ஏராளமான செயல்களைச் செய்ய வேண்டியுள்ளது. இருந்தபோதிலும் இறந்த காலம்தான் நமக்கு திருப்புமுனையாகும்.வரலாறு தற்போது புதிதாகத் துவங்குகிறது. இந்த வரலாற்றில்தான் நாம் வாழ வேண்டும். மற்றவர்கள் இதைப்பற்றி எழுதுவார்கள்.

இது இந்தியாவிற்கும், ஆசியாவிற்கும், ஏன் உலகத்திற்கே கூட மிக முக்கியமான தருணம் ஆகும். இன்று கிழக்கு வானில் ஒரு புதிய நட்சத்திரம் சுதந்திர நட்சத்திரம் உதிக்கிறது; ஒரு புதிய நம்பிக்கை பிறக்கிறது; நெடுநாள் கனவு நிறைவேறுகிறது. இந்த நட்சத்திரம் என்றும் மறையாமல் மின்னிக்கொண்டே இருக்கட்டும்! இந்த நம்பிக்கை என்றும் துரோகத்திற்கு உள்ளாகாமல் இருக்கட்டும்!

நம்முடைய பெரும்பாலான மக்கள் துன்பத்தில் உழலும் போதிலும் கடினமான பிரச்சனைகள் மேகக்கூட்டங்களைப்போல நம்மைச் சுற்றியுள்ள போதிலும் நாம் விடுதலையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். ஆனால் இந்த விடுதலை பொறுப்புகளையும் சுமைகளையும் நமக்கு கொடுத்துள்ளது. நாம் அவற்றை சுதந்திரமான ஓழுக்கத்துடன் கூடிய நமது மக்களின் துணையுடன் எதிர்கொள்ள வேண்டும். இந்த நாளில் நாம் முதலாவதாக நம் சுதந்திரத்திற்குக் காரணமானவரும், நம் நாட்டின் தந்தையுமானவரைப் பற்றி (மகாத்மா காந்தி) எண்ணிப் பார்க்கிறோம். அவர் இந்தியாவின் முதுபெரும் ஆன்மா; நம்மைச் சுற்றிக் கவிந்திருந்த இருளை தனது கையில் ஏந்திய ஒளிவிளக்கால் விரட்டியவர். நாம் பல நேரங்களில் அவரை முழுமையாகப் பின்பற்றவில்லை; அவரது அறிவுரைகளிலிருந்து சில நேரங்களில் விலகிச் சென்றிருக்கிறோம். ஆனால் நாம் மட்டுமல்ல, இனி வரும் தலைமுறைகளும் தனது நம்பிக்கையிலும் வலிமையிலும் உறுதி கொண்ட, துணிவும் எளிமையும் நிறைந்த அந்த தவப்புதல்வனின் அறிவுரைகளை நினைவு கூர்ந்து இதயத்தில் இருத்திச் செயல்படுவார்கள். எவ்வளவு வேகமாக காற்று வீசினாலும், புயலே அடித்தாலும் அந்த விடுதலை ஒளியை ஒருக்காலும் அணைய விடமாட்டோம்.

அடுத்ததாக விடுதலைப்போரில் பங்கேற்ற அடையாளம் தெரியாத மற்ற வீரர்களைப் பற்றி நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். அவர்கள் எந்தவிதமான புகழோ,பரிசுகளோ கிடைக்காமல் இறுதிவரை இந்தியாவிற்கு சேவை செய்திருக்கிறார்கள். அரசியல் ரீதியாக தற்போது நம்மிடமிருந்து பிரிந்திருக்கும், நம்முடன் சேர்ந்து இந்த விடுதலையைக் கொண்டாட முடியாமல் இருக்கும் நமது சகோதர சகோதரிகளைப் பற்றியும் இந்த நேரத்தில் எண்ணிப் பார்க்கிறோம். அவர்கள் நம்மவர்கள்; எது நடந்தாலும் அவர்கள் நம்மவர்களாகவே தொடர்வார்கள். நாம் அவர்களுடைய இன்ப,துன்பங்களை என்றும் பங்கிட்டுக் கொள்பவர்களாக இருக்க வேண்டும்.

எதிர்காலம் நம்மை அழைக்கிறது. நாம் எங்கு போகப்போகிறோம்? நம் நோக்கங்களும், முயற்சிகளும் என்ன? விடுதலையையும், வாய்ப்புகளையும் சாதாரண மக்களுக்கும், விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் கிடைக்கும்படி செய்வது; வறுமைக்கும், அறியாமைக்கும், நோய்களுக்கும் எதிராகப் போரிட்டு முடிவுக்குக் கொண்டு வருவது; வளமான, ஜனநாயகத் தன்மையுடன் கூடிய, முற்போக்கான நாட்டை உருவாக்குவது; ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் முழுமையான வாழ்வையும், நீதியையும் உறுதி செய்யும் சமூக, பொருளாதார, அரசியல் அமைப்புகளை நிறுவுவதும்தான்.

கடினமான பணி நம் முன் இருக்கிறது. நம் உறுதிமொழிகளை நாம் முழுமையாக நிறைவேற்றாதவரை, விதி நிர்ணயித்துள்ள அளவுக்கு இந்திய மக்களின் வாழ்வை உருவாக்காதவரை, நம் யாருக்கும் ஓய்வில்லை. முன்னேற்றப் பாதையில் நடைபோடவுள்ள மிகச்சிறந்த ஒரு நாட்டின் குடிமக்கள் நாம். அதற்கேற்ற உயர்தரமான வாழ்வை நாம் வாழ வேண்டும். நாம் எல்லாரும் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் சரிசமமான உரிமைகள், சலுகைகள் மற்றும் கடமைகள் கொண்ட இந்தியத் தாயின் குழந்தைகளே. அடிப்படைவாதத்தையும், குறுகிய மனப்போக்கையும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. குறுகிய எண்ணம் கொண்ட, குறுகிய செயல்களைச் செய்யும் மக்களைக் கொண்ட எந்த ஒரு நாடும் சிறந்த நாடாக இருக்க முடியாது.

இந்த நேரத்தில் உலகின் அனைத்து நாடுகளுக்கும், மக்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களோடு இணைந்து அமைதியையும், விடுதலையையும், ஜனநாயகத்தையும் முன்னெடுத்துச் செல்வோம் என்றும் உறுதி கூறுகிறோம். நாம் பேரன்பு செலுத்தும் புராதனமான, இறவாத்தன்மையுடன் கூடிய, என்றும் புதிதான இந்தியத் திருநாட்டிற்கும் மரியாதை நிறைந்த வணக்கங்களை உரித்தாக்குகிறோம். என்றும் நாட்டின் பணிக்கு எங்களை புத்துணர்வுடன் ஒப்படைக்கிறோம்.

ஜெய்ஹிந்த்..!