இத்தலையங்கத்தை எழுதும் நாளில், உண்ணாவிரதம் 11வது நாளைத் தொட்டுள்ளது. 75 வயது அன்னா ஹசாரே கடந்த 6 மாதமாக ஊழலுக்கு எதிராக நடத்தும் போராட்டம் பரவலான மக்களைச் சென்றடைந்துள்ளது மட்டுமல்ல, தன்னிச்சையாக போராடவும் தூண்டியுள்ளது. பேச்சுவார்த்தை என்ற பெயரில் நாட்களைக் கடத்தி உடல்நிலையைக் காரணம் காட்டி போராட்டத்தை முடிக்கப் பார்த்தது மத்திய அரசு. இறுதியில் நாடாளுமன்றத்தில் சட்டம் மீது விவாதம் நடத்த அரைமனதோடு ஒத்துக்கொண்டு, நாங்களும் ஊழலுக்கு எதிரானவர்கள்தான் என ஊர் ஊராக பேசுகிறது காங்கிரஸ். ஆனால்,உண்ணாவிரதம் என அறவழிப்போராட்டத்தை அறிவித்த நாள் முதல் மத்திய காங்கிரஸ் அரசு போராட்டத்தை ஒடுக்குவதாக நினைத்து எடுத்த முயற்சிகள் அனைத்தும் அக்கட்சியையும் அம்பலப்படுத்தியுள்ளது, மக்களையும் போராட்டத்தை நோக்கி ஈர்த்துள்ளது..

இப்போராட்டத்தை இந்திய சுதந்திர வரலாற்றில் முதலில் நடந்த ஊடகங்களின் போராட்டம் என்று தாராளமாக வர்ணிக்கலாம். உலகமெங்கும் நடக்கும் போராட்டத்தை பார்த்து உத்வேகமடையும் இந்திய இளைஞர்களுக்கு ஊடகங்கள் கொடுத்துள்ள அசைன்மெண்ட் என்றும் கூட சொல்லலாம். ஒரு தனி மனிதரின் போராட்ட உறுதியை பாராட்டும் நாம், அவரால் எப்படி சாத்தியமானது என்று கேட்டால் ஊடகங்களைப் பார்த்து தான் பதில் சொல்லவேண்டியுள்ளது. ரட்சகரைப் போல் அவரைப் போற்றுவதற்கு இந்திய நடுத்தர மக்களின் மனநிலையை தயார் செய்த ஊடகங்கள் ஊழல் பிறக்கும் வழிகள் என்ன என்பதை ஸ்பெசல் ஸ்டோரி மூலம் எதிர்காலத்தில் சொல்வார்களா என பார்க்கலாம். இரண்டாவது சுதந்திரப்போராட்டம் என்று அன்னா குழுவால் பெயரிடப்பட்டுள்ள இப்போராட்டம் பிரதமர் வீடு,மந்திரிகளின் வீடு முற்றுகை என தீவிரமாகிக்கொண்டிருக்கிறது. ஆனாலும், துளியும் அரசியல் கலப்பின்றி போராட்டம் நடைபெறுவதாகவே கருதப்படுகிறது. அப்படியெனில், இரண்டாவது சுதந்திரத்திற்கு பின் நாட்டை ஆளவேண்டிய தகுதி யாருக்கும் இல்லையா என்ற கேள்வியும் இயல்பாக எழுகிறது.

கடந்த 65 ஆண்டுகளாக யாரை தேர்ந்தெடுத்துள்ளார்களோ அவர்கள் செய்த ஊழல்களை எதிர்த்துத் தான் தாங்கள் போராடுகிறோம் என்பதே தெரியாமல் மக்கள் போராடுவது தான் வேதனையாக இருக்கிறது. ஆம். ஒரு போராட்டம் என்பது தவறுக்கு காரணமான ஒன்றை நீக்கி புதிய ஒன்றை தீர்வென முன்வைப்பதே ஆகும். ஆனால், இப்போராட்டத்தில் யாரை நீக்கி, யாரை முன் நிறுத்த வேண்டும் என்பது விவாதமாகவில்லை என்பது வேடிக்கையாக இருக்கிறது. லோக்பால் வேண்டுமா என்றால், ம்ம்ம்...என தலையை மேலும், கீழும், முன்னும், பின்னும் ஆட்டும் பா.ஜ.க. கர்நாடகத்தில் லோக் அயுக்தாவை வேண்டாம் என்கிறது. பா.ஜ.வின். முன்னாள் மத்திய அமைச்சர் உள்பட மூன்று எம்.பி.க்களும் அக்கட்சியில் இருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளனர். காரணம் பா.ஜ.க. ஊழல் எதிர்ப்பில் இரட்டை வேடம் போடுகிறது. முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பாவை இறக்கிட படாத பாடுபட்ட பா.ஜ.க. இறுதியில் கட்சியில் மாநிலத்தலைவர் பதவியை கொடுத்துள்ளதே தவிர அதிகாரத்தில் இருந்து விலக்கவில்லை.

காங்கிரஸை எதிர்த்து பா.ஜ.க. மற்றும் பா.ஜ.க.வை எதிர்த்து காங்கிரஸ் என்பது தான் அவ்விரு தேசியக் கட்சிகளுக்கும் உள்ள அரசியல் கொள்கை. அரசியலில் ஆர்வம் இல்லையெனினும், சொந்த வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு போராட்டங்களில் உணர்வுப்பூர்வமாக பங்கெடுக்கும் இளைஞர்களைப் பாராட்டும் அதே வேளையில் அவர்களின் கோபமும், எதிர்பார்ப்பும் தேசத்திற்கு உண்மையாக பலனளிக்க வேண்டுமெனில் இப்போராட்டத்தின் திசைவழியை விவாதிக்க வேண்டியது சமூகப்போராளிகளும், அறிவுஜீவிகளும் செய்யவேண்டிய அரசியல் பணி. ஒரு தனி மனிதர் நாடாளுமன்றமும், அரசியல் கட்சிகளும் என்ன செய்யவேண்டும் என்பதை ஒரு உண்ணாவிரதம் மூலம் தீர்மானிப்பார் எனில் ஜனநாயகம்..? வரலாற்றில் மக்களின் கடமை என்ன.

அரசியல் கலப்பின்றி இப்போராட்டம் நடக்கவேண்டும் என்பது நடுத்தர மக்கள் மனநிலை. ஆனால், வரப்போகும் லோக்பால் புதிய சட்டத்தை யார் அமல்படுத்தப்போவது யார் இன்று இதர சட்டங்களை மீறி ஊழல் செய்கிறார்கள் என்ற கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்ல விரும்புவதில்லை. இதுவரை இந்திய அரசியலில் ஊழல் கறைபடியாதவர்களாகவும், இன்றும் வலுவான லோக்பால் சட்டத்துக்காக மட்டுமல்ல, தேர்தல் சீர்திருத்தம், நீதித்துறையை கட்டுப்படுத்தும் ஏற்பாடு எனவும் சமரசமில்லாமல் போராடும் இடதுசாரிகள் மட்டுமே இந்தியாவை ஆளத்தகுதியானவர்கள். இப்போராட்டம் எழுப்பும் குரல்களின் மூலம் பரவ வேண்டிய நம்பிக்கை இடதுசாரி அரசியலின் மீதான ஒற்றுமையாக மாறவேண்டும். இல்லையெனில், இப்போராட்டம் நிச்சயம் தேசத்திற்கு பலனளிக்கப்போவதில்லை. ஒரு சட்டம் மட்டும் தேசத்தை சரியான வழியில் நடத்திட உதவாது. சட்டம் பூமாலையாக இருந்தாலும் ஆள்பவர்கள் குரங்குகளாக இருந்தால் ... பயன் என்ன தேசத்திற்கு?

-ஆசிரியர் குழு.