முதுகெலும்பு ஒடிந்த தேசமாக மாறிவருகிறது இந்தியா. இந்தியாவின் எதிர்காலம் என வர்ணிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்காலம் தேடி முடிவில்லா பயணத்தை துவக்கியிருக்கின்றனர். இந்திய கிராம சமூகம் என்பது சுயபூர்த்தி கிராமங்களாக பல நூற்றாண்டுகளுக்கு முன்பு திகழ்ந்ததாகவும், முகலாயரும், வெள்ளையரும் ஆட்சியைப் பிடித்த போதும் கூட கிராமங்கள் எவ்வித மாற்றமுமின்றி அப்படியே இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மாற்றங்களே நிகழாமல் கிராமங்கள் இருந்தது என்றில்லை, இந்தியாவிற்கே உரிய பிரத்யேக தன்மையோடு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருந்தது. ஆனால் கிராமங்களின் வளங்கள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் பார்த்துக் கொள்ளப்பட்டதாக அர்த்தப்படுத்தப்படுகிறது.

இன்று கிராமங்கள் எல்லாம் தலைகீழாக மாறிப்போய் விட்டது. பொருளாதாரம் தான் அனைத்து மாற்றங்களுக்கும் அடிப்படை என்பதற்கிணங்க அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால், கிராமப்புற பொருளாதாரம் முற்றிலும் நலிவுற்று, மக்கள் பிழைப்பை தேடி நகரங்களை நோக்கி தள்ளப்படுகின்றனர்.இருந்தாலும் நாட்டின் மக்கள் தொகையில் 72.2 சதமானவர்கள் சுமார் 6,30,000 கிராமங்களில் வசிக்கின்றனர். மீதமுள்ள 27.8 சதமானவர்கள் மட்டுமே 5,480 நகரங்களில் வசிக்கின்றனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா அடிப்படையில் ஒரு விவசாய நாடு. ஆனால் இன்று விவசாயம் அழிந்து கொண்டு வருகிறது அதன் விளைவு கிராமத்தில் உள்ள பெரும் பகுதி மக்கள் நகரத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கிறார்கள்.

கிராமத்தில் இருந்து மக்கள் பிழைப்பை தேடி நகரங்களுக்கும், வெளிமாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏன் வெளிநாடுகளுக்கும் சென்றது இப்போது மட்டுமல்ல காலம் காலமாய் நடந்து வந்தது தான். நாம் அடிமைப்பட்டு கிடந்த காலத்தில் பினாங்கு, பர்மா, இலங்கை, மொரிசியஸ் போன்ற நாடுகளுக்கு பிழைப்பைத் தேடி சென்றார்கள். 70களில் மக்கள் பிழைப்பைத் தேடி வெளியேறினார்கள். ஆனால் கிராமத்தில் விவசாய வேலை இல்லாத காலத்தில் மட்டுமே அருகில் உள்ள நகரங்களுக்கு சென்று வேலை செய்து விட்டு மீண்டும் அறுவடைக் காலத்தில் கிராமத்திற்கு வந்து விடுவார்கள். அதே போல் பஞ்சம் பிழைக்கப் போவதும் வெறும் ஆண்கள் மட்டுமே செல்வார்கள், தற்போது கிராமத்தில் விவசாய வேலை இல்லை, விவசாய உற்பத்திக்கு நியாயமான விலை இல்லை, விவசாயத்திற்கு தேவையான இடு பொருட்களின் விலை உயர்வு, இப்படி தொடர் தாக்குதல், மறுபுறம் குறைவான கூலியும், சாதியின் பெயரால் இழிவும் என வாழ்வின் நெருக்கடி காரணமாக பஞ்சம் பிழைக்க குடும்பம் குடும்பமாக, கிராமம் கிராமமாக ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் இடம் பெயர்கின்றனர்.

நகரமயமாதல்: 

நகரமயமாதலின் அடிப்படையே இடம் பெயர்தல்தான். விவசாயம் பொய்த்துப்போகிறது. விவசாயத்தை நம்பி இனி குடும்பம் நடத்த முடியாது, உயிர்வாழ முடியாது என்ற நிலையில் தனியாகவோ, குடும்பம் குடும்பமாகவோ சின்ன சின்ன கூலி வேலைகளை தேடி நகரங்களை நோக்கி இடம் பெயர்கின்றனர்.

கடந்த இருபதாண்டில் நகரமயமாதலின் வேகம் மிகவும் அதிகமாகியுள்ளது. குறிப்பாக தற்போது தேசம் முழுமையிலும் தமிழகம் தான் நகரமயமாதலில் முதலிடம் வகிக்கிறது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழகத்தில் 48.45 சதமானோர் நகரங்களில்தான் வசிக்கின்றனர். அதாவது தமிழகத்தில் மொத்த மக்கள் தொகையான 7.23 கோடியில் 3.49 கோடி பேர் நகரங்களில் தான் உள்ளனர்.

குறிப்பாக, தமிழகத்தில் வட மாவட்டங்கள் முழுமையும் வேகமாக நகர்மயமாகி வருகிறது. சென்னை ஏறக்குறைய நூறு சதவிகிதமும், சென்னை அருகில் உள்ள மாவட்டங்களான திருவள்ளூர் 65.3 சதமும், காஞ்சிபுரம் 63.59 சதமும் நகரமயமாகியுள்ளதாக புள்ளிவிபரம் குறிப்பிடுகிறது. தமிழகத்திலேயே சென்னையை அடுத்த நகரமயமாகியுள்ள மாவட்டம் கன்னியாகுமரியாகும். அங்கு 82.47 சதம் நகரமயமாகியுள்ளது.

தமிழகத்தின் தற்போதைய அதிமுக அரசின் பட்ஜெட்டில் கூட நகரமயமாதலுக்கான காரணம் மிகத் தெளிவாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. கிராமங்களில் விவசாயத்திற்கான பாசனத்திறன் மற்றும் பயிரிடும் திறன் தொடர்ந்து குறைந்து வருவது தமிழகத்தின் வேகமான நகரமயமாதலுக்கான காரணமென்றும், தமிழகத்தில் வெறும் 58 சதமான நிலங்கள் மட்டுமே தற்போது பாசன வசதி பெரும் நிலையில் உள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

நகரமயமாதலை கட்டுப்படுத்தும் நோக்கோடு நகரங்களுக்கு இணையாக கிராமங்களை உயர்த்தப்போகிறோம் என்றும் இதே பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. இதற்காக “ஒருங்கிணைந்த கிராம கட்டுமான மேம்பாட்டு திட்டம்” இவ்வாண்டு முதல் செயல்படுத்தப்படுமென்றும் அதற்கு ஆண்டுக்கு 680 கோடி ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

9 லட்சம் மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்குவதற்கே 900 கோடி வரை ஒதுக்கும் அரசு கிராம மேம்பாட்டிற்கு ஒதுக்கும் நிதி வெறும் 680 கோடிதான்...! அதேபோல் வேளான் பாசனத்தை உயர்த்துவதற்கு அரசு ஒதுக்கும் திட்ட நிதி வெறும் 200 கோடிக்குள்தான்.

ஊரக வளர்ச்சி

மத்திய அரசின் பல்வேறு ஆய்வறிக்கைகளும் கிராமப்புற நெருக்கடியை ஒப்புக் கொள்கின்றனவே தவிர மாற்று நடவடிக்கைக்கான திட்ட ஒதுக்கீட்டை எந்த வகையிலும் உயர்த்திய பாடில்லை.

“இந்தியா கிராமங்களின் நாடு என்றும், கிராமங்களில் வசிப்பவர்களில் 50 சதமானோர் சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஏழ்மையிலேதான் இருக்கின்றனர்.” என்று பதினோறாவது ஊரக வளர்ச்சி குறித்த ஐந்தாண்டு திட்ட அறிக்கையே குறிப்பிடுகிறது.

இந்நிலையை மாற்ற கிராமங்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பை உயர்த்துவது, அதாவது பள்ளிகள், மருத்துவ வசதிகள், சாலை, மின்சாரம், குடிநீர், போக்குவரத்து போன்ற தேவைகளை பூர்த்தி செய்வது. விவசாய உற்பத்தியை அதிகப்படுத்துவது விவசாயம் சார் தொழிற்சாலைகளை உருவாக்குவது, அதன்மூலம் வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்துவது போன்ற தேவைகளை கிராமப்புற மக்களுக்கு வழங்குவது என்று பதினோறாவது ஐந்தாண்டு திட்டம் கூறியுள்ளது. கடந்த 2010-11 நிதி ஆண்டில் மத்திய அரசு கிராமப்புற குடிநீர் திட்டத்திற்கு ஒதுக்கிய நிதி 9000 கோடி, கழிப்பிட வசதிக்காக ஒதுக்கியது 1580 கோடி மட்டும்தான் கிராமப்புற இந்தியாவை உயர்த்தக் கூறிய அனைத்து திட்டங்களும் சாத்தியப்படாமல் அடுத்தாண்டோடு இந்த ஐந்தாண்டு திட்டம் முடியப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே ஒன்றை நினைவுப்படுத்த வேண்டியுள்ளது. 10 ஆண்டுகளாய் இந்தியாவில் 2.50 லட்சம் விவசாயிகள் வாழ முடியாமல் வாங்கிய கடனை கட்ட முடியாமல், சொந்த கிராமத்தில் சுய மரியாதை இழந்து, வாழ முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

நாட்டின் ஒட்டுமொத்த உழைப்பு சக்தியில் சரிபாதிக்குமேல் விவசாயத்துறையில்தான் செலுத்தப்படுகிறது. ஆனால் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.

இந்திய நாடடின் பொருளாதாரத்திலும் மற்றும் வேலைவாய்ப்பிலும் பெரும் பங்காற்றுவது 1.விவசாயத்துறை, 2. தொழில்துறை ,3. சேவைத்துறை இம்மூன்றும்தான். ஆனால் இன்று விவசாயத்துறையையும் தொழில் துறையையும் அழித்துவிட்டு சேவைத்துறையில் 13 சதம் வளர்ந்து விட்டோம் என பேசித் திரிகின்றனர் ஆட்சியாளர்கள். 1950 களில் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியில் 60சதமாக இருந்தது விவசாயத்துறை தற்போது வெறும் 17சதமாக குறைந்துள்ளது. அதே போல் அன்று விவசாயத்துறையில் வேலைவாய்ப்பு 56சதமாக இருந்தது தற்போது வெறும் 22.3 சதமாக குறைந்துள்ளது அதிலும் இளைஞர்கள் பங்கேற்பு 2.3 சதமாக உள்ளது என்றால் இந்த விவசாயத்துறைக்கு 64 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் ஆட்சியாளர்கள் செய்தது என்ன.

தவறான பொருளாதாரக் கொள்கைகளால் விவசாயிகளுக்கான மானியம் வெட்டப்படுகிறது. சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கடன்முறையாக கிடைக்காததால் கந்துவட்டி கடன் போன்றவைகளில் சிக்கித்தவிக்கின்றனர். அரசு மொத்தமாக அறிவிக்கும் கடன் தள்ளுபடி என்பது பெரும்பாலும் பெரும் நிலச்சொந்தக்காரர்களுக்குதான் பயன் தருகிறது.

இந்தியாவின் முக்கிய ஆதாரமான விவசாயத் துறையைப் பாதுகாக்காமல் இடம் பெயர்தலை தடுக்க முடியாது. உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் உள்ள விவசாய நிலங்களில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. நீர் ஆதாரமும் தேவைக்கு ஏற்ப ஆண்டில் சராசரியாக 110 செ.மீ மழை வளம் உள்ளது. உழைப்பதற்கு ஆற்றல் படைத்த 54 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா பின்னர் ஏன் நாட்டில் விவசாயம் அழிந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இந்திய நாடு முழுவதும் 75 லட்சம் ஏக்கர் நிலங்கள் வரை தரிசாக மாறிவருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட்டுகளாக மாற்றப்பட்டு விட்டன.

எப்படியோ கடினப்பட்டு பொருட்களை உற்பத்தி செய்தாலும், விளைபொருட்களுக்கான கட்டுப்படியான விலை கிடைக்காமல் நஷ்டம் ஏற்படுகிறது. இதுபோன்ற காரணங்களே மக்களை விவசாயத்தை விட்டு வேறேதேனும் பிழைப்பை தேடி ஓட வைக்கிறது.

தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்டத்தை முறையாக அமல்படுத்தினாலே இடம் பெயர்தலை சற்று குறைக்க முடியும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு ஆண்டுக்கு நூறு நாள் வேலை என்பதற்கு பதிலாக குடும்பத்தில் உள்ள 20 வயதுடைய அனைவருக்கும் வேலை, முறையான கூலி என்பன போன்றவை சில முன்னேற்றங்களை உருவாக்கும்.

அதேபோல் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளை உருவாக்குதல் மற்றும் மாவட்டங்களில் உள்ள கனிம வளங்களை பயன்படுத்தி அரசு புதிய தொழிற்சாலைகளை உருவாக்குவதும், வேலை வாய்ப்புகளை படித்த கிராமப்புற இளைஞர்களுக்கு வழங்கும் என்பதும் கவனிக்கத்தக்கது.

ஐந்தாண்டு திட்டங்களும், பலநூறு ஆய்வறிக்கைகளும் விவசாயம் குறித்தும், இடம்பெயர்தல் குறித்தும் அரசு முன்வைக்கிறதே தவிர, விவசாயியோ, விவசாயமோ முன்னேறிய பாடில்லை..... உழுதவன் இன்று கணக்கு பார்க்கையில் உழக்கு கூட மிஞ்சவில்லை.