இளைஞர் முழக்கத்தின் முதன்மைப்பகுதிக்காக விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை வட்டம் வேலூர், உ.நெமிலி வருவாய் கிராமங்களில் 3 குழுக்களாக பிரிந்து 100 வீடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வை மையமாகக்கொண்ட இக்கட்டுரையில் மாவட்டம் குறித்த அறிமுகத்துடன் மக்கள் கருத்தை விவாதிப்போம்.

1114 கிராமப்புற ஊராட்சிகளைக்கொண்டு பரந்து விரிந்த விழுப்புரம் மாவட்டம் விவசாயத்தை பிரதானமாகக்கொண்ட விவசாயத் தொழிலாளர்கள் அதிகமான மாவட்டம். கரும்பு, மணிலா, முந்திரி, சவுக்கு, மஞ்சள், மரவள்ளி மற்றும் தானிய பயிறு வகைகள் உற்பத்தியாகக்கூடிய இங்கு 8 கரும்பு ஆலைகளும் உள்ளது. காவேரி, தென்பெண்ணை, பாலாறு என தமிழகத்தின் வளம் குறித்து பெருமை பேசும் பாடலில் உள்ள தென்பெண்ணை பாய்வதாக கூறப்படும் இங்கு விவசாயம் பொய்த்துப்போய் பலவருடமாகிவிட்டன. இல்லாத ஆற்றின் மேல் பாலம் கட்டும் அளவுக்கு தமிழகம் இன்னும் முன்னேறவில்லை என்பதால், பேருந்துகளும், ரயில்களும் மிக நீண்ட பாலங்களில் அடிக்கடி பயணிக்கையில் ஆறு அங்கு ஓடியிருக்கும் என நம்ப முடிகிறது. கிராமங்களில் விவசாயப்பகுதி குறைந்து போய் ரியல் எஸ்டேட் வளர்ந்து வருவது வேதனைமிக்கதாக உள்ளது. கடற்கரையோரங்களில் உப்பு உற்பத்தியும், கருப்புக்கல் போன்ற இயற்கை கனிம வளங்களும் நிறைந்திருந்தபோதிலும் அவ்வளங்கள் மக்களின் வாழ்வாதார நிலையை உயர்த்தவில்லை என்பது பெரும் முரணாகும்.

நாங்கள் சந்தித்த நூறு வீடுகளில் உள்ள மொத்த மக்கள் 586பேர். இதில்20-+40 வயதுடைய 85 இளைஞர்கள், 10+-20 வயதுடைய 64 இளைஞர்கள்,40+-60 வயதுடைய 38 ஆண்கள் ஆகிய 187 பேரில் 124 பேர் வெளியூருக்கு வேலைக்கு செல்வோர். வெளியூருக்கு வேலைக்கு செல்வதில் பெண்களும் விதிவிலக்கல்ல.20 முதல் 60 வயதுடைய 186 பெண்களில் 96 பெண்கள் வெளி யூருக்கே வேலைக்கு செல்கின்றனர். ஆண்களில் 66.3 சதமானோரும், பெண்களில் 52 சதமானோரும் வெளியூருக்கு வேலைக்கு செல்கையில் உள்ளூர் சமூக வளர்ச்சி என்பது எவ்விதத்தில் சாத்தியம்? வேலைக்கு வெளியூர் செல்லும் இம்மக்கள் உள்ளூருக்கு வருவது பெரும்பாலும் கோயில் விழாக்களுக்கும், பண்டிகை காலங்களுக்கும் மட்டும்தான். திருவள்ளூர், சென்னையைச் சுற்றியுள்ள செங்கல் சூளைகளுக்கு வேலைக்கு செல்வது பிரதானமானதாகும்.

தை முதல் ஆடி மாதம் வரையான காலங்களில் மாட்டு வண்டிகளுடன் கணவன், மனைவி மற்றும் குடும்பத்தில் வேலை செய்யத் தகுதியான அனைவரும் சென்று வேலை செய்கையில் குடும்பத்துக்கான சம்பளம் என்று பேசப்படும் ஊதியம் 30+-50 ரூபாய் வரை இருப்பதுதான் வழக்கமாம். பாலியல் சீண்டல்கள், முதலாளிகள் செய்யும் அடாவடித்தனங்கள் என அனைத்தையும் பொறுத்துப்போகும் இவ்வாழ்க்கை கொத்தடிமை வாழ்க்கை முறை போல் உள்ளதாக மக்கள் கூறுவது பெரும் சோகமாகும். அதே போல், கரும்பு வெட்ட ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களுக்கும், ஈரோடு போன்ற மாவட்டங்களுக்கும் பெரும்பாலான விவசாயத் தொழிலாளிகள் செல்கின்றனர். சொந்த நிலம் இருந்தும் விவசாயம் செய்ய வசதி இல்லாத விவசாயிகள் தாங்களும் வேலைக்காக மேற்கூறப்பட்ட பகுதிகளுக்கே செல்வதாக கூறுகிறார்கள்.

விவசாயம் பெரும் செலவு சார்ந்த தொழிலாக மாறிவருவதாகக் கூறும் இம்மக்கள் பல ஆண்டுகளாக பாசன வசதிகள் குறைந்து வந்தபோதும் அரசு தலையிடாததை பெரிய காரணமாகக் கூறுகின்றனர். உரம், பூச்சிக் கொல்லி மருந்து போன்றவற்றை அரசு மான்ய விலையில் வழங்கி, பாசன வசதிகளையும் மேம்படச்செய்தால் உள்ளூரிலேயே விவசாயம் செய்யத்தயாராக இருப்பதாக கூறும் விவசாயிகள், தங்களால் மேலும் சில தொழிலாளர்களுக்கும் வேலை தர முடியும் என்றும் கூறுகின்றனர்.

கிராமப்புற வேலைத்திட்டம் இக்கிராமங்களில் முறையாக அமலாகவில்லை என்று கூறும் மக்கள் வருடத்திற்கு நூறு நாள் வேலை எனில் இதர நாட்களுக்கு எங்களை அரசு என்ன செய்யச்சொல்கிறது என்று கேட்பது நியாயமான கேள்வி. நூறு நாள் வேலையையும் முறையாகத் தராமல் 30-+40 நாட்கள் வரை மட்டுமே தருவதோடு மட்டுமல்ல, ஊதியமும் நூறு என்பதற்குப்பதிலாக ரூ. 60+-70 வரை மட்டுமே தரப்படுகிறது. இதிலும் ஊழல் என்பது கைப்புண்ணாக பளிச்செனத் தெரிகிறது. நாங்கள் சந்தித்த நூறு வீடுகளில் 62 வீடுகளில் குடிசைகளில்தான் வாழ்கின்றனர். இவர்களில், 39 ஆண்கள், 46 பெண்கள் 5வது வகுப்புக்குள் படித்தவர்கள். 6-+10வரை படித்தவர்கள் 82 ஆண்கள் மற்றும் 70 பெண்கள் ஆவர். 12 வரை படித்தவர்கள் 13 ஆண், 7பெண் மட்டுமே. ஐ.டி.ஐ-2ஆண், ஒரு பெண், பாலிடெக்னிக் 2ஆண்கள் மட்டுமே. இளநிலை பட்டம் படித்தவர்கள் 5ஆண், ஒரு பெண்,ஆனால், முதுகலை படித்தோர் யாரும் இல்லை. பொறியியல் கல்லூரியில் தற்போது 3 ஆண்கள் மட்டும் படித்து வருகின்றனர். அதாவது, துவக்கக் கல்விக்கு போகும் பெண்களின் எண்ணிக்கை ஒரளவு இருந்தாலும் உயர்கல்வி, தொழிற்கல்வி, வேலை வாய்ப்புக்கல்வி என வரும்போது பெண்களுக்கு எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

586 பேரில் ஏதும் படிக்காத மக்கள் எண்ணிக்கையோ 84 ஆண்கள்,116 பெண்கள். இன்று வரையான கல்வி கற்கும் ஏற்பாட்டில் இத்தகைய பாகுபாடு நீடிப்பதை நாம் உணரமுடிகிறது. இம்மக்கள் வெளிமாநிலம் முதல் சென்னை வரை குடும்பத்துடன் இடம்பெயர்வதால், கிராமங்கள் வெறிச்சோடிக்கிடக்கும். குழந்தைகளின் பள்ளிக்கல்வி கூட பல காலமாக உத்தரவாதப்படுத்தப்படாத ஒன்றாகவே நீடிக்கிறது. மாநிலத்தில் 35.23 சதமாக உள்ள இடைவிலகல் இங்கு 40.39 .என தமிழகத்திலேயே அதிக இடைவிலகல் பள்ளிக்கல்வியில் உள்ள மாவட்டம் என்ற அவலநிலை இதனால்தான் நீடிக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிக்கல்வி வாய்ப்புகளும், உயர்கல்வி வாய்ப்புகளும் கிராம மக்களுக்கு முழு அளவில் சென்றடையவில்லை.மாநிலத்தில் ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் என்பது 42.22 என்கையில் விழுப்புரம் மாவட்டத்திலோ 57சதமாகும். மாநில வறுமைக்கோடு 31.7 சதம், ஆனால், இங்கு 50.9 சதம் எனும்போது இலவசக்கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் கிராம மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கவேண்டும். பத்து கலை அறிவியல் கல்லூரிகளும், 14 ஆசிரியர் பயிற்சிக்கல்லூரிகளும், 7 பொறியியல் கல்லூரிகளும் உள்ளன. ஆனால், அரசுப்பள்ளிகளில் துவங்கும் புறக்கணிப்பு உயர்கல்வி வரை கிராம மக்கள் மீது தொடர்கையில் இடப்பெயர்வை எப்படி தடுக்க இயலும்.

சென்னையோடு மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதை இணைப்பு மட்டுமல்லாது, சென்னையில் இருந்து 159 கி.மீ.தூரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் ஆறுவழிச்சாலையில் உள்ள ஒரு மாவட்டத்தில் கல்வி, விவசாயம், வேலை வாய்ப்பின்மை என அனைத்திலும் பின் தங்கிப்போனதற்கு என்ன காரணம்? விழுப்புரம் மாவட்ட தொழில்மையம் ஆய்வு செய்து இங்கு பல புதிய தொழிற்சாலைகளை துவங்குவதன் மூலம் உற்பத்தியை மட்டுமல்லாது,வேலை வாய்ப்புகளையும் பெருக்கமுடியும் என அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. ஆயினும், அரசின் பார்வை ஏன் இவர்கள் மீது படவில்லை? இதுவரை தொழிற்பேட்டை என ஒன்று கூட துவக்கப்படவில்லை. 8 கரும்பு சர்க்கரை ஆலைகள் உள்ளன.ஆனால், கரும்பு சக்கையைப் பயன்படுத்தி காகித தொழிற்சாலை கொண்டுவரப்படவில்லை. மஞ்சள்.முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை, மர வள்ளிக்கிழங்கு அரவை ஆலை என விவசாயப்பொருட்களை வைத்து பல தொழிற்சாலைகள் துவங்கி பல ஆயிரம் பேருக்கு வேலை உள்ளூரிலேயே தரமுடியும். கிராமப்புற பொருளாதாரம் பற்றி பேசும் ஆட்சியாளர்கள் ஏன் கிராம மக்களின் வாழ்வைப்பற்றி யோசிக்க மறுக்கிறார்கள் என்ற கேள்விக்கு ஒரு விடை தான் தோன்றுகிறது. கிராம மக்கள் இன்னும் கேள்வி கேட்க துவங்கவில்லை என்பதே அது.

நமக்கு தோன்றுவதும் ஒன்று தான், நாம் கேள்வி கேட்டபோது நம்மிடம் கேள்வி கேட்ட அம்மக்கள் ஆட்சியாளர்களிடம் கேள்வி கேட்க வெகுநாட்களாகாது.

Pin It