ஒரு நாள் விடிந்தும் விடியாத காலைப் பொழுது. இரண்டு நாட்களாக மழை தூறிக் கொண்டே இருந்தது. மகேஷ் நல்ல உறக்கத்தில் இருந்தான். கட்டிலில் இருந்து அவன் உருண்டு கீழே விழாதபடி தடுக்க ஒரு தலையணை அடை கொடுக்கப்பட்டிருந்தது. ஜன்னல் வழியே வெளிச்சம் கட்டிலில் விழுந்திருந்தது.

குணசுந்தரி அடுப்படியில் பரபரப்பாக இருந்தாள். வாளியில் தண்ணீர் பிடித்து ஊற்றிக் கொண்டிருந்தாள். மோட்டார் ஓடும் வரை தண்ணீர் வரும். மோட்டார் எப்போது நிற்கும், கரண்ட் எப்போது போகும் யாருக்கும் தெரியாது. அண்டா, தவளை, குடம் என வரிசையாக அடுக்கப்பட்டு இருந்தது. பத்துக் குடம் பிடிக்கிற மாதிரி ஒரு டிரெம் வாங்க வேண்டுமென்று இந்த வீட்டுக்கு குடிவந்த நாள் முதல் நினைத்துக் கொண்டுதான் இருக்கிறாள். எதை வாங்கிய பிறகும், பிறகொன்றை வாங்க வேண்டுமென்கிற மாதிரியே குணசுந்தரிக்கு தோன்றுவது. சில சமயத்தில் அவளுக்கே ஆச்சரியமாகத் தோன்றும். பிறகு ஒருமுறை யோசிக்கும் போது தேவை என்பதனாலேயே தனக்குத் தோன்றியதாக தன்னையே சாசுவாதப்படுத்திக் கொள்வாள்.

நேரம் கடந்து கொண்டிருக்கிறது. இப்போது தான் விடிந்த மாதிரி இருந்தது. நாலரை மணிக்கு எழுந்தாலும் வேலை ஓய்ந்தபாடில்லை. கடைத்தெருவுக்கு போன போது வேணியக்காவோடு காய்கறிக் கடையில் கொஞ்சநேரம் பேசிக்கிடக்க வேண்டிப்போனது. தினசரி வேணியக்காவிடம் நாலு விசயம் பேசிவிட்டு வந்தால் தான் அந்த நாள் விடிந்தமாதிரி.

நேரம் கடப்பது அவளுக்கு காலில் வெந்நீரை ஊற்றி, அதன் சூடு அதிகரித்துக் கொண்டே வருவது போல் இருந்தது. மகேஷ் புரண்டு படுத்தான். “ஏலே மகேஷ் நேரமாச்சு. மணி ஏழு.... யெந்திரி” என குரல் கொடுத்தாள் குணசுந்தரி. மகேஷின் காதில் விழுந்ததாக இல்லை. தூக்கத்தின் மிகுந்த சுவாரஸ்யமான கட்டத்திற்கு வந்து விட்டதாக அவன் நினைத்தான்.

குணசுந்தரி தண்ணீர் பிடித்து முடித்தவுடன், இட்லி குக்கரை எடுத்தாள். தட்டுகளில் எண்ணெய் தடவி காய வைத்தாள். ஒரு எட்டு எடுத்து வைத்து மகேஷ் படுத்திருந்த கட்டில் அருகே சென்று அவனது தோளை உலுக்கி, “ஏய் யெந்திரி நேரமாச்சு” என்றாள். “ம்” என்ற முனகலோடு அவன் குணசுந்தரியின் கைக்கெட்டாத தூரத்திற்கு செல்ல முயன்றான்.

மீண்டும் அடுப்படிக்குள் நுழைந்தாள். கழுவிக் கிடந்த பழைய பாத்திரங்களை எடுத்து அடுக்கி வைத்தாள். இட்லி தட்டுக்கு வந்து, பாக்கெட் மாவை சின்ன தூக்குவாளியில் ஊற்றி கிண்டினாள்.

தட்டுகளில் மாவை ஊற்றினாள். தட்டுகளை குக்கரில் அடுக்கி வைத்து, அடுப்பில் ஏற்றினாள். “ஏய் யெந்திரி” என சத்தமிட்டுக் கொண்டே மகேஷின் பூட்சை தேடினாள். அது மூலைக்கொன்றாய் கிடந்தது. தேடி எடுத்து பழைய துணியால் துடைத்தாள். மஞ்சள் நிற பாலிதீன் கவரிலிருந்து பிரஷையும், பாலிஷ் டின்னையும் எடுத்தாள். பூட்சை மெருகேற்றினாள். அது கருப்பு நிறத்தில் பிசுபிசுத்தது. கயிறுகளை ஒழுங்கு செய்தாள். காலையில் கடைக்குப் போய் வாங்கி வந்த தேங்காய் சில்லையும், பொரிகடலையையும் எடுத்து மிக்சிக்கு அருகில் போனாள். மிக்சியின் சத்தம் கடகடவென்று சிடுசிடுத்தது. அந்தச் சத்தத்திலும் மகேஷ் அசைவின்றி படுத்துக்கிடந்தான். தண்ணீர் இட்டு கலக்கி அடுப்பில் வைத்தாள். மீண்டும் கட்டிலுக்கு வந்து “ஏய் எந்திரிலே” என்றாள். மகேஷை கையோடு தூக்கி கட்டில் மீது நிறுத்தினாள். “ரெண்டாப்பு படிச்சா வெள்ளன எந்திரிக்கணும்னு நெனப்பு இல்லை” என்றாள்.

அவன் வளைந்து குழைந்து கட்டிலில் சரிய முயன்ற போது, அவனைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டாள். அவன் தோளில் தலையைச் சாய்ந்தபடி தூக்கத்தைத் தொடர்ந்தான். குணசுந்தரி அவனைச் சுமந்தபடி, டிவி அருகில் சென்று அதனை ஆன் செய்து மியூசிக் சேனலில் சத்தமாக பாட்டு வைத்தாள். மகேஷ் சலனமின்றி தூங்கினான். குக்கரில் இருந்து மாறிமாறி சத்தம் வந்தது. குக்கரை இறக்கினாள். காலையில் போட்டிருந்த காபியை அடுப்பில் வைத்து சூடேற்றினாள். மகேஷை ஹாலில் கிடந்த சேரில் உட்கார வைத்தாள். அவன் குறுக்கு மறுக்காக காலையும் தலையையும் மடக்கி படுத்தான். குணசுந்தரி சூடேறிய அடுப்பை அணைத்துவிட்டு, சட்னியை கரண்டியால் கிண்டி, அப்படியே வாயில் ரெண்டு சொட்டு விட்டு சப்பிக் கொண்டாள்.

மகேஷை சேரிலிருந்து இறக்கி நிறுத்தி, டவுசர் சட்டையை கழட்டினாள். லேசான சூட்டோடு காபியை அவன் கையில் கொடுத்தாள். காபி டம்ளரை வாங்கிய மகேஷ், லேசாக கண்விழித்துப் பார்த்தான். டிவிக்கு அருகே சென்று கார்ட்டூன் சேனலுக்கு மாற்றினான்.

அங்கொன்றும் இங்கொன்றுமாய் கிடந்த நோட்டு புத்தகங்களை குணசுந்தரி எடுத்து மகேஷின் பேக்கில் போட்டாள். பென்சிலை சீவினாள். “நேத்து குடுத்த பென்சில் எங்கல” என்றாள். “அத செல்வகணேஷ் வாங்கிட்டான்” என்றான் மகேஷ். “ஆமா புதுசா வாங்குனத எல்லாருக்கு கொடுத்துரு. உனக்குள்ளத பத்திரமா வைச்சிக்கிட தெரியல” என்று ஏசினாள். ஸ்கேல், ரப்பர் எல்லாவற்றையும் சரிபார்த்து குச்சிபாக்சில் போட்டு மூடினாள். காபியை குடித்து முடித்திருத்த மகேஷை இழுத்துக் கொண்டு பாத்ரூம் போனாள்.

பிரஷில் பேஸ்ட்டை அமுக்கி அவன் வாயை திறக்கச் சொல்லி நாலுமுறை இழுத்தாள். ஆறிய வெந்நீரை மகேஷின் வாயில் ஊற்றி கொப்பளிக்கச் செய்தாள். பிரஷை அதனிடத்தில் போட்டுவிட்டு குளிப்பதற்கு சூடாக்கிய தண்ணீரை எடுக்கப்போனாள். பாத்ரூமில் நின்றபடியே ஒன்னுக்கடித்தான் மகேஷ். பக்கத்திலிருந்த வாளியில் கையை விட்டு அலம்பினான். தண்ணீர் சுழன்று அலை எழுப்பியது. வட்டமாய் வாளிக்குள் தண்ணீர் சுழன்றது. நடுவில் குழி விழுந்தது. அதனுள் மகேஷ் கையை விட்டான். நுரை தள்ளியது.

“வெளயாடாம எந்திரிலே” என்று குணசுந்தரி மகேசை தூக்கி நிறுத்தினாள். குத்துப்போணியிலிருந்த தண்ணீரை செம்பில் மோந்து மகேஷ் மேல் ஊற்றினாள். முகத்தில் வழிந்த தண்ணீரை அண்ணாந்து கொப்பளித்தான் மகேஷ். அது குணசுத்தரியின் உடம்பில் பட்டுத் தெறிந்தது.

ஊதா கலர் துண்டை எடுத்து தண்ணீரை ஒற்றி எடுத்தாள். மகேஷ் ஓடிச் சென்று டிவிக்கருகில் நின்றான். “இங்கிட்டு வால” என இவனை இழுத்து நிறுத்தி துடைத்தாள். ஒரு தட்டில் மூன்று இட்லியை வைத்து சட்னியை ஊற்றி அவன் கையில் கொடுத்தாள். அவன் நின்றபடியே டிவி பார்த்துக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தான். குணசுந்தரி மகேஷிற்கு டவுசர் போட்டாள். தட்டை கைமாற்றி சட்டையை மாட்டினாள். சட்டையை டவுசருக்குள் நுழைத்து. பெல்ட் மாட்டினாள்.

மகேஷை சேரில் உட்கார வைத்து பூட்சை மாட்டினாள். டிபன் பாக்சில் நாலு இட்லி வைத்து மூடினாள். பாட்டிலில் தண்ணீர் அடைத்தாள்.

மகேஷ் இரண்டாவது இட்லியில் கைவைக்கும்போது ஆட்டோவின் சத்தம் கேட்டது. பேக்கை எடுத்துக் கொண்டு குணசுந்தரி முன்னால் சென்றாள். மாடியில் இருந்து குதித்துத் குதித்து படிகளைத் தாண்டினான் மகேஷ். ஆட்டோ மாமா ஸ்கூல் பேக்கை வாங்கி கேரியரில் போட்டார். மகேஷ் ஆட்டோவில் ஏறி ஓரமாய் உட்கார்ந்தான். குணசுந்தரி கையசைத்து சிரித்தாள். மகேஷ் கையை ஆட்டி சிரித்து, முகத்தை திருப்பி வேடிக்கை பார்க்கத் துவங்கினான். ஆட்டோ திரும்பிச் செல்லும் வரை குணசுந்தரி அங்கேயே நின்று கொண்டிருந்தாள்.

கிரிஜாவின் வீட்டுக்கு முன்னால் ஆட்டோ நின்றது. ரெண்டு அசோகா மரங்களும், குரோட்டன்ஸ் செடிகளும் அங்கு இருந்தன. அணில் ஒன்று அசோகா மரத்தில் ஏறிக் கொண்டிருந்தது. ஒவ்வொருவர் வீடாகச் சென்று ஆட்டோ மெயின் ரோட்டில் ஏறியது. ஆத்துப் பாலத்தின் மீதேறி கடந்தது.

ஸ்கூலுக்கு முன்பாக ஆட்டோ நின்றவுடன் பேக்கை முதுகில் தூக்கி, கையில் லஞ்ச் பாக்ஸோடு கூன் போட்டு நடந்தான் மகேஷ். ஸ்கூல் முழுவதும் சத்தம் நிறைந்து இருந்தது. மணி அடித்ததும் அரவமற்ற இடமாக மாறியது. ஒன்றிரண்டு பேரின் காலடிச் சத்தம் மட்டும் கேட்டது. அமைதி. நல்ல பள்ளி.

வீடு வெறிச் சென்று இருந்தது. டிவியை அணைத்தாள். பேரமைதி வீட்டைப் போர்த்திக் கிடந்தது. வரிசையாக அடுக்கப்பட்டிருந்த குட்டிப் பென்சில்களை ஒரு சேர அள்ளி மேசையில் போட்டாள். நடமாட முடியாதபடி வீடு முழுக்க எல்லாம் இறைந்து கிடந்தது. நேற்று மாலையில் ஸ்கூல் விட்டு வந்ததும் மகேஷ் வீட்டையே தலைகீழாக மாற்றி வைத்திருந்தான். பென்சில், பழைய பெட்டி எல்லாம் ரயில் மாதிரி வரிசையாக அடுக்கப்பட்டிருந்தது. கட்டில் மேல் எல்லாத் தலையணையும் கோபுரம் போல அடுக்கியிருக்கும். குணசுந்தரி வீடு முழுவதையும் பார்த்தாள். செய்ய வேண்டிய வேலையை வரிசையாக மனதினில் அடுக்கிப்பார்த்துக் கொண்டாள்.

மறுநாள் இருட்டு கரைந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு நட்சத்திரமாய் மறைந்து கொண்டிருந்தது. மரங்களின் கறுப்பு நிறம் மங்கிக் கொண்டே, பச்சை நிறத்தில் மாறிக் கொண்டிருந்தது. குணசுந்தரியும், மகேஷும் கட்டிலில் படுத்திருந்தார்கள். தெருவில் பால்வண்டியின் மணியோசை கேட்டது.

வீட்டில் இரவு விளக்கின் வெளிச்சம் நிரம்பிக் கிடந்தது. அடுப்படி ஜன்னல் திறந்திருந்தது. அடுப்படி ஜன்னலில் ஒரு சிட்டுக் குருவி வந்து அமர்ந்தது. அதன் வாயில் ஒரு வைக்கோல் பதரும் இருந்தது. வேறு எங்கோ இருந்து இன்னும் சில சிட்டுக்குருவிகளின் சத்தம் கேட்டது. விடாமல் சத்தம் வந்தது. கீ...... கீ........

படுக்கையிலிருந்த மகேஷ் சிட்டுக் கருவியின் சத்தம் கேட்டு லேசாக கண்விழித்துப் பார்த்தான். சிட்டுக்குருவியின் சத்தம் இப்போதும் கேட்டது. மகேஷ் கட்டிலிலிருந்து எழுந்தான். குணசுந்தரியை தாண்டிக் குதித்தான். அடுப்படி அருகே வந்தான்.

சிட்டுக் குருவி தலையை திருப்பியபடி சத்தமிட்டது. மகேஷ் சிட்டுக்குருவியை பார்த்து சிரித்தான். அடுத்த அறைக்கு சென்று ஜன்னல் வழியே வெளியே பார்த்தான். நாலைந்து சிட்டுக்குருவிகள் கணேஷ் வீட்டு மொட்டை மாடியில் சத்தமிட்டபடி நின்றன.

மகேஷ் வேகமாக சென்று குணசுந்தரியை எழுப்பினான். “அம்மா கதவுத் தொற கணேஷ் வீட்டு மாடிக்குப் போவணும்” என்றான். குணசுந்தரி கடிகாரத்தைப் பார்த்தாள். “ஐந்து மணிக்கு எந்திரிச்சிட்ட. பேசாம படுத்துத்தூங்கு இன்னிக்கு லீவு தான ஒம்போது மணிக்கு எந்திரிக்கலாம்” என்றாள்.

மகேஷ் ஓட்டமாக சென்று அடுப்படி ஜன்னலைப் பார்த்தான். வெளியே சுதந்திரமாக சிட்டுக்குருவிகள் ஒலி எழுப்பியபடி திரிந்தன. மகேஷ் அங்குமிங்குமாக ஜன்னலின் வழியே பார்த்தபடி இருந்தான். மங்கிய வெளிச்சத்தில் சிட்டுக்குருவிகள் பறந்து பறந்து அவனையும் அழைப்பதாக நினைத்து குதித்தான். வீடு பூட்டிக் கிடந்தது.

Pin It