சமீபத்தில் லண்டன் நகரின் வடபகுதியில் உள்ள டாட்டென்ஹம்மில் கலவரம் வெடித்தது. அதற்கு அடுத்த 48 மணிநேரத்தில் ஹேக்னே பகுதியில் மற்றொரு கலவரம் வெடித்தது. அதற்கு பிறகு வந்த நாட்களில் விவர்பூல், பர்மிங்காம் உள்ளிட்ட லண்டனின் இதர பகுதிகளிலும் உணவகங்கள், காபிக் கடைகள் தாக்கப்பட்டன. பல்பொருள் அங்காடிகள் சூறையாடப்பட்டன. கலகத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரை தாக்கினர். சங்கிலித் தொடராக உள்ள பெரிய கடைகள் மட்டுமல்லாமல் சிறிய கடைகள் கூட சூறையாடப்பட்டன. இங்குமங்குமாக சில தனிநபர்கள் தாக்கப்பட்டனர் என்ற செய்திகள் ஊடகத்தில் வெளியாகின.

மேலோட்டமாகப் பார்த்தால் இவையெல்லாம் வெறும் சமூக விரோதச் செயல்களாகத் தோன்றும். ஆனால், இந்த சம்பவங்களையெல்லாம் கூர்ந்து நோக்கினால் உண்மைக் காரணம் புலப்படும். வீட்டு அடமானக் கடனில் துவங்கிய நிதி சூறாவளி ஏற்படுத்திய பாதிப்புகளால் கடந்த மூன்றாண்டுகளாக அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும், நவீன தாராளமயக் கொள்ளைகளோடு தங்கள் நாட்டுப் பொருளாதாரத்தை இணைத்த இதர உலக நாடுகளும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகின என்பது அனைவரும் அறிந்ததே இத்தகைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டிட அமெரிக்கா, பிரிட்டன் போன்ற முதலாளித்துவப் பாதையில் பயணிக்கும் நாடுகள் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கைகள் ஏழைகளுக்குப் பலனளிப்பதற்கு பதிலாக செல்வந்தர்களுக்கே பயன்பட்டன என்பது எவரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மையாகும். இந்த பின்புலத்தில், லண்டன் நகரில் நடைபெற்ற கலவரங்களைப் பார்த்தால் இவையெல்லாம் அந்நகர இளைஞர்கள் காட்டுமிராண்டித்தனமாக அரங்கேற்றிய வெறியாட்டமோ அல்லது சுயநலத்துடன் நிகழ்த்தப்பட்ட கொள்ளையோ அல்ல என்பதனை புரிந்து கொள்ள முடியும்.

லண்டன் நகரின் ஒரு சில பகுதிகளிலே நடந்து செல்லும் எவரொருவரும் கூர்ந்து கவனித்தால் அங்கு மக்கள் பொறுமையை இழந்து வருகின்றனர், அதிருப்தி அதிகரித்து வருகிறது, அவர்களது குறைகள் பல்கிப் பெருகி வருகின்றன என்பதனையெல்லாம் புரிந்து கொள்ள முடியும் என பிரபல எழுத்தாளர் மைக் மர்குசீ சமீபத்தில் ஹிந்து நாளிதழில் எழுதிய கட்டுரையில் குறிப்பிடுகிறார். கலவரம் நடைபெற்ற டாட்டென்ஹம் பகுதியில் ஒரு ஆணின் சராசரி ஆயுட்காலம் என்பது செல்வச்செழிப்பான கென்சிங்டன் மற்றும் செல்சீ போன்ற பகுதிகளில் வசிக்கும் ஆணின் சராசரி ஆயுட்காலத்தை விட 18 ஆண்டுகள் குறைவாக உள்ளது. தேசிய அளவில் 20 சதமாக உள்ள இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தின் அளவு டாட்டென்ஹம், ஹேக்னே போன்ற பகுதிகளில் 40 சதமாக உள்ளது. பிரிட்டன் நாடானது செல்வவளம் மிகுந்த நாடாக இருந்தபோதும் அந்நாட்டு மக்களிடையே அச்செல்வம் சரிசமமாக பகிர்ந்தளிக்கப்படவில்லை. கடந்த 15 ஆண்டுகளாக அந்நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இன்று கலவரங்கள் நடைபெறுகிற பகுதிகளில் வாழும் மக்களை சென்றடையவில்லை. அதே நேரத்தில் கடந்த மூன்றாண்டுகளாக ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியானது அவர்கள் மீது கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வது என்ற பெயரில் அரசு மேற்கொண்ட சிக்கன நடவடிக்கைகள் எல்லாம் மேலும் பெரும் சுமையை இவர்கள் மீது ஏற்றின. இதனாலெல்லாம் தங்களது வாழ்வையிழந்த மக்களின் கோபம், எதிர்காலம் இருண்டு போன இளைஞர்களின் ஏக்கம் என்பதெல்லாம் கலவர நடவடிக்கைகளாக லண்டன் நகரில் வெளிப்பட்டுள்ளன என்பதே உண்மையாகும்.

இத்தகைய சூழலில் அமெரிக்க அரசாங்கத்தின் கடன் தரம் மிக உயர்ந்த நிலையான AAA என்பதிலிருந்து -AA என ஒரு படி கீழிறங்கியுள்ளது. இவ்வாறு நிகழ்ந்திருப்பது தர நிர்ணய வரலாற்றில் முதன் முறையாகும்.அமெரிக்க அரசின் கடன் அளவானது 14.3 லட்சம் கோடி டாலர் என்ற அளவினை தாண்டியுள்ள நிலையில், சட்டப்பூர்வமான கடன் உச்சவரம்பினை அதிகரிப்பது குறித்த சர்ச்சை ஆளும் ஜனநாயகக் கட்சிக்கும், எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சிக்கும் இடையே நடைபெற்று வரும் தருணத்தில் இந்த இறக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அமெரிக்காவில் மட்டுமல்லாது, உலகின் பல்வேறு நாடுகளில் பங்குச் சந்தைப் புள்ளிகள் வீழ்ச்சியடைந்தன. இதே சமயத்தில் யூரோ மண்டலத்தில் அரசாங்கத்தின் கடனில் ஏற்பட்டுள்ள நெருக்கடியானது, கிரீஸ், அயர்லாந்து மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளை திவாலின் விளிம்பிற்கு இட்டுச் சென்றுள்ளது. மேலும், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளை அச்சுறுத்திக் கொண்டுள்ளது. பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியல் மேலும் நீள்கின்ற அபாயம் உள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியானது உலகப் பொருளாதார நெருக்கடியின் புதிய கட்டமல்ல. 1929-1935 வரையிலான ஆண்டுகளில் நிலவிய பெரும் மந்தத்திற்குப் பிறகான 85 ஆண்டுகளில் பல்வேறு கட்டங்களில் முதலாளித்துவம் பல நெருக்கடிகளை சந்தித்துள்ளது. நெருக்கடியிலிருந்து மீள அது மேற்கொண்ட நடவடிக்கைகள் அடுத்த நெருக்கடிக்கு வித்திட்டன. அமெரிக்காவின் தற்போதைய நெருக்கடியும் இதிலிருந்து மாறுபட்டதல்ல. மூன்றாண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வீட்டு அடமானக் கடன் நெருக்கடியிலிருந்து மீண்டிட 300 டிரில்லியன் டாலருக்கும் கூடுதலான தொகை அமெரிக்க அரசால் செலவிடப்பட்டது. இத்தொகை அந்நாட்டின் சாதாரண மக்களுக்கு அளிக்கப்பட்டிருந்தால் அவர்கள் தங்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள அதனை செலவிட்டிருப்பர். இதன் காரணமாக, பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கப்படத் தேவை ஏற்பட்டிருக்கும். இதனால் கூடுதல் வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு, மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கப்பட்டு, பொருளாதாரம் நெருக்கடியிலிருந்து மீள வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால், அமெரிக்க அரசானது மீட்புத் தொகையினை நிதி நெருக்கடியை உருவாக்கிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே அளித்ததால் அந்நிறுவனங்கள் திவாலாவதில் இருந்து மீட்கப்பட்டன. ஆனால், நாடுகள் திவாலாகும் நிலை உருவாகியுள்ளது. அது மட்டுமின்றி, நெருக்கடியை மேலும் அதிகரித்ததுடன் உலகப் பொருளாதாரத்தையும் நிலையற்றதாக ஆக்கியுள்ளது.

இந்த நெருக்கடியின் பாதிப்பு இத்துடன் நின்று போகாது. இது மேலும் பல நெருக்கடிகளுக்கு வித்திடுகிறது. பொருளாதாரத்தை மீட்டெடுப்பது என்ற பெயரில் முதலாளித்துவ அரசுகள் மேற்கொள்ளும் சிக்கன நடவடிக்கைகள், சாதாரண மக்களின் முதுகில் பெரும் சுமையாக ஏற்றப்படும்போது அவர்களது வாங்கும் சக்தி மேலும் குறையும். உள்நாட்டு சந்தையில் பொருட்களுக்கான தேவை குறைவதால் வேலைவாய்ப்புகள் மேலும் பறிபோகும். இவற்றின் காரணமாக சமூகப் பதட்டம் உருவாகி தற்போது லண்டனில் நடைபெற்றது போன்ற கலவரங்கள் நடைபெறும் அபாயம் ஏற்படும்.

இத்தகைய அபாயம் தடுக்கப்பட வேண்டுமெனில், உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான சந்தை உள்நாட்டில் வலுப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை எட்டுவதுடன், ஏழை பணக்காரர் இடையேயான இடைவெளியை குறைத்திடவும் வழிவகை எற்படும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை அளிப்பதற்கு பதிலாக அத்தொகை நாட்டின் அடிப்படை கட்டுமான வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிட முடியும். நோய் நாடி, நோய் முதல் நாடி என்ற வள்ளுவனின் வாக்கிற்கு ஏற்ப தற்போதைய நெருக்கடியின் மூல காரணம் அடையாளம் காணப்பட்டு அது சரி செய்யப்படும் போதே உண்மையான தீர்வு மக்களுக்கு கிட்டும். இதன் மூலமே இந்தியப் பொருளாதாரத்தையும் இந்திய நாட்டின் சாதாரண மக்களின் வாழ்வையும் பாதுகாத்திட முடியும். இந்த உண்மையை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு உணருமா?

Pin It