உலகில் ஏதோ ஒரு பகுதியில் இருக்கும் நாட்டை தெரிந்து கொண்டிருக்க வேண்டுமெனில் அந்நாடு ஏதாவது ஒரு சிறப்பைப் பெற்றிருக்க வேண்டும். ஜமைக்கா - அப்படி ஏதும் இல்லாத நாடு. கியுபாவிற்கு தெற்கே 150 கிமீ தொலைவில் 30 லட்சம் மக்கள் தொகையுடன் மிதந்து கொண்டிருக்கும் ஒரு தீவு. கறுப்பின அடிமைகளின் இரத்தம் பாய்ச்சி விளைவித்த கரும்பும், பாக்சைட்டும் ஜமைக்காவை வறுமையில் புதைத்து விடாமல் வாழ வைத்துக் கொண்டிருந்தது. இப்படியாக ஜமைக்காவின் வரலாற்றோடு துவக்குகிறார் ரவிக்குமார்.

1945 பிப்ரவரி 6, 19 வயது கறுப்பினப் பெண் யடில்லாவுக்கும், வெள்ளைக்கார கேப்டன் மார்லிக்கும் மகனாக பாப் மார்லி பிறக்கிறான். தன் அம்மா வைத்த செல்லப் பெயர் நேஷ்டா. பிறந்து ஐந்து வயது வரை தன் தந்தையைப் பார்க்காமலே வளர்கிறான். வெள்ளைக்காரன் பொய் சொல்லமாட்டான் என நம்பிய இனத்தைச் சார்ந்த பெண் யடில்லா. நம்பி ஏமாந்தாள். தன் மகனை வளர்க்க மிகவும் கஷ்டப்பட்டாள். எப்படியாவது படிக்க வைத்து விடவேண்டுமென போராடினாள். நேஷ்டாவுக்கு பத்து வயது ஆகிவிட்டது. கறுப்பினப் பையன்களுக்கு வரும் மனக்குழப்பங்கள் அவனுக்கும் வர ஆரம்பித்தன. இந்த மூக்கு கொஞ்சம் கூறாக இருந்திருக்கக் கூடாதா? ஏன் இந்த தலைமுடி இப்படி சுருண்டு கொள்கிறது? சே! சே! இன்னும் கொஞ்சம் வெள்ளையாகப் பிறந்திருக்கலாம் என இப்படியான எண்ணங்கள் கறுப்பின இளைஞர்கள் பலரை பைத்தியமாக்கிக் கொண்டிருந்தது.

ஒடுக்கப்பட்ட ஜனங்களின் பிறப்பும், நிறமும் அவமானகரமானதாக உலகம் முழுவதும் ஒரே தொனியில் தான் மனித மூளையில் பதிய வைக்கப்பட்டுள்ளது. கறுப்பின மக்களும் அப்படித் தான். வீட்டில் பாடி, பிரம்மிக்க வைத்த மார்லி பொது மேடைகளில் பாட ஆரம்பித்த நாட்கள் அதிகமாகிக் கொண்டிருந்தன. இருபதாம் நுற்றாண்டின் துவக்கத்தில் ஜமைக்காவின் முன்னணி இசையாக காலிப்சோ இருந்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் கரிபியன் பிரதேசத்தில் பல்வேறு இசை ராகங்கள் உலகெங்கும் பரவிக் கிடந்தன. இஸ்கா எனும் இசை ஜமைக்காவில் புதிய வீச்சை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. ஜமைக்காவின் இசை உலகம் பல்வேறு புதிய அதிரடி முயற்சிகளால் குலுங்கிக் கொண்டிருந்தபோது பாப் மார்லி இசைக் கலைஞனாக உருவெடுத்துக் கொண்டிருந்தான். மார்லியின் வரலாற்று ஆசிரியர்கள் சொல்லியவற்றுள் மரூண்களின் வரலாறு தான் மார்லிக்கு மிகவும் பிடித்தமானது. ஆங்கிலேயர் ஜமைக்காவை கைப்பற்றிய போது அது வரை அங்கு ஆதிக்கம் செய்து கொண்டிருந்த ஸ்பானியர்கள் தங்களிடமிருந்த ஆப்பிரிக்க அடிமைகளை விட்டு விட்டு தப்பித்துச் சென்று விட்டனர்.

ஆப்பிரிக்க அடிமைகள் கிராமங்களுக்குச் சென்று பூர்வகுடிமக்களோடு இணைந்தனர். கிராமங்களில் இருந்த நிலம் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆங்கிலேயர்களை விரட்டியடித்தனர் என்ற வரலாறு மார்லியின் மனதை வீரசாகசத்தை நோக்கி திருப்பியது. மார்லிக்கு பதினாறு வயதில் ஜமைக்காவின் கறுப்பின மக்கள் அந்நிய இனத்தினவரிடம் அடிமைகளாகப் பல காலம் உழைத்து விட்டனர். புதிது புதிதாக வந்தவர்களும் அப்படியே தான் நடத்தினார்கள். கறுப்பின மக்கள் எப்படி இதை ஏற்றுக் கொண்டு வாழ்கிறார்கள் என்ற கேள்விக்கு விடை தேடுகிறான் மார்லி. இசைக் கலைஞனாக உருவெடுத்துக் கொண்டிருந்த பாப் மார்லி தனது இசையை சமூக விடுதலைக்காக ஆயுதமாக்க வேண்டிய தேவையை உணர்கிறான். அவனது பாடல்கள் புரட்சி நெருப்பை பற்றிக் கொள்கிறது. சிலர் வசதியாக வாழ்கிறார்கள். பலர் ஏழ்மையால் காய்கிறார்கள். சாப்பிட ஏதுமின்றி சாய்கிறார்கள் சாய்கிறார்கள்.நிறுத்து! ரெயிலை நிறுத்து நான் போகிறேன்!

உலகமே திரும்பிப் பார்க்கும் ஒரு இசைப் போராளியாக பரிணமிக்கிறான் பாப் மார்லி. தன் தேசத்தின் பாரம்பரிய இசை வடிவத்தை மெருகேற்றி நவீனமயமாக புதிய வடிவில் ரேகே எனும் புதிய இசை வடிவை படைக்கிறான். இன்றும் உலகில் அதிகமாக நேசிக்கப்படும் புரட்சியாளன் சே எனில் அவனுக்கு அடுத்து இசையால் கலகம் விளைவித்து அடித்தட்டு மக்களின் குரலை பாடலாக்கி பறைசாற்றியவன் இந்த மார்லி. சேகுவேராவிற்கு அடுத்தபடியாக உலகம் முழுவதும் டி-சர்ட்களில் பாடிக்கொண்டிருக்கிறான் இந்த மார்லி. 36 வயதில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு தனது வாழ்வை முடித்துக் கொள்கிறான்.

இப்புத்தகம் ரவிக்குமாரின் எளிய நடையில் மார்லியின் அபூர்வமான வாழ்வை புனைத்தன்மையுடன் நம் கண் முன் நிறுத்துகிறது. மார்லியின் பல விடுதலை ராகங்களை எழுத்துக்களில் இசைக்கிறது இந்நூல். பாப் மார்லி- இசைப் போராளி படிக்க வேண்டிய நூல்.

வெளியீடு: உயிர்மைப் பதிப்பகம்

Pin It