கல்வித்துறையில் மாணவர்களை ஊக்குவிப்பதன் மூலமே இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியை உறுதிப்படுத்த இயலும். இதற்கேற்ப அரசு சில அறிவிப்புக்களை வெளியிட்டிருப்பதும், இலவசங்களை மக்கள் எதிர்பார்க்காத அளவுக்கு அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்துவோம் என்று முதலமைச்சர் அறிவித்திருப்பதும் பொதுமக்களிடையே ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பது உண்மை. அதே நேரத்தில் நிதிநிலை அறிக்கையில் தனியார்துறைகளை ஊக்குவிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த நம்பிக்கையை பொய்யாக்குவதாக உள்ளது. தமிழகத்தில் பொதுவாகவே, சமூக உள்கட்டமைப்பின் அடிப்படையான கல்வி, வேலைவாய்ப்பை மேம்படுத்தும் திட்டங்கள் குறைவாகவே உள்ளன.

தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றாலும், கல்வித்துறையில் தனியாரை ஊக்குவிப்பதில் குறியாய் இருக்கின்றன. அதற்கான அனைத்துவித தகிடுதத்தங்களையும் செய்கின்றன. இதற்கு சமீபத்திய உதாரணம் சமச்சீர் கல்வி.

இளைஞர்களின் திறனை உற்பத்தி, நிர்வாகத் துறையில் பயன்படுத்த அரசு போதுமான முயற்சி எடுத்து வருவதாக தெரியவில்லை. அரசின் நடவடிக்கைகள் அத்திசை நோக்கிச் செல்வதாகவும் இல்லை. தமிழகத்தில் 68 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருந்தாலும், வேலைவாய்ப்பை உருவாக்க அரசு தயாராக இல்லை. இவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

பள்ளிக்கல்வி

தமிழக நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்விக்கு 13, 333 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளி செல்லாக் குழந்தைகள் 61 ஆயிரத்து 653 பேரை பள்ளியில் சேர்க்கவும், +1, +2 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கவும், அதேபோன்று மிதிவண்டிகள் வழங்கவும் உள்ளது. நடப்பாண்டில் 65 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 710 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் அரசு நிலை உயர்த்த உள்ளது.

புதிதாக 30ஆயிரத்து 864 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பவும், பகுதி நேர ஆசிரியர்களாக 16ஆயிரத்து 549 பேரை நியமிக்கவும் உள்ளது. உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 1083கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான புத்தகப் பைகள், ஜாமென்ட்ரி பாக்ஸ், வண்ண பென்சில்கள் வழங்க உள்ளது. இத்தகைய அறிவிப்புக்கள் வரவேற்கத்தக்கதுதான்.

அதேநேரத்தில், சமச்சீர் கல்விக்கான பொதுப்பாட நூல்களை அமலாக்குவதிலும், தனியார் பள்ளிகளின் அநியாயக் கட்டணங்களை கட்டுப்படுத்த வேண்டிய அரசு, நடந்து கொண்ட முறை கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்கள், அரசை பணியச் செய்தது.

சமச்சீர் கல்வியின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றான, நான்கு கல்வி வாரியங்களை ஒன்றாக்குவது குறித்தும், கல்வி உரிமைச்சட்டத்தை அமலாக்குவதிலும், அருகமைப் பள்ளிகளைக் கொண்ட பொதுப்பள்ளிகளை அமைப்பதற்கான எந்த முயற்சிகளும் நிதிநிலை அறிக்கையில் இல்லை.

இந்த நிதிநிலை அறிக்கையில் தற்போதுள்ள பள்ளிகளை தரம் உயர்த்தப்படும் என்று கூறப்பட்டுள்ளதே தவிர, புதிய பள்ளிகள் தொடங்கப்படும் என்று கூறப்படவில்லை என்பதையும், மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் முறையை எளிமைப்படுத்தப்படும் என்று கல்வி மானியக் கோரிக்கையில் கூறியிருப்பதையும் கூர்ந்து நோக்க வேண்டும். சமச்சீர் கல்வியின் இதர அம்சங்களை அமலாக்க கவனம் செலுத்துவது போன்று காட்டிக் கொண்டாலும், தனியார் பள்ளிகளை தடுக்க, கட்டுப்படுத்த எந்த ஒரு அறிவிப்பும் இல்லை.

தனியார் பள்ளிகளின் கட்டணங்களை முறைப்படுத்த அமைக்கப்பட்ட நீதிபதி கோவிந்தராஜன் குழு, நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு ஆகியவை தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாகவே நடந்து கொண்டன. இந்த கட்டணங்களை மீறி அதிக கட்டணம் வசூலிக்கும் ஒரு பள்ளி மீது கூட அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அவ்வப்போது அமைச்சர்கள் ‘கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று வெற்று அறிவிப்புக்களையே வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் நீதிபதி ஆர்.சிங்காரவேலு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு எந்த அளவுக்கு கட்டணத்தை உயர்த்தும் என்பது தெரியவில்லை.

சமச்சீர் கல்வி முறையை மேம்படுத்த ஒரு வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று அரசின் கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பானது, அரசின் முந்தைய நடவடிக்கைகளோடு ஒப்பிடும் போதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. நிதிநிலை அறிக்கையில் கட்டிடங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை முறையாக செலவிட்டால், கற்றல் சூழல் செம்மையடையும்.

உயர்கல்வி

தமிழக அரசின் பட்ஜெட்டில் உயர்கல்விக்கு 2187 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியின் தரத்தை உயர்த்தும், நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி பெற வாய்ப்பளிப்பதும் அரசின் நோக்கம் என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது. 3லட்சத்து 70 ஆயிரம் மடிக்கணினிகள் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றெல்லாம் அறிவித்துள்ளது.

அதிமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தொடங்கப்பட்ட 11 கல்லூரிகளும் அந்தந்த பகுதிகளில் உள்ள பல்கலைக் கழகங்களின் உறுப்பு கல்லூரிகளாகவே உள்ளன. இந்த செய்கையானது அரசு வரையறுத்துள்ள நோக்கத்திற்கு முரணாக உள்ளது. அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் கல்லூரி மாணவர்களைப் போன்று அரசின் சலுகைகளை இந்த உறுப்புக்கல்லூரி மாணவர்கள் முழுமையாக பெற முடியாது. அப்படி இருக்கையில் நலிவடைந்த மாணவர்களில் ஒரு பிரிவினர் அரசின் உதவிகளைப் பெற முடியாமல் போகிறது.

திமுக ஆட்சியில் அண்ணா பல்கலைக்கழகம் நான்காக பிரித்து, அந்தந்த மண்டலத்தில் உள்ள மாணவர்கள் தங்களுக்கு தேவையான கல்லூரிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ள வசதியாக இருந்தது. ஆனால் அண்ணா பல்கலைக் கழகம் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு பொருளாதார சுமை ஏற்பட்டுள்ளது. சுயநிதிக்கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையை தடுக்க அமைக்கப்பட்டுள்ள குழுவுற்கு போதுமான அதிகாரம் அற்றதாகவே உள்ளது.

விடுதி

தமிழகத்தில் உள்ள அனைத்து பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகள் சீரமைக்கப்படும். 5 ஆண்டுகளுக்குள் அனைத்து விடுதிகளுக்கும் சொந்தக்கட்டிடம் கட்டிக் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளது. சென்னை ராயபுரத்தில் ஒரே வளாகத்தில் 7விடுதிகள் இயங்குகிறது. இதுதான் விடுதிகள் நடக்கும் லட்சணம். சென்னையில் மாணவிகளுக்கென்று இதுவரை ஒரு விடுதி கூட கட்டப்படவில்லை.

மோப்ப நாய்களுக்கு நாளொன்றுக்கு உணவுக்கு 85 ரூபாய் வழங்கும் அரசு, அதே நேரத்தில் ஆதிதிராவிட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட விடுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு நாளொன்றுக்கு 21.60 பைசாவும், (மாதத்திற்கு ரூ.650), கல்லூரி மாணவர்களுக்கு நாளொன்றுக்கு 25 ரூபாயும் (மாதத்திற்கு ரூ.750) வழங்குகிறது. இன்றைய விலைவாசி நிலைக்கு இந்த உணவுக்கட்டணம் போதுமா.

இளைஞர் நலன்

தமிழகத்தில் கல்வி கற்றோர் எண்ணிக்கை 80.33 சதவீதமாகும் (ஆண்-86.81, பெண்-73.86). கலை-அறிவியல், பொறியியல் உள்ளிட்ட கல்லூரிகளில் இருந்து ஆண்டு தோறும் பட்டப்படிப்பு முடித்து வரும் 3.5 லட்சம் பேரில் 70ஆயிரம் பேர் மட்டுமே வேலைவாய்ப்பை பெற தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள் என்று தமிழக அரசு கூறுகிறது. படித்து முடித்து வருகிறவர்கள் அனைவரும் தகுதியுடையவர்களாக இல்லாமல் போனதற்கு அரசின் கல்விக் கொள்கையும் ஒரு காரணம்.

இந்த நிதிநிலை அறிக்கையில், தமிழகத்தில் ஏராளமான கனிம வளங்கள் உள்ளன. அவற்றை பயன்படுத்தி அரசு தொழிற்சாலைகளை தொடங்கும் என்ற எந்த ஒரு அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இல்லை. அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பினால் குறைந்தபட்சம் 3 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும். தற்போதைய மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்கினால் சுமார் 3 லட்சம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய பொருளாதாரக் கொள்கையை கடைப்பிடிக்கும் அரசு இதனை செய்யுமா? என்பது சந்தேகமே. அவ்வாறு செய்தால் தமிழகத்தின் வளர்ச் சியில் பெருத்த மாற்றம் ஏற்படும்.

தமிழக அரசு, குறிப்பிட்ட துறைகளை தேர்ந்தெடுத்து கேந்திரமான தொழிற்சாலைகளை உருவாக்கினால், வேலைவாய்ப்பு பெருகும். மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும். தனியார் நிறுவனங்களையே நம்பி இருந்தால், இளைஞர்கள் கண்ணியமான வேலை பெற வாய்ப்பில்லாமல் போகும். பொருளாதாரம் வளர்ந்ததாக தம்பட்டம் அடித்துக் கொள்ளலாம். ஆனால், தொழில் அமைதி இருக்காது; மக்களின் வாழ்க்கை நிலையும் உயராது. இலவசம் என்று மக்கள் கையேந்தாத நிலை எனது காலத்திலேயே வரவேண்டும் என்று முதலமைச்சர் கூறினால் மட்டும் போதாது; அதற்கேற்ற திட்டங்களையும் வகுக்க வேண்டும்.

தமிழக அரசின் கல்வி, இளைஞர் நலன் ஆகியவற்றில் வரவேற்கத்தக்க அம்சங்கள் பல இருந்தாலும், அதற்கிணையாக ஆபத்தான அம்சங்களும் இருக்கின்றன. நிலச்சீர்திருத்தம் செய்து ஏழைகளுக்கு நிலம் வழங்குவது, பஞ்சமி நிலம் மீட்டு மீண்டும் தலித்துகளுக்கு ஒப்படைப்பது, உலகமயமாக்கல் கொள்கையால், கிராமப்புறங்களில் நலிவுற்ற சிறு, குறு தொழில்களை மீண்டும் செயல்பட வைப்பது போன்றவற்றை செய்தால் கிராமங்களின் முகத்தோற்றம் மாறும்; நகரமயமாதல் வெகுவாக குறையும். தவறுகளை சுட்டிக்காட்டுவதும், எதிர்ப்பதும், மாற்றியமைப்பதும் மக்கள் போராட்டங்களே.

Pin It