சீனாவை பிறப்பிடமாகக் கொண்ட பட்டம் விடும் பழக்கம்தான் இன்று இந்தியா உள்ளிட்ட உலகின் பெரும்பான்மையான நாடுகளில் பரவியுள்ளது.

மேலை நாடுகளில் பட்டம் விடுவதை பொழுது போக்காக, மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் குறிப்பிட்ட நாளில், நேரத்தில் ஒன்று கூடி பல வடிவங்களில் பட்டம் விட்டு மகிழ்கின்றனர். இந்தியாவில் இதற்கு நேர்மாறாக, பட்டம் விடுவது போட்டியாக கருதப்படுவதால். அடுத்தவர் காற்றாடி நூலை அறுப்பதற்கு கண்ணாடி துகள்கள், மயில் துத்தம், துத்த நாகம் உள்ளிட்டு மற்ற சில பொருட்களையும் கலந்து மாஞ்சா என்ற கலவை, நூலில் ஏற்றப்படுகிறது. இந்த மாஞ்சா என்ற கலவை காற்றாடி விடுபவரின் கைகளை கடுமையாக அறுப்பதுடன் மற்றவர்களின் உயிருக்கும், பறவைகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. சென்னையில் இருசக்கர வாகனத்தில் தன் தந்தையுடன் சென்ற சிறுமி கழுத்தறுபட்டதை உணரும் முன்பே துடிதுடித்து இறந்த சம்பவம் போன்று பல சம்பவங்கள் இரக்கமற்ற முறையில் தொடர்வது துயரமளிக்கிறது. தீபாவளியை ஒட்டிய காலங்களில் காற்றாடி நூல் மாட்டி பலர் இறந்த சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடக்கின்றன.

தமிழகத்தில் உழவர் திருநாள் கொண்டாடப்படும் வேளையில் வட இந்திய மாநிலங்களில் மகாசங்கராந்தியாக கொண்டாடுகிறார்கள். குஜராத் மாநிலத்தில் உத்ராயன் என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். இவ்விழாவை ஒட்டி ஆண்டு தோறும் ஜனவரி மாதம் 13, 14, 15 தேதிகளில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா நடைபெறுகிறது. பட்டம் விடும் பழக்கம் பல நூற்றாண்டுகளாக குஜராத் மக்களிடையே வழக்கத்தில் இருப்பதாகவும் குஜராத் இலக்கியங்களில் பட்டம் பற்றிய பாடல்கள் இடம் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

பட்டம் விடும் திருவிழாவை மாநில முதல்வரே பலமுறை வந்து துவக்கி வைத்துள்ளார் எனும் போது அம்மக்களிடையே பட்டம் விடும் பழக்கம் ஒரு கலாசாரமாக இருந்துள்ளது என்பதையே இது சுட்டிக் காட்டுகிறது. பெரும்பான்மையான மாவட்டங்களில் 5 வயது சிறுவர் முதல் 80 வயது முதியவர் வரை லட்சக்கணக்கான மக்கள் மைதானம், வீட்டு மாடி, சாலையோரம் என அனைத்து இடங்களிலும் பட்டம் விட்டு மகிழ்வதுடன், அடுத்தவர் காற்றாடியை அறுப்பதையும் பெருமையாகக் கருதுகின்றனர்.

இங்குதான் பிரச்னை மையம் கொள்கிறது. இந்த ஆண்டு பட்டம் விடும் திருவிழாவின் போது மட்டும் 9 மனிதர்கள் இறந்துள்ளதாகவும், 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அம்மாநிலத்தில் ஒரு பத்திரிகை செய்தி சுட்டிக்காட்டுகிறது.(17.1.2011 னுடீஐ) இதன் இன்னொரு பக்கம் இந்தாண்டின் திருவிழாக் காலத்தில் மட்டும் காற்றாடி நூலில் அறுபட்டு இறந்த பறவைகளின் எண்ணிக்கை 5000 முதல் 6000 வரை. காயமடைந்த பறவைகள் 10,000 முதல் 15,000 வரை இருக்கும் என்கிறது ஓர் ஆய்வு. பட்டம் விடும் போது இவ்வளவு பறவைகள் இறக்குமா? என்ற கேள்வி எழுவது இயல்புதான்.

குஜராத் மாநிலம் முழுவதும் பட்டம் விடுவது காலை 6.30 மணி முதல் 10.00 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 6.00 மணி வரையிலும் நடைபெறுகிறது. மற்ற நேரங்களில் குறைந்தளவு பட்டம் மட்டுமே விடப்படுகிறது. பறவைகள் உள்ளிட்ட காட்டுயிர்கள் யாவும் இயல்பூக்கத்தின் அடிப்படையிலேயே இயங்குகின்றன. பறவைகள் இரை தேடும் காலை வேளையும், கூடு திரும்பும் மாலை வேளையும் பட்டம் விடுவது நிகழ்வதால் அதிகளவிளான பறவைகள் இறக்கின்றன என்கிறார் இங்கு பணியாற்றும் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவர்.

பட்டம் விடும் திருவிழாவில் பாதிக்கப்படும் பறவைகளை நான்கு விதமாகப் பிரிக்கலாம் 1.சாதாரணமாக பார்க்கும் பறவைகள் 2. வேட்டையாடி (அ) வேட்டையாடும் பறவைகள் 3. வலசை வரும் பறவைகள் 4. உள்ளூர் பறவைகள்இதில், காக்கை, நாகணவாய் (மைனா), மாடப்புறா, உண்ணிக்கொக்கு, சின்னக்கொக்கு போன்றவை நாம் சாதாரணமாக காணும் பறவைகள். அழிவின் விளிம்பில் இருக்கும் பிணம் தின்னிக்கழுகுகள், புஞ்சைப் பருந்து, வல்லூறு, கள்ளப்பருந்து உள்ளிட்டவை வேட்டையாடிப் பறவைகளாகும். பட்டை தலை வாத்து, சாம்பல் தலை வாத்து, ஆண்டி வாத்து, ஊசிவால் வாத்து, கருவால் வாத்து, உள்ளிட்ட பல்வேறு வாத்தினங்கள் வலசை வரும் பறவைகளாகும்.

சிவப்பு மூக்கு ஆள்காட்டி, பச்சைப்புறா, மஞ்சள் மூக்கு நாரை, செங்கால் நாரை, வெள்ளை மற்றும் கருப்பு அரிவாள் மூக்கன், சோளக்குருவி, காட்டு நாகணவாய், சரசக்கொக்கு போன்றவை உள்ளூர் பறவைகளாகும். பிணம் தின்னிக்கழுகுகள், சரசக்கொக்கு, பூ நாரை, வல்லூறு, அரிவாள் மூக்கன்கள் போன்ற பறவை இனங்கள் அழியக்கூடிய பறவைகளாக கண்டறியப்பட்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் 99.9 சதவீதம் அழிந்துவிட்ட பிணம் தின்னிக்கழுகுகள் 100க்கும் குறைவாக தமிழகத்தின் சத்தியமங்கலம் காடுகளிலும், குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் குறைந்த எண்ணிக்கையிலும் காணப்படுகின்றன. காடுகளை சுத்தப்படுத்துவதிலும் முதன்மையாக விளங்கும் இக்கழுகுகள் ஆண்டிற்கு ஒரு முறை இனப்பெருக்கம் செய்ய காடுகளில் நெடிதுயர்ந்த மரங்களின் உச்சத்தில் கூடமைத்து ஒரு முட்டை மட்டுமே இடும் இயல்புடையது. டிக்லோ பெனக் எனப்படும் மாடுகளுக்கு போடப்படும் வலி நிவாரணியே கழுகுகளின் அழிவிற்கு முக்கிய காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். மாடுகளை உண்ணும் கழுகுகளுக்கு வலி நிவாரணியின் விஷத்தன்மை காரணமாக இனப்பெருக்க காலங்களில் கடுமையாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இதன் காரணமாகவே பிணம் தின்னிக் கழுகுகள் பெருமளவில் அழிந்தன.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கடும் முயற்சியால் இம்மருந்தின் பயன்பாடு பெருமளவில் குறைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன கழுகுகள். இனப்பெருக்க காலத்தில் இருந்த பத்து வெண்முதுகு கழுகுகளில் ஆறு பட்டம் விடும் திருவிழாவில் இறந்து விட்டதாகவும் நான்கு காப்பாற்றப்பட்டு சிகிச்சைக்குப் பின் விடுவிக்கப்பட்டதாகவும் கள ஆய்வில் நேரடியாக பங்கெடுத்த பறவையியல் ஆய்வாளரும் இக்கட்டுரையாசிரியருமான திரு.சா. செயக்குமார் வருத்தத்துடன் பதிவு செய்கிறார்.

பெரிசின் வல்ட்சர் என்ற வல்லூறு மணிக்கு 325 கி.மீ வேகத்தில் இரையை பிடிக்கும் திறன் கொண்டது. காற்றாடி நூலில் சிக்கி அதன்இறகுகள் அறுவதுடன் அதன் வாழ்விற்கே முடிவு ஏற்படுத்தி விடுகின்றன. அதே போல் வலசை வரும் வாத்தினங்கள் அணி அணியாகத் திரண்டு வரும் போது, காற்றாடி நூலில் சிக்கி நூற்றுக்கணக்கில் இறக்கின்றன.

2008 ல் ஜிராஷா என்பவர் பறவைகளின் மோசமான நிலையைக் கண்டு ஜிவ்தயா சாரிடபின் டிரஸ்ட் என்ற தொண்டு நிறுவனத்தை துவக்கி மூன்றாண்டுகளாக உத்ராயன் என்ற கலாசார நிகழ்வையொட்டி நடைபெறும் சர்வதேச பட்டம் விடும் திருவிழாவின்போது பாதிக்கப்படும் ஆயிரக்கணக்கான பறவைகளை பாதுகாக்கும் பணியில் தன்னுடன் 500க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டர்களுடன் ஈடுபட்டு வருகிறார்.

திருவிழா நடைபெறும் ஒரு வார காலத்தில் மட்டும் ஜிவ்தயா சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக 80க்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவர்கள், பறவையியல் ஆய்வாளர்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் படிக்கும் மாணவ தன்னார்வலர்கள் என ஒரு பெரிய அவசர கால மருத்துவமனையே இயங்குகிறது.பாஞ்யசராபோல், அட்பாவாடி என அகமதாபாத்தைச் சுற்றியுள்ள நகரங்களில் காயப்படும் பறவைகளை கொண்டுவர அவசரகால ஊர்திகள் செயல்படுகின்றன.

பழங்களை உண்ணும் பறவைகளை கையாள கல்லூரி மாணவர்கள் போதுமென்றாலும், வேட்டையாடிப் பறவைகளை அனுபவமிக்க கல்லூரி ஆய்வாளர்கள், மருத்துவர்கள் மட்டுமே கையாள முடியும்.கூர்மையான கால் நகங்களால் தன்னைக் காக்கப் போராடுவதால் அதனை காக்கச் செல்லும் ஆய்வாளர்களுக்கும் மருத்துவர்களுக்கும் பல நேரங்களில் காயங்கள் ஏற்பட்டதுண்டு. காயம்பட்டு வரும் ஒவ்வொரு பறவைக்கும் காயத்தின் தன்மைக்கு ஏற்றவாறு தனித்தனி அறிக்கை தயார் செய்யப்பட்டு தனிக்கவனம் செலுத்தி 15லிருந்து 20 நாட்களுக்குள் குணமடையும் பறவைகள் விடுவிக்கப்படுகின்றன. சில பறவைகள் சிகிச்சை எடுக்கும் காலத்திலேயே முட்டை இடும் நிகழ்வுகளும் நடந்துள்ளது.

உயிருக்கு போராடும் பறவைகளுக்கு என தனியே அவசர சிகிச்சைப் பிரிவு இயக்கப்படுகின்றது. 500க்கும் மேற்பட்டோரை ஒரு குழுவாக இணைத்து ஜிவ்தயா சாரிடபிள் டிரஸ்ட் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் செய்து வருவது பாராட்டுக்குரிய செயலாகும்.பறவைகள் தவிர தெருநாய்கள், அனுமன் குரங்கு,மற்ற கால்நடைகளும் பாதிப்புக்குள்ளாகின்றன.சுற்றுச் சூழலுக்கு நண்பனாக விளங்கும் வெளவால்கள் ஆண்டு தோறும் 5000க்கும் அதிகமானவை இறக்கின்றன.

இந்தாண்டு திருவிழாவில் மாடப்புறா-800, கள்ளப்பருந்து- 300, நீலமயில்- 10, வர்ண நாரை- 5, பூ நாரை- 10, பிணம் தின்னிக் கழுகு -10, இவற்றுடன் நூற்றுக்கணக்கில் காக்கைகள், வல்லூறு, வாத்தினங்கள் என பலவித அரிய பறவை இனங்கள் இறந்துள்ளன என்கிறது ஒரு புள்ளி விவரம். மனிதர்களுக்கும், பறவைகளுக்கும் மிகப் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் பட்டம் விடும் திருவிழாவிற்கு என்னதான் தீர்வு?மனிதர்கள், பறவைகள் உயிரை குடிக்கும் மாஞ்சா என்கிற ஆபத்தான கலவையை நூலில் ஏற்றுவதற்கு தடை விதித்து மேற்குலக நாடுகளில் இருப்பதைப் போல பொது இடங்களில் பட்டம் விடுவதை நமது நாட்டிலும் நடைமுறைப் படுத்தினால் காட்டுயிர்களுக்கும், மனிதர்களுக்கும் பாதிப்பு இல்லாப் பட்டம் விடும் விழாவை கொண்டாடலாமே. இதுவே சுற்றுச்சூழல் மனித உரிமை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு நடைமுறைப் படுத்துமா அரசுகள்? காலம் தான் பதில் சொல்லும்.

Pin It