காந்தி பெயரில் உள்ள தெருவின் நடுவில் வளர்ந்து நிற்கிறது அந்தச்சுவர். இது மனிதகுல வரலாற்றின் எந்த கட்டத்தில் உருவானது என ஒரு ஆராய்ச்சியை துவங்கவேண்டிய தேவை தமிழகத்தில் உள்ளது. வீட்டை இரண்டாகப் பிரிப்பதற்கு சுவர் கட்டும் மனிதர்கள் தெருவை இரண்டாக பிரிக்க வேண்டிய அவசியம் என்ன?மண்ணும், காற்றுமென கலந்து காணும் தெரு யாருக்குச் சொந்தமானது? சுவர் கட்டியதின் நோக்கம் எதுவாக இருக்க முடியும்? மண்ணும், காற்றும் சொந்தமென சொல்கிறது ஒரு சாதி. இயற்கையின் படைப்புகளான நீரை, மண்ணை, மனிதனை, காற்றை பிரித்து வைத்து பேதம் பேசும் சமூகமாக இந்திய சமூகம் நீடிப்பதின் அவலங்களை வாழ்வின் எல்லா அம்சங்களிலும் காண முடிகிறது. பார்த்தால் தீட்டு, குரல் கேட்டால் தீட்டு என தீண்டாமை வகைகளை தினுசு தினுசாக கண்டுபிடித்தவர்கள் நம்மவர்கள். ஆனால் சுவரைக்கட்டி தீட்டில் இருந்து பாதுகாத்து தங்களை புனிதமிக்கவர்களாக மாற்றிக்கொள்ளும் மனுவேதத்தை கண்டுபிடித்தவர்கள் உலக வரலாற்றில் தமிழர்களாகத்தான் இருக்க முடியும்.

பாரதி, பெரியார், ப.ஜீவா பிறந்த தமிழ்நாட்டில் சேலம் மாநகரில் சமூகத்தின் அவமானச் சின்னமாய் தலைதூக்கி நிற்கிறது தீண்டாமைச் சுவர். சேலம் மாநகர் 42 வது வார்டு காந்தி மகான் தெருவில் கடந்த 40 ஆண்டுகளாக நின்று கொண்டு மக்களை பிரித்தாண்ட அந்த சுவர் மாவீரன் பகத்சிங் வாரிசுகளால் கடந்த 16.08.

2011 அன்று உடைத்தெறியப்பட்டது. சேலம் மாநகரின் மையப்பகுதியான காந்தி மகான் தெரு பகுதியில் உறுப்பினர்பதிவு சேர்ப்பதற்காக சென்றனர் வாலிபர் சங்கத் தோழர்கள் பொதுவாக உறுப்பினர் பதிவு சேர்க்கச் செல்லும் பொழுது அடிப்படைப் பிரச்னைகள் குறித்துதான் மக்கள் கோரிக்கை வைப்பார்கள். ஆனால் காந்தி மகான் தெருவிலோ தீண்டாமைச்சுவர் பற்றிய பிரச்னை வாலிபர் சங்கத் தோழர்களிடம் சொல்லப்பட்டது. சுவரை அகற்றுவதற்கான பணியில் தீண்டாமை ஒழிப்பு முன்னனித் தோழர்களையும் இணைத்துக்கொண்டு உடனே களத்தில் இறங்கினர் வாலிபர் சங்கத் தோழர்கள் சுவரை உடனடியாக அகற்ற வலியுறுத்தி தொடர்ச்சியான போராட்டங்கள் நடத்தினர். அதன்பிறகு தேசத்தின் அவமானச்சின்னமாய் 40 ஆண்டுகளாக நின்று கொண்டிருந்த அந்த சுவர் வாலிபர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள், மாநகராட்சி அதிகாரிகள் முன்நிலையில் 13.08.2011 அன்று இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இன்றைக்கு இடிக்கப்பட்ட சேலம் சுவரைப் போல தேசம் முழுவதும் உள்ள சுவர்கள் இடிபட அநீதிகள் கண்டு கொதித்தெழுந்து களம் காணும்.

Pin It