Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

பி.ஸ்ரீராமகிருஷ்ணன்

தமிழில்: இரா.சிந்தன்

ஒவ்வொரு இந்தியப் புரட்சியாளனும் பகத்சிங்கை மனதில் ஏந்துகையில், அவர் காலத்தில் நாமும் பிறக்கவில்லையே என்று ஏங்குவான். ஆம், எக்காலத்திலும் ஒடுக்குமுறைகளையும், சுரண்டலையும், அநீதியையும் எதிர்த்துப் போராடுவது, ஒவ்வொரு புரட்சியாளனுக்கும், கம்யூனிஸ்டுக்குமான கடமைதான். இருந்தாலும், அந்தப் புரட்சியாளர்கள் இந்திய சுதந்திரத்துக்காக தங்கள் வாழ்வையே அற்பனிப்பு செய்திட்ட காலத்தில் நாமும் வாழ்ந்திருக்க வேண்டும் என்ற ஏக்கம் எப்போதும் இருக்கிறது. இன்றைக்கு நமது போராட்டம் ஏகாதிபத்தியத்திற்கு எதிரானது, இந்திய இளைஞர்கள் அந்தப் பொறுப்பை உணர்ந்தே செயல்படுகிறோம். இப்போதும், 75 ஆண்டுகளுக்கு முன்னர் தங்கள் உயிரைத் துச்சமெனக் கருதிய அந்தத் தியாகமே, நம்மைப் போர்க்களங்களில் உந்தித் தள்ளுவதாக அமைந்துள்ளது.

பகத்சிங்குறித்த நினைவுகள் நமக்கு இன்னொரு இழப்பையும் நினைவூட்டுகின்றன - அது இந்திய புரட்சிகர இயக்கத்தின் தொட்டிலாக இருந்த - லாகூரின் இழப்பு. புதிய எல்லைகளை ஏற்பதற்காக ஒரு நாட்டின் எல்லைகளில் மாற்றம் உருவாகும்போது, அந்தப் பகுதியின் அரசியலிலும் மாற்றம் வந்துவிடுகிறது. லாகூர் எப்போது பாகிஸ்தானின் பகுதியாக மாறியதோ, அப்போதே அது புரட்சிகர நடவடிக்கைகளின் மையம் என்ற தகுதியையும் இழந்துவிட்டது.

இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு மகத்தான பங்கைச் செலுத்திய லாகூர் தான் பகத்சிங்கையும் வார்த்தெடுத்தது. அங்கே மாணவர்களிடையே நடந்துவந்த அரசியல் விவாதங்கள், எழுச்சியை உண்டாக்கிடும் புரட்சிகர நடவடிக்கைகளாக மாறியது அது, பகத்சிங்கின் மனதிலும் உத்வேகத்தை உண்டாக்கியது. தனக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்திடும் தன் தந்தையின் முடிவை எதிர்த்து வீட்டிலிருந்து வெளியேறிய பகத்சிங், கான்பூரில் சுகதேவையும், ராஜகுருவையும், சந்திரசேகர ஆசாதையும் சந்தித்து அவர்களின் புரட்சிகர சிந்தனைகளினால் கவரப்பட்டார். பகத்சிங் மற்றும் அவரது நண்பர்களின் நடவடிக்கைகள் இந்திய அரசியல் அரங்கில் ஏற்படுத்திய மாற்றம் பலமுறை ஆராயப்பட்டும், விவாதிக்கப்பட்டும் உள்ளது. ஆனால், 23 வயதில், அவரது அரசியல் சிந்தனையில் காணப்பட்ட பல்நோக்குதான் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. நான் தூக்கு மேடையை நோக்கிச் செல்லும்போது நீங்கள் இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி ஓங்குக) என முழக்கமிட வேண்டுமென தன்னை சிறைச்சாலையில் சந்திக்க வந்த தாயாரிடம் அவர் அறிவுரை கூறினார். 1931 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் நாள் லாகூர் சிறைச்சாலையில் கேட்ட அந்த முழக்கம், இன்றைக்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அந்த முழக்கத்தின் பொருள் புரட்சி ஓங்குக என்பதாகும், அதுவே இந்திய புரட்சிகர இயக்கங்களுக்கு முடிவற்ற உத்வேகத்தை அளிப்பதாக உள்ளது.

அவரது 23 வருட வாழ்க்கையில், விவாதித்திடாத விசயங்கள் இல்லை. தர்க்கவியல் பொருள்முதல்வாதத்திலிருந்து, ஏகாதிபத்திய அழித்தொழிப்பு வரை நாத்திகம் முதல் காதல் வரை அவர்கள் விவாதித்தனர். மனித வாழ்க்கையுடன் தொடர்புடைய ஒவ்வொரு அரசியல், சமூக, உளவியல் கூறுகளையும் கற்றுத் தேர்ந்தனர். இந்தியாவில் மார்க்சையும், ஏங்கல்சையும், லெனினையும் ஆழ்ந்து படித்த முதல் கம்யூனிஸ்ட் அவரே என்று நாம் கூற முடியும். அக்டோபர் புரட்சியும், இத்தாலிய புரட்சியாளர்களும் அவருக்கு உற்சாகமூட்டினர்.

அவர் மார்க்சிய நூல்களை சிறைச்சாலையிலேயே படித்தார், தன்னைத் தூக்கிலிடும் கடைசி நொடியிலும் கூட அவர் படித்துக் கொண்டும் கற்றுக் கொண்டும் இருந்தார்.

சுதந்திரத்திற்கான போராட்டத்தில் பல்வேறு சிந்தனைகளைக் கொண்டோரும் சங்கமித்தனர். பகத்சிங்கும் அவரது நண்பர்களும், நாங்கள் காந்தியின் சிந்தனைகளுடன் ஒத்துப்போகவில்லை என்று வெளிப்படையாகவே அறிவித்தனர். இந்தியர்களின் ஒற்றுமையும், வலிமையும் பிரிட்டிஷாரை இந்தியாவை விட்டு ஓடச்செய்ய வேண்டும் என்ற கருத்தையே அவர்கள் கொண்டிருந்தனர். பஞ்சாப் சிங்கம் என்று அழைக்கப்பட்ட லாலா லஜபதிராய், இந்திய மக்களால் அறியப்பட்ட, மதிக்கப்படுகிற தலைவராக இருந்தார். ஆனால் அவரும் பிரிட்டிஷ் ஆட்சி அகற்றப்பட்ட பின்னர், இந்தியாவை இந்து இந்தியாவாகவும், முஸ்லிம் பாகிஸ்தானாகவும் பிரிக்க வேண்டும் என்ற கொள்கையையே லஜபதிராய் ஆதரித்தார். பகத்சிங்கும் நண்பர்களும் இந்தக் கொள்கைகளை கடுமையாக எதிர்த்தனர். இதனால், லஜபதிராய் இந்த இளம் கன்றுகளை பொறுப்பற்றவர்கள் என்றும், ரஷ்ய உளவாளிகள் என்றும் தவறாக மதிப்பிட்டார். ஆனால், இந்த இளம் கன்றுகள் லாலா லஜபதிராய்-க்காகவும், இந்திய சுதந்திரத்திற்காகவும் தூக்குக் கயிற்றை முத்தமிட்டனர்.

ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் நடைபெற்றபோது பகத்சிங்குக்கு 12 வயதுதான் இருக்கும். சுமார் 400 இந்தியர்களின் சூடான இரத்தத்தால் நனைக்கப்பட்ட பிடி மண்ணை அள்ளியெடுத்தபோது அவரின் இதயம் முழுவதும் பிரிட்டிஷாருக்கு எதிரான தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அடுத்த பத்தாண்டுகளில் அவர் ஒரு புரட்சியாளராக மாற்றம்பெற்றார். லாலா லஜபதிராய் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட சம்பவம், அவரை பிரிட்டிஷாரோடு நேருக்கு நேர் மோதிடத் தூண்டுகோலாய் அமைந்தது.

1928 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி பிரிட்டிஷ் போலீசாரால் லஜபதிராய் தாக்குண்டார். லாகூர் ரயில்நிலையத்தின் அருகில், சைமன் கமிசனுக்கு எதிரான போராட்டத்தில் திரண்ட 5 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களுக்கு அவர் தலைமையேற்றிருந்தார். சர் ஜான் அல்ஸ்புரூக் சைமன் தலைமையிலான 7 நபர் கமிசன் லாகூரை வந்தடைந்தபோது அவர்கள் மக்கள் திரளால் தடுக்கப்பட்டனர். காவல்துறை அதிகாரி ஏ.ஜே.ஸ்காட் தலைமையிலான காவலர்கள் தடியடி நடத்தினார்கள். முதலில் அந்தக் கூட்டம் சிதறி ஓடினாலும், லஜபதிராயின் குரலைக் கேட்டுத் திரும்பியது. இதைப் பார்த்தை அதிகாரி தனது லத்தியால் கொடூரமான முறையில் அவரைத் தாக்கினான். தனது நினைவு மங்கும் தருணத்திலும் லஜபதிராய், தன்னைத் தாக்கிய போலீஸ் அதிகாரியைப் பார்த்து என் மீது விழுந்த ஒவ்வொரு அடியும், பிரிட்டிஷ் சம்ராஜ்ஜியத்தின் சவப்பெட்டியின் மீது அறையப்பட்ட ஆணியாக மாறும் என்று முழங்கினார்.

தங்களின் மதிப்புக்குரிய தலைவர், பொது இடத்தில் மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டதை அறிந்து தேசமே அதிர்ச்சியடைந்தது. இது இந்தியாவுக்கு நேர்ந்ததொரு பேரவமானமாகக் கருதப்பட்டது. காயங்களின் காரணமாக லஜபதிராய் நவ.17 அன்று மரணமடைந்தார். காங்கிரஸ் எப்போதும்போல தன் போராட்டத்தை நடத்தியது. ஆனால் பகத்சிங்கும் அவரது நண்பர்களும், இந்த மரணத்திற்கு பழிதீர்க்க முடிவு செய்தனர். தவறுதலாக அவர்கள் சாண்டர்சனைக் சுட்டபோதும், பெரும்பாலானவர்கள் இது லஜபதிராயின் மரணத்திற்கு கொடுக்கப்பட்ட பதிலடியே என்பதைப் புரிந்துகொண்டனர். இந்திய சுதந்திரப் போராட்டம் குறித்துப் பேசும்போதெல்லாம், காங்கிரஸ் கட்சி, தானே அதில் பெரும் பங்காற்றியதாக தம்பட்டமடிக்கத் துவங்கும். காந்திஜி எப்போதும் ஒரு தேசியத் தலைவர்தான். ஆனால், காந்தியின் அகிம்சை வழிமுறையை எதிர்த்துக் கொண்டே, சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய தலைவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தனர்.

எழுதப்பட்ட இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வரலாற்றில், அவர்களின் இரத்தத்தையும், கண்ணீரையும் யாராலும் மறுதலிக்க முடியாது. காந்தியின் சிந்தனைகளை பகத்சிங் வலுவாக நிராகரித்தார். இந்திய மக்களின் போராட்ட வலுவையும், சுய திடத்தையும் கண்டு, வேறு வழியே இல்லாத நிலையில் பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு ஓட வேண்டும் என அவர் விரும்பினார். நாங்கள் மனித உயிருக்கு மதிப்பளிக்கிறோம், ஆனால் பெருமை மிகு தேசத்தின் அடிமைத்தனத்தை விரட்டியடிக்க சில மரணங்கள் தவிர்க்க இயலாதவை என்ற செய்தியுடன் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளின் மூலம் பகத்சிங்கும் அவரது நண்பர்களும் (சாண்டர்சனின் கொலைக்கு) தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தினர். சில காலத்திற்குப் பின்னர், மத்திய சட்டப் பேரவையில் (நாடாளுமன்றம்) இரண்டு மக்கள் விரோத சட்டங்கள் குறித்த விவாதம் நடந்துகொண்டிருந்தபோது பகத்சிங், தனது நண்பர் பட்டுகேஷ்வர் தத்துடன் இணைந்து 2 நாட்டு வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். அவை, பிரிட்டிஷாரின் கேளாக் காதுகளைக் கேட்கச் செய்திடும் பொருளிலேயே வெடிக்கப்பட்டது.

ஒத்துழையாமை இயக்கம் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைக் காட்டிலும் கூடுதல் வலுவுடன் நடந்தது. ஆனால் சௌரி சௌரா சம்பவத்திற்குப் பின்னர் தனது போராட்டத்தை விலக்கிக்கொள்வதாக காந்தி அறிவித்தார், அது அவரது எதேச்சதிகார நடைமுறைக்கு உதாரணமாகவே கொள்ளப்பட்டது. போலீசாரை திருப்பித் தாக்கியதும், காவல் நிலையத்திற்கு தீ மூட்டியதும் தற்காப்புப் போராட்டத்தின் தொடர்ச்சியாக நடந்தவை. காந்தி தான் விரும்பும் முறையிலான போராட்டத்தை வலியுறுத்துவதற்காக, மக்களின் இயல்பான எதிர்ப்புகளையும், சண்டையிடும் திராணியையும் காண மறுதலித்துவிட்டார் என்று விமர்சகர்கள் கூறினர். அகிம்சையை வலியுறுத்திய காந்தி, எப்போதும் தனது சிந்தனைகளை மக்கள் மீது வலியத் திணித்தே வந்தார். எப்போதெல்லாம் மக்களிடையே போராட்ட வேட்கை கொழுந்துவிடுகிறதோ, அப்போதெல்லாம் காந்தி அதன் மீது நீரை ஊற்றிவந்தார். எந்த ஒரு போராட்டமும் அவரது கட்டுப்பாட்டை மீறிச் செல்வதை அவர் அனுமதிக்கவில்லை. ஹதிபுராவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், காந்தி முன்நிறுத்திய பட்டாபி சீத்தாராமையாவை தோற்கடித்து சுபாஸ் சந்திர போஸ் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கியப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்திவந்த போசை, காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளித்தள்ளுவதில் காந்தி முக்கியப் பங்காற்றினார். சுபாஸ் சந்திரபோசுடன், அவரது சிந்தனைகளும் வெளித்தள்ளப்படும் என்று காந்தி நம்பினார்.

காந்தி அகிம்சையை ஒரு கொள்கையாக ஒப்புக் கொண்டபோதிலும், சூழலின் தேவைக்கு ஏற்ப அதிலிருந்து விலகியும் சென்றார். இரண்டாம் உலகப் போரின்போது, போரில் பங்கேற்று பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு உதவிட வேண்டுமென அவர் இந்தியர்களைக் கேட்டுக் கொண்டார். பிரிட்டிஷ் ராணுவத்துடன் சேர்ந்து ஏராளமான இந்தியர்களும் யுத்தம் செய்தார்கள். அது பாசிசத்திற்கு எதிரான போர் என்கிற அளவில் இது அவசியமானதே. கம்யூனிஸ்டுகளின் நிலையும் அதுதான். பாசிசத்தை வீழ்த்துவதற்காக, சோவியத் யூனியனுடனும், அமெரிக்காவுடனும் இணைந்து நின்று போராடிய பிரிட்டிஷ் அரசாங்கத்தை அவர்கள் ஆதரித்தனர். தொடர்ந்து அவர்கள் ஜெர்மனியும், சோவியத் யூனியனும் தொடர்ந்து சண்டையிட்டபோது கம்யூனிஸ்டுகள் சோவியத் யூனியனை ஆதரித்தனர். மீண்டும் பாசிசத்திற்கு எதிராக. ஆனால், இதனைக் கணக்கிலெடுக்காமல், கம்யூனிஸ்டுகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை புறந்தள்ளிவிட்டனர் என காங்கிரஸ்காரர்கள் சொல்கின்றனர். பிரிட்டிஷ் அரசாங்கத்துக்காக சண்டையிடவும், சுபாஷ் சந்திரபோசை வெளித்தள்ளுவதிலும் காந்தி எடுத்த தந்திர நிலைப்பாடுகளை காங்கிரசின் வரலாற்றில் குறிக்காமல் இருக்க முடியது. அவர்கள் இதனை மறைத்துவிட விரும்புகின்றனர். இந்த நடவடிக்கையே, கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக காங்கிரஸ்காரர்கள் அவிழ்த்துவிடும் தவறான பிரச்சாரத்தை அம்பலப்படுத்திவிடும்.

பகத்சிங்கும் அவரது நண்பர்களும் இத்தகைய இரட்டை நிலையை என்றுமே எடுத்ததில்லை. வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்குப் பின் இந்தியா சுதந்திரமடைய பல ஆண்டுகள் பிடித்தன. இரண்டாம் உலக யுத்தத்தில் நேச நாடுகளின் வெற்றியை சோவியத் யூனியனாலேயே பெறமுடிந்தது. ஏகாதிபத்தியத்தை முன்னிறுத்திய பிரிட்டன் முழங்காலிட்டதும், காலனி ஆட்சிமுறை உலகம் முழுவதும் முடிவுக்கு வந்தது.

இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் இந்தியாவின் பல பகுதிகளிலும் மக்கள் எழுச்சிகளுக்கு கம்யூனிஸ்டுகள் தலைமைதாங்கினர். புன்னப்புரா-வயலார், தெலுங்கானா மற்றும் பம்பாய் கப்பற்படை எழுச்சி ஆகியவை அவற்றில் சில. 1942 இல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி பெரிய அளவில் எதையும் செய்திடவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எல்லா வாய்ப்புகளையும் இழந்தபின்னர், பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கிட முடிவு செய்தது. சுதந்திரத்தின்போது காந்தியின் நிலையை நாம் வரலாற்றில் அறிந்துகொள்கிறோம்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஏராளமான தீரமிகு இந்தியர்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர். காந்தியின் உயர்வையும் தியாகத்தையும் சிறுமைப்படுத்தாத அதே நேரத்தில், அந்த தீரர்களின் தியாகம் இல்லாமல் இந்திய சுதந்திரத்தைச் சாதித்திருக்க முடியாது என்பதையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும். பகத்சிங்கிற்கு மரணதண்டனை வழங்கப்பட்ட நேரத்தில், இந்தியா முழுவதும், மரண தண்டனையை திரும்பப் பெற்றிட வலியுறுத்தி மக்கள் வீதியில் இறங்கினர். ஆனால், காந்தி இந்தப் போராட்டங்களிலிருந்து விலகி நின்றார். அவர் சொன்னதெல்லாம் கோடைகாலம் துவங்குவதற்கு முன்பாக, அவர்களைத் தூக்கிலிட்டிட வேண்டும் என்பதைத்தான் !புரட்சியாளர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்திடாத காந்தி, சுதந்திரத்தின் போது காங்கிரஸ் கட்சியால் ஒதுக்கப்பட்டார். சுதந்திரத்தைத் தொடர்ந்து நடைபெற்ற மதக் கலவரங்களின் முன்னாள் காந்தி கையாலகாதவராக நின்றார். கடைசி நாட்களில் மிகுந்த வருத்தத்துடன், காங்கிரஸ் கட்சியை கலைத்திடவும் அவர் விரும்பினார்.

பகத்சிங்கும் அவரது நண்பர்களும் தூக்கு மேடையின் மீதேறி, தூக்குக் கயிற்றை முத்தமிட்டனர், இன்குலாப் ஜிந்தாபாத் என முழக்கமிட்டபடியே மரணத்தை நோக்கி நடைபோட்டனர். காந்தி ஒரு மத வெறியனால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பகத்சிங்கும் அவரது நண்பர்களுக்கும் சமமான முக்கியத்துவமும், அவசியமும் உள்ளது. சிறிது காலதாமதமானாலும், இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் காந்தியின் சிலை அமைந்துள்ள இடத்திலேயே பகத்சிங்கின் சிலையும் நிறுவப்பட்டது. மேலும் ருசிகரமான தகவல் என்னவென்றால், இதே வளாகத்தின் பார்வையாளர் அரங்கில் இருந்துதான் பகத்சிங்கும் அவரது நண்பர் பட்டுகேஷ்வர் தத்தும், பிரிட்டிஷ் அரசை விழிக்கச் செய்யும் முகமாக இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசினர் என்பது தான்.

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 மண்குதிரை 2011-11-17 07:42
Gandhi's letter to the Viceroy regarding the sentence of death to Bhagat Singh http://www.mkgandhi.org/faq/q26.htm

By hanging these men, the Government has demonstrated its own brute nature, it has provided fresh proof of its arrogance resulting from its power by ignoring public opinion Navajivan, 29-3-1931 http://ltrc.iiit.ac.in/gwiki/index.php/Collected_Works/Volume_51/Bhagat_Singh

Asaf Ali, http://en.wikipedia.org/wiki/Asaf_Ali a member of the Congress Party was Bhagat Singh’s lawyer
http://www.indialawjournal.com/volume1/issue_3/bhagat_singh.html
Report to administrator

Add comment


Security code
Refresh