உலக உள்ளூர் சினிமாவுக்குள் ஒரு பயணம் - 3

எத்தனை யுகங்கள் போனாலும்... என்னதான் வித்தைகள் செய்தாலும்... எவ்வளவு பெரிய பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தாலுங்கூட... குழந்தைகளின் மனசுக்குள் என்னதான் இருக்கிறதென்று இதுவரை எவராலும் கண்டுபிடித்துவிட முடியவில்லை. இயற்கையின் பிடிபடாத மர்மமாகவே இருக்கிறது குழந்தைகளின் அக உலகம்.

இதுவரை உலகம் சொல்லிவைத்திருக்கிற எல்லா நீதிகளையும்... எல்லா போதனைகளையும் ஒரு நொடியில் சர்வசாதாரணமாகக் கடந்து போய்... அதற்கும் மேலான ஒரு நீதியைச் சொல்லி நம்மைப் பார்த்து பரிகசிக்கிறார்கள் குழந்தைகள். அவர்களின் முன்னால் மண்டியிட்டு சரணாகதி அடைவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை போலிருக்கிறது. ஆனால் எல்லாம் தெரிந்த நமது பெரிய மனம் அதற்கு லேசில் ஒப்புக் கொள்ள மாட்டேன்கிறதே.

ஆனாலும்... அதனாலொன்றும் பாதகமில்லையென தங்கள் போக்கிலேயே போய்க்கொண்டிருக்கிறார்கள் குழந்தைகள். சிலநேரம் அழுகிறார்கள். பல நேரம் சிரிக்கிறார்கள். திடீரென சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.. போர்க்களம் போல அடித்து மாய்ந்து கொள்கிறார்கள்.. சடாரென எல்லாவற்றையும் மறந்துவிட்டு மறுகணமே தோளில் கைபோட்டு ஒன்றாகி விடுகிறார்கள். எதையும் யாருக்கும் தரமாட்டேனென்று அடம் பிடிக்கிறார்கள். அடுத்த நொடியே எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்து விளையாட்டு காட்டுகிறார்கள். நொடிக்கொருதரம் மாறிக்கொண்டேயிருக்கும் மழைக்காலத்து மேகங்களைப் போல மாறிமாறி அன்பைப் பொழிகிறார்கள் நமது குழந்தைகள்.

தன் வயதொத்த குழந்தையின் துயரத்தை சகித்துக் கொள்ள குழந்தைகளால் ஒருபோதும் முடிவதில்லை. அந்தத் துயரத்தில் பங்கெடுத்து... அதற்கு விடை காண என்னவெல்லாமோ செய்கிறார்கள். வகுப்பறையிலோ, பள்ளியிலோ, தெருவிலோ தனது சக தோழனோ, தோழியோ... அண்ணனோ, தங்கையோ எதையாவது தொலைத்துவிட்டு பரிதவிக்கும்போது கூடவே நின்று பதறிப்போகிறார்கள். அப்புறமென்ன கூட்டணி போட்டுக் கொண்டு தேடுதல் வேட்டையோ, தொலைத்ததை பெற்றோர்களுக்கு தெரியாமல் மறைத்துவிடும் சாமர்த்தியமோ.. சத்தமில்லாமல் அரங்கேறிவரும்.

அப்படித்தான்.. ஒரு ஜோடி காலணிகளை (ஷூ) தொலைத்து விட்டு ஒரு அண்ணனும் தங்கையும் படும் அவஸ்தைகளையும்.. சாமர்த்தியங்களையும்.. அதனூடே வெளிப்படும் குழந்தைகளின் மேதைமைகளையும் அற்புதமாய் சொல்கிறது மஜித்மஜித் தின் ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’ என்கிற ஈரானியத் திரைப்படம்.

அது ஒரு ஏழ்மையான குடும்பம். அப்பா கூலி வேலைக்கு செல்பவர். நோயாளியான அம்மா கைக்குழந்தையுடன் வீட்டில் இருக்கிறார். அந்த வீட்டின் பெரிய பையன் ‘அலி’ பத்து வயதிருக்கும் அவனுக்கொரு தங்கை ‘ஸாரா’ ஆறு வயது சிறுமி. ஒரு நாள் தங்கையின் கிழிந்து போன ஷூவை தைப்பதற்காக எடுத்துச் செல்லும் அண்ணன் அலி, அதனை காய்கறி கடையொன்றில் வைத்துவிட்டு காய்கறி வாங்கும் போது, பழைய பிளாஸ்டிக் பேப்பர் பொறுக்கும் ஒருவர் அதை பழையது என நினைத்து எடுத்துச் சென்று விடுகிறார். காய்கறி வாங்கிக் கொண்டு திரும்பும் அலி, ஷூவைக் காணாமல் தேடுகிறான். கிடைக்கவில்லை. வேதனையுடன் வீட்டிற்கு திரும்பும் அலி ஷூ தொலைந்து போனதை தங்கை ஸாராவிடம் சொல்கிறான். தங்கை அழுகிறாள்.

இரவில் இருவரும் ஒன்றாக அமர்ந்து படிக்கும் போது, தொலைந்து போன ஷூவைப் பற்றி எழுதி, எழுதி பேசிக்கொள்கின்றனர். தனது நோட்டில் ஷூ இல்லாமல் எப்படி பள்ளிக்கு போவது என எழுதி அலியிடம் காட்டுகிறாள் ஸாரா. செருப்பு போட்டு போகலாமே என பதிலுக்கு எழுதுகிறான் அலி. கோபமான ஸாரா அப்பாவிடம் சொல்லிடுவேன் என எழுத, அப்பாவிடம் சொன்னால் ரெண்டு பேரும்தான் அடிவாங்கணும். தவிரவும் ஷூ வாங்க அப்பாவிடம் பணம் இருக்காது என அலி பதிலுக்கு எழுத, ஒரே ஷூ வை காலையில் அவளும், மதியம் அவனும் மாற்றி மாற்றி போட்டுச் செல்வதென முடிவுக்கு வருகிறார்கள். ஈரானில் பெண்களுக்கு காலை வேளையும் ஆண்களுக்கு மதியம் வேளையும் தான் பள்ளி நடக்கும் என்பதால் இந்த ஏற்பாடு சாத்தியமாகிறது.

அதன்படியே காலையில் ஸாரா ஷூ அணிந்து செல்கிறாள். பள்ளி விட்டதும் சந்து பொந்துகளில் புகுந்து ஓட்டமாய் ஓடிவந்து அலிக்கு ஷூவை தர, அவன் போட்டுக் கொண்டு தாமதமாக பள்ளிக்குப் போக... இப்படியே தொடர்கிறது துயரம் மிகுந்த அந்த கண்ணாமூச்சி விளையாட்டு. இதனால் இருவருக்குமே ஏகப்பட்ட சிக்கல்கள். இருக்கும் ஒரே ஷூவை மழையில் நனைந்து விடாமல் பாதுகாப்பது, அண்ணன் காத்திருப்பானே என அவசர அவசரமாய் தேர்வு எழுதுவது. ஓடும்போது தவறி சாக்கடைக்குள் விழுந்து அடித்து செல்லப்படும் ஷூவை துரத்திச் செல்வது என ஸாராவுக்கும், தினமும் பள்ளிக்கு தாமதமாகவே போக நேரிடுவதால் தலைமை ஆசிரியரிடம் திட்டு வாங்கும் நிலை அலிக்கும் ஏற்படுகிறது. ஒரு விடுமுறை நாளில் தந்தையுடன் தோட்ட வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் பணத்திலாவது ஸாராவுக்கு ஷூ வாங்கிவிட அலி முயல்கிறான். அதுவும் முடியவில்லை.

இப்படியாக நீளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வாய்ப்பு ஒன்று அலிக்கு கிடைக்கிறது. பள்ளிகளுக்கிடையிலான ஓட்டப்பந்தயப் போட்டிதான் அது. அதில் 3வது பரிசை பெற்றுவிட வேண்டுமென அலி அதில் பங்கேற்கிறான். ஓட்டப்பந்தயம் நடக்கிறது. மற்ற மாணவர்களுடன் அலியும் ஓடுகிறான். சாக்கடை சந்துகளுக்குள் ஓடிவந்தது நினைவுக்கு வர, இன்னும் வேகமெடுத்து ஓடுகிறான். அவனுக்கு பின்னால் வந்த மாணவன் அலியின் சட்டையை பிடித்து இழுக்கவே தடுமாறி கீழே விழும் அலி மீண்டும் எழுந்து வெறி கொண்டு ஓடி வெற்றிக் கோட்டை தொடுகிறான். எல்லாரும் அவனை கட்டித் தழுவி பாராட்டும்போது, சார்... நான் மூன்றாவதாக வந்துவிட்டேனா... என்று கேட்கிறான். ஆனால் தலைமை ஆசிரியரோ நீதாண்டா முதல் பரிசு என்று கட்டித்தழுவுகிறார். அந்த வெற்றியை கொண்டாட முடியாமல் கண்ணீர் விடுகிறான் அலி.

தோல்வியுடன் அவன் வீடு திரும்பும் போது, அவனது தந்தை அவனுக்கும் ஸாராவுக்கும் புதிய ஷூ க்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்புகிறார். அலி வேதனையுடன் வீட்டிலிருக்கும் தண்ணீர் தொட்டிக்குள் ஓடி ஓடி புண்ணாகிப்போன கால்களை வைக்கிறான். அந்தத் தொட்டியிலிருக்கும் தங்கநிற மீன்கள் அவன் காலையே சுற்றிச் சுற்றி வர கனத்த இசையுடன் நிறைவடைகிறது படம்.

குழந்தைகள் எவ்வளவு அன்பானவர்கள், விட்டுக்கொடுப்பவர்கள், பொறுப்பு மிக்கவர்கள், நேர்மையானவர்கள் என்பதை படத்தின் காட்சிகளில் விளக்கிச் செல்கிறார் இயக்குநர் மஜித் மஜித். தொலைந்து போன தனது ஷூவை ஒரு சிறுமி அணிந்திருப்பதை ஸாரா பார்த்துவிட்டு அண்ணனிடம் சொல்கிறாள். இருவரும் அந்தச்சிறுமியின் வீட்டிற்கு செல்லும்போது அது தங்களைப் போலவே ஏழ்மையான குடும்பமென்பதையும் அச்சிறுமியின் தந்தை கண் பார்வையற்றவர் என்பதையும் உணர்ந்து கொண்டு ஷூவை கேட்காமலேயே திரும்பி வரும் காட்சி, அற்ப காரணங்களுக்காக அண்டை வீட்டாரோடு சண்டையிடும் நம்மை வெட்கங்கொள்ள செய்துவிடும். அதே சிறுமி ஸாராவின் தொலைந்துபோன பேனாவை கீழே கண்டெடுத்து அதை ஸாராவிடம் கொண்டு வந்து கொடுக்கும் நேர்மை நம்மை அதிர்ச்சியடைய வைக்கும்.

தொலைந்த ஷூவைப் பற்றி ஸாராவும், அலியும் நோட்டு புத்தகத்தில் எழுதி உரையாடும் காட்சி, ஷூவை பரிமாறிக்கொள்ள ஸாராவும் அலியும் அந்த குறுகியத் தெருக்களில் சாக்கடைகளைத் தாண்டித்தாண்டி ஓடிவரும் காட்சி, மழைநீரில் ஓடும் ஷூவைத் துரத்தும் காட்சி, ஓட்டப்பந்தயம் காட்சி என திரைக்கதையில் விளையாடி இருப்பார் மஜித் மஜித்.

வெற்று பிரம்மாண்டங்களோ.. வீணான ஆடம்பரங்களோ இல்லாமல் 1997ஆம் ஆண்டில் வெறும் 75 லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இப்படம்தான் ஈரானிலிருந்து ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல்படம். வார்ஷா, மாண்ட்ரியல், டெஹ்ரான், சிங்கப்பூர், ப்ராங்க்பர்ட் திரைப்பட விழாக்களில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்ட படம்.

இப்படத்தின் இயக்குநர் மஜித் மஜித், சமகால ஈரானிய இயக்குநர் களில் முதன்மையானவர். தமது 14வது வயதில் நாடகச்செயல்பாடுகளை தொடங்கிய மஜித் 1992ல் ‘பாதக்’ படத்தின் மூலம் இயக்குநர் ஆனவர். ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ இவரது மூன்றாவது படம்.

வெவ்வேறு இனங்கள், வெவ்வேறு நாடுகள், வெவ்வேறு கலாசாரங்கள் என்ற பிரிவினை இருந்தாலும் கலையின் மொழி மனிதர்களை ஒன்றிணைப்பதாய் இருக்க வேண்டும். ஈரானின் கலாசாரமும் நமது கலாசாரமும் வேறு வேறு தான். ஆனால் அலியும் ஸாராவும் நம் வீட்டு குழந்தைகளாகவே தெரிகிறார்கள். அதனாலேயே இந்தப்படம் உலக சினிமாவில் முக்கிய இடம் பெற்றிருக்கிறது.

எல்லாவற்றையும் விட குழந்தைகள் உலகைப் போன்ற எளிமையான, பாசாங்கற்ற, தூய்மையான உலகம் வேறு எங்கும் இல்லை. அதோடு அது உண்மைக்கு வெகு அருகிலும் இருக்கிறது. நமது அலியைப் போல.. ஸாராவைப்போல... இதைப் புரிஞ்சிக்க என்ன செய்யலாம்னு தானே யோசிக்கிறீங்க.. இந்தப் படத்தை ஒருமுறை பாருங்களேன்...

பயணம் தொடரும்...