தமிழக சட்டப் பேரவை முதல் இரண்டு அமர்வுகளும் சேர்த்து 33 நாட்கள் கூடியுள்ளது. கவர்னர் உரையில் துவங்கி, செப் 14ம் தேதி வரை மொத்தம் 132 மணி நேரம் 14 நிமிடங்கள் சபை நடந்துள்ளது. இதில் மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதம் 19 நாட்கள் நடைபெற்றது. 23 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத் தொடரின் போது ஆயிரக்கணக்கான கேள்விகள் கேட்கப்பட்டது. சட்டப் பேரவை விதி 110-ன் கீழ், முக்கிய பிரச்னைகள் பற்றியும், புதிய அறிவிப்புகள் குறித்தும் முதல்வரோ, அமைச்சர்களோ அறிவிப்புகளை வெளியிடலாம். இந்த அறிவிப்புகள் மீது விளக்கம் கேட்கவோ, குற்றம் சொல்லவோ கூடாது என்பது பேரவை விதி. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் விவாதத்தில் இருந்து (ஜூன் 8), துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்ற நாள் வரை ( செப்டம்பர் 13) 110-ன் கீழ் 21 அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக மானியக் கோரிக்கைகளின் விவாதத்திற்கு அமைச்சர்கள் பதில் அளிக்கும் முன்னரே முதலமைச்சர் எழுந்து 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை பதிலுரையாக தெரிவித்து விடுவார். இதனால் சட்டசபையில் யாரும் மேற்கொண்டு விவாதம் நடத்த முடியாது. அப்படியொரு ஜனநாயகத்தை வழங்கும் விதிதான் 110 விதி.. மனித வள மேம்பாட்டின் அடிப்படை கூறுகளான கல்வி, சுகாதாரம், உணவு உள்ளிட்ட மிக முக்கியத் துறைகளில் கூட, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆழ விவாதித்து பொருள் செறிவோடு நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் கூட இப்படி ஜனநாயகமற்ற ஒரு நபரின் விருப்பத்திற்கு ஏற்ப விவாதமின்றி அறிவிக் கப் படும் என் றால் அது மக்களாட்சி என்ற தத்துவத்தை குப்பைத் தொட்டிக்கு தள்ளிவிடும் அபாயத்திற்கே கொண்டு செல்லும்.

அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற 4 மாதங்களில், தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒரு படி முன்னெடுத்து வைத்துள்ளது. அதற்கான அறிவிப்புகளை இந்தக் கூட்டத் தொடரில் பார்க்க முடிந்தது. சில நல்ல அறிவிப்புகள் கூட ஜனநாயகப் பூர்வமான அறிவிப்பாக இல்லாமல் அதிரடி அறிவிப்பாகவே அமைந்தது. விலையில்லாஅரிசி, பறிக்கப்பட்ட நிலங்கள் மீட்பு, முதியோர் உதவித்தொகை உயர்வு, மகளிர் திருமண உதவித் தொகை உயர்த்தியது, தாலிக்கு தங்கம் 4 கிராம் வழங்குவது, மீன்பிடி தடை கால நிவாரணம், சிறப்புத் திட்ட அமலாக்கத்திற்கு தனித் துறை, விரிவுபடுத்தப்பட்ட காப்பீட்டுத் திட்டம், அரசு கேபிள் டிவி, அண்ணா பிறந்தநாளில் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, லேப்டாப், ஆடு, மாடு வழங்குவது என பல்வேறு நலத்திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்று தமிழக அரசு அறிவித்தாலும்.. மக்களின் அடிப்படை வாழ்வாதாரமான நிலம், வேலை குறித்து மௌனமாகவே ஆட்சியாளர்களின் அறிவிப்புகள் உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக 50லட்சம் ஏக்கர் தரிசு நிலம் திராவிடக் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால் தற்போது நிலமே இல்லை என்கின்றார் தமிழக முதல்வர். இவரின் கடந்த ஆட்சி (2001-+2006) புள்ளி விபரத்தில் இருந்து முன்னாள் முதல்வரும், முன்னாள் முதல்வரின் கடந்த ஆட்சி(2006-2011) புள்ளிவிபரத்தில் இருந்து தற்போதைய முதல்வரும் கூட்டிக் கழித்துப் பார்த்து தற்போது நிலம் இல்லை என்கின்றனர். நகைச்சுவை நடிகர் வடிவேல் ஒரு திரைப்படத்தில் வெட்டிய கிணற்றைக் காணவில்லையென்று காவல்நிலையத்தில் புகார் கொடுப்பது போல் உள்ளது, இன்றைக்கு ஆட்சியாளர்கள் நிலத்தை காணவில்லை என்று சொல்லுவது.

தற்போதைய விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், இடப்பெயர்வு, வாழ்வியல் நெருக்கடி, தற்கொலை சாவுகள் என அன்றாடம் பத்திரிகைகளில் செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. மத்திய அரசின் உலகமய, தாராளமய, தனியார் மயக் கொள்கைகள் காரணமாக அனைத்து வளங்களும் பெரும் ஏக போக நிறுவனங்களுக்கு, பெரிய முதலாளிகளுக்கு ஆதரவாக இருக்கும் போது சாதாரண ஏழை எளிய மக்கள் வஞ்சிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். சாமான்ய மக்களை பாதுகாப்பதற்கான நிரந்தரத் திட்டங்களுக்கு ஏற்பாடு உண்டா? என்றால் இல்லை.. தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களை சீரமைக்க சில கோடிகள் ஒதுக்கும் அரசு அதில் அரசு காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யவோ, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவோ எந்த திட்டங்களையும் விவாதிக்கவில்லை. சமச்சீர் கல்விக்காக மாணவர், வாலிபர் அமைப்புகளின் நீண்ட போராட்டமும், ஜனநாயக அமைப்புகள் நீதிமன்றங்களின் மூலம் தலையிட்டதும் தமிழக அரசு 55 நாட்களுக்கு பின் கல்விநிலையங்களில் பாடம் நடத்த அறிவிப்பு வெளியிட்டு, அதிலும் 110 விதியின் கீழ் தேவையான ஆசிரியர், நூலகர் பணியிடங்களை பூர்த்தி செய்வது குறித்து அறிவிப்பு வெளியிட்டது.

தமிழக கனிம வளங்களை பயன்படுத்த அரசே புதிய தொழிற்சாலைகளை அமைத்து பயன்படுத்தவோ, அத்தோடு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவோ எந்தத் திட்டமும் இந்த கூட்டத்தொடரில் பேசப்படவில்லை. அதேபோல் புதிய கனரக தொழிற்சாலைகள் தென்மாவட்டங்களில் அமைப்பது குறித்து மௌனமே மிஞ்சியது. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தனியார்துறை நியமனங்களுக்கு என்று புதியதாக ஒரு துறை அமைக்கப்படும் என அறிவிக்கின்றனர். ஆனால் தமிழகத்தில் இருக்கும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள 70 லட்சம் பேரின் வாழ்க்கைக்கு என்ன உத்தரவாதம் என்பதை வசதியாக மறந்தே போனார்கள். தென் தமிழகத்தின் கனவு திட்டமான சேது சமுத்திரத்திட்டம் தனக்கு உடன்பாடு இல்லை என சொல்லி அதற்கு சமாதி கட்டும் நடவடிக்கையில் இறங்கிவிட்டார் முதல்வர். இதைத்தாண்டி கம்யூனிஸ்ட் கட்சி எம்,எல்,ஏக்கள் மக்கள் பிரச்னை குறித்து மானிய கோரிக்கைகளில் பேச எழுந்தால் பல அமைச்சர்களின் குறுக்கீடுகள், நேரம் குறைப்பு என அடுத்த கட்ட ஜனநாயக மறுப்பை அமலாக்குகிறார்கள்.

சட்டசபையில் எம்,எல்,ஏக்கள், அமைச்சர்கள், எதிர்கட்சித்தலைவர், முதல்வர் உள்ளிட்டு அனைவருக்கும் தொகுதிப்படியாக 5000ரூபாயிலிருந்து 10000 ரூபாயாக உயர்த்தி எம்.எல்.ஏக்களின் சம்பளத்தினை 50000 திலிருந்து ரூ 55000 ஆக உயர்த்தி அறிவித்துள்ளார். மேற்படி எம்.எல்.ஏ சம்பள உயர்வு குறித்து முதல்வர் அறிவித்தவுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் வட்டியில்லாத கடனாக கார் வாங்க நிதி ஒதுக்க வேண்டும் என்ற தனது நலனை முன்வைத்து கோரிக்கை வைத்தார். இன்றும் மருத்துவமனைகள் உள்ளிட்டு அரசின் பல்வேறு துறைகளில் கடைநிலை ஊழியர்களாக மாதம் ரூ 999 சம்பளத்தில் தற்காலிக பணியாளர்களாக ஆயிரக்கணக்கானவர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கான பணி நிரந்தரம், ஊதிய உயர்வு எதுவும் அறிவிக்கவில்லை. ஊராட்சி உதவியாளர்கள் செயலாளர்களாகவும், டாஸ்மாக் ஊழியர்களுக்கு என மிக சொற்பமாக ஊதிய உயர்வு மட்டும் அறிவித்துள்ளார் முதல்வர்.

திராவிடக் கட்சிகளின் தொடர்ச்சியான 40 ஆண்டு கால ஆட்சிகளில் இரண்டு பிரதான திராவிட கட்சிகளில் ஒன்று ஆளும் கட்சியாக இருக்கும் போது இன்னொன்று எதிர்கட்சியாக இருக்கும். ஆனால் சட்டசபை நடவடிக்கையில் தனிமனித பார்வைகளில் இருந்து எதிர்கட்சி என்பதற்கு பதில் எதிரி கட்சி என்ற அணுகுமுறையோடே திட்டங்கள் பார்க்கப்படுவதும், அறிவிக்கப்படுவதும், நிறுத்தப்படுவதும் தொடர்கதையாக மாறி வருவதை இந்தக் கூட்டத் தொடரிலும் பார்க்க முடிந்தது. திமுகவின் தொடர்ச்சியான வெளிநடப்பு, ஆக்கப்பூர்வமான விவாதத்தை சட்டசபையில் நடத்தாமல் அந்தக் கட்சியின் தலைவர் வெளியில் அறிக்கைகள் மட்டும் வெளியிட்டது, சாமான்ய மக்களை எப்படி முட்டாளாக்குகிறார்கள் என்பதை தெள்ளத் தெளிவாக பார்க்க முடிந்தது. மக்கள் நல அரசு என்றால் மக்களின் வாழ்வதாரத்தை மேம்படுத்த நிரந்தரத் திட்டங்களை உருவாக்க வேண்டும். ஆனால் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் பொது விநியோகம், இலவசக் கல்வி, வேலை, பொது சுகாதாரம் போன்றவற்றிக்கு கவனம் செலுத்த வேண்டும். ஆனால் மக்களின் ஏழ்மையை அடிப்படையாகக் கருத்தில் கொண்டு நுகர்வுப் பொருட்களை இலவசமாக வழங்குவதை மட்டுமே தங்களது வரலாற்று சாதனையாக பறைசாற்றுகின்றனர்.

திமுக ஆட்சியில் இலவச டிவி, இலவச கேஸ் அடுப்பு கொடுத்தது. அதிமுக ஆட்சியில் இலவச மிக்சி, இலவச கிரைண்டர், இலவச மின்விசிறி என அறிவிப்பது எல்லாம் வாக்கு வங்கியை மனதில் வைத்துக் கொண்டு அறிவிக்கும் அறிவிப்புகளே ஆகும். குடிமக்கள் சமூகத்தில் மக்களுக்கான நிரந்தர வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டிய ஆட்சியாளர்கள் சலுகைகளையும், இலவசங்களையும் அறிவித்து அதனை சார்ந்த நுகர்வையும், சிந்தனையையுமே பொதுபுத்தியாக மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் வெளிப்பாடுதான் அரசின் மதுபானக்கடைகளை நோக்கி படையெடுக்கும் இளவயதினர் கூட்டத்தின் எண்ணிக்கை மலையளவு என்றால், அறிவு சாலையான நூலகங்களை நோக்கியோ, உடற்பயிற்சி கூடங்களை நோக்கியோ செல்வது கடுகளவே உள்ளது. இது சமூகத்தின் வளர்ச்சியை பறைசாற்றுவதாக இருக்காது.

எனவே மக்கள் பிரதிநிதிகள் சந்திக்கும் அரங்குகள், கூட்டங்கள் எல்லாம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த, தன்னம்பிக்கையை உருவாக்க, சமூக மாறுதல்களுக்கான விவாதக் களங்களாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட சட்டமன்றங்களாக, நாடாளுமன்றங்களாக மாற வேண்டுமானால் அரசியல் கட்சிகளின் கொள்கைகளை, இலக்குகளை, இலட்சியங்களை மக்கள் பொது தளத்தில் பேசும் நிலை உருவாக வேண்டும்.

Pin It