"சாதி அமைப்பு முறையை விட்டுவிட்டுத் தீண்டாமையை ஒழித்துக் கட்டுவதோடு நாம் நிறைவடைய வேண்டும் என்று சிலர் சொல்லக்கூடும். சாதி அமைப்பு முறையில் உள்ளார்ந்து பொதிந்துள்ள ஏற்றத் தாழ்வுகளுக்கு முடிவுகட்ட முயலாமல், தீண்டாமையை மட்டுமே ஒழித்துக் கட்டுவது என்பது, மிகவும் கீழான குறிக்கோளாகும். தோல்வியைவிட மிகக் குறைந்த குறிக்கோளை மேற்கொள்வது குற்றம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்தக் கொடுந்தீமையை அதன் அடிவேர் வரை ஆராய வேண்டும். நமது வலியை, நோயைத் தணிப்பதோடு நாம் நிறைவடைந்து விடக்கூடாது. நோய் எதுவென்று சரியாக, உறுதியாக அடையாளம் காணவில்லை என்றால், அதற்கான தீர்வு பயனற்றதாகி விடும்; குணமடைதல் தள்ளிப்போகக்கூடும். தீண்டாமை என்னும் கறை, வடு, இழுக்கு அகற்றப்பட்டு விட்டதாக வைத்துக் கொண்டால்கூட, தற்போதைய தீண்டத்தகாதவர்களின் சமூகப் படிநிலை எத்தகையதாக இருக்கும்? அதிகபட்சம் அவர்கள் சூத்திரர்களாக நடத்தப்படுவார்கள். அவ்வளவுதான்.'' - பாபாசாகேப் அம்பேத்கர்

‘தீண்டாமை ஒழிக்கப்பட்டுள்ளது' என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆனால், இத்தீண்டாமைக்கு ஆதாரமான ஜாதியை அது இன்றளவும் பாதுகாத்தே வருகிறது. அறுபது ஆண்டுகால சுதந்திர இந்தியாவில், சாதி ஏன் சட்ட ரீதியாக ஒழிக்கப்படவில்லை என்று கேட்க, அம்பேத்கர் - பெரியார் இயக்கங்களைத் தவிர யார் இருக்கிறார்கள்? தீண்டாமைக்கு எதிராகவும், சாதிக்கு ஆதரவாகவும் (அதற்கு எதிராகப் பேசாமல் அமைதி காப்பது) இருப்பதற்குப் பெயர்: பார்ப்பனியம் / காந்தியம் / முற்போக்கு / அரசியல்! இன்று உத்தப்புரம் கிராமத்திலும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
இந்தியாவின் ஆறு லட்சம் கிராமங்களைப் போலவே இக்கிராமமும் (சேரியும்) அனைத்து வகை சாதிப்பாகுபாடுகளுடன்தான் இயங்குகிறது. ஆனால் 600 அடி சுவற்றில் (பொதுவழியில் இருக்கும்) 15 அடியை மட்டும் இடித்துவிட்டு, அது ‘உத்தம'புரமாக மாறி விட்டது என அரசு குதூகலிக்கிறது. மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் அதைக் கொண்டாடுகிறது.

இக்கொண்டாட்டத்தில் பங்கேற்காத ‘குற்ற'த்திற்காக, அது தலித் இயக்கங்களையும் சாடுகிறது. கட்சி தொடங்கி அரை நூற்றாண்டுக்குப் பிறகே ‘தீண்டாமையை மட்டும்' ஒழிக்கக் கிளம்பி இருப்பவர்கள், அம்பேத்கர் கொள்கையை ஏற்று சாதி ஒழிப்பை மய்யமாகக் கொண்டு அணி திரளும் தலித் இயக்கங்களை விமர்சிப்பது, கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதம்.

அண்மையில் வெளிவந்த புள்ளிவிவரங்களின்படி, "இந்தியாவில் ஒவ்வொரு 18 நிமிடத்திற்கு ஒருமுறை, தலித்துகளுக்கு எதிராக ஒரு குற்றம் இழைக்கப்படுகிறது; ஒவ்வொரு நாளும் 3 தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.'' இக்கொடுமைகள் இன்று நேற்றல்ல; சாதி அமைப்பு தொடங்கியது முதலே இதுதானே நிலை. ஆக, பன்னூறு ஆண்டுகளாக தீண்டாமையை அனுபவிக்கும் தலித்துகள், சாதியை சிதைத்து விடாமல் அதன் வெளிப்பாட்டை மட்டுமே எதிர்த்துப் போராடும்படி நிர்பந்தித்து, அதன்மூலம் இந்து (மத) சமூக அமைப்பை உயிர்ப்புடன் வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது தான் பார்ப்பனியத்தின் நோக்கம். இச்சதித்திட்டத்தை ஏற்க மறுத்து, ஒரே நொடியில் இந்து சமூக அமைப்பிலிருந்து வெளியேறுவதுதான் (சாதி ஒழிப்பு) - அம்பேத்கரியம்.

தீண்டாமையை அகற்றி, இந்து மதத்தைச் சீர்திருத்தும் "சனாதன முற்போக்கு' வாக்கு அறுவடைசெய்யும் தேர்தல் செயல்திட்டத்தில் - தலித்துகள் பங்கேற்கவும் முடியாது; அதை ஆதரிக்கவும் முடியாது. தமிழ்நாட்டு எல்லைக்கு வெளியே - ஈழத்திலும், கருநாடகத்திலும், மலேசியாவிலும் தமிழர்கள் தாக்கப்பட்டால், அந்நியனை எதிர்த்து சுரணையோடு போராடுகின்றவர்கள், தமிழக எல்லைக்குள் தமிழன் தாக்கப்பட்டால் மட்டும் - சொந்த (ஜாதி) தமிழனை எதிர்க்க அஞ்சுகின்றனர். இங்கு சேரித்தமிழன் அவர்களுக்கு அந்நியனாகிவிடுகிறான்!

அம்பேத்கரின் மதமாற்றத்தை (இந்துவாக இருக்க மறுப்பது) கொச்சைப்படுத்துகின்றவர்கள், தமிழனை சாதியொழிந்த தமிழனாக எப்படி மாற்றப் போகிறார்கள்? சிந்து சமவெளி நாகரிகத்திற்குப் பிறகு, இன்று வரை எத்தனையோ கோடி தமிழர்கள் வாழ்ந்து மடிந்திருக்கிறார்கள். இன்றும் எட்டு கோடிக்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கிறார்கள். ஆனால், ஒரேயொரு சாதியற்ற தமிழனைக்கூட அடையாளப்படுத்த முடியாத வக்கற்ற இனமாகத் தமிழினம் தாழ்ந்து கிடக்கிறதே? திருவள்ளுவர் கூட சாதியிலிருந்து தப்பவில்லையே! இனி பிறக்கப்போகும் தமிழனாவது சாதியின்றி பிறப்பதற்கு, தமிழர்களிடம் ஏதாவது செயல்திட்டம் இருக்கின்றதா? தமிழ்ச்சமூகம் சற்று சுரணையுடன் சிந்திக்கட்டும்.

 

Pin It