திரைகடல் ஒடி திரவியம் தேடியவர்கள் இன்று தெருவில் வாழ்ந்து உணவு தேடுகிறார்கள். செல்வம் ஈட்ட அயல்நாடு செல்வதுமாறி, பின்னர் வேலைக்காக வெளியூருக்கும் செல்லத்துவங்கி, இன்று நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. பஞ்சம் பிழைக்க ஊரைக் காலி செய்து கிளம்பியதைப் போன்று, இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக புறப்பட்டு வருவது மிக ஆபத்தானதாக மாறிவிட்டது. கூலிகளாக அல்லது குறைந்த சம்பளத் தொழிலாளியாக மாற்றப்பட்டு சுரண்டப்படும் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாழ்வு ஒரு பெரும் சமூக, பொருளாதாரப் பிரச்னையாக மாறிவருகிறது. ஊரக வளர்ச்சியில் ஏற்பட்ட ஒரு சிறு பலவீனமாக மட்டுமே அரசின் கோப்புகளில் தெரிந்தாலும், சந்தைப் பொருளாதார வளர்ச்சியை தன் தோளில் சுமக்க இத்தகைய நவீன அடிமைகள் தேவை என்பதே ஆட்சியாளர்களின் கொள்கை.

சமன் இழந்து வரும் சமூக வளர்ச்சிக்கு இன்றைய உதாரணம் இடம்பெயர்வு பிரச்னைதான். வருடத்தின் அனைத்து நாட்களிலும் நடந்துகொண்டே இருக்கிறது இடம்பெயர்வு. கிராமப் பொருளாதாரம், கிராமப்புற கல்வி-வேலை வளர்ச்சி, விவசாயம் என மாற்று திட்டமிடலுக்கான குரலை ஓங்கச் செய்வது காலத்தின் கட்டாயம். இந்நோக்கில் இளைஞர் முழக்கம் ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தோழர்கள் மூலம் இடம்பெயர்ந்த மக்களிடம் நேரடியாக செய்யப்பட்ட சர்வே மூலம் மூன்று கட்டுரைகளை தயாரித்து இவ்விதழில் வழங்கியுள்ளோம். வடசென்னையில் பாரிமுனையில் உள்ள நடைபாதை வசிப்போரிடமும், தென்சென்னையில் பூதபெருமாள் நகரில் உள்ள மக்களிடமும், திருப்பூரில் இடம்பெயர்ந்த தொழிலாளர்களிடமும், விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு கிராமங்களிலும் மேற்கொண்ட கணக்கெடுப்புகளை வைத்து இக்கட்டுரைகள் தயாரிக்கப்பட்டன.

-ஆசிரியர் குழு

குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் திருப்பூர் நகரம் இடம்பெயர்ந்த மக்களை அதிகம் கொண்டதாகும். பதிவு செய்யப்பட்ட 21, 570 சிறு மற்றும் குறுந்தொழில்களைக் கொண்டது இந்த நகரம். நாளும் வந்துசேர்வோர் எண்ணிக்கை என்று பார்த்தால் நிச்சயம் ஆயிரத்தைத் தாண்டும். தமிழகத்தில் மிக வேகமாக மக்கள் தொகை வளரும் மாவட்டமான திருப்பூரின் மக்கள் தொகை இன்று இருப்பதைப்போல வளர்ந்து சென்றால் பல சமூகப் பிரச்னைகள் எழும் ஆபத்து காத்திருக்கிறது. இன்று தமிழகத்தில் மிக அதிகமாக தற்கொலை நடக்கும் மாவட்டமான இங்கு, இடம் பெயர்ந்த மக்களின் வாழ்நிலையும் மிக மோசமானதாகும். .

டாலர் சிட்டி, பனியன் சிட்டி என பெருமையோடு அழைக்கப்படும் திருப்பூரில் உள்ள இடம்பெயர்ந்த மக்களின் வாழ்நிலையை ஆராய்ந்து பார்க்கையில் இந்தப்பெருமையில் உள்ள அர்த்தம் என்பது அவர்களுக்கானதாக இல்லை என்றே புரிகிறது. 1939ல் 4 தொழிற்சாலையாக இருந்தது 1957க்கு பின்னர் 100 என்றும், 1968ல் 250 என்றும் வளர்ந்து, 1972ல் 1200 என உயர்கை யில் தமிழகத்திற்குள்ளிருந்து இடம்பெயர்வு அதிகமாகத்துவங்கியிருந்தது. இன்று, தமிழகத்தின் வட மற்றும் தென் மாவட்டங்கள் என அனைத்து பகுதிகளிலும் இருந்து வரும் இளைஞர்கள் மட்டுமல்லாது, இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் இருந்தும் இடம்பெயர்ந்து வரும் திருப்பூர் மிக வேகமாக வளர்ந்துவருகிறது. குறைந்த கூலித்தொழிலாளர்களாக சுரண்டப்படும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கை பல்வேறு சோகங்களையும், அதிர்ச்சிகளையும் உள்ளடக்கியதாகும். 2011ல் சென்னையில் மக்கள் தொகை 43,43,645. திருப்பூர் மாவட்டத்தில் 24,71,222 ஆக உள்ளது. இதில் 9,51,834 கிராமப்புறம் எனில் நகரத்திலோ 15,19,388, ஆகும்.அதிலும் திருப்பூர் எனக் கணக்கிட்டால் சுமார் 10 லட்சம் வரை இருக்கும். 1970ல் 2 லட்சமாக இருந்த மக்கள் தொகை, 1984ல் 4 லட்சம்,2002ல் 6.5 லட்சம், ஆனால் கடந்த 8 ஆண்டில் சுமார் 3.5 லட்சம் உயர்வு என இப்படி அசுரமென வளர்ந்து நிற்கையில் ஆபத்தும் அசுரத்தனமானதாகவே தெரிகிறது.

இக்கட்டுரைக்காக 10 குழுக்களாக 60 இளைஞர்கள் மூலம் தனிநபர்களிடத்தில் ஆய்வு செய்ததில் இருந்து கிடைத்துள்ள தகவல்களை தொகுத்துப் பார்த்தால் திருப்பூரின் வளர்ச்சி மக்களுக்கு இல்லையென தெரிகிறது. பல வட மாநிலங்களிலிருந்து வந்தவர்களிடத்தில் மட்டுமல்லாது, தமிழகத்தின் தென்மாவட்டம், வடமாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்களிடத்திலும் பெறப்பட்டுள்ள விபரங்கள் இந்தியாவின் சோகத்தை மையமாகக் கொண்டதாகும்.

25 வயது முதல் 40 வயதான இளைஞர்கள் தான் மிக அதிகமாக இடம்பெயர்ந்து வந்துள்ளனர்.ஒரளவு பள்ளிப்படிப்பை முடித்துள்ள இவர்களில் பெரும்பாலோனோர் 10வது வகுப்பு வரை படித்ததாகக் கூறுகையில், வறுமையும், அருகில் கல்லூரி இல்லாததும் கல்லூரிப் படிப்பை தடுத்ததாகக் கூறுகின்றனர். விவசாயம் சார்ந்த குடும்பங்களைச் சேர்ந்த மக்கள்தான் இடம்பெயர்ந்து வந்தவர்களில் அதிகமானோர். 90 சதத்துக்கும் அதிகமானோர் கூறுவது விவசாயத்தின் அழிவே. சொந்த நிலம் மற்றும் வீடு இரண்டும் கிராமத்தில் இருந்த போதும், விவசாயம் செய்யப் போதுமான பாசன வசதி, பயிர் விளைவிக்கும் வாய்ப்பு, விவசாய இடு பொருள்களின் விலை உயர்வு என தொடர் தாக்குதலால் பாதிப்புக்குள்ளானவர்கள் இறுதியில் தேர்ந்தெடுக்கும் ஒரே வாய்ப்பு ஊரைக் காலி செய்வது என்பதே பெருவாரியானவர்களின் கவலையாகும். இதற்கென ஊரில் ஏஜென்சி துவங்கி நடத்தி வருவோர், இடம் பெயரும் மக்களுக்கு ஏற்ற நகரமென பெரும்பாலும் உரைப்பது தமிழகமெனில், அதில் திருப்பூர் பிரதானமானதாகும். நாம் சந்தித்தவர்களில் 60 சதமானோர் சொந்த நிலமும், வீடும் தங்களது சொந்த ஊரில் உள்ளதாக கூறியுள்ளனர்.

கேம்ப் கூலி, சுமங்கலி என்ற சுரண்டல் திட்டங்கள் இடம் பெயர்ந்து வேலை தேடி வரும் ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திட்டங்களாகும். குறிப்பாக பெண் தொழிலாளர்கள் குடும்பத்துடன் இல்லாமல் தனியே இடம் பெயர்ந்து வருகையில், ஏஜென்சிகள் மூலம் சேர்க்கப்படும் திட்டம் சுமங்கலித்திட்டமே. இவர்களின் வாழ்நிலை கொத்தடிமை நிலையே. எவ்விதமான உரிமையும் இல்லாமல், மிக அதிக நேரம் வேலை வாங்கப்படும் இவர்களின் உடல்நிலையும், மனநிலையும் பாதிக்கப்பட்டு வருவதாக பல ஆய்வறிக்கைகள் வந்தபின்னும் அரசின் தலையீடு கேள்விக்குறியே.

ஆய்வில் ஊதியம் குறித்து கேட்டபோது, 5000 முதல் -8000 வரையான ஊதியம் மட்டுமே வாங்குவதாகக்கூறும் தொழிலாளர்கள், வீட்டிற்கு அனுப்புவது மிகச்சிரமமாக உள்ளதாகவே கூறுகின்றனர். வீட்டு வாடகை,உணவு இரண்டும் மிகுந்த செலவாகிறது.மருத்துவம் மற்றும் போக்குவரத்து ஆகியனவும் மிகுந்த செலவுள்ளதாக கூறும் இவர்கள், வீட்டிற்கு பணம் அனுப்பும் நோக்கம் பல மாதங்களில் நிறைவேறாதபோது சிரமப்படுவதாக கூறுகின்றனர். 12 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை வேலை என்ற பெயரில் சுரண்டப்படுவதால், 40 வயதிலேயே மிகவும் உடல்நிலை பாதிக்கப்படுவதாகவும் கூறும் இவர்கள் அப்போது வருமானம் மிகவும் குறைந்துவிடுவதாகவும் கவலைப்படுகின்றனர்.

இடம் பெயர்ந்து வரும் இத்தொழிலாளர்களில் 95 சதமானோர் எந்த சங்கத்திலும், அரசியல் கட்சியிலும் இல்லையென்றே கூறுகின்றனர். சேமிப்பு குறித்த கேள்விக்கு 80 சதமானோர் இல்லையென்றே பதில் தந்துள்ளனர்.மீதம் 20 சதமானோரில் 10 சதம் மட்டுமே சேமிப்புக் கணக்கு மூலம் சேமிப்பதாகவும், இதர பத்து சதம் கையிருப்பு மூலம் சேமிப்பதாகவும் கூறியுள்ளனர். இவர்கள் வாழும் பகுதிகளில் எந்தவிதமான அடிப்படை வசதியும் இல்லையென்று கூறும் இவர்கள், புறக்கணிக்கப்பட்ட பகுதியாகவே அவர்களின் வாழ்விடம் உள்ளதாக கருதுகின்றனர். குடிநீர் வசதி கூட உத்தரவாதப்படுத்தப்படாததால் சில நேரங்களில் அதற்கும் காசு செலவழிக்கும் நிலையை எண்ணி வருத்தப்படுகின்றனர். 80 சதமானோர் வருடத்திற்கு ஒரு முறை திருவிழாக்காலங்களில் மட்டும் ஊருக்கு சென்றுவருவதாக கூறுகின்றனர்.

10/11 அல்லது 10/16 என்ற அடிப்படையில் வாடகை வீட்டில் குடியிருப்பதாக கூறும் இவர்கள் தங்களது சொந்த மாநிலம் அல்லது மாவட்டத்துக்காரர் என்ற அடிப்படையில் தான் நண்பர்களை தேர்வு செய்துகொள்கின்றனர். திருப்திகரமான வாழ்வு குறித்த கேள்வியை கேட்கையில், சில நிமிடங்கள் தாமதமாகவே பதில் வருகிறது. சொந்த ஊர் நினைப்பு வந்து செல்லும் அந்நேரத்தில், ம், பரவாயில்லை என்று பதில் சொல்வோர் கூட 20 சதம் தான். இதரர் பதில் சொல்லவிரும்பவில்லை அல்லது உடனே சொல்லும் வார்த்தை இல்லை என்பதே உண்மை. ஆனால். சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல விரும்புகிறீர்களா என்ற கேள்விக்கு 90சதமானோர் ஆம் என்றே பதில் கூறியுள்ளனர்.

அரசு உங்கள் ஊருக்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்கையில் பலரின் பதிலும் விவசாயம் தான். விவசாயத்தை பொய்க்க வைத்து, விவசாயிகளை ஊர், ஊராக விரட்டும் வேலையை அரசு செய்கிறதோ என்று சந்தேகப்படும் அளவிற்கு இவர்களின் பதில் உள்ளது. கிராமங்களில் விவசாயம் மட்டுமல்லாது, விவசாயம் சார்ந்த தொழில்களையும் ஊக்குவிக்கவேண்டுமென்று கூறும் இவர்களின் எதிர்கால கனவில் சொந்த ஊர் தான் மையமாக இருக்கிறது. ஆனால், அங்கு பள்ளிக்கூடம், மருத்துவ வசதி, கல்லூரி வசதி என ஏதும் இல்லாத நிலையில் எப்படி வாழ்வது என கேட்கின்றனர். வளர்ந்துவரும் உலகத்தில் எவ்வித வளர்ச்சியும் கிராமங்களுக்கு செய்யப்படவில்லையெனில், நகரங்களை நோக்கி வருவதைத் தவிர வேறு வழியில்லையென்றே கூறுகின்றனர். இவ்வாழ்க்கை விரும்பி வந்ததல்ல என்றும், தொடர்வது உத்தரவாதம் அல்ல என்றும் கருதுகின்றனர். சொர்க்கமே என்றாலும் அது சொந்த ஊர் போல அல்ல என்று நம்மால் உணர முடிகிறது. அரசு உணருமா.?