பகீரத பிரயத்தனம் செய்து இந்திய மக்களின் உயிருக்கு விலை நிர்ணயித்து விட்டது காங்கிரஸ்  திமுக கூட்டணி அரசு. விலை அப்படியன்றும் அதிகமில்லை. வெறும் ரூ.1,500 கோடி மட்டுமே. கோடிக்கணக்கான அப்பாவி இந்தியர்கள் அணுஉலை விபத்து ஏற்பட்டு அழிந்து போனால் விசாரணையெல்லாம் முடிந்து சில பல ஆண்டுகள் கழித்து அவர்களது குடும்பத்தினருக்கு கிடைக்கப் போகிற இழப்பீடு இது.

இந்தியர்களின் உயிர் இவ்வளவு மலிவானதுதான் என்பதை உலகுக்கு உணர்த்தியதால் மன்மோகன்சிங்கிற்கு வாஷிங்டனில் பாராட்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது. இதற்காகத்தான் காத்திருந்தோம் இராஜகுமாரா என்று கைகொட்டி சிரிக்கும் மிகப்பெரும் அணுசக்தி கம்பெனிகளின் தலைவர்கள் இந்தியாவுக்கு படையெடுக்க தயாராகிவிட்டனர். இதற்கு முத்தாய்ப்பாக, ஜனாதிபதியே வருகிறார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வருகிறார். இந்தியா என்றும் எங்கள் பக்கமே என்ற பெருமித உணர்வை ஒபாமா அடைவதற்கான அனைத்து காரியங்களையும் வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டது மன்மோகன்சிங் அரசு.

அணு விபத்து பொறுப்பு மசோதா 2010ஐ மக்களவையில் ஆகஸ்ட் 25 புதனன்று நிறைவேற்றியதன் மூலம், 2005 ஜூலை 18ஆம் தேதி வாஷிங்டனில் டாக்டர் மன்மோகன்சிங்கும், அப்போதைய ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்சும் சந்தித்துக் கொண்டபோது, உருவான இந்திய  அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டின் மிக முக்கிய கட்டம் நிறைவு பெற்றுள்ளது.

இந்தியா  அமெரிக்கா இடையிலான அணுசக்தி உடன்பாட்டை செயல்படுத்துவதன் ஒரு பகுதியாக, அணு விபத்து பொறுப்பு மசோதாவை மன்மோகன்சிங் அரசு உருவாக்கியது. இந்த மசோதாவை அமெரிக்காவின் விருப்பங்களை பூர்த்தி செய்வதற்காகத்தான் கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டியபோது, சீறி பாய்ந்தார் நாடாளுமன்ற அலுவல் துறை அமைச்சர் பிருதிவி ராஜ் சவாண். பிரான்ஸ், ரஷ்யா போன்ற நாடுகளுடன் கூடத்தான் அணுசக்தி உடன்பாடு மேற்கொண்டுள்ளோம். எப்படி அமெரிக்காவின் நிர்ப்பந்தம் என சொல்கிறீர்கள் என்று அவர் கேட்டார்.

நாடாளுமன்றத்தில் இவர்கள் உண்மை பேசுவது அரிது. உண்மையில், அணுவிபத்து பொறுப்பு மசோதா உதயமானதே அமெரிக்க அமைச்சரின் மூளையில்தான். அணுசக்தி உடன்பாட்டை செயல்படுத்தும்போது அமெரிக்காவிலிருந்து ஏராளமான பன்னாட்டு அணுசக்தி கம்பெனிகள் இந்தியாவுக்கு வரும். அவர்களது அணுஉலைகள் இங்கு நிறுவப்படும். 40க்கும் மேற்பட்ட அணு உலைகள் அமைப்பதற்கான திட்டத்தை ஏற்கெனவே அவர்கள் தயாரித்துவிட்டார்கள். அப்படி வந்து, இந்தியாவில் அணு உலைகளை நிறுவிய பின்னர் எப்போதேனும் திடீரென விபத்து ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு? இந்த கேள்விக்கு விடை சொல்லியே ஆக வேண்டுமென இந்திய அரசுக்கு கிடுக்கிபிடி போட்டது அமெரிக்க வெள்ளை மாளிகை.

2008 செப்டம்பர் 10ஆம்தேதி வாஷிங்டன் சென்றிருந்த வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கரமேனனிடம் அமெரிக்க வெளியுறவுத்துறையின் துணை அமைச்சர்களில் ஒருவரான வில்லியம் பர்ன்ஸ் இந்தக் கேள்வியை கேட்டுக் கொண்டேயிருந்தார். விபத்து ஏற்பட்டால் நாங்கள் பொறுப்பில்லை என்று சொன்னால்தான் உங்களுக்கு அணு உலைகள் கிடைக்கும் என்று கிட்டத்தட்ட அவர் மிரட்டினார். ஒருவேளை, பொறுப்பேற்க வேண்டுமென்று சொன்னால், போனால்போகட்டும் என்று ஒரு சிறு தொகையை மட்டுமே கொடுப்பதற்கு சம்மதிக்கலாம் என அணுசக்தி கம்பெனி முதலாளிகள் வற்புறுத்துவதாக பர்ன்ஸ் சொன்னார். இதற்கு விடைகாண அமெரிக்காவின் வழிகாட்டுதலில் மன்மோகன்சிங் அரசு உருவாக்கிய இந்தியச் சட்டம்தான் அணு விபத்து பொறுப்பு மசோதா.

இந்த மசோதா, அணு உலையை நிறுவும் கம்பெனி, ஏதேனும் விபத்து ஏற்பட்டு பேரழிவு நேரிட்டால் ரூ.1500 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று வரையறை செய்துள்ளது. அதாவது 300 மில்லியன் டாலர்.

போபாலில் விஷவாயுக் கசிவால் சுமார் 25 ஆயிரம் பேர் பலியானார்கள். அவர்களது மரணத்திற்கு 25 ஆண்டு காலம் கழித்தும் கிடைத்த இழப்பீடு 470 மில்லியன் டாலர். போபாலில் நடந்தது அணு விபத்து அல்ல. வெறும் விஷவாயு கசிவே. விஷவாயு கசிந்ததற்கே 25 ஆயிரம் பேர் பலியென்றால், அணு விபத்து ஏற்பட்டால் எத்தனை பேர் என்பதை எளிதில் உணர முடியும். விஷவாயு கசிவு விபத்திற்கே 470 மில்லியன் டாலர் எனும்போது, அதைவிட மிகப் பெரும் அழிவு ஏற்படும்போது வெறும் 300 மில்லியன் டாலர் மட்டுமே இழப்பீடு என்று சட்டம் கொண்டு வந்திருக்கிறது அரசு. அதனால்தான் அமெரிக்க அணுசக்தி கம்பெனிகள் மன்மோகன்சிங்கை கொண்டாடுகின்றன.

முதலில், இந்த மசோதாவை முன்வைத்தபோது, இதைவிட கேவலமான ஒரு தொகையையே வெறும் ரூ.500 கோடி  இழப்பீடாக அரசு வரையறை செய்தது. இடதுசாரிக் கட்சிகள் கொந்தளித்தன. எதிர்க்கட்சிகளை அணிதிரட்டின. பிறகு இந்த மசோதா மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் ஆய்விற்கு அனுப்பப்பட்டது. அந்தக் குழு ஆய்வு செய்து, பல்வேறு முக்கிய திருத்தங்களை பரிந்துரை செய்தது. அணு உலையை இந்தியாவுக்கு சப்ளை செய்யும் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு கம்பெனிகள் எப்படிப்பட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், அவர்கள் அளிக்கும் அணு உலையில், அதற்கான சாதனங்களில் குறைபாடுகள் இருந்தால், அதன்மூலம் விபத்து ஏற்பட்டால் எப்படியெல்லாம் அவர்கள் பொறுப்பாக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது.

இடதுசாரிக் கட்சிகளும் பல்வேறு முக்கிய திருத்தங்களை முன்வைத்தன. குறிப்பாக, இழப்பீடு என்று வரும்போது, ரூ.15 ஆயிரம் கோடி நிர்ணயிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா திருத்தம் கொண்டு வந்தார். ஆனால் பாசுதேவ்வின் திருத்தம் மட்டுமல்ல, நாடாளுமன்றநிலைக் குழுவின் திருத்தங்களையே கூட புறந்தள்ளிவிட்டு, அமெரிக்க கம்பெனிகளுக்கு மேலும் சலுகை அளிக்கும் விதமாக தானே புதிய திருத்தங்களை செய்து நிறைவேற்ற முயன்றது அரசு.

ஆனால், முதலில் சமரசம் செய்து கொண்ட பாஜக, அணு உலையை நிறுவும் அமெரிக்கா உள்ளிட்ட அயல்நாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு தனியார் நிறுவனங்களும் 'உள்நோக்கத்துடன்' அணு உலை விபத்து ஏற்படுத்தியிருந்தால் மட்டுமே இழப்பீடு தர வேண்டும் என்று மன்மோகன் அரசு மசோதாவை புதிதாக திருத்தியதால் அதை எதிர்ப்பதாக அறிவித்தது. அணு விபத்து ஏற்பட்டு எல்லாம் அழிந்து போன பிறகு, அதில் உள்நோக்கம் இருந்ததா? இல்லையா? என்பதை எவராலும் கண்டுபிடிக்க முடியாது என்ற எண்ணமே, இப்படிப்பட்ட திருத்தத்தை  செய்வதற்கான அடிப்படைக்காரணம். இந்த திருத்தத்தோடு மசோதா நிறைவேற்றினால், அமெரிக்க கம்பெனிகள் எந்த பொறுப்பும் ஏற்காமல் மிக எளிதாக தப்பித்துவிட முடியும்.

இதை இடதுசாரிகள் கடுமையாக எதிர்த்தனர். பாஜகவும் எதிர்ப்பதாக அறிவித்தது. வேறு வழியின்றி அரசு இருதரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தியது. உள்நோக்கம் என்ற வார்த்தையுடன் கூடிய திருத்தத்தை கைவிடுவதாக மன்றாடியது. எனினும், இடதுசாரிகள் மசோதாவை உறுதிப்பட எதிர்த் தனர். மசோதா அப்பட்டமாக அமெரிக்க கம்பெனிகளுக்கு ஆதரவானது; இந்திய மக்களின் உயிருக்கு ஆபத்தானது என்பதை உரத்து முழங்கினர்.

எனினும், காங்கிரஸ், திமுக,  மம்தா கட்சியின் எம்.பி.க்கள் ஆதரவு மட்டுமல்லாமல், துவக்கத்தில் எதிர்ப்பதுபோல் நாடகமாடிய பாஜகட்சியும், இதர சில சுயேட்சைகளது ஆதரவுடன் மசோதா மக்களவையில் நிறைவேறிவிட்டது. இந்த மசோதா நிறைவேறிய தருணம் இந்திய மக்களின் உயிருக்கு விலையும் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது.