கோடம்பாக்கம் காய்கறி அங்காடி ஒன்றில் ஒரு பெண்ணின் அங்கலாய்ப்பு. "வெங்காயம் கிலோ ரூ. 30 க்கு வித்தா எப்படி குழம்பு வைக்கிறது... சட்டினி அரைக்கறது". காலை வாக்கிங்கில் இது காதில் விழுந்தது. வீட்டிற்கு வந்தவுடன் பேப்பர்காரர் வீசிவிட்டுப் போன ஆங்கில நாளிதழொன்றில் வந்திருந்த செய்தி கண்ணில் பட்டது.

நாசிக்கில் விவசாயிகள் பொறுமுகிறார்கள். அவர்களின் வெங்காயத்திற்கு கிலோவுக்கு ரூபாய் மூணோ, நாலோதான் கிடைக்கிறது" என்ற செய்திதான் அது. இது என்ன விசித்திரமான முரண்பாடு. பணவீக்கத்தின் இரகசியம் இதற்குள்தான் ஒளிந்திருக்கிறது.

இந்தியாவின் உணவுப்பொருள் விலைகள் 19.5 சதவீதம் உயர்ந்திருக்கிறது. 11 ஆண்டுகளில் இவ்வளவு பெரிய விலையேற்றம் நிகழ்ந்ததில்லை என்று பொருளாதார நாளிதழ்கள் தெரிவிக்கின்றன. அரிசி, பருப்பு, கோதுமை, பழம், பால், உருளைக்கிழங்கு என எல்லாப் பொருட்களின் விலைகளுமே ஓராண்டில் 10 சதவிதத்திலிருந்து 25 சதவீதம் வரை தாவியிருக்கின்றன. நாடாளுமன்றத்தில் நிதியமைச்சகத்தின் நிலைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே "இது எரிகிற பிரச்சினை" "அரசாங்கம் தலையிடத் தவறியிருக்கிறது" "சர்க்கரை விலை உயர்வு பற்றி விசாரணை தேவை" என விமர்சிக்கப்பட்டிருக்கிறது. எனவே இப் பணவீக்கம் வெறும் பொருளாதார நிகழ்வல்ல; இதற்குள் அரசியல், இலாபவெறி எல்லாமே இருக்கிறது என்பது வெளிப்படையானது.

சாப்பாட்டு ராமன்களா!

நாடாளுமன்றத்தில் பதிலளித்த நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இதற்கு தந்துள்ள விளக்கம் வேடிக்கையானது. நுகர் வோரின் சந்தை வருகை அத ிகரித்துள்ளதாலேயே இப் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். ஆனால் உண்மை என்ன? இந்தியக் குடிமகனின் சராசரி உணவு நுகர்வு 196 கிலோ கிராம் ஆகும். உலக சராசரியோ 337 கிலோ ஆகும். டெக்கான் கிரானிகள் (22.12.09) செய்திப்படி இந்தியச் சராசரி 150 கிலோவாக குறையுமென்பது மதிப்பீடு. ஆனால் பிரணாப் முகர்ஜியோ காலையில் எல்லோரும் கோணிப் பைகளைத் தூக்கிக் கொண்டு வெங்காயத்தையும், உருளைக்கிழங்கையும் வாரிக் கொண்டும், அண்டாவைக் கொண்டு போய் பால் லாரியில் பிடித்துக் கொண்டும் வருவது போல பேசியிருக்கிறார். இந்தியர்கள் சாப்பாட்டு இராமன்கள், அதனால்தான் விலையேறுகிறது என்று முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் சொன்னதற்கும், நமது மந்திரி சொல்வதற்கும் என்ன வித்தியாசம்?

அரசாங்கம் தலையிட்டால் விலைகளைக் கட்டுக்குள் வைக்க முடியுமென்பதற்கு உதாரணம் வேண்டுமா! புதுடெல்லி நாடாளுமன்ற வளாகத்திலுள்ள கேன்டீனுக்குச் சென்று பாருங்கள். ஒரு டீ விலை ஒரு ரூபாய்தான். நமது தமிழ் நாட்டின் குக்கிராமங்களில் கூட இன்றைக்கு ஒரு ரூபாய்க்கு டீ கிடைக்காது. மதியச் சாப்பாடு அங்கு ரூ. 12.50 தான். நான்கு சப்பாத்தி, சோறு, காய்கறி, தயிர் எல்லாம் உண்டு. மீன் கறியோடு சோறு ரூ.14 தான். காரணம் என்ன? அரசின் மானியம் ஆண்டுக்கு அஞ்சரைக் கோடி. இராகுல் காந்தியும், தயாநிதி மாறனும் ஒரு ரூபாய்க்கு சர்க்கரையோடு டீ சாப்பிடலாமென்றால் சாதாரண மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? இந்தியா முழுவதும் 3 வயதுக்கு குறைவான குழந்தைகளில் 46 சதவீதம் பேர் சத்துணவுக் குறைவால் வயதுக் கேற்ற வளர்ச்சியை அடைய வில்லை என்றால் எவ்வளவு கொடூரமான வன்முறை அது! நகரங்களில் வாழ்பவர்கள் ஒரு நாள் மூன்று வேளையும் சாப்பிடுவதற்கு குறைந்தபட்சம் நூறு ரூபாய் தேவைப் படுகிறதென்றால் சாமானிய மக்கள் என்ன செய்வார்கள்! "அதிகப் பணம் குறைவான பொருளைத் துரத்துவதே பணவீக்கம்" என்பது பொருளாதாரப் புத்தகங்களில் தரப்பட்டுள்ள விளக்கம். இவ்வளவு பணவீக்கம் அதிகரித்துள்ளதே! ஆனால் வருமானம் கூடியிருக்கிறதா? வேலைவாய்ப்பு பெருகியிருக்கிறதா? "அதீத ஊதியத்தீவுகளாகக்" கருதப்பட்ட கம்ப்யூட்டர் மென்பொருள் நிறுவனங்களில் கூட சம்பளம் அதிகரிக்கவில்லை. அண்மையில் ஸ்டேட் வங்கியில் 10,000 கிளார்க் நியமனங்களுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டதில் (?)வந்து குவிந்தவை 34 லட்சம். வேலையின்மை எவ்வளவு பெரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்பதற்கு இது ஒர் கண்ணாடி. அரசாங்கம் தனது "அவலட்சணமான முகத்தைப் பார்க்காமல் நுகர்வோர் துள்ளிக் குதித்துக் கடைகளுக்குப் போகிறார்கள் என கூறுவது அராஜகமல்லவா!

ஆ... ஊன்னா... வளர்ச்சியா!

மொத்த உள்நாட்டு உற்பத்தி செப் 2009ல் 7.9 சதவீதம் வளர்ந்திருப்பதை ஆட்சியாளர்கள் காண்பிக்கிறார்கள். என்ன வளர்ச்சி? உலகம் பூராவும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட கடந்த ஆண்டில் முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு ரூ2,19,000 கோடியிலிருந்து ரூ2,24,000 கோடியாக உயர்ந்திருக்கிறது. ஹீரோ ஹோண்டா அதிபர் பவன்குமார் முஞ்சாலின் சொத்து மதிப்பு ரூ4500 கோடியிலிருந்து ரூ7800 கோடிக்கு ஜம்ப் ஆகியிருக்கிறது. இந்த இரண்டு பேரின் சொத்து மதிப்பு உயர்வை மட்டும் இவர்களின் வருமானமாகக் கொண்டு சராசரிக் கணக்கு போட்டாலே 110 கோடி மக்களுக்கும் 75 ரூபாய் சராசரி வருமானம் கூடியிருப்பதாக புள்ளி விவரம் வந்துவிடும். எவனோ தின்பதற்கு எவன் கணக்கிலேயோ எழுதுகிற கதைதான்.

விலைவாசி உயர்வுக்குப் பதில் அளிக்கும் போது பிரணாப் முகர்ஜி பொது விநியோகத்தைப் பலப் படுத்துவது பற்றி வாயே திறக்கவில்லை. 1991ல் அரசின் உணவுக் கிடங்குகளில் 19.13 மில்லியன் டன் தானியங்கள் இருந்தன. 2008ல் எவ்வளவு இருந்தது தெரியுமா? 19.18 மில்லியன் டன்கள்தான். காரணம் என்ன? அரசு கொள்முதல் குறைந்ததுதான். 18 ஆண்டுகளில் மக்கள் தொகை எவ்வளவு கூடியிருக்கிறது! ஆனால் தனியார் கொள்முதலை ஊக்குவித்ததால் விலைக் கட்டுப்பாடு என்ற குச்சி கை நழுவிப் போயிருக்கிறது. நம்ம ஊர் கோதுமையே ஏற்றுமதியாகி பிறகு வெளி நாடுகளிலிருந்து அதிக விலைக்கு இறக்குமதியான அவலத்தைப் பார்த்தோம். "எல்லோருக்குமான பொது விநியோகம்" என்ற கோரிக்கை காலத்தின் தேவையாக இருக்கிறது. இப்போது இருக்கிற "வரையறுக்கப்பட்ட பொது விநியோகம்" முறையை மேலும் மத்திய அரசு இறுக்கினால் தமிழகத்தின் ரேசன் விநியோகத்திற்கே ஆபத்து காத்திருக்கிறது. அப்போதும் கலைஞர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவார், கொஞ்சமும் நோகாத அஸ்திரத்தையல்லவா கண்டு பிடித்துள்ளார்! பெட்ரோல், டீசல் விலை உயர்வு பூச்சாண்டியை மீண்டும் ஆரம்பித்து விட்டார்கள். விலைகளைக் காட்டிலும் வரிகள் அதிகமாக இருப்பதை பெரிய போர்வையைப் போட்டு மறைக்கிறார்கள். கேட்டால் அரசிற்கு வருமானம் வேண்டாமா? என்கிறார்கள் ஸ்விஸ் வங்கியிலுள்ள 60,000 கோடி ரூபாய் கறுப்புப் பணத்திற்கான விவரங்களைக் கேட்டால் அவர்கள் தரவேண்டுமென்ற நிலை உள்ளது. ஒரு சில மைத்துளிகள், அரை பக்க வெள்ளை பேப்பரைச் செலவழித்தால் வெளிவரக் கூடிய 60,000 கோடிகளைப் பற்றி சோனியாவும் பேச மறுக்கிறார்.

தேர்தலுக்கு முன்பாக கடப்பாரையோடு கிளம்பிய அத்வானியும் இப்போது தோண்டாமல் கைகட்டி நிற்கிறார். பங்குச் சந்தை நடவடிக்கை வரி போன்ற இடதுசாரிகளின் மாற்று ஆலோசனைகளையும் பரிசீலிக்க மறுக்கிறார்கள். ஆகவே காசு வேண்டுமென்பதல்ல பிரச்சினை. யாரிடமிருந்து என்பதே கேள்வி. பாஸ் . . . பாஸ் . . . நாசிக் விவசாயியின் பொறுமலை ஆரம்பத்திலேயே சொல்லி இருந்தோம். மூன்று ரூபாய்க்கு விவசாயியிடம் வாங்குகிற வெங்காயம் முப்பது ரூபாய்க்கு விற்கப்படுகிற மந்திரம் என்ன? இடைத்தரகர்கள் அடிக்கிற கொள்ளைதான் இது. இக்கொள்ளையை ஒழிப்பதற்கு அரசிடம் என்ன திட்டம் உள்ளது? சட்ட விரோதச் செயலை ஒழிப்பதற்கு மன்மோகன் சிங்கிடம் ஒரு அபாரமான தீர்வு இருக்கிறது. என்ன தெரியுமா? அதையே சட்டபூர்வமாக்கி விடுவதுதான். அதுதான் "முன்பேர வர்த்தகம்". அது நவீன பதுக்கல். உணவு தானியங்கள் அதன் உற்பத்தி மதிப்பைக் காட்டிலும் 150 மடங்கு விற்பனைக்கு ஆளாகின்றனவாம். நடுவிலே ஒரு ஆளை விட்டு பந்து அவன் கைக்கு கிடைக்காமல் பாஸ் பண்ணி விளையாடுவார்கள். இப்போது இந்திய மக்களை நடுத்தெருவிலே விட்டுவிட்டு அவனுடைய நுகர்வுக்கு உணவு தானியங்கள் கிடைக்காமல் யூக வணிகர்கள் பாஸ் பண்ணி விளையாடுவதுதான் முன்பேர வர்த்தகம். அத்தியாவசியப் பொருட்களையாவது யூக வணிகத்தில் ஈடுபடுத்த வேண்டாமென்ற இடதுசாரிகளின் ஆலோசனைகள் காற்றில் பறக்கவிடப்படுகின்றன.

உணவு உற்பத்தி பற்றிய அபாயச் சங்குகள் ஆட்சியாளர்கள் காதுகளில் விழுவதேயில்லை. மக்கள் தொகை 3 சதவீதம் என்ற அளவில் உயர்கிறபோது உணவு தானிய உற்பத்தி 1.6 சதவீதம் தான் உயர்கிறது. காரணம் என்ன? உணவு தானியங்களை விடுத்து பணப்பயிர்களை நோக்கிய நகர்வு விவசாயத்தில் உள்ளது. பெப்சி என்றவுடன் எல்லோருக்கும் நுரை வழிகிற குளிர்பானமே நினைவுக்கு வருகிறது. ஆனால் பெப்சியின் வருமானத்தில் 50 சதவீதம் உருளைக் கிழங்குகள் மூலமாகவே கிடைக்கிறது. லேஸ், குர்குரே போன்ற சிப்ஸ்களை தயாரிக்க வடமாநில உருளைக் கிழங்கு விளைச்சலை பெப்சி வளைத்துப் போட்டிருக்கிறது. இப்படி விவசாயம் நிறுவனமயமாகும் போது உணவாவது! பாதுகாப்பாவது! 2009 ல் அரிசி விளைச்சல் 19 சதவீதம் சரிவுக்கு ஆளாகுமாம். இது தவிர கண்மூடித்தனமான வர்த்தகம். 2007_08இல் 5 மில்லியன் டன் சர்க்கரை ஏற்றுமதியாகியது. 2009ல் இறக்குமதியைப் பற்றிப் பேசுகிறார்கள். எல்லாம் வியாபாரம்! எல்லாம் இலாபம்! இதையெல்லாம் விவாதத்திற்கு ஆளாக்காமல், மாற்றங்களைக் கொண்டு வராமல், அரசின் தலையீட்டை உறுதி செய்யாமல் மக்களின் பிரச்சினைகளுக்கு விடிவு இல்லை. விலைவாசி உயர்வுக்கும் கடிவாளம் இல்லை. எனவே பணவீக்கமென்பது தானாக நிகழ்வதல்ல. அது சூழ்ச்சி. சாமானிய மனிதனின் சட்டைப்பையிலிருந்து பறித்து அம்பானிகளின் கல்லாக்களை நிரப்புகிற வித்தை.

இப்படிப்பட்ட அடிப்படை மாற்றங்களை விட்டு விட்டு ஆட்சியாளர்கள் செய்வது என்ன?

இராகுல் காந்தி இரயிலில் பயணம் செய்கிறார். சிக்கனத்தை உபதேசிக்கிறார். கலைஞர் பேனாவை எடுத்து மத்திய அரசுக்கு கடிதம் தீட்டுகிறார்.

போகாத ஊர்... தவறான முகவரி...

- .சுவாமிநாதன் 

Pin It