லலித் மோடி, மருத்துவர் கேதன் தேசாய், உலகத்தர கிரிக்கெட் வீரர்கள் எல்லாம் கனமான பெயர்களாக மாறிக்கொண்டு வருகிறது. படிக்கிற நமக்கு லேசான மயக்கமும் அயற்சியும் தொற்றிக்கொள்கிற அளவு தொகை லஞ்சமாகப்பரிமாறப்பட்டிருக்கிறது. ஒன்னரை டன் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது என்று படித்தால் நம்ப முடியவில்லை. ஒரே ஒரு கிராம் தங்கம் நேற்றைய நிலவரப்படி கிடத்தட்ட1600 ரூபாய் இருக்கலாம். நகை மட்டும் அவ்வளவு. ரொக்கப்பணம் திருப்பதி உண்டியலில் பணம் எண்ணுகிற மாதிரி வங்கிப் பிரதிநிதிகள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், நீதிபதிகள் முன்னிலையில் லஞ்சப்பணம் கணக்குப் பார்க்கப்பட்டிருக்கிறது.

இவர் ஏற்கனவே 1992 ஆம் ஆண்டு இதே குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டு பதவி இறக்கப்பட்டிருக்கிறார். ஆனால் இந்தியாவின் துரதிஷ்டம் மீண்டும் அதே பதவிக்கு வந்து இந்த முறை சலிக்கச் சலிக்க லஞ்சம் வாங்கியிருக்கிறார்.

எவ்வளவு புனிதமான சட்டங்கள் கொண்டுவந்தாலும் அமல்படுத்துகிற அதிகார வர்க்கம் மொள்ளமாரியாக இருந் தால் சட்டம் கேலிக்கூத்தானதாகிவிடும் என்று பாதுகாப்புத் துறை உயர்மட்ட ஆலோசகர் சொன்ன வார்த்தை மிகுந்த அர்த்தமுள்ளதாகிறது. இவ்வளவு தொகையும் எதற்காகப் பெறப் பட்டிருக்கிறது என்பதில்தான் மிகப்பெரும் சூட்சுமமே இருக்கிறது. மருத்துவத்தை, அந்த உயிர்காக்கும் துறையை மெல்ல மெல்ல தனியாருக்கு சுருட்டிக் கொடுத்ததற்கு கிடைத்த சன்மானம் தான் கேதன் தேசாய் வீட்டில் சுருண்டுகிடக்கும் இந்தியக் கஜானா.

ஒரு மருத்துவக்கல்லூரி சீட்டுக்கு குறைந்த பட்சம் இருபது லட்சம் கட்டணமாக வசூலிக்கிற நிர்வாகங்களை சிவப்புக் கம்பளத்தோடு அங்கீகரிக்க கிடைக்கும் கையூட்டுத்தான் இப்படி மலைபோலக் குவிந்துகிடக்கிறது. அங்கு படித்து வெளியேறுகிற மருத்துவர்களிடம் இந்த தேசம் என்ன எதிர்பார்க்க முடியும் ?. கோடிக்கணக்கில் வங்கிக்கடன் வாங்கி அண்ணாந்து பார்க்கிற மருத்துவமனை கட்டி முடிக்கிற மருத்துவர்களிடம் எப்படி சேவையை எதிர்பார்க்கமுடியும்?. தொலைத்த விலாசம் தேடி இரண்டு மூன்று முறை அந்தப்பக்கமாக பிராக்குப் பார்த்துக்கொண்டு நடந்து போனாலும்கூட இழுத்துப் பிடித்து எல்லாச் சோதனைகளையும் நடத்திவிடுகிற அளவுக்கு மருத்துவ மனைகள் தரமிழந்துபோய்விட்டது. இப்போது கேஏஎஸ் சேகர் லாட்டரி விற்பனை செய்கிறமாதிரி ‘’அண்ணே உள்ள வாங் கண்ணே நம்ம ...ஆஸ்பத்திரி தாண்ணே’’ என்று கையைப் பிடித்து இழுக்காத குறையாக விளம்பரங்கள் போட்டிபோடுகின்றன.

சமீபத்தில் ஒரு சுகாதார அமைச்சர் இலாகா மாற்றப்பட்டார். அங்கு விளையாடும் லஞ்சப்பணம்தான் என்பது செய்திகளில் வராத சேதி. அரசு மருத்துவமனைகளில் உபயோகப்படுத்தும் காலி குளுகோஸ் பாட்டில்கள் கைமாறுவதில் சதவீதம் வைத்தாலே போதும், தினம் கோடி கோடியாய் வருமானம் கொழிக்கு மாம். காலி பாட்டில்களுக்கே இப்படியென்றால் இன்னும்,  மருந்து,  சாப்பாடு, கட்டடம்,  மருத்துவக்கல்லூரி, மருத்துவர் நியமனம், மாறுதல்கள் என்று நீண்டுகொண்டு போகும் பட்டியல்களைக் கணக்குப் போட்டால் கிறுகிறுத்துக் கீழே விழவேண்டியது தான். ஆனால் எந்த பொது மருத்துவமனைக்குப் போனாலும் மருந்தில்லை, டாக்டரில்லை, நிதியில்லை என்கிற இல்லைகள் மட்டுமே பதிலாய் வரும்.

பொது மருத்துவமனைகள் எல்லாம் சாக்கடை சூழ்ந்து நாறிக்கிடக்க அங்கு பணிபுரியும் மருத்துவர்களும், உயர் அதிகாரிகளும் சுகாதாரமான பங்களாக்களுக்குள் ஓடோனில் மணத்தில் மிதக்கிறார்கள். அந்த வீடுகளில் தோண்டத் தோண்ட நாறும் மலக்கிடங்கை ஒளித்து வைத்திருப்பதுதான் இந்த அமைப்பின் மூலம் குற்றவாளிகளுக்கு கிடைக்கிற மிகப்பெரிய பலம், பொது மக்களுக்குக் கிடைக்கிற ஆகப் பள்ளமான பலகீனம். நாள்முழுக்க கால்கடுக்க காத்திருந்து மருத்துவரைப் பார்த்து ஊசி போட்டு விட்டு மாத்திரைக்காக வெளியே கடைக்குப்போகும் ஏழை வியாதியஸ்தர்களிடம் இது பற்றிப் பேச என்ன வாய்ப்பு இருக்கிறது. அவர்களுக்கு புரிகிற மொழியில் சொல்ல கிடைத்திருக்கும் ஒரே வழி ஊடகங்கள் தான். அரசின் பொதுத் தொலைக்காட்சியிலும் சரி ஆட்சியாளர்களே நடத்தும் தனியார் தொலைக்காட்சியிலும் சரி இந்த சேதிகள் வெளிவர ஸ்பான்சர் கிடைக்காது எவனாது கொள்ளிக்கட்டையை எடுத்து தன் தலையிலே வைத்துக்கொள்வானா ?.

கிரெம்ளின் மாளிகை கதிகலங்கி நின்றபோது சோவியத் ருஸ்ஸியாவின் சிகப்பு வரைபடத்தையும், அரிவாள் சுத்தி யலையும் காண்பித்து அதை கிராபிக்ஸில் சுக்குநூறாக உடைத்து விட்டு பிராணாய் ராயின் தாடிக்குள்ளிருந்துஒரு குரூரச்சிரிப்பு வெளிவரும். அதைத்தொடர்ந்து வரும் தகவல்களும் செய்திகளும், அலசல்களும், வல்லுநர் கருத்துக்களுமாக அப்பப்பா எவ்வளவு கொந்தளிப்போடு கிடந்தது அப்போதைய ஊடகங்கள்.அந்த ஊடகங்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றன. மீண்டும் விதர்பா மாவட்டத்து நிலங்கள் பிளந்து அதை நம்பிக்கிடந்த விவசாயிகளின் உயிரை உள்ளே இழுத்துக்கொண்டிருக்கிறது. தினம் இருபது ரூபாய் செலவு செய்து வயிறு நிரப்பமுடியாத இந்தியர்கள் அறுபது கோடிக்கு மேலாக உயர்ந்துகொண்டிருக்க சென்ற ஆண்டு 32 பேராக இருந்த இந்தியாவின் உலகக் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 64 ஆக உயர்ந்திருக்கிறது. இரண்டு பேருக்கும் இந்தியர் என்கிற ஒரே பட்டமா?

Pin It