கிறுக்குத்தனம் என்று தான் எல்லோரும் பேசி கொண்டார்கள்.   

அவர்கள் வாழ்ந்த பகுதியிலேயே கல்லூரி சென்று பட்டம் பெற்ற முதல் பெண், வரக்கூடிய பொன்னான வாழ்வை உதறிவிட்டு சொந்தமாக சம்பாத்தியமோ இருப்பிடமோ இல்லாத ஊர் ஊராகச் சுற்றும் ஒரு காந்திய வழியிலான லட்சியவாதியைத் திருமணம் செய்து கொள்வதைப் பற்றி பலரும் அப்படித்தான் பேசியிருப்பார்கள். ஆனால் கிருஷ்ணம்மாள் நன்கு யோசித்துத்தான் அந்த முடிவை எடுத்தார்கள். தன் குடிகார அப்பா மிகக் கொடுமையாகத் தன் தாயை நடத்தியதையும் இளம் வயதிலேயே விதவை ஆகிவிட்ட தாய் அரும்பாடுபட்டு பிள்ளைகளை ஆளாக்கியதையும் கண்கூடாகப் பார்த்தவர் திருமணம் என்ற ஒன்றே தேவையில்லை என்று தான் வைராக்கியமாக இருந்தார். ஜெகந்நாதனின் பண்பு அந்த வைராக்கியத்தை அசைத்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

ஜெகந்நாதனும் சமூக சேவையால் காலத்தைக் கழித்து முடிவு செய்தவர் தான்.ஆனால் அவ்வாறு வாழ்பவர்கள் சிலர் கட்டுப்பாடில்லாமல் தாந்தோன்றித் தனமாகச் சீரழிந்ததைப் பார்க்க நேர்கையில் சரியான இல்லறத்துணை அவசியம் என முடிவு எடுத்த போது கண்ணில் பட்டவர் கிருஷ்ணம்மாள்.

கையிலோ காதிலோ கழுத்திலோ ஏன் மூக்குத்தி என்ற பெயரில் சிறு பொட்டு கூடத் தங்கம் அணியாத அந்த எளிமையான சேவை மனப்பான்மை கொண்ட பெண்ணை பார்த்தவுடன் செய்த தீர்மானம் அது. இயற்கை எவ்வாறு பொருத்தமான ஜோடிகளைச் சேர்த்து வைக்கிறது என வியக்காமல் இருக்க முடிய வில்லை. திருமணம் முடிந்த நாளில் இருந்து சமூகத் தொண்டே முதன்மையான இல்லறப் பணி என்று வாழ்ந்த அதிசய தம்பதிகள் இவர்கள்.   

தொடக்க கால திருமண வாழ்வும் சேர்ந்து இருந்து நடக்கவில்லை. திருமணமான இரண்டாம் நாளிலேயே சமூக தொண்டே பிரதானம் எனக் கிளம்பி போய்விடுகிறார் ஜெகந்நாதன். கிருஷ்ணம்மாள் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து பயிலத் தொடங்கினார். சேர்ந்து வாழ முடியவில்லையே என்ற ஏக்கத்தை கடிதங்கள் மூலம் வெளிப்படுத்தினாலும் தீர்வு ஒன்றும் கிடைத்தபாடில்லை. ஆனால் வினோபாபாவேயின் பூதான் இயக்கம் மூலமாக அதற்கு வழி பிறந்தது.   

வினோபா காந்தியடிகளால் மிகவும் மதிக்கப் பட்ட ஒரு தலைவர். நாடு சுதந்திரம் அடந்த பின் இந்த நிலம் எல்லோருக்கும் பொதுவானது அதை பகிர்ந்து கொடுத்து வாழ்வதே ஒரு சமூகம் உய்யச் சிறந்த வழி என்ற உயரிய நோக்கோடு பூதான் இயக்கத்தை ஆரம்பித்தார்.உலகமே மிக வியப்போடு திரும்பி பார்த்த உதாரணமான திட்டம் அது. ஜெகந்நாதன் இந்த இயக்கத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்டு வினோபாவேயின் அணுக்கத் தொண்டராக நாடும் முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டார். இந்த பாத யாத்திரையில் கிருஷ்ணம்மாள் கலந்து கொள்வதே அவர்கள் சேர்ந்து வாழ ஒரே வழி கிருஷ்ணம்மாள் முழு மனதோடு அந்த முடிவுக்குச் சம்மதித்தார்.   

‘சமூக சேவைதான் எங்கள் லட்சியமாக இருந்தது என்பதால் மற்ற பெண்களைப் போன்ற வாழ்க்கையை எதிர்பார்க்கவில்லை தான்.ஆனால் எனது சமூக சேவை என்பதை ஒரிடத்தில் இருந்த ஏரி போல், மரம் போல பணியாற்றுவது என்பதாக இருந்தது.ஆனால் அவரோ காற்று போல் கதிரவன் ஒளி, ஆறு போல் நகர்ந்து கொண்டே இருப்பவராக இருந்தார். ஆறாக ஓடுவது நீருக்கு உகந்ததுதானே? நான் ஆறானேன்’எனச் சொல்லிய கிருஷ்ணம்மாள் மிக எளிதாக இயல்பாக அந்த வாழ்க்கைக்கு தன்னைத் தயார் படித்திக் கொண்டுவிட்டார்.   

வினோபாவாவின் நடைப்பயணம் எளிதன்று சூரியன் உதிக்கும் முன்பே தொடங்கிவிடும். நடை இரவுதான் ஓரிடத்தில் நிலை பெறும். நடுவில் எங்காவது கால் மணி நேரம் ஆசுவாசப்படுத்திக் கொள்வதைத் தவிர வினோப ஓய்வு எடுத்து கொள்ள மாட்டார்.கூட வரும் தொண்டர்களும் அவ்வாறே நடப்பார்கள். அந்த வகையில் கிருஷ்ணம்மாள் கால் நடையாகவே இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டிருக்கிறார். முதல் மகன் பூமிகுமார் பிறப்பதற்கு முதல் வரையும்கூட நடைப்பயணத்தை நிறுத்தவில்லை. பூதான் இயக்கத்தில் பணியாற்ற ஜெகந்நாதன் பிறகு வடநாடு சென்று விட தமிழக பகுதியில் சேவை செய்ய கிருஷ்ணம்மாள் வந்து விடுகிறார்.   

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளில் கை குழந்தையுடன் கையாள் சுமந்தபடி கிராமம் கிராமமாக நடைப்பயணம் செய்து பூதான் இயக் கத்துக்காக பாடுப்பட்ட கிருஷ்ணம்மாளின் உழைப்பு அசாத்தியமானது ‘ தமிழ்நாட்டில் என் குழந்தைகளின் தொட்டில் தொங்கிவிடப்படாத மரங்கள் கிடையாது. என் குழந்தைகள் பாராத கிராமம் கிடையாது’ என அவர் அடிக்கடி சொல்வதுண்டு.   

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தம்பதியினருக்கு பூமிகுமார் என்ற மகனும் சத்யா என்ற மகளும் உண்டு. இருவருமே இப்போது மருத்துவர்களாக பணி புரிகிறார்கள். எவ்வளவு போரட்டக் காலத்திலும் குழந்தைகளுக்கான கல்வி என்ற முக்கியமான அம்சத்தைக் கிருஷ்ணம்மாள் மறக்கவே இல்லை. எங்கெல்லாம் சென்று போராட்டம் நடத்துகிறார்களோ அங்கிருந்த பள்ளிக்கூடங்களில் குழந்தைகள் ஆரம்பக் கல்வி பயின்றார்கள். தற்காலிகமாக அமைக்கப்பட்ட டெண்ட் கொட்டகைகள் தான் குடியிருப்பு போராட்டக் காலத்தில் அடிக்கடி இடம் மாற வேண்டியிருக்கும் என்பதால் பாத்திரபண்டங்கள் கூட சேர்த்து வைத்ததில்லை. மண்பாண்டங்களில் தான் சமையல். சுமந்து செல்லும் படியாக எப்போதும் எதுவும் இருந்ததில்லை. கட்டி யிருக்கும் புடவையோடு கூட ஒரு மாற்று கதர்ப் புடவை. ஜெகந்நாதனிடம் இரண்டு கதர் வேட்டி சட்டைகள், படிக்க பகவத்கீதை காணும் பொருட்களை எல்லாம் வாங்கிவிடத் துடிக்கும் நுகர்வுக் கலாச்சாரத்தில் உச்சியில் உறையும் உலகத்தில் இம்மாதிரியானவர்கள் கூட ஆச்சரிய மளிப்பவர்கள் தான்.   

தமிழ்நாட்டில் பணி சிறப்பாக நடந்து வந்த போது பீகாரில் இவர்களின் ஒத்துழைப்புக்கு அழைப்பு வந்தது மிகப் பின்தங்கிய அந்த குடிசைப் பகுதிகளில் வாழவே தகுதியற்ற அத்தகைய இடத்தில் அம்மக்களோடு மக்களாக வாழ்ந் திருக்கிறார் கிருஷ்ணம்மாள். அவ்வாறு தங்கி னால் தான் போராட்டத்திற்கு அம்மக்களின் ஆதரவைப் பெறுவதும் அவர்களைப் போராட்டத்திற்குத் திரட்டுவதும் எளிதாகும் என்பதை அவர் கருத்து ஒரு பெரிய சக்தி வாய்ந்த மடாலயத்துக்கு எதிராகப் போராடி நிலங்களை பங்கிட்டுக் கொடுக்கக் செய்திருக்கிறார். இதற்கிடையே மிகக் கொடுமையான சிறைவாசம்.   

கடுமையான தலைமறைவு வாழ்க்கை எனத் துன்பமயமான போராட்ட காலம். ஆனால் இந்த அனுபவங்கள் மேலும் மேலும் போராட வேண்டிய உத்வேகத்தைத் தான் அளித்தனவே தவிர துவண்டு போகச் செய்யவில்லை. காரணம் அவர்கள் பின் பற்றியது ஆன்ம வலிமையை அடிப்படையாகக் கொண்ட காந்திய வழியிலான போராட்டமுறை.  

சர்வோதய இயக்கத்தின் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக வெளியே வந்துவிட்ட இத்தம்பதியினர் land for tillers (LAFIT) என்ற அமைப்பைத் தொடங்கினர். நிலமற்ற ஏழை மக்களுக்கு அரசிடமும் நில உரிமையாளர்களிடமும் போராடிப் பெற்று அதை நிலமற்ற ஏழை மக்களுக்குப் பிரித்துக் கொடுப்பதே இந்த அமைப்பின் முக்கிய பணி.   

அதோடு நின்று விடாமல் இந்த நிலத்தை அவர்கள் தொடர்ந்து மேற்கொள்ளப் போகும் நடவடிக்கைகளுப் பக்க பலமாக இருந்து உதவி செய்வதே இந்த அமைப்பின் நோக்கம்.அதன் மூலம் ஒவ்வொரு கிராமத்தையும் தன்னிறைவு பெற்ற கிராமாக மாற்ற முடியும் என்பதே இந்த அமைப்பின் நம்பிக்கை. அதோடு கிராம சபை ஒன்றையும் உருவாக்கி கிராமத்தில் அனைத்து தரப்பினரையும் அதில் பங்கு கொள்ளச் செய்தனர். கிராம சபைகள் அனைத்தும் பணியாற்றும்போது அம்மக்கள் இவர்களிடம் காட்டிய பிரச்சனையே இறால் பண்ணைகளுக்கு எதிரான போராட்டம்.   

இறால் பண்ணைகள் விவசாய நிலங்களைப் பெருமளவு பாதிக்கக்கூடியவை. ஏக்கர் கணக்கு களில் இறால் பண்ணைகள் நிறுவப் பட்டால் மீண்டும் அந்த நிலத்தை ஒரு போதும் விவசாயத் துக்கு பயன்படுத்த முடியாது இறால் பண்ணை களில் நீர் மாற்றும் போது முதலில் பயன்படுத்திய கழிவு நீரைக் கடலிலே கலந்து விடுவதால் கடல் மீன்களும் பாதிக்கப்படுகின்றது .

எனவே இறால் பண்ணைகள் மண் வளம் கடல் வளம் இரண் டையும் ஒருசேர பாதிக்கின்றன. ஒரு விவசாய நிலத்தில் பத்து பேருக்கு வேலை உண்டு என்றால், இறால் பண்ணையிலோ இரண்டு அல்லது மூன்று பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு. எல்லா வகையிலும் இறால் பண்ணைகள் மக்களுக்கு எதிரானவையே. இவற்றுக்கு எதிரான கவனத்தை ஈர்க்கும் படியாக போராட்டத்தை கிருஷ்ணம் மாள் தம்பதியினர் முன்னின்று நடத்தினர்.   

சர்வதேச அரங்கில் இந்தியாவின் ஜோன் ஆப் ஆர்க் என்ற பட்டம், இந்திய அரசின் பத்மஸ்ரீ பட்டம் Right for lively hood என்ற உயரிய பட்டம் போன்ற பல்வேறு கொளரவங்களைப் பெற்ற கிருஷ்ணம்மாள், ’நான் பெரிதாக புரட்சி செய்து விட்டேன் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் அடர்ந்து பரவியிருந்த இந்த இருளில் நான் சில விளக்குகளையாவது ஏற்றியிருக்கிறேன் என்று வேண்டுமானால் சொல்ல லாம்’ என அடக்கத்தோடு சொல்லியிருக்கிறார்.   

கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதியன்று ஜெகந்நாதன் இயற்கை எய்தினார். வாழ்க்கை முழுக்க போராட்டக் களத்திலேயே அவருடன் கழித்த கிருக்ஷ்ணம்மாள் தன் கையாலேயே நெய்து அவர் அளித்த கதர்ப் புடவைதான் தங்கள் திருமணத்திற்காக அவர் அளித்த பரிசு, அதோடு அந்தப் போராட்டம் தொடங்கும் என நெகிழ் வோடு நினைவு தொடர்கிறார்.   

கவிஞர் தேவதேவனின் “யாரோ எங்கோ விதைத்துக் கொண்டிருக்கிறார்கள்”என்ற கவிதை வரி நினைவுக்கு வருகிறது. யார் யாரோ முயன்று விதைப்பதைத் தான் நாம் அறுவடை செய்து கொள்கிறோம். விதைத்த கைகளுக்கு நன்றி!

Pin It

இரண்டு ரூபாய்க்குக் கிடைக்கும் புளிப்பு மிட்டாய்களை நியாயமாகப் பங்கிட்டுக் கொள்வதன் மூலம், 10 பேரின் பசியை போக்கிக் கொள்ளும் கலையில் இந்தப் பெண்கள் கைதேர்ந்த நிபுணர்களாகி விட்டார்கள். நாகப்பட்டினம் மாவட்டம் வெங்கிடங்கால் பஞ்சாயத்தில் உள்ள வெங்கிடங்கால், செம்பியநேரி கிராமங்களைச் சேர்ந்த இந்தப் பெண்கள், சுற்றியுள்ள பஞ்சாயத்துகளில் வயல் வேலை செய்த பிறகு தங்களுக்குக் கிடைக்கும் சொற்ப வருவாயை, நியாயமாகப் பகிர்ந்து கொள்ளும் முறை இது.

கீழ்வேளூர் பஞ்சாயத்து யூனியனின் கீழ் வரும் வெங்கிடங்கால் கிராம பஞ்சாயத்தில் கண்மூடித்தனமான மணல் கொள்ளை மற்றும் சாகுபடி பரப்பு குறைந்து வருவதால் வயல்வெளிகள் வேகமாக அழிந்து வரும் நிலையில், பெருமளவு உழைக்கும் பெண்கள் மேற்கண்ட முறையில்தான் தங்களுடைய வேலையிழப்பை சமாளிக்கிறார்கள்.   

ஒரு காலத்தில் பச்சைப் பசேல் என்றிருந்த வயல்வெளிகளுக்குப் பதிலாக பச்சைக் குன்றுகளும், வெற்றுக் குழிகளும்தான் இப்போது காணக் கிடைக்கின்றன. இந்தப் பஞ்சாயத்தில் பெருமளவில் உள்ள ஆதிதிராவிட இன மக்கள், நஷ்டத்தைச் சந்தித்ததால் விவசாயத்தை கைவிட்டு, விவசாயக் கூலிகளாக மாறி வருகிறார்கள். சாகுபடி செய்வதால் எந்தப் பலனும் கிடைப்பதில்லை என்பதால், இப்போது நிலங்களை வைத்திருக்கும் பெரும்பாலான உரிமையாளர்கள் தங்கள் நிலங்களை தரிசாகவே விட்டிருக்கிறார்கள்.   

மூன்று ஆண்டுகளுக்கு முன் தரிசாக விடப் பட்ட நிலங்கள் தனித்தனித் தீவுகளாக இருந்த போது, அவற்றை பயன்படுத்திக் கொள்ள மணல் எடுக்கும் தொழில் உள்ளே நுழைந்தபோது, தரிசு நில உரிமையாளர்கள் அதை லாபகரமான நடவடிக்கையாகவே பார்த்தார்கள். தங்களது நிலங்களை மணல் எடுப்பவர்களுக்கு விற்றனர். இன்றைக்கு இந்தப் பகுதி முழுவதும், 18 அடி ஆழத்துக்கு நிலம் வெட்டியெடுக்கப்பட்டு, அருகில் உள்ள வயல்கள் கனவிலும் சாகுபடி செய்வது பற்றி நினைக்க முடியாத வண்ணம் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மேலும், ஒரு மின்சார உற்பத்தி நிலையத்துக்காக 300 ஹெக்டேர் நிலப்பரப்பு இப்பகுதியில் கையகப்படுத்தப்பட்டது, இங்குள்ள நீர்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தி நிலைமையை மோசமாக்கியுள்ளது.   

சாதாரணமாக ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பு, ஒரு சாகுபடிப் பருவத்தில் 140 பேருக்கு வேலை வழங்கும். இதில் பெருமளவு பெண் கூலித் தொழிலாளர்களே பயனடைகிறார்கள். ஆனால், பெருமளவு நிலம் சாகுபடி செய்வதை கைவிட்டு விட்டதால், குறைந்த பெண் வேலையாள்களே தேவைப்படும் சூழலில், அதிகமான பெண்கள் வேலை தேடிச் செல்கிறார்கள். இதனால் வேலையை அவர்கள் பங்கிட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதுவே, அவர்களது வறுமைக்கும் காரணமாகிறது. “வெறும் 10 பெண்கள் வேலை செய்ய வேண்டிய வயலில், நாங்கள் 70 பேர் வேலை பார்க்கிறோம். அதனால் சம்பளமும் பகிர்ந்தே தரப்படுகிறது. இந்தச் சம்பளம் எதற்கும் போதவில்லை,” என்கிறார் கணவனை இழந்த சகுந்தலை.   

அரசு சட்டப்படி பார்த்தால், வயல்வெளிகளில் மணல் எடுப்பதைத் தடுப்பதற்கு எந்த விதிமுறையும் இல்லை. பக்கத்தில் உள்ள நிலங்களில் இருந்து சம்பந்தப்பட்ட நிலங்கள் எவ்வளவு தொலைவில் உள்ளன என்பதைப் பொறுத்து, மணல் அள்ளுவதற்கு உரிமம் வழங்கப்படுகிறது. மேலும், எதிர்காலத்தில் அதே நிலத்தில் மண் நிரப்பப்பட்டு, சாகுபடிக்கு உரியதாக மாற்றப்பட வேண்டும் என்பது போன்ற விதிமுறைகளும் இருக்கின்றன. சட்டப்படி, 2 மீட்டர் ஆழத்துக்கு அதிகமாக மேல் மண்ணை எடுப்பதற்கு உரிமையில்லை.   

அரசு பதிவுகளின்படி 3.38 ஹெக்டேர் பரப்புள்ள நீர்நிலைகளில்தான் மணல் எடுக்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 12 ஹெக்டர் கொள்ளையடிக்கப்பட்டுவிட்டது என்கிறார்கள் உள்ளூர் மக்கள். நிலப்பதிவுகளில் சாகுபடி நிலத்தை தரிசு நிலம் என்று பெயர் மாற்றி உரிமம் வழங்கப்படுகிறது என்று கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.    

ஏஷியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் நிறுவனத்தின் வளர்ச்சி இதழியல் துறை பேராசிரியர் கே.நாகராஜ் கூறுவதன்படி, “இது காடழிப்பில் குறிப்பிடப்படும் தேன்கூடு வட்டம் என்ற கொள்கையை பிரதிபலிக்கிறது. முதலில் காட்டின் சிறிய பகுதி அழிக்கப்படும்போது,அது ஒரு தேன்கூட்டில் உள்ள தேனை வெளிச்ச மிட்டுக் காட்டும் திறப்பு போன்ற தோற்றத்தைத் தரும். தொடர்ந்து அந்தத் திறப்பு மூலம் தேன்கூடு அழிவதைப் போல, ஒட்டு மொத்த காட்டின் மேல்மண்ணும் அரிக்கப்படும்.ஒட்டுமொத்த காடும் அழிவதற்கான தொடக்கப்புள்ளியாக இது அமையும். அதேபோலத்தான், இந்த நீர்நிலைகள் அழிவும் நிகழ்கிறது,” என்கிறார்.   

2011ஆம் ஆண்டில் வயல்களில் வேலை செய்ய கூலித் தொழிலாளர்கள் கிடைக்கவில்லை என்ற புகாரால், நடவுக் காலத்தில் ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் கிராம மக்கள் வேலை செய்வதற்கு மாநில அரசு தடை விதித்தது. ஆனால், மேற்குறிப்பிட்ட கிராமங்களில் இதுபோன்று தொழிலாளர்கள் அதிகம் தேவைப்படும் காலகட்டங்கள்கூட மிக அரிதாகவே தோன்றுகின்றன.   

இந்தப் பெண் கூலித் தொழிலாளர்களுக்கு பெரும்பாலான நேரம் நிலைமை மோசமாகவே இருந்தாலும், எப்போதாவது ஒரு சில நாள்கள் நன்றாக இருப்பதும் உண்டு. என்றைக்காவது ஒரு நாள் ரூ. 25 கூலியாகக் கிடைக்கலாம். “ஆனால், எப்போதும் விவசாயக் கூலியாக ரூ.2தான் கிடைக்கிறது. அதை வைத்து ஒரு டீ கூட குடிக்க முடியாது. அந்தக் காசுக்கு வெத்திலையோ, புளிப்பு மிட்டாயோ வாங்கி எங்களுக்குள் பிரிச்சுச் சாப்பிடுவோம்” என்கிறார் சௌந்தரவல்லி. இது மட்டுமில்லாமல், வேலை செய்வதற்காக அக்கம்பக்கத்து பஞ்சாயத்துகளுக்கு 8 முதல் 10 கிலோ மீட்டர்கள் கால்நடையாக நடந்தே செல்கிறோம் என்கிறார் ஜெயம்.   

விவசாய நிலங்களில் மணல் எடுக்கத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த கிராம மக்கள் பொது நலன் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். உள்ளூர் மக்களின் எதிர்ப்பால், இந்த பஞ்சாயத்தில் கடந்த ஓராண்டில் மணல் எடுப்பது நடக்கவில்லை. ஆனால், ஏற்கெனவே குறிப்பிடத்தக்க அளவு நிலங்கள் அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், சொற்ப சம்பளம் தரும் வேலையாவது கிடைக்குமா, கிடைக்காதா என்ற அவநம்பிக்கையுடன் இந்தப் பெண்கள் நீண்ட தொலைவு அலைந்து கொண்டிருக்கிறார்கள்.   

விஷச் சுழலில் சிக்கித் திணறும் விவசாயமும் பெண் உழைப்பும்   

காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த சில மாதங்களில் சாகுபடிக்குத் தேவையான தண்ணீர் கிடைக்காததால் விவசாயம் சந்தித்து வரும் பல்வேறு நெருக்கடிகளால், பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். குறைந்த அளவு நிலங்களை வைத்துள்ள விவசாயிகள் விளைச்சல் இல்லாததால், வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்தத் தற்கொலைகள் காரணமாக, சம்பந்தப்பட்ட விவசாயி வாங்கிய கடனை அடைக்க வேண்டிய பொறுப்பு, அவர்களது விதவை மனைவிகளின் தலையில்தான் விழுகிறது.   

காவிரி நீர் பங்கீட்டுச் சிக்கலால் விவசாயம் சந்தித்து வரும் நெருக்கடிகளை ஒட்டுமொத்த மாகப் பார்க்கும்போது, விவசாயத்தில் முக்கிய உழைக்கும்சக்தியாக இருக்கும் பெண்களின் அவலநிலை கவனத்துக்கு வராமலேயே போய் விட்டது. விவசாயப் பொருளாதாரத்தில் பெண்களுக்கு உள்ள பங்கை இந்த உரையாடல் அங்கீகரிக்கத் தவறிவிட்டதன் அடையாளம் இது.   

விவசாயத் தொழிலாளர்களில் ஆண்களும் பெண்களும் இருக்கிறார்கள். நிஜத்தில் இவர்களது வாழும் நிலைமைகள் வெவ்வேறானவை. 2012ஆம் ஆண்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 3 விவசாய நெருக்கடி தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. மொத்தமுள்ள 55,598 ஹெக்டேர் பரப்பில் 1.39 லட்சம் குறு விவசாயிகளும், 38,789 ஹெக்டேர் பரப்பில் 27,759 சிறு விவசாயிகளும் பயிரிட்டு வருகிறார்கள். இதில் இரு மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் பங்கீட்டுச் சிக்கல் காரணமாக,ரூ. 1.77 கோடி மதிப்புள்ள உழைப்பு நாள்கள் வீணாகியுள்ளதாக கணிக்கப் பட்டுள்ளது. இதில் 70 சதவிகித உழைக்கும் சக்தி பெண்கள்தான்.   

நெற்பயிர், பெருமளவு பெண்களின் உழைக்கும் சக்தியை நம்பியே உள்ளது. ஒரு ஏக்கர் நெல் பயிரிடுவது என்பது, ஒரு சாகுபடி காலம் முழுவதும் 130 பெண்களுக்கு வேலை தரக்கூடியது. வயல்களில் நடவு செய்தல், களை பறித்தல் போன்ற கடுமையான வேலைகளை பெண்களே செய்கிறார்கள். இந்த முறைகள் காரணமாகவே விவசாயிகளுக்கு உற்பத்தி அதிகமாகக் கிடைக்கிறது.   

மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் பங்கீட்டுச் சிக்கலால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், திருச்சியை மையமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், காவிரி பாசன மாவட்டங்களின் கடைமடைப் பகுதி வரை தங்கள் கபளீகரக் கையை விரிக்க ஆரம்பித்துவிட்டன.

இன்னும் நடவு செய்யக்கூடிய வயல்கள், இந்த ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கைகளில் சிக்கி பிளாட்களாக மாறுவதால், லாபகரமான உழைப்பை தரக்கூடிய பெண்களும், அவர்களுக்குக் கிடைக்கும் வேலையும் விரட்டி அடிக்கப் பட்டுவிட்டன.   

இது மட்டுமில்லாமல், நாகப்பட்டினம் மாவட்டக் கடற்கரை முழுவதும் பல்வேறு அனல் மின் நிலையங்களுக்காக தரிசு நிலங்களுக்கு அருகில் உள்ள நல்ல நிலங்களையும் சேர்த்து உள்ளூர் பஞ்சாயத்துகள் தாரை வார்த்து வருவதால், விவசாய நெருக்கடி மோசமாகியுள்ளது. இந்த அனல் மின் நிலையங்கள் பல்வேறு கட்டங்களில் அனுமதி பெறுவதற்காக தற்போது காத்திருக்கின்றன.   

இவை தவிர விவசாய நிலங்களிலும், நதிப்படுகைகளிலும் மணல் அள்ளுவதற்கு அளிக்கப் பட்டுள்ள அனுமதி, சமூக வளங்களை பயன்படுத்துவதற்குப் பெண்களுக்கு உள்ள உரிமையைப் பறித்து வருகிறது. வேதாரண்யம் பகுதியில் பஞ்சாயத்து எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சிலிகேட் மணல் அள்ளுவதற்கு அளிக்கப்பட்டுள்ள உரிமம், நிலத்தடி நீரை பாதித்துள்ளது. இதனால் பெண்கள் குடிநீரைத் தேடி நீண்ட தொலைவு அலைய வேண்டியுள்ளது.   

சமீபத்தில், ஊரக வேலை உறுதிச் சட்டம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் செயல்திறனை கொண்டிருக்கிறதா என்பது பற்றி நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், கிராம பொதுச் சொத்தை நிர்வகிப்பதில், தங்களுக்கு உள்ள அறிவு பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை என்று பெண்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதற்கு அமைப்புரீதியிலான குறைபாடுகளே காரணம் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். விவசாயக் குளங்கள், வாய்க்கால்கள், சமூக நீர்நிலைகள் ஆகியவைதான் சிறு, குறு விவசாயிகளுக்கு அடிப்படை ஆதாரம். இந்த நீர்நிலைகளை தூர்வாருவதில் பொதுப்பணித் துறை ஈடுபடாத நிலையில், ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் பெண்களை வேலைக்கு அமர்த்தலாம். ஆனால், இதுவும்கூட சம்பந்தப்பட்ட பஞ்சாயத்தின் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையைச் சார்ந்தே அமைகிறது.   

தமிழில்: அமிதா

நன்றி: தி இந்து நாளிதழ், March 19, 2012

Pin It

(ஆந்திராவின் முக்கியமான தற்கால தலித் பெண் கவிஞர், சிறுகதையாசிரியர், பெண்ணிய ஆய்வாளர், செயற்பாட்டாளர். சாதி/எதிர்ப்பு, தெலுங்கானா போராட்டங்களில் தொடர்ந்து செயலாற்றி வருபவர்)  

மாட்டுக்கறி எங்கள் பண்பாடு

மாட்டுக்கறி - எங்களது வாழும் பசுமை

வாழ்க்கையின் பன்முகம்

எங்கள் ஆன்மாவின் உயிர்மூச்சு

"மாட்டுக் கறி உண்ணாதீர்கள்"

நான் உன்னை கேட்கிறேன் - "எப்படி உண்ணாமல் இருப்பது?"

நீ யார் எனக்கு அறிவுரை கூற, எங்கிருந்து வந்தவன்?

எனக்கும் உனக்கும் என்ன உறவு?

நான் கேட்கிறேன்.

  

இன்று வரைக்கும்

நீ ஒரு ஜோடி காளை மாடுளை வளர்த்திருப்பாயா?

ஒரு ஜோடி ஆடுகளையாவது?

ஒரிரண்டு எருமைகளை?

அவைகளை மேய்த்த அனுபவமுண்டா?

குறைந்தபட்சம் கோழியாவது வளர்த்ததுண்டா? 

 

இவைகளுடன் ஆற்றில் இறங்கி

அவற்றை தேய்த்துக் குளிப்பாட்டியதுண்டா?

காளையின் காதை அறுத்து துளையிட்டதுண்டா?

இல்லை, அவற்றின் பற்களைப் பிடித்து பார்த்திருக்காயா?

அவற்றுக்கு பல்வலி வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?

அவற்றின் கால் குளம்புகள் புண்ணானால்?

உண்மையில் உனக்கு என்னதான் தெரியும்?

"மாட்டுக் கறி உண்ணாதே" என்று சொல்வதைத் தவிர?

 

பாலூட்டும் தனது மகளுக்கு, பிள்ளைப் பெற்று

கொஞ்சநாட்கள் கூட ஆகாத அவளுக்கு

எப்படியாவது

நன்கு பதப்பத்தப்பட்ட மாட்டிறைச்சித் துண்டுகளை

சமைத்துக் கொடுக்க வேண்டும் என்று

கவலையுடன் அலைகிறாள் யெல்லம்மா.

மாட்டின் ஈரல் சுரக்கும் சாறு - அது லேசில் கிடைக்காது

அதைப் பெற மாலா செட்டம்மாவின் கூரை பலகை

மாடிகா எல்லம்மாவின் எறவானம்

என்று வீடுவீடாகச் தேடிச் செல்வாள்.

 

குழந்தையின் வயிற்று கடுப்பைத் தணிக்க

பெரியவர்களின் கைகால் வலியைப் போக்க

மாட்டீரல் சுரக்கும் கடுஞ்சாற்றையே

அவர்கள் நம்பி இருப்பர்.

அப்படிப்பட்டவர்களைப் பார்த்து

"மாட்டுக் கறி உண்ணாதே" என்று சொல்ல

உனக்கு எத்தனை துணிச்சல்?

ஜாக்கிரதை - அவர்கள் செருப்பாலேயே அடிப்பார்கள்.

ஓடு, அவர்கள் வருவதற்குள்...

 

மாலா மக்களும் மாடிகா மக்களும்

மாட்டுக்கறி உண்பவர்கள் மட்டுமல்ல, தம்பி.

மண்ணை உழுவதற்காக

காடுகளை பராமரிப்பவர்கள்

எருமைகளை, ஏர் ஒட்டிச் செல்லும் எருதுகளை

பழக்குபவர்கள்

யுகயுகமாக அவர்கள் இந்த பசும்வயல்களை உழுதுள்ளனர்

தலைமுறை தலைமுறையாக கன்றுகளை வளர்த்து வந்துள்ளனர்.

 

எமது மாட்டுச் சந்தைகள் - அவற்றின் பண்பாடு

பத்து மைல்களுக்கு ஒரு சந்தை

இந்த தக்காணம் முழுக்கவும்

தெலுங்கானா, ஆந்திரம், மராட்டிரம், கர்நாடகம்

மலநாடு, மங்களூரு, சித்தூரு, நெல்லூரு,

ஓங்கோளு, அவுரங்காபாத் -

போய் நின்று பார் -

கண்ணுக்கு எட்டும் திசைகளிசெல்லாம் சந்தைகள்

பசுமாடுகள், கன்றுகள், காளைகள், எருதுகள்

அமெரிக்க திரைப்படங்கள் கொண்டாடும்

மாடு பிடிக்கும் குதிரை வீரர்களை உலகமறியும் -

ஆனால் இந்தச் சந்தைகளை?

அவற்றுக்காக வேர்க்க விறுவிறுக்க உழைப்பவர்களை?

 

ஓங்கோளு காளைகள், தீட்டிவிட்ட கொம்புகளைக் கொண்ட எருதுகள்

பிறைச் சந்திரனைப் போன்ற வளைந்த கொம்புகளுடைய மாடுகள்

தக்காணத்துக்குப் பெருமைச் சேர்க்கும் பன்னிரண்டு அடி காளைகள்

இவற்றைப் பற்றியெல்லாம் உனக்குத் தெரியுமா?

 

நாங்கள் மேய்த்துக் கொண்டிருந்த மாடுகளை பிறர் ஓட்டிச் சென்றது,

வளர்த்த கைகளிலிருந்து மாடுகள் வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்ட சம்பவங்கள் -

இவை பற்றியெல்லாம் தெரியுமா, தெரியாதா?

அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை,

எருது பூட்டிய வண்டிகள் போய்

குதிரைகள் பூட்டப்பட்ட வண்டிகள் வந்த நாளை

எங்களால் மறக்க முடியுமா என்ன?

 

பசுக்களை, காளைகளை

நாங்கள் காடு, கரைகளில் ஓட்டிச் செல்வோம்

மண்ணை அவை உழுது போட வேண்டுமானால்

உணவு வேண்டுமே -

எங்களுக்கு மட்டுமே இதைச் செய்யத் தெரியும் -

ஒன்றை மறந்துவிடாதே

மண்ணை உழுவதற்கே மாடுகளை வளர்க்கிறோம்.

 

மண்ணை விட்டு, மந்தைவெளியை விட்டு நீங்கியும்

மாட்டுக் கறித் தின்னும் கூட்டம் என்று எங்களை ஏசுகிறாய்-

பழைய பாட்டையே திரும்பத் திரும்பப் பாடுகிறாய்

உனது ஊத்தைப் பற்களைக் காட்டி காட்டி.

 

இப்படி அங்கலாய்க்கும் நீ, நீ என்னதான் செய்கிறாய்?

கோமாதா என்று கும்பிடுகிறாய்

பாலைக் கறந்து கறந்து பலகாரம் செய்கிறாய்.

நாங்கள் பசுவை கறப்பதில்லை.

கோமாதா என்று வணங்குவதுமில்லை

கோமூத்திரத்தை குடிப்பதுமில்லை.

கன்றை கட்டி வைத்து

பசுவைக் கறக்கும் ஆட்கள் அல்ல நாங்கள்.

 

பசுவின் மடியில் கன்று - அது குடித்து

நன்றாக வளர வேண்டும்

மண்ணை உழுவதற்கு அதற்கு வலிமை தேவை

வேளாண்மை செழிக்க எங்களுடைய மாடுகள்

யானைகள் போல்

குன்றுகளாக

நிற்க வேண்டும்.

 

காளை ஈனும் பசுவை மதிப்பவர்கள் நாங்கள்

பச்சைப் புற்கட்டுகள், சோளத் தட்டு, அரிய புண்ணாக்கு

கன்று ஈன்ற பசுவுக்கு இவற்றை நாங்கள் அளிப்போம்

அதனை வேலை வாங்கமாட்டோம் -

பசுக்களை உன் வீட்டுக்குக் கூட்டி வந்து

வாசலில் நிறுத்தி வித்தைக் காட்டி

பிழைப்பவர்கள் இல்லை நாங்கள்.

அவற்றை நன்றாக மேய்த்து வளர்ப்போம்

அவை நல்ல கன்றுகளை ஈன்றளிக்க,

மண் செழிக்க அவற்றை பராமரிப்போம்.

 

அவ்வப்போது நாங்கள் இளைப்பாறும் போது

ஆனந்தமாக இருக்கையில் -

இந்த நாளை கொண்டாடினால் என்ன என்று

பணம் வசூல் செய்து

சந்தைக்கு செல்வோம்.

ஆரோக்கியமான, நல்ல பசுவைத் தேர்ந்தெடுத்து வருவோம்

அதை வெட்டிக் கறியாக்கி பகிர்ந்துண்ண -

நாங்கள் விருந்துண்ணும்

அந்த மாலை வேளையில்

எங்கள் ஊரை

களிப்பின் வாடை குளிப்பாட்டும்.

 

தலைமகனுக்கு தரப்படும் மரியாதையும் பொறுப்பும்

எங்கள் வீட்டு எருதுகளுக்கும் - அவற்றுக்கு

பிடித்தமான பெயர்கள் சூட்டி மகிழ்வோம்

ராமகாரு, அர்ஜூனகாரு, தருமகாரு...

பசுக்கள், எருமைகள், கன்றுகள் - இவற்றுடன் குடும்பமாக வாழ்வோம்

அழகுப் பெயரிட்டு அழைப்போம் -

ரங்கசானி, தம்மரமோக, மல்லெச்செண்டு...

ஏன் மாடுகளுக்காக திருவிழா எடுப்போம் - யெரோன்கா

கேள்விபட்டதுண்டா?

தெரியுமா உனக்கு -

 

அந்தத் திருநாளில்

எங்களுடைய காளைகளை, எருதுகளை, பசுக்களை

தெளிந்த நீரோடைகளுக்கும் குளங்களுக்கும் ஓட்டிச் சென்று

தேய்த்து தேய்த்து குளிப்பாட்டுவோம்.

ஆண் எருமைகளையும் பசுவின் கன்றுகளையும்தாம்.

அவற்றின் வேறு வேறு வண்ணங்களுக்கும் நிறங்களுக்கும் ஏற்ப

கோலம் தீட்டி அழகு செய்வோம்

சாயம் தோய்த்த சணல்கயிறுகளாலான

குஞ்சங்களை நெற்றிகளில் கட்டி

அவை அசைந்தாட பார்த்து மகிழ்வோம்.

மணிகள் அடுக்கிய மாலைகளை

அவற்றின் கழுத்துகளில் அணிவிப்போம்.

கம்பு, அரிசி, வெல்லம் என்று உணவளிப்போம்

பச்சை முட்டைகளையும் கள்ளையும் அவற்றின் வாய்களில் ஊற்றுவோம்.

ஊர் முழுக்க ஊர்வலமாக அழைத்துச் செல்வோம்.

 

நீ எப்போதும் பசுவை பற்றி மட்டும் பேசுகிறாய்.

உனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்?

எருதுகளை பற்றிப் பேசுவதில்லை

அவை மண்ணை உழுவதைப் பற்றிப் பேசுவதில்லை

களி மண் குவியல்களை மிதித்து மிதித்து

எங்கள் வீட்டுச் சுவர்களைப் பூசத் தேவையான மண்ணை

எங்களுக்குப் பதமாக ஆக்கித் தருவதைக் குறித்துப் பேசுவதில்லை.

ஒரு காலத்தில் கோட்டைகளைக் கட்ட தேவைப்படும் களிமண்ணைக்கூட

இவைதான் மிதித்தளித்ததாக வரலாறு உண்டு -

யார் தந்த அதிகாரத்தில் "மாட்டுக் கறி உண்ணாதே?" என்று கூறுகிறாய்?

 

"எருதுகளைக் கொல்லாதே" என்கிறாய்,

ஆனால் செத்த மாட்டை உண்ணச் செய்கிறாய்-

எங்களைத் தீண்டத்தகாதவர்கள் என்கிறாய்

நிலமற்றவராக வைத்திருக்கிறாய்

நீ செய்யத் தயங்கும் அழுக்கான வேலைகளை

எங்களைச் செய்யச் சொல்கிறாய்

ஊர்த் தெருக்களில் விழுந்து கிடக்கும் செத்த மாடுகளை

அகற்றச் சொல்கிறாய்.

மாடுகன்றுகளை பராமரித்து

அளவாக அவற்றைக் கட்டி வளர்த்து

எருதையும் காளையையும் அம்மனுக்கு படையலிட்டு உண்பது

எங்கள் பண்பாடு

எங்களைத் தடுத்து நிறுத்த நீ யார்?

 

பௌத்தர்கள் பேசுவது போல நீ பேசப் பார்க்கிறாய்.

எங்களுக்கு என்ன பௌத்தம் தெரியாதா?

"மனிதர்களைக் கொல்லாதே" என்று சொன்னது பௌத்தம்.

நீயோ, "ஆட்டுக்கறி, மாட்டுக் கறி, வெங்காயம், பூண்டு உண்ணாதீர்கள்"

என்று சொல்லிக் கொண்டு மனிதர்களை வெட்டிச் சாய்க்கிறாய்.

விலங்குகளைப் பற்றி பேச நீ யார்?

மனிதம், நாகரிகம் தெரியாத நீ?

எருது, பசு, காளை, எருமை

எங்கள் குடும்பத்தினர்.

அவற்றின் தேவையறிந்து வளர்ப்போம்

வலியறிந்து மருந்தளிப்போம்

காயடித்து வேலைக்குத் தயாராக்குவோம்.

போ, மாலா, மாடிகா மக்களிடம் போய்க் கற்றுக் கொள்ள

நாங்கள் நாகரிகம் உருவாக்கியவர்கள்

எமது தேசம் எங்கள் இருப்பிடங்களில்தான் பிறந்தது

என்பதை மறந்துவிட்டாயா?

சுற்றுச்சூழல், நாகரிகம் - எங்களுக்கு இயல்பானவை

போர், அழிவு - உனது பண்பாடு

பசுவுக்கும் உனக்குமான உறவு லேசானது -

பால், இனிப்பு, மரக்கறி உணவு, இவ்வளவுதான்.

 

ஆத்தாவை கும்பிடும் திருநாளில்

காளையையும் கிடாவையும் காணிக்கையாக செலுத்தி உண்போம்.

எங்கள் வழியில் குறுக்கிட்டால் ...

எங்களுடைய மைசம்மா, ஊரெட்டம்மா, போச்சம்மா, போலெரம்மா எல்லாம்

"ஏய், எனக்கு எருது வேண்டும்... காளை வேண்டும், கிடா வேண்டும்"

என்பார்கள்.

அவர்களுக்கு நேர்ந்து விடுவதற்காக இவற்றைப் பார்த்து பார்த்து வளர்ப்போம்

இது நாங்கள் செலுத்த வேண்டிய கடன்.

நீ யார் எங்களுக்கிடையே வருவதற்கு?

தன் பாதையில் குறுக்கிடுபவனை மைசம்மா சும்மா விடமாட்டாள்.

மாட்டுக்கறி எங்களது பண்பாடு. ஜாக்கிரதை.

- ஆங்கிலம் வழி தமிழில்: .கீதா 

(இந்தக் கவிதை இடம் பெற்ற சஞ்சிகை: தற்கால அரசியல் செய்தி மடல், செப்டம்பர் 2012, பெண்ணிய படிப்புக்கான அன்வேஷி ஆய்வு மையம், ஹைதராபாத்)

Pin It

“மண்ணையும் கடலையும் விட்டுத் தர மாட்டோம்”   

மின்சார வலை விரிக்கும் அணு உலை குறித்து சமூக செயற்பாட்டாளர்கள், சூழலியலாளர்கள், அணு சக்திக்கு எதிரான மக்கள் அமைப்புகள் என்று தொடர்ந்து பல்வேறு தரப்பில் இருந்து பரப்புரைகள் செய்யப்பட்டு வரும் சூழலில் எவ்வளவுதான் பேசினாலும், எவ்வளவுதான் படித்தாலும் காட்சிரூபமாக சிலவற்றை விளக்கும்பொழுது சாதாரண மக்களுக்கும் புரிந்துவிடும். அப்படி காட்சிகள் மூலம் அணு உலைகளின் ஆபத்தை நமக்கு வெட்ட வெளிச்சமாக்குகிறது ‘முடிவின் ஆரம்பம்’ ஆவணப்படம்.

பொதுவாகவே ஆவணப்படங்களில் வல்லுநர்களோ சாதாரண மக்களோ வந்து பேசிக்கொண்டே இருப்பதும், அது சமயங்களில் அலுப் பூட்டக் கூடியதாகவும் இருப்பது வழக்கம். ஆனால் இந்த ஆவணப்படத்தில் அப்படி அலுப்பூட்டக்கூடிய பேச்சுக்கள் இல்லை.. கூடுமானவரை வல்லுநர்கள் பேசு வதை காட்சியாக வரைகலை மூலம் காண்பிக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் சிவா. அணு உலை இயங்கும் தன்மையை எத்தனைதான் வார்த் தைகளில் விளக்கினாலும் தொழில்நுட்பம் அறியாதவர்களால் புரிந்து கொள்ள முடியாமல் போய்விடும் அபாயம் உண்டு. ஆனால் இந்த ஆவணப் படத்தில், அணு உலையை குளிர்விக்க குழாய் மூலம் கடல் நீரைக்கொண்டு வரும் காட்சியை சித்தரிக்கும்போதும், சுனாமி ஏற்பட்டுவிட்டால் என்னவாகும் என்று காட்சிகளில் விளக்கும்போதும் மனம் பதைபதைத்துப் போகிறது.

எழுத்தாளர் பாமரன் போபால் விஷவாயு சம்பவத்தை நினைவுகூர்கையில் விரியும் காட்சிகளின் கொடூரம் மனதை உறையச் செய்கிறது. அணுக் கழிவுகளே அணுகுண்டு தயாரிப்பதற்கான மூலதனம் என்பதை பாமரன் தனக்கேயுரிய பாணியில் கூறுகிறார். கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணியாற்றியவர் ஒருவரின் மகளாகிய சமந்தாவின் நேர்காணல் இந்த ஆவணப் படத்தின் முக்கியமான பதிவு.

தன் தந்தை புற்றுநோயால் இறந்ததைச் சொல்லி, இந்த இழப்பு வேறொருவருக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்று கூறி, சுனாமியன்று கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் வேலை செய்துகொண்டிருந்த 100 பேர் என்ன ஆனார்கள் என்று இதுவரை தகவல் தெரிவிக்கவில்லை நிர்வாகம் என்று கூறி அதிர வைக்கிறார். இப்படி ஊழியர்களின் நிலை குறித்து மக்களுக்குத் தெரிவிக்காத அரசும், அணுசக்தித் துறையும் மக்களின் பாதுகாப்பு குறித்து கவலைப்படுவதாக நம்புவது அறிவீனம்தான்.

இடிந்தகரை மக்களின் போராட்டம் உலகுக்கு எடுத்துக்காட்டு. பெண்கள் முன்னணியில் நின்று போராடி இவ்வுலகின் கவனத்தை ஈர்த்துள்ளனர். ‘எங்கள் மண்ணுக்காக, எங்களுக்குப் பின் வரும் தலைமுறைக்காக நாங்கள் போராடுகிறோம்’ என்று பெருமிதத்துடன் முழங்கும் இடிந்தகரை பெண்களை காட்சிப்படுத்தி இருக்கிறது கேமிரா.   

‘நான் என் தாயுடன் கன்னியாகுமரியில் நடந்த போராட்டத்துக்குச் சென்றேன். இன்றைக்கு என் மகள் என்னுடன் போராட்டத்துக்கு வருகிறாள்’ என்று இடிந்தகரை மில்ரெட் கூறுகிறார். ‘இத்தனை நாட்கள் எங்கு போனீர்கள்? அப்போதே போராட வேண்டியதுதானே?’ என்று கேள்வி கேட்போருக்கான பதிலை இந்தப் படம் சொல்கிறது. அரசின் அடக்குமுறைக்கு ஆளாகி, குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, தேசத்துரோகக் குற்றச்சாட்டுக்களைச் சுமந்து, 4 உயிர்களை இழந்தபின்னும் அறவழியிலான தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கும் இடிந்த கரைப் பகுதி மக்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்களைத் தெரிவிக்கத் தோன்றுகிறது.   

தோழர்கள் சுப.உதயகுமாரும், மை.பா. ஜேசுராஜனும், புஷ்பராயனும், முகிலனும், மருத்துவர்கள் ரமேஷயும், புகழேந்தியும் மாறி மாறி அணு உலையின் தீமைகளை நம்முன் வைக்கின்றனர். கல்பாக்கத்தைச் சுற்றியுள்ள கிராம மக்களிடையே அதிகரித்துள்ள புற்றுநோய், மனவளர்ச்சி குன்றிய தன்மையில் குழந்தை பிறத்தல், தைராய்டு நோய் போன்றவற்றை அவர்களின் புகைப்படங்களைக் கொண்டு விளக்குகையில் அதிர்ச்சி உண்டாகிறது.

எப்படிப்பட்ட உலகில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்கிற பயம் உண்டாகிறது. அணுசக்தித் துறையைச் சேர்ந்த எஸ்.கே.அகர்வாலின் மரணம் குறித்து சுப. உதயகுமாரன் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. ஒர் உயர் அதிகாரியின் மரணத்துக்கான காரணத்தைக் கூட திரித்து வெளியிடும் இந்த அரசு சாதாரண மக்களை எப்படிக் காக்கும் என்கிற அடிப்படை கேள்வி பார்ப்பவர்கள் மனதில் எழுகிறது. பேரிடர் மேலாண்மையின் அடிப்படை விஷயங் களில் ஒன்றாக அணு உலையில் விபத்து ஏற்பட்டால் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்பதைக் கூட அரசு மக்களுக்குச் சொல்லித் தரவில்லை என்று குற்றம் சாட்டுகிறது படம்.

தமிழகத்தில் நிலவும் 18 மணிநேர மின் வெட்டுக்கான காரணங்களை விரிவாகப் பேசுகிறார் சா.காந்தி. முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவும், இன்னாள் பிரதமரும் அன்றைய நிதியமைச்சருமான மன்மோகன் சிங்கும் இணைந்து கொண்டு வந்த புதிய பொருளாதரக் கொள்கையும், உலகமயமாக்கலும்தான் நம்முடைய இன்றைய மோசமான மின்பற்றாக்குறைக்கும், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடன்சுமைக்கும் காரணம் என்பதை ஆவணப்படம் மிகத் தெளிவாக விளக்குகிறது. கூடங்குளம் அணு உலை உற்பத்தியைத் தொடங்கினாலும், அது தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்யப் போவதில்லை என்கிற உண்மையை புள்ளிவிவரங் களுடன் பேசுகிறது படம்.   

ஓர் ஆவணப்படத்தில் செய்நேர்த்தி அந்தப் படத்தை சுவாரஸ்யமாக தொகுப்பதில் இருக்கிறது. ஷமீரின் படத்தொகுப்பு இப்படத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. தொழில்நேர்த்தி யுடனான காட்சிகள், துல்லியமான ஒலிப்பதிவு, உறுத்தாத ஒளிப்பதிவு, பின்னணியில் ஒலிக்கும் செய்திகள் என்று ஓர் சிறந்த ஆவணப்படமாக ‘முடிவின் ஆரம்பம்’ படத்தை மாற்றுகின்றன. ஆனால் பின்னணியில் ஒலிக்கும் குரல்களில் தெரி யும் உணர்வுகள் மட்டும் சொல்லப்படும் செய்தியுடன் பொருந்தவில்லை. அத்துடன் இரண்டொரு உச்சரிப்புப் பிழைகளும் காதில் விழுகின்றன.

மீனவர்களின் வாழ்வையும், அவர்களுடைய உரிமைகளையும் அணு உலை என்கிற பெயரால் அரசாங்கம் தட்டிப் பறித்துள்ளது. அணுக் கழிவுகளைக் கொட்டுவதால் மீன்வளம் பாதிக்கப் படுவதை ஆதாரங்களுடன் விளக்குகிறது படம். இந்தப் படத்தில் தரப்பட்டுள்ள தரவுகளை சேகரித்து அவற்றை சரியான முறையில் காட்சிப் படுத்தியிருப்பதில் இயக்குநரின் நேர்த்தி வெளிப்படுகிறது.   

‘எங்க கடலை யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம். இந்த மண்ணை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம். இந்த அணு உலையை மூடுறதையே ஒற்றைக் கோரிக்கையா இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவோம். நாங்க இறந்துபோனாலும் எங்க பேரன் பேத்திகள் இந்த அணு உலையை மூடிக்காட்டுவாங்க’ என்கிற இடிந்தகரை மெல்பிரட்டின் குரல் படம் முடிந்தபின்னும் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.   

முடிவின் ஆரம்பம், விலை ரூ.50/-

வெளியீடு : உலக மனிதாபிமான கழகம், 9994232711

இயக்கம் : சிவா

Pin It

மாணிக்கம், அளம், கீதாரி, கற்றாழை என நான்கு நாவல்களுக்குப் பின், ஐந்தாவது நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு படைப்பும் எனது பெரும் தவிப்புகளிலிருந்து எழுகின்றது. பல்வேறு விதமான மனநிலைகளை நெருங்கிச் செல்வதும் அவற்றிலிருந்து விடுவித்துக் கொள்வதுமாக என் படைப்பு கணம் ஒவ்வொன்றும் உயிர்த்துடிப்பு மிக்கது.   

ஒரு விதை முளைக்கும் போது நடக்கும் வினைகளுக்கு ஒப்பானது. படைப்பு வெளிப்படும் என் மனதின் இயக்கம், மண், காற்று, ஈரம், வெப்பம் இவற்றோடு கொள்ளும் உறவால் விதை முளைப்பது போல படைப்பின் ஆதாரமாகத் திகழும் ஏதோ ஓர் அழியாத எண்ணம்-மொழி, சமூகம், அரசியல், கலை நுட்பம் இவற்றோடு கொள்ளும் வினைகளின் ஊடே, படைப்பு உருவாவதாக எண்ணுகிறேன். என் படைப்பிற்கான மூல விதையாக இருப்பது ‘நான் ஒரு பெண்’ என்கிற அழியாத எண்ணம்.   

எனக்குக் கிடைத்த வலி, மகிழ்ச்சி, துயரம், கேளிக்கை எனும் அனுபவங்களின் தொகுப்பு என்னை ஒரு மனிதப் பிறவியாய் உணர வைத்தது என்பதைவிட ஒரு பெண்ணாக உணர வைத்தது என்பதுதான் முழுமையான தாக இருக்கும். எனக்கு மட்டுமின்றி என் தாய், சகோதரிகள், தோழிகள், உறவினர்கள், மேலும் நான் சந்தித்த பெண்கள் என இவர்களுக்குக் கிடைத்த அனுபவங்களை நெருங்கி நின்றும், கற்பனை செய்தும் விளங்கிக் கொண்டதிலிருந்து உருவானதுதான் பெண்ணாக உணரும் இந்த ‘அழியாத எண்ணம்.    

இப்போது எனது படைப்புகளைப் பற்றி மீளச் சிந்திக்கும்போது இத்தகைய பெண் எனும் தன்னுணர்வே ஒவ்வொரு படைப்பிற்கும் கருப்பொருளாய் அமைந்திருக்கும் எனக் கருதுகிறேன். எனது படைப்புகளில் இயங்கும் பெண்கள் அனுபவிக்கும் வறுமை, பசி, சுரண்டல், இழிவு, பாலியல் வன்முறை போன்றவை தொடர்ந்து எல்லாப் பெண்களும் எதிர்கொள்கிற நெருக்கடிகள்தான். ஆனால் இவற்றை நான் நன்கு அறிந்த, எனக்கு நெருக்கமானவர்களிட மிருந்தே உணர்ந்து கொள்கிறேன்.   

மிகவும் தூலமாக, இப்பெண்களை அடையாளம் காட்ட வட்டார அடையாளமும் அவ்வட்டாரத்தில் புழங்கும் மொழியும் எனக்கு படைப்பில் வெகுவாக உதவி செய்கின்றன. பொதுவான பெண்களின் பிரச்னைகளுக்கும், கிராமப்புறம் சார்ந்த உழைக்கும் பெண்களின் பிரச்னைகளுக்கும் குறிப்பிடத்தகுந்த வித்தியா சங்கள் இருக்கின்றன. எளிய விவசாயப் பின்னணி உள்ள குடும்பத்திலிருந்து வந்த எனக்கு மிகவும் நெருங்கியவை இத்தகைய உழைக்கும் பெண்களின் அனுபவங்கள்.   

எத்தகைய நெருக்கடிகளுக்கும் மத்தியிலும் துவண்டு போகாமல் எதிர் நீச்சல் போடும் போர்க்குணமும், தட்பவெப்ப மாறுதல்கள், இயற்கைச் சீற்றங்கள் போன்றவற்றை எதிர் கொள்கிற மன உறுதியும் இயற்கையின் ரகசியங்களைக் கற்றறிந்திருக்கும் திறமும், மண்ணோடு கொண்டிருக்கிற உறவும் இத்தகைய பெண்களின் தனிப்பட்ட பண்பு நலன்கள். விவசாயத்தைக் கண்டுபிடித்த ஆதித்தாயின் எச்சங்கள் நிரம்பியவர்கள் இவர்கள்.

இத்தகைய பெண்களுடைய பார்வை யின் வழியேதான் நான் காணும் உலகம் விரிகிறது. எனது படைப்புகளில் ஆண்கள் குறித்த சித்திரங்கள் மிகவும் மங்கலாகக் காட்சி யளிப்பதற்கு இத்தகைய பார்வையும் காரணமாக இருக்கலாம்.    

2

தமிழின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவரான, கு. அழகிரிசாமி அவர்களை மைய மாகக் கொண்டு, வட்டார வழக்கு குறித்து உரை யாடும் இவ்வரங்கில், கீழத்தஞ்சை வட்டார வழக்கைப் படைப்புகளில் கையாளும் நான், வட்டார வழக்கு பற்றிய எனது அபிப்பிராயங் களை சுருக்கமான அளவில் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.   

பல இனக்குழுக்கள், பல மொழி வழக்குகள், பல வழிபாட்டு முறைகள், பலவிதமான சடங்குகள், பல்வித குழுப்பண்பாட்டு முறைகள் கொண்ட பன்முகச் சமூகமாக விளங்குகிறது தமிழ் நிலம். இதில் எனது பாத்திரங்கள் என்னுடைய மண்ணின் கவுச்சியோடு, எனது இனக்குழுவிற்கு உரிய நெகிழ்ச்சியோடு, எனது மொழியின் உச்சரிப்புகளை அதற்குரிய எச்சில் தெறிப்புகளோடு வெளிப்படுத்துவதுதான் அதன் தனித்தன்மைக்கு உகந்ததாக இருக்கும் என நம்புகிறேன்.   

மேலும் வட்டார வழக்கு என்பது கருத்தை வெளிப்படுத்துவதற்கான ஊடகம் மட்டுமன்று. எங்கள் பகுதியில் தாய்மார்கள் தங்கள் பெண்பிள்ளைகளைத் ‘தங்கச்சி’ என்றழைப் பார்கள். இதில் உள்ள நெகிழ்ச்சி மகளைப் பெயர் சொல்லி அழைப்பதில் ஒருபோதும் கிடைப்பதில்லை. வட்டாரச் சொல்லாடல்கள் அகராதிப் பொருளை மீறியும் உணர்த்துவதற்கு பலவகையான உணர்வுகளைத் தன்னுள் ஒளித்து வைத்திருக்கின்றன.   

நெடிய பாரம்பரியமுள்ள ஒரு இனக்குழு சமூகத்தின் வாழ்வனுபவங்கள் அவ்வழக்கிற்குள் நிரம்பிக் கிடக்கின்றன. குறிப்பாக பெண்கள் பாடும் தாலாட்டுகளில், ஒப்பாரிகளில், நலங்குப்பாடல்களில் அவர்கள் நெஞ் சுக்குள் புதையுண்டு கிடக்கும் ஆற்றா மைகள், தவிப்புகள், ஏக்கங்கள், சோகங்கள் வெளிப்படுவதை நம்மால் காண முடியும். அவர்கள் சொல்லும் சொலவடைகள் கவித்துவக் கூறுகள் நிரம்பியவை. உளவியல் தன்மை படைத்தவை. உள்ளக்கிடக்கைகளை உருவகத் தன்மையில் பகிர்ந்துகொள்ளக் கூடியவை.   

இயற்கையைப் படித்தும், வாழ்ந்து கற்றும், செரித்த அனுபவக் கூறுகள் வட்டார வழக்கில் ஏராளமாக உள்ளன. வேளாண்மை, கால்நடைப் பராமரிப்பு, மருத்துவம், உளவியல், தட்பவெப்ப நிலை மாற்றங்கள் குறித்த அறிவு என ஒரு குழுவின் மொழிக்குள் அக்குழு அனுபவத்தின் வழி திரட்டிய அறிவுச் செல்வங்கள் ஏராளமாக பொதிந்து கிடக்கின்றன. வட்டார வழக்குகளில் காணப்படுகின்ற தொன்மக் கதையாடல்கள் வரலாற்றுத் தன்மையும், கற்பனையும், புராணிகக் கூறுகளும் கொண்டவை. இவை நம் நீண்ட கதை யாடல் மரபின் வளமான எடுத்துக் காட்டுகள்.   

நிலப்பிரபுத்துவம், ஆணாதிக்கம் என அதிகாரத் திற்கு உட்படுத்தப்பட்ட மக்களின் மனக் கொந்தளிப்புகளையும், கலகப் பண்புகளையும் இத்தகைய வட்டார வழக்கிற்குள் அடையாளம் காணமுடியும். படைப்பு வகைமைகளுள் முக்கிய ஒரு கூறாக வட்டார வழக்கை உணர்வதாலும், கல்வி, ஊடகங்கள் போன்ற நிறுவனங்கள் வட்டார வழக்கிலுள்ள தனித்துவ அடையாளங்களை, கச்சாத்தன்மையாகக் கருதி, அதை நீக்கி, மையச்சமூகத்தின் ஒற்றைக்குரலாக மொழியை நிறுவ முயலும் நிலையிலும், இன்று வளர்ந்து வருகின்ற நவீன சிந்தனைப் போக்கு சிறு கதையாடல்களின் பன்மைத்தன்மையை ஆதரிக்கின்ற நிலையிலும் எனது படைப்புகளில் எங்கள் கீழத்தஞ்சை பகுதியின் மொழி வழக்கைக்கையாள்கிறேன்.   

இம்மொழிநடை எனது படைப்புகளுக்கு ஈரத்தையும், உயிர்ப்பையும் வழங்குகிறது என அழுத்தமாக நம்புகிறேன். வட்டார வழக்கின் ஊடாகவே உலகின் அரிய படைப்புகளுக்கு இணையான படைப்புகளை தமிழில் உருவாக்க முடியும் எனவும் கருதுகிறேன். அவ்வகையில் ஆர்.சண்முகசுந்தரம், கு. அழகிரிசாமி, ஹெப்சிபா ஜேசுதாஸ், கி. ராஜ நாராயணன், பூமணி, பெருமாள்முருகன், இமையம், கண்மணி குணசேகரன் போன்ற படைப் பாளிகளை முக்கியமானவர்களாகக் கருதுகிறேன்.   

3   

எனது படைப்புகள் பெரும்பாலும் சமூகத்தின் விளிம்பிலுள்ள பிரிவினர் குறித்து அக்கறைப் படுபவை. இன்னும் குறிப்பாக பெண்ணின் பார்வையிலிருந்து பெண் குறித்த கரிசனங்களை முன்வைப்பவை. எனது படைப்பு மொழி வட்டார வழக்கில் அமைந்திருக்கிறது எனில் படைப்பின் கருப்பொருளாக பெண் திகழ்கிறாள். ஆணும் பெண்ணும் பரஸ்பர நட்புணர்வோடு, அன்போடு, விடுதலை உணர்வோடு இணைந்து வாழக்கூடிய லட்சிய பூர்வமான குடும்ப வாழ்க்கைக்கு பெண் என்கிற தன்னுணர்வு எனக்குத் தடையை ஏற்படுத்தவில்லை. ஆனாலும் நடைமுறை வாழ்க்கையில், குடும்ப அமைப்பில் பெண்ணின் இடம் ஆணுக்கு இணையானதாக இல்லாமல் இரண்டாம் நிலையில் உள்ளது வருத்தமளிப்பதாக இருக்கிறது.   

பெண் என்பவள் சார்ந்து வாழ்பவளாகக் கருதப்படுகிறாள். இந்நிலையில் எனது படைப்பு களில் நான் கவனப்படுத்துகிற எளிய கிராமத்துப் பெண்கள் ஆண்களின் துணையின்றி வாழக் கூடிய மனஉறுதி படைத்தவர்களாக இருக் கிறார்கள். அளம் நாவலில் தன்னையும் தனது மூன்று பெண்பிள்ளைகளையும் பிரிந்து வெளிநாடு சென்ற கணவன் இறுதிவரை என்ன ஆனான் என்று தெரியாத நிலையில் சுந்தராம் பாள் சோர்ந்து விடவில்லை. தற்கொலைக்கு முயலவில்லை. புரிந்துகொள்ள முடியாத வாழ்வின் விதி அவளுக்கு மீண்டும் மீண்டும் தோல்விகளையே பரிசாகத் தந்தபோதிலும் தொடர்ந்து போராடுகிற மனவலிமை உடைய வளாக விளங்குகிறாள். மனவலிமை என்கிற பிரயோகத்தை நெகிழ்வுடைய அர்த்தத்திலேயே இங்கு கையாள்கிறேன். ஏனென்றால் வலிமையுடைய பெண் எனும் பதத்தை ஏதோ இரும்பு மனுசி என்பதுபோல் புரிந்துகொள்ளக் கூடாது. நாவலில் சுந்தராம்பாள் காதல், தாய்மை, இரக்கம், துக்கம் எனும் உணர்வுகளின் தொகுப் பாக இருக்கிறாள். இவற்றுடன் கணவனால் கைவிடப்பட்டாலும் தனித்து வாழமுடியும் என்கிற மனப்பக்குவமும் சுய சார்பும் உடைய வளாக இருக்கிறாள்.   

இதுபோன்ற குடிகாரக் கணவனால் அல்லலுக்கும் அவமதிப்பிற்கும் உள்ளாகும் கற்றாழை நாவலின் மணிமேகலையும் சுயமதிப்பு, சுயச்சார்பு உடையவளாகத் திகழ்கிறாள். சுய மரியாதைக்கு பங்கம் ஏற்படுகிற போது கணவனை விட்டுப் பிரிந்து செல்கிறாள். ஆண்துணை இன்றியும் பெண்கள் தனித்து தங்களுக்குள் இணைந்து வாழ முடியும் என்று நிரூபிக்கிறாள்.   

மனையுறை மகளிர்க்கான மதிப்பீடுகள் மாறி வருகின்ற இன்றைய சூழலில் படைப்புத் தளத்தில் மாற்று மதிப்பீடுகளை யதார்த்தத்திற்கு உதவாத வறட்டுக் கற்பனைகளாக அன்றி எதிர்கால நிதர்சனங் களாக மாறக்கூடியவை எனும் நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடியவைகளாக எனது படைப்புகளை உருவாக்குகிறேன்.   

பெண் ஆண் உறவு நிலைக்கு அடுத்ததாக பெண்ணுக்கும் இயற்கைக்கும் உள்ள உறவு எனது படைப்புகளில் மிகுந்து காணப்படுவதாக உணர்கிறேன். பெண் என்கிற அளவில் என்னை நான் இயற்கையின் மகளாகக் கருதுகிறேன். இயற்கை ஒருபோதும் மனிதர்களைக் கைவிட்டு விடாது என்பதில் அழுத்தமான நம்பிக்கை கொண்டிருக்கிறேன். அதிகாரமும், பேராசையும் பிடித்த மனிதர்கள்தான் இயற்கையை அபகரிக்க, வெற்றிகொள்ள நினைக்கிறார்கள்.   

ஆனால் பெண் இயற்கையின் புதிர்களைத் தன் உள் உணர்வின் வழி அறிந்திருக்கிறாள். ஐம்பூதங் களாலும் ஆன தான் இயற்கையின் ஒரு பகுதியென அவள் அறிந்திருக்கிறாள். புயலை, வெள்ளத்தை, பஞ்சத்தை எதிர்கொள்கிற ரகசியத்தை இயற்கை அவளிடம் பகிர்ந்து கொள்வதை அளம், கீதாரி நாவல்களை வாசித்தவர்கள் உணரமுடியும்.

4   

எனது படைப்பு வெளி, படைப்பு மொழி இவை சிறுவயதிலிருந்து சுயேச்சையான அனுபவத்தின் வழியாக நான் பெற்றவை. எனது படைப்புகள் படைப்பின் நிமித்தமாக கள ஆய்வு மேற்கொண்டு எழுதப்பட்டவை அன்று. பிறந்த மண்ணிலிருந்து வெகு தூரத்தில் வசிக்க நேரிட்ட தால் அவ்வப்போது எழும் சந்தேகங்களை தீர்த்துக் கொள்வது, தகவல் பிழைகளைத் தவிர்ப்பது போன்றவற்றிற்காக களப் பயணங் களை மேற்கொண்டிருக்கிறேன். அப்போதும் ஒரு பார்வையாளராக, பேட்டி காண்பவராக எனது இயக்கம் இருப்பதில்லை.   

உறவினர்கள் வீடுகளில் தங்கியிருப்பது போல் உப்பு விளைவிப்பவர்கள், மீன் பிடிப்பவர்கள், ஆடு மேய்ப்பவர்கள் இவர்களுடன் தங்கியிருந்திருக்கிறேன். இவர்களுடனான எனது நெருங்கிய தோழமை உழைக்கும் மக்களின்பால் அன்பையும், மிகுந்த மதிப்பையும் மேலும் மேலும் உறுதி செய்வதாக இருக்கிறது. சிறு வயதில் வறுமையை அனுபவித்தவள் என்பதால் கண்ணீர், வியர்வை இவற்றின் முழுப் பொருளையும் அதற்குண்டான அத்தனை பரிமாணத்துடன் அறிந்து வைத்திருப்பதால் இவர்களுடனான நெருக்கம் எனக்கு உளப் பூர்வமான தாகவும் இருக்கிறது.   

கிராமிய மதிப்பீடுகள் சார்ந்த உழைக்கும பெண்கள் வாழ்க்கையில் பாலியல் வெளிப்பாடு என்பது இலைமறை காய் போன்றது. அவர்களது மீறல்கள், கேளிக்கைகள் என்பவற்றை அதற் குண்டான தொனியிலேயே வெளிப்படுத்துகிறேன். பெண் எழுத்து என்பது முற்றிலுமாகப் பாலியலை மையமாகக் கொண்டு அமையவேண்டியது அவசியமில்லை என்பது எனது எளிய அபிப்பிராயம். பாலியல் பிரச் சனைகள் பெண் எழுத்துக்கு வலுசேர்க்கும் ஒரு துணைக்கூறுதான். வலிந்து அவற்றைத் திணிப்பதில் எனக்கு விருப்பமில்லை.

5   

எழுதுவதற்குச் சாதகமான காரணிகள் ஏதுமில்லாத குடும்பப் பின்னணியிலிருந்து வந்த எனக்கு வாசிப்பு வேட்கையின் மூலமே இலக்கிய ஈடுபாடு ஏற்பட்டது. விளையாட்டாகத் தொடங்கிய எனது படைப்பு முயற்சியில் நாவல் கட்டுமானம், நாவல் அழகியல் போன்றவை என் உண்ளுணர்வின் வழிகாட்டுதலாலேயே அமைந் திருந்தது. ஆனால் தொடர்ந்து எழுதவேண்டும் என தீர்மானித்தபோது நாவல் கலை குறித்து கவனிக்கவும் கற்கவும் தொடங்கிவிட்டேன்.  

தமிழ்ச் சூழலில், யதார்த்த வகை மாதிரி புதினங்களில் இன்னும் சாதிக்க நிறைய உள்ளதாகவே எண்ணுகிறேன். தங்கள் கதையாடும் உரிமை மறுக்கப்பட்ட எத்தனையோ சமூகத்தினர் இன்று இலக்கிய வெளிக்குள் பிரவேசித்திருக்கின்றனர். இவர்களை வரவேற்பதும் அங்கீகரிப்பதும் சமூக நீதியிலும் இலக்கியத்திலும் அக்கறை கொண்டிருப்ப வர்களின் கடமையாகும். விமர்சனங்கள் இவர்களது குறைபாடுகளை நேர்மறையான தொனியில் சுட்டிக்காட்டி இவர்களுக்குப் புதிய பார்வைகளை, புதிய பாதைகளைக் காட்டுவதாக அமைய வேண்டும். மாறாக இவர்களை இலக்கியப் புலத்திலிருந்து வெளியேற்றுவதற்கான தந்திரமாக விமர்சனங்கள் இருக்கக்கூடாது.  

என்னைப் பொறுத்த அளவில் நான் மதிக்கும் என்னுடைய முன்னோடிப் படைப்பாளிகள் மற்றும் சிந்தனையாளர்கள் எனது படைப்புகளை வாசித்துப் பொறுப்புணர்வோடு அபிப்பிராயங்கள் தெரிவித்து வருகின்றனர். இத்தகைய அபிப் பிராயங்கள் எனக்குத் தொடர்ந்து இயங்குவதற் கான ஊக்கத்தை அளிக்கின்றன. எனது சமகாலப் பெண் எழுத்தாளர்களின் புத்தெழுச்சியான இயக்கமும் நான் எழுதுவதற்கு உற்சாகம் அளிப்பதாய் இருக்கிறது.                            

சுருக்கமாக எனது படைப்பு அழகியலைத் தொகுத்துக் கூறினால் சமூகத்தின் விளிம்பு நிலை மனிதர்கள், பெண்கள், உழைக்கும் களங்கள், இயற்கை இவை படைப்புப் பொருளாகவும், கீழத்தஞ்சை வட்டார வழக்கு நாவல் கட்டு மானத்தின் மொழிநடையாகவும், நாவல் வகைமையில் யதார்த்தவகையாகவும் அடையாளப் படுத்தலாம். இப்படி வசதி கருதி யாதார்த்தவாத வகைமாதிரியாக எனது படைப்புகள் இனங்காணப்பட்டாலும் அவை முற்றிலுமாக யதார்த்தத்தின் பிரதிபலிப்புகள் மட்டுமே அல்ல. நிலவுகின்ற யதார்த்தத்தைக் கடந்து நாம் விரும்புகின்ற யதார்த்த உலகை எனது படைப்புகளின் வழியாகக் கட்டமைக்கிறேன். அக்கனவு அல்லது லட்சிய யதார்த்தம் விரைவில் வசப்படும் என உளப்பூர்வமாக நம்புகிறேன்.   

குறிப்பு: 23.09.2006ஆம் நாள் சென்னைப் பல்கலைக் கழக தமிழ்த் துறையில் நடைபெற்ற கு.அழகிரிசாமி பிறந்தநாள் விழா கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை.

Pin It