"நமது நிலத்தைக் காக்கும் இந்தப் போராட்டத்தில் ஒன்று நாம் வென்றாக வேண்டும். அல்லது நாம் கொல்லப்படுவோம். ஏனென்றால் தப்பித்து ஓடுவதற்கு நமக்கு இடமில்லை."
 
- மண்ணின் மக்கள், சுற்றுச்சூழலை காப்பாற்ற உயிரிழந்த கவிஞர் கென் சரோ விவா
 
இயற்கை வளங்கள் செழித்து நிரம்பியிருக்கும் ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த நாடுகளில் ஒன்று நைஜீரியா. இந்த நாட்டைவிட அங்குள்ள நைஜர் பாசனப் பகுதி உலகப் புகழ்பெற்றது. காரணம் அங்கு கிடைக்கும் பெட்ரோல். வெள்ளைக்காரர்கள் விட்டுவைப்பார்களா? இப்பகுதியில் கிடைக்கும் பெட்ரோலை உறிஞ்சிக் கொழுக்க ஆரம்பித்தது, இன்று உலகெங்கும் கடை பரப்பியுள்ள ஷெல் நிறுவனம்.

அப்பகுதியில் அதிகமாக வாழும் பழங்குடி மக்களின் தலைவராகச் செயல்பட்ட கவிஞர் கென் சரோ விவா, சுற்றுச்சூழல்-மனித உரிமைப் போராளி. தனது படைப்பாக்கத் திறனை எழுத்தாக வடித்தாலும், சமூகம் மீதிருந்த விமர்சனப் பார்வை காரணமாக பொறுப்புள்ள மனிதராகவும் செயல்பட்டார்.

ஓகோனி மக்களின் பாரம்பரிய நிலத்தில் அமைந்த எண்ணெய் வயல்களில் ராயல் டச் ஷெல் நிறுவனம் 1958 ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் எடுக்க ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 60,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பெட்ரோலை உறிஞ்சி எடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதற்கு பதிலாக, இந்தப் பகுதியில் வாழும் 5.5 லட்சம் விவசாயிகள், மீனவர்களுக்குக் கிடைத்தது சீரழித்து போன சுற்றுச்சூழல்தான். வளமான மண்ணாக இருந்த அவர்களது வயல்கள் எண்ணெய் கசிவாலும் அமில மழையாலும் மலடாகின. எண்ணெய்க் கசிவு அதிகரித்தது. அவை ஒவ்வொன்றும் ஒரு கால்பந்து மைதானம் அளவுக்கு இருந்தன. அந்த மக்களின் கண்கள் முன்னாலேயே மீன்களும் காட்டுயிர்களும் இறுதிமூச்சு விட்டன.

"ஓகோனி பழங்குடிகள் வாழ்வுரிமை இயக்கத்தை" கென் சரோ விவா 1990 ஆம் ஆண்டு நிறுவினார். எண்ணெய் மூலம் பெற்ற வருமானத்தில் தங்களுக்கான பங்கைத் தர வலியுறுத்தியும், அரசியல் சுயநிர்ணய உரிமை கோரியும் 3,00,000 ஓகோனி மக்களுடன் 1993 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கென் அமைதி நடைபயணம் மேற்கொண்டார்.

ஷெல் நிறுவனத்துக்கு தொடர் எதிரிப்பு தெரிவித்து வந்ததன் காரணமாக, நான்கு ஓகோனி தலைவர்கள் கொல்லப்பட்ட பிரச்சினையில் கென் சரோ விவா 1994 மே மாதம் கைது செய்யப்பட்டார். உள்ளூர் அரசுடன் சேர்ந்து கொண்டு ஷெல் நிறுவனம் தொடங்கிய வஞ்சக ஆட்டத்தின் முதல் பாகம் இது. "கென்னை சிறைபடுத்தியிருப்பது மனசாட்சியை சிறைபடுத்தியது போன்றது" என்று சர்வதேச மனிதஉரிமை அமைப்பான ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் கூறியது. அதேநேரம் ஓகோனி நிலப் பகுதிகளை நைஜீரிய ராணுவம் கைப்பற்றியது. வன்முறையும், குற்ற நடவடிக்கைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டன.

ராணுவ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, 1995 அக்டோபர் 11ந் தேதி அன்று கென் சரோ விவாவும் அவரது நண்பர்கள் எட்டு பேரும் தூக்கிலிடப்பட்டனர். நாட்டை விற்றவர்கள் யார் என்று அம்பலப்படுத்தியதன் காரணமாகவே அவர் பலியாக்கப்பட்டார்.

நைஜீரிய சர்வாதிகாரி சனி அசா 1998 ஆம் ஆண்டு திடீரென்று இறந்தாலும், ஓகோனி பகுதி இப்பொழுதும் ராணுவ கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. தற்போது வெளிநாட்டில் வாழும் கென்னின் மகன் கென் விவா, இளைய சகோதரர் மருத்துவரான ஓவன்ஸ் ஓகோனி மக்கள் சார்பில் போராட்டங்களை தொடர்ந்து வருகின்றனர். "சிறைக்குள் இருந்தாலும் வெளியில் இருந்தாலும் கொள்கைகளுக்காக வாழ்பவன் நான். எனது கொள்கைகள் வாழும்" என்று கென் ஒரு முறை கூறினார். அவரது கொள்கைகள் வாழும், சந்தேகமில்லை.

- குக்கூ அறிவியக்கம், திருவண்ணாமலை