ரீ ஸ்டோர் 

தமிழகம் முழுவதும் இயற்கை வேளாண் முறையில் பயிரிடப்பட்ட விளைபொருள் விற்பனையகங்கள் பெருகி வருகின்றன. சென்னையில் இயற்கை வேளாண் முறையில் விளைந்த விளைபொருட்களை விற்பனை செய்து வருகிறது "ரீ ஸ்டோர்". பசுமைப் புரட்சியின் வரலாறு பற்றி எழுதிய சங்கீதா சிறீராம் இந்தக் கடையை நடத்தி வருகிறார். இயற்கை வேளாண் முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், அரிசி வகைகள், தானியங்கள், கோதுமை, கேழ்வரகு மாவு, எண்ணெய், வாசனை பொருட்கள், வெல்லம், இயற்கை சாயம் ஏற்றப்பட்ட துணிகள், பைகள், சோப்புகள் உள்ளிட்டவை இங்கு கிடைக்கும். இந்தக் கடையில் ஞெகிழிப் பைகளில் கட்டிக் கொடுப்பது தவிர்க்கப்படுவதால், வாடிக்கையாளர்களே பைகளை எடுத்து வர வலியுறுத்தப்படுகிறது. 

இந்தக் கடையில் செவ்வாய், சனிக்கிழமைகளில் மாலை 4 முதல் 7 மணி வரை சந்தை நடைபெறும். அப்பொழுது காய்கறி போன்ற புதிதாக விளைந்த பொருட்கள் கிடைக்கும். மற்ற நாட்களில் உடனடியாக அழுகிப் போகாத பொருட்களை வாங்கலாம். முகவரி: எண் 27/10, 2வது மெயின் ரோடு, (மருத்துவர் ஏ.ஜி. ரமேஷ் கிளினிக் எதிர்ப்புறம்), கஸ்தூரிபா நகர், அடையாறு, சென்னை - 20 

கூடுதல் விவரங்களுக்கு: 98844 09566 

இணையதளம்: http://restore.org.in 

தமிழ்பேர்ட்ஸ் யாகூ இணையக் குழு

"தமிழ்பேர்ட்ஸ்" என்ற பெயரில் தமிழக பறவைகள், தமிழக பறவை ஆர்வலர்கள் செய்திகளை பரிமாறிக் கொள்ளும் யாகூ இணையக் குழு செயல்பட்டு வருகிறது. ஆந்திரத்திலுள்ள ரிஷிவேலி பள்ளி ஆசிரியரும் பறவை நிபுணருமான சாந்தாராம் இந்த இணையக் குழுவை ஒருங்கிணைத்து வருகிறரார். இந்த இணையக் குழுவில் சேர யாகூ மின்னஞ்சல் முகவரி ஒன்று தொடங்கி, குழுவில் பதிவு செய்து கொள்ளலாம். பறவைகளைப் பற்றி மட்டுமின்றி, காட்டுயிர்கள், இயற்கை சார்ந்த அனைத்து தகவல்கள், பறவைகள் வலசை வருதல், சந்தேகங்கள், அனுபவங்கள் என அனைத்தையும் பகிர்ந்து கொள்ளவும் இயற்கை தொடர்பாக நிறைய கற்றுக் கொள்ளவும் உதவும் இணையக் குழு இது. 

டவுன் டு எர்த்

நாடாளுமன்றத்தில் கோக கோலா, பெப்சி குளிர்பானங்களில் பூச்சிக்கொல்லி இருப்பது தொடர்பான விவாதமும், அது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கும் அறியப்பட்டுள்ள தில்லியிலுள்ள "அறிவியல்-சுற்றுச்சூழல் மையம்" (சென்டர் பார் சயின்ஸ் அண்ட் என்விரான்மென்ட்), "டவுன் டு எர்த்" இதழை நடத்தி வருகிறது. இந்த இரண்டையும் நிறுவியவர் சுற்றுச்சூழல் போராளி மறைந்த அனில் அகர்வால். டவுன் டு எர்த் 400 இதழ்கள் எண்ணிக்கையை சமீபத்தில் கடந்தது. சுற்றுச்சூழல், சமூக அக்கறை சார்ந்து தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் டவுன் டு எர்த் இதழ், சுற்றுச்சூழல்-சுகாதார அக்கறைகளை பேசுபவர்கள் மத்தியில் மட்டுமின்றி, நம் ஒவ்வொருவர் கையிலும் வைத்திருக்க வேண்டிய விழிப்புணர்வு ஆயுதம். 

2) அறிவிப்பு

அடுத்த இதழில் இருந்து நீங்களும் பங்கேற்கலாம்

பாலம்

இப்பகுதியில் சூழலுக்கு இணக்கமாகப் பணிபுரிவோர் தங்களைப் பற்றிய தகவல்களையும், சூழலுக்கு இணக்கமாகச் செயல்பட விரும்புவோர் தேவைப்படும் தகவல்களையும் இலவசமாகப் பரிமாறிக் கொள்ளலாம். 

கேள்வி-பதில்

சூழல் தொடர்பான கேள்விகளை பூவுலகு முகவரிக்கு எழுதி அனுப்புங்கள். துறை சார்ந்தவர்களிடம் கேட்டு பதில்கள் பிரசுரிப்போம்.