THE MIRACLE WATER VILLAGE

நீர் ஐம்பெரும் பூதங்களில் முதலாவதாக உச்சரிக்கப்படுவது. உலகின் முதல் உயிரி நீரலிருந்து பரிணமித்து நிலத்திற்கு வந்துள்ளதை நவீன அறிவியல் மெய்ப்பித்துள்ளது. இதன் காரணமாகவே நிலத்திற்கு முன்பாக நீர் வைக்கப்படுகிறது. நீருக்கும் தொல்குடி மனிதனுக்குமான உறவானது சொல்லில் அடங்காதது.

ஆனால் இன்றைய நவீன வாழ்வில், மையப்படுத்தப்பட்ட அரசு அதிகாரத்தில், தொழிற்துறை சந்தைப் பொருளாதாரத்தை மட்டுமே கண்மூடித்தனமாக அரசு ஊக்குவிக்கிறது. இதன் காரணமாக எழுபது விழுக்காட்டினருக்கு மேலாக வேளாண்குடிகள் வாழும் நாட்டில்,வேளாண்மைக்கான நீர் மேலாண்மைத் திட்டங்கள் என்றுமே அரசுக்கு கசக்கிறது.

புவி வெப்பமயமாதல், காடுகளை அழித்தல், ஞெகிழி பயன்பாடு என எத்தனையோ காரணங்கள் சொல்லப்பட்டாலும் நீர்த் தட்டுப்பாட்டுக்குக் கிராமங்கள் மீதான நகரங்களின் ஆக்கிரமிப்புகளே அதிகப் பங்காற்றுகின்றன.

அதாவது, நகரத்தின் நீர்த்தேவைகள் அனைத்தும் கிராமத்திலிருந்தே உறிஞ்சி எடுக்கப்படுவதும் நகர்மயமாக்கல் காரணமாக கிராமங்கள் வேகமாக புறநகரங்களாக மாறிவருவதை நாம் கண்ணுற்று வருகிறோம். இதற்கு நாம் பல நடப்புச்சான்றுகளை காட்ட முடியும். பத்து ஆண்டுகளுக்கு முன்பு விவசாய பூமியாக இருந்த நிலங்கள் பெரும்பாலும் இன்று தொழிற்சாலைகளாக, வணிகக் கட்டிடங்களாக, குடியிருப்புகளாக மாறிப் போயுள்ளன. இதன் அடிப்படைக் காரணம் ஆராய்ந்து பார்த்தால் விவசாயத்திற்குத் தேவையான நீர் ஆதாரங்கள் காணாமல் போய்விட்டதை உணரலாம்.

miracle water village 600

“நாம கூட பொழச்சிக்கலாம், பாவம் இந்த கன்டும் பசுவும், தண்ணியில்லாது என்ன பண்ணுங்க” என எண்ணிக் கிடைத்த விலைக்கு விற்றுவிட்டு நிலங்களையும் தொழிற்சாலைகளுக்கு விற்று விட்டு நகரங்களில் கட்டுமானப் பணிக்கும் குறைந்த மற்றும் நிரந்தரமற்ற பணிகளுக்கும் விவசாயிகள் பாதை மாறிப் போகின்றனர்.

இதே நிலையில் இருந்த மகாராஸ்டிர மாநிலத்தின் ஹைவேர் பசார் ((Hiware Bazar) கிராமத்தினை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த ஆவணப்படம் வலைதளத்தில் காணக்கிடைக்கப் பெற்றேன். “The Mircale Water Village” (அதிசய தண்ணீர் கிராமம்) எனும் இந்த ஆவணப்படம் பதிமூன்று நிமிடங்களில் நீர் மேலாண்மை குறித்தும் நீருக்காக அந்த கிராம மக்கள் அரசை எதிர்பார்க்காமல் வேளாண்மையைத் தொடர்ச்சியாக முன்னெடுக்கச் செய்த முயற்சிகளையும் திறம்பட காட்சிப்படுத்திப் பேசுகிறது.

பதினைந்து குறுக்கம்(ஏக்கர்) நிலம் வைத்திருந்தும் சில காலங்களுக்கு முன்பு நீர் மேலாண்மை புறக்கணிப்பால் வேளாண்மைமேல் நம்பிக்கை இழந்து மும்பைக்கு ஐம்பது ரூபாய் தினக் கூலியாக இடம்பெயர்ந்த ஒரு விவசாயின் குரலோடு துவங்குகிறது “The Mircale Water Village”. 35 ஆண்டுகளுக்கு முன்பாக மும்பையை விட்டு தனது தாய் மண்ணிற்குத் திரும்பிய அதே விவசாயி ‘யாதங் தாடா தாங்கே’, வறட்சியோடு போரிட்டு மழை நீரைப் பெற்ற விவரங்களை விவரிக்கிறார். கிராம மக்களின் ஒற்றுமையே இந்த வெற்றியைச் சாத்தியப்படுத்தியதாக மெய் சிலிர்க்க வைக்கிறார்.

நகரப்பெயர்ச்சி முக்கிய பிரச்சனையாக இருக்கப் பெற்ற இங்குக் கிராமத் தலைவர் போபட்ராவ் பவார் அவர்களின் தொடர்ச்சியான வழிகாட்டுதல்களால் நீர் மேலாண்மையை நாமே முன்னெடுக்கலாம் என்ற முடிவுக்கு மக்கள் வந்தனர்.அதாவது, மழை நீரை சேமிப்பதன் மூலம் அதைச் செயல் படுத்தத் தொடங்கினர். 1989 இல் தங்களது இப்பணிகளை கூட்டாக இக்கிராம மக்கள் துவங்கியுள்ளனர். எப்போதுமே மழைக் காலங்களில் மட்டுமே வேளாண்தொழிலை மேற்கொண்டு வந்த இக்கிராமத்து வேளாண்குடிகள் தற்போது நான்காவது போகத்திற்குத் தயாராகி வருகின்றனர்!

மலையில் இருந்து வழிந்தோடும் மழை நீரைத் தடுத்து நிறுத்த கற்களைக் கொண்டு தடுப்பணை ஏற்படுத்தி அங்கே மரங்களை நட்டு பராமரிக்கின்றனர். இதனால் நான்கு லட்சத்து இருபதாயிரம் அகழி போன்ற நீண்ட குழிகள் உருவாகி, நீர் தேங்கி, மலை இடுக்குகள் மூலம் நிலத்தடி நீராக சேமிக்கப்படுகிறது. இதன் மூலம் மலையில் பத்து லட்சம் மரங்கள் வளர்ந்துள்ளன. நிலத்தடி நீர் மட்டம் 60 அடியிலிருந்து 15 அடியாக உயர்ந்துள்ளது. சோளம் போன்ற மானாவாரிப் பயிர்களைப் பயிரிட்டவர்கள் இன்று 250 முதல் 300 மில்லி மீட்டர் மழை பெறுவதால் வெங்காயம், உருளைக் கிழங்கு போன்றவற்றையும் பயிரிடத் துவங்கியுள்ளனர்.

1992 இல் 40 ஹெக்டேராக இருந்த நீர்ப்பாசனம் பெரும் அளவாக 2009 இல் 550 ஹெக்டேராக உயர்ந்துள்ளது. இதுபோக சொட்டு நீர்ப் பாசானம் மூலமாக நாற்பது விழுக்காட்டுக்கும் மேலாக நீர் சேமிக்கப்பட்டுள்ளது.

மாட்டுத்தீவன உற்பத்தி 2000இல் 100 மெட்ரிக் டன் என இருந்தது. 2009இல் 8000 மெட்ரிக் டன் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் 1992இல் நாளுக்கு 150 லிட்டராக இருந்த பால் உற்பத்தி இந்த கிராமத்தில் 4000 லிட்டராக அதிகரித்துள்ளது.

நீர் மேலாண்மை என்ற ஒற்றைச் செயல் இன்று ஹைவேர் பசார் கிராமத்தினை விவசாயத்தில் மட்டுமல்லாது அனைத்து தேவைகளிலும் தன்னிறைவு அடையச் செய்துள்ளதை இந்த ஆவணம் தெளிவாக்கியுள்ளது. இன்று இந்த கிராம மக்கள் ஏனைய கிராம மக்களுக்கும் வழிகாட்டியாகத் திகழ்கின்றனர். இந்த கிராமத்தினை ஆவணப்படுத்திய ரின்ட்டு தாமஸ் மற்றும் சுஷ்மிட் ஹோஷ் ஆகியோரது முயற்சி மகத்தானது.

இது போன்ற கிராமங்கள் நமது பகுதிகளிலும் உருவாகிட இந்த ஆவணப்படம் ஒரு வழிகாட்டியாக உள்ளது என்றால் அது மிகையல்ல.

https://www.youtube.com/watch?v=9hmkgn0nBgk