தமிழகத்தில் மனிதர்கள் வாழ இயலாத நகரங்கள் பெருகிவிட்டன. ராணிப்பேட்டை, ஆம்பூர் இந்த வரிசை யில் கடலூரும் அடங்கும். நீர், நிலம், நெருப்பு, ஆகாயம், காற்று ஐம்பூதங்களும் மாசுபட்ட நகரமாக கடலூர் விளங்குகிறது.

1982இல் சிப்காட் தொடங்கப்பட்டது. இயற்கையை அழித்து சுற்றுச்சூழலை சேதப்படுத்தும் சிப்காட் முழுமையாக மக்களின் வாழ்வை சீர்குலைக்கத் தொடங்கியது. அழகிய கிராமமாகவும் விளைநிலங்கள் மிகுந்த இடங்களாகவும் இருந்தவை சிப்காட்டிற்காக ஆக்கிரமிக்கப்பட்டன. நேரடியாக மருந்துக் கம்பெனிகள், ரசாயனங்கள், பூச்சிக்கொல்லிகள், சாயங்கள், பெயிண்ட் கம்பெனிகள், பிவிசி பைப்புகள் என மிகவும் அபாயக ரமான திட்டங்கள் விளைநிலங்களில் உருவாக்கப்பட்டன.

அரசின் வகைப்படி மிகவும் அபாயகரமான ‘ரெட்’ வகை தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன. முதல் கட்டமாக 53 யூனிட்டுகள் உருவாக்கப்பட்டன. இதற்காக பகுதி 1இல் 519 ஏக்கர் நிலமும் பகுதி 2இல் 200 ஏக்கர்களும் உருவாக்கப்பட்டன. பகுதி 3க்கான விரிவாக்கமும் நடைபெறுகிறது.

இந்த பயங்கரமான தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை அரசு நிறுவனங்கள், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தனியார் தொண்டு நிறுவனங்கள், நீரி போன்ற அமைப்புகள் எண்ணற்ற அறிக்கைகளை கொடுத்துள்ளன. ஆனால் இன்று வரை எந்த அறிக்கைகளும் கவனத்தில் கொள்ளப் பட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

53 யூனிட்டுகளில் 20 யூனிட்டுகள்தான் தற்சமயம் இயங்குகின்றன. மீதி 33 யூனிட்டுகளும் இயற்கையின் சுற்றுச்சூழலை அழித்துவிட்டு இன்று அவை வெளியேறி விட்டன. ஏனெனில் இவ்விடங்கள் தொழிற்சாலைகளுக்கு குத்தகைக்குவிடப்பட்டுள்ளன. தங்களுடைய சொந்தப் பிரச்சனைகள் காரணமாகவே இத்தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. அரசாங்க நடவடிக்கையால் அல்ல.

அதிகபட்ச அழிவு என்பது குடிநீரில்தான். எல்லா வண்ணங்களிலும் கடலூரில் நிலத்தடி நீர் மாறிவிட்டது. தொழிற்சாலைகளுக்குத் தண்ணீர் தட்டுப்பாடு வரும் என்று அரசு மறைமுகமாக நெல் விவசாயத்தை விடச் சொல்கிறது. விவசாய வங்கிகளில் தண்ணீர் மோட்டார் பயன்படுத்து வதற்கு கடன்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன.

தமிழகத்தில் சுற்றுச்சூழலை அழித்ததற்கும் குடிநீரை பாழாக்கியதற்கும் கடலூர் சிப்காட்டிற்கே முதல் பரிசு.