புதிதாக ஆட்சிக்கு வந்தவர்கள், ஆட்சிக்கு வரும் முன் ‘தி.மு.க அரசு நதிகளைச் சுரண்டுகிறது. மணலைக் கொள்ளையடிக்கிறது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இவையனைத்தும் தடுத்து நிறுத்தப்படும்’ என்று தேர்தல் அறிக்கையிலே சொன்னார்கள். தேர்தல் நடைபெறும் காலகட்டங்களில் மட்டுமே நதிகளில் யாரும் மணலைக் கொள்ளையடிக்காமல் இருந்தார்கள். அ.தி.மு.க ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்களிலேயே மீண்டும் மணலைக் கொள்ளையடிக்கத் தொடங்கிவிட்டார்கள். மணல் கொள்ளையை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றாலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் தோழர் நல்லகண்ணு தலைமையில் தாமிரபரணி நதியில் பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டு, வழக்கு தொடுக்கப்பட்டு மணல் கொள்ளை நிறுத்தப்பட்டது. பாலாற்றிலும் மணல் கொள்ளை நிறுத்தப்பட்டது. ஆனால், இவையனைத்துமே வெறும் கண்துடைப்பு என்று இப்பொழுது உறுதியாகிவிட்டது.

மழை பெய்து ஆறுகளில் சிறிதளவு தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது. அப்பொழுதுகூட, இந்த கொள்ளையர்கள் மணலைக் கொள்ளை அடிப்பதை நிறுத்தவில்லை. மணலிலிருந்து தண்ணீர் சொட்டச் சொட்ட ரோடுகளில் நூற்றுக்கணக்கான லாரிகள் பாலாற்றிலிருந்து சென்று கொண்டிருக்கின்றன. கேட்பதற்கு யாருமே இல்லை. யாரோ ஓர் அதிகாரியோ, பொதுமக்களோ இதைத் தட்டிக் கேட்டால் அவர்கள் கொல்லப்படுகிறார்கள். கடந்த 10 வருடங்களில் மட்டும் 20க்கும் மேற்பட்ட போராளிகள்மீது மணல் லாரிகளை ஏற்றிக் கொன்றிருக்கிறார்கள். உண்மையில் இந்த மணல் மாஃபியாக்கள்தான், ஆட்சிகளை நடத்துகிறார்கள். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இவர்கள் மணல் கொள்ளையை நிறுத்தப் போவதில்லை. அந்த அளவிற்கு இவர்கள் அதிகாரமும், செல்வாக்கும் உள்ளவர்களாக இருக்கிறார்கள். உயிரோடு ஓடிக் கொண்டிருக்கும் நதிகளை அரசும், அதிகாரிகளும் மக்களும் இப்போது ‘மணல் குவாரிகள்’ என்று அழைக்கத் தொடங்கிவிட்டார்கள். நதிகள், காடுகள் இவை யாவும் இனி நாம் கம்ப்யூட்டர் அனிமேஷன்களிலோ அல்லது திரைப் படங்களிலோ அல்லது கனவிலோ மட்டும்தான் காண முடியும் என்ற நிலை வெகு தொலைவில் இல்லை!

ஆற்றல் மிக்க தலைமை, போற்றத்தக்க சாதனை.

Pin It