பேராசிரியை வாங்காரீ மாத்தை, பசுமைப் பகுதி இயக்கத்தின் (Greenbelt) நிறுவனர். சுற்றுச்சூழல் சேவைகளுக்காக 2004ஆம் ஆண்டில் அவருக்கு நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது. சமீபத்தில் காலமான அவரது பேட்டி இங்கு மொழிபெயர்த்து தரப்பட்டுள்ளது. Resurgence என்ற சூழலியல் ஆங்கில இதழின் ஆசிரியர் சதீஷ்குமார், வாங்காரீ மாத்தை உடன் உரையாடினார். அந்த உரையாடல்:

பூவுலகை மீண்டும் காடாக்குவதற்கு கென்யாவின் வாங்காரீ மாத்தை தொடங்கிய பணியை நாம் தொடர வேண்டும், இதன் மூலம் வளிமண்டலத்தில் அதிகரித்துவிட்ட கார்பனை கிரகிக்க வைப்பதுடன், அனைவரும் ஆரோக்கியமாக வாழ்வதற்கான உலகையும் உருவாக்க முடியும்.

காலநிலை மாற்றத்தின் ஆபத்துகள் பற்றி மனித குலத்துக்குத் தெரிய வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, மரக்கன்றுகளை நட வேண்டியதன் அவசியத்தை வாங்காரீ மாத்தை வலியுறுத்தி வந்தார். தனது தாய்நாடான கென்யாவில் மேற்கத்திய பாணி வளர்ச்சி முறையை கையாண்டதால் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வை சீரமைக்கவும், மக்களின் மரபுவழி அறிவு வளத்தை அங்கீகரிக்கும் வகையிலும் அவர் பணிகளை மேற்கொண்டார். இதன் அடிப்படையிலேயே மரங்களை வளர்க்க வேண்டும் என்று அவர் கூறினார். தனது குழந்தைப் பருவத்தில் மாசுபடாத ஓர் ஓடையும் வீட்டுக்கு அருகே இருந்த காடும் அழிக்கப்பட்டதால் ஓடை நீரின்றி வறண்டு போனதையும், எல்லாம் கட்டாந்தரையாக மாறியதையும் நேரடியாகப் பார்த்தார். இதன் காரணமாக சூழலியலை தனது உள்ளுணர்வால் வாங்காரீ புரிந்துகொள்ளத் தொடங்கினார். இயற்கை ஆரோக்கியமாக இருந்தால்தான், மக்கள் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்பதை அவர் உணர்ந்து கொண்டார். உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் இடையிலான நெருக்கமான பிணைப்பு பற்றிய இந்த ஆழமான புரிதல்தான், கென்யாவில் பசுமைப்பகுதி (Greenbelt) இயக்கத்தைத் தொடங்கக் காரணமாக இருந்தது. இந்த இயக்கம் லட்சக்கணக்கான மரக் கன்றுகளை இதுவரை நட்டுள்ளது. பசுமைப்பகுதி இயக்கத்தை மாதிரியாகக் கொண்டு, அதை உலகம் முழுவதும் பிரதி செய்யலாமா என்று நான் கேட்டேன்.

"மரங்கள் கார்பனை கிரகித்துக் கொள்ளும் என்ற விஷயம் உண்மையிலேயே ஓர் அற்புதம்தான். ஆனால் நாங்கள் மரக்கன்றுகளை நட ஆரம்பித்த காலத்தில், அது கார்பனை கிரகித்துக் கொள்வதை மிகப் பெரிய விஷயமாக நினைக்கவில்லை. இப்போது காலநிலை மாற்றத்தைப் பற்றி சிந்திக்கும்போது, காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதில் மரங்கள் மிகப் பெரிய அளவில் துணைபுரியும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.” வாங்காரீ மாத்தை நோபல் பரிசு பெற்ற பிறகும், உலகில் எஞ்சியுள்ள காடுகளைக் காக்க பல்வேறு குறிப்பிடத்தக்க பணிகளை செய்த பிறகும், அவர் வலியுறுத்தி வரும் செய்தி ஏன் கேட்க வேண்டியவர்களின் காதுகளுக்கு சென்று சேர மாட்டேன் என்கிறது? ஆரோக்கியமான சுற்றுச்சூழல், மக்களின் ஆரோக்கியம், பொருளியல் ஆகிய மூன்றுக்கும் இடையே உள்ள தொடர்பை “படித்த” அரசியல்வாதிகள், பொருளியல் நிபுணர்கள் ஏன் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறார்கள்?

“இந்தப் பிரச்சினைக்கான ஒரு காரணம் என்னவென்றால், காலநிலை மாற்றம் பற்றிய அறிவியலின் அஸ்திவாரம் ரொம்பவும் அரூபமாக இருக்கிறது. இதனால் பெரும்பாலான மக்கள் அதை புரிந்துகொள்ள முடியாமல் போகிறது. மக்கள் புரிந்துகொள்ளும் மொழியில் அறிவியலை உருமாற்ற வேண்டும். அப்போது பூமி ஆபத்தில் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளும் ஒரு மக்கள் இயக்கத்தை உருவாக்கி, அதை காப்பாற்றுவதற்கான செயல்பாடுகளை, சரியான, நீண்டகால நடவடிக்கையை எடுக்க அரசியல்வாதிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்த முடியும். நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் இயல்பைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், முதலில் இரண்டு விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். முதலில், நமது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். நாம் எதை முன்மொழிகிறோமோ, அதை பின்பற்றவில்லை என்றால், யாரும் நாம் சொல்வதை கேட்க மாட்டார்கள். உலகம் எப்படி மாற வேண்டும் என்று விரும்புகிறோமோ, நாம் அப்படி மாற வேண்டும். இரண்டாவதாக, நமது அரசுகள் நடவடிக்கை எடுக்கவும் பொறுப்புடைமையாகச் செயல்படவும் நாம் நெருக்கடி தர வேண்டும். அதன் மூலம் கொள்கைரீதியாகவும், பொருளியல் கட்டமைப்பு வழியாகவும் அரசு மாற்றங்களைக் கொண்டு வர முடியும்.”

“மக்களின் கூட்டு மனசாட்சி அரசியல்வாதிகளின் மனதை மாற்றும் என்று நான் நம்புகிறேன். மக்கள் கருத்துக்கு அரசியல்வாதிகள் கட்டாயம் செவி சாய்ப்பார்கள். தெளிவான கருத்துகளின் அடிப்படையில் மக்கள் கருத்து உருவாக்கப்படாமல் இருந்தால், அரசியல்வாதிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்த முடியாது. எனவே, அரசியல்வாதிகள், மக்கள் என இரு தரப்பினருக்குமே இவற்றை எடுத்துச் செல்வது மிக முக்கியமாகிறது. எவ்வளவு தூரம் மக்கள் அறிவியலை புரிந்துகொள்ள வைக்கப்படுகிறார்களோ, எவ்வளவு தூரம் மக்கள் பொறுப்புடைமையுடன் இருக்கிறார்களோ, எவ்வளவு தூரம் மாற்றத்தை நோக்கி மிகப் பெரிய அளவில் மக்களையோ அல்லது இயக்கத்தையோ கட்டமைக்கிறோமோ, அவ்வளவு தூரம் அரசுகளை அரசியல்ரீதியாக பொறுப்புடைமை ஆக்க முடியும். பொருளியல் ரீதியாகவும் செயல்பட வைக்க முடியும்.”

நமது பண்பாட்டு மதிப்பீடுகள், சுற்றுச்சூழல் இடையிலான தொடர்பைப் பற்றி உலகுக்கு உணர்த்தும் வாங்காரீயின் பணிக்கு, ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) 100 கோடி மரங்கள் (Billion Tree Campaign) பிரச்சாரம் உதவுகிறது. நைரோபியில் 2006இல் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. அடுத்த ஆண்டு இந்தோனேசியாவில் உள்ள பாலியில் நடைபெற்ற காலநிலை மாற்றம் பற்றிய மாநாட்டுக்கு வாங்காரீ மாத்தை சென்ற காலத்துக்குள் 100 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுவிட்டன. இந்த பிரசாரத்தின் ஒரு பகுதியாக 300 கோடிக்கும் மேலான மரங்கள் நடப்பட்டுள்ளன.

“ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் நிர்வாக இயக்குநர் அசிம் ஸ்டீய்னர் இப்போது 700 கோடி மரங்கள் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இது மக்கள் கருத்தை வலுப்படுத்தி, விழிப்புணர்வை உருவாக்கும். அதேநேரம் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் மரங்களை நடுவது எவ்வளவு பயன்தரும் என்பதையும் உணர்த்தும். யார் வேண்டுமானாலும் இதைச் செய்யலாம். ஒவ்வொரு மரமும் கார்பனை கிரகித்துக் கொள்கிறது. ஏழை, பணக்காரன், ஆண், பெண், படித்தவர், பாமரர் என யார் வேண்டுமானாலும் மரக்கன்றை நடலாம் என்பதையே இது உணர்த்துகிறது. யார் வேண்டுமானாலும் இதைச் செய்ய முடியும்.”

“அத்துடன் ஏற்கெனவே உள்ள மரங்களை பாதுகாக்கவும் நான் ஆதரவு தெரிவிக்கிறேன். மரங்களின் உண்மையான மதிப்பை இன்னமும் நாம் முழமையாக உணர்ந்துகொள்ளவில்லை: அது வளமான மேல்மண்ணை நிலைப்படுத்துகிறது, நிழல் தருகிறது, பழங்களைத் தருகிறது, கார்பனை கிரகித்துக் கொள்கிறது, ஆக்சிஜனைத் தருகிறது, காற்றின் கலவையை ஒழுங்கு செய்கிறது... மரங்கள், மனிதகுலத்துக்குக் கிடைத்த மாபெரும் பரிசு.”

“மரங்களுக்கு ஆன்மிக அர்த்தமும் உள்ளது. எனது மூதாதையர்கள் மரங்களை வணங்குபவர்கள், படையல் செய்யும் மரபிலிருந்து நான் வருகிறேன். எமது மக்கள் அத்தி மரத்தை மிகப்பெரிய அளவில் மதிக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை அது, கடவுளின் சக்தியினுடைய அடையாளம், கடவுள் தந்த பரிசு. மரங்கள் வளத்தின் அடையாளம். உலகின் பல மரபுகளில், மரங்கள் வளத்தின் அடையாளமாகவே கருதப்படுகிறது. விவிலியத்தில் அது அறிவின் அடையாளம். எனவே, மரம் ஒரு மாபெரும் பரிசுதான்.”

‘பசுமைப்பகுதி’ இயக்கம் தொடங்கி 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதன்மூலம் தங்கள் சுற்றுச்சூழலும், வாழ்க்கைத் தரமும் மேம்பட்டு இருப்பதற்கு மரங்களும் காடுகளுமே முழுமையான காரணம் என்பதை மக்கள் நேரடியாக உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் இந்த பிரசாரத்தின் பற்றி கென்யாவில் மட்டுமின்றி, உலகின் மற்ற நாடுகளிலும் ஆர்வம் மேலோங்கி இருக்கிறது. ஆரம்பத்தில் நாங்கள் கொஞ்சம் பித்து பிடித்தவர்கள் என்றுதான் வெளியிலிருந்து பார்த்தவர்கள் நினைத்தார்கள். ஆனால் இப்போது, எங்களது முயற்சி அறிவுப்பூர்வமானது என்பதை மக்கள் உணர்ந்து கொள்கிறார்கள்.”

வாங்காரீ சொல்லும் செய்தி என்னவென்றால், காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கு காடுகளே தீர்வு என்பதுதான். எனவே, காலநிலை மாற்றத்துக்கான தீர்வு கண்டறிதலில் காடுகளுக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். காடுகளைக் காப்பாற்ற பொருளாதார வழிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும். அப்பொழுதுதான் பொருளாதார மதிப்புமிக்க காடுகள் வெட்டப்படாமல் காக்கப்படும் என்கிறார். மரங்களை பாதுகாக்க நிதியுதவி பெற்ற நாடுகள், அதை தவறான முறையில் செலவிடாமல் இருப்பதை கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும். காலாகாலத்துக்கும் மனித குலம் முழுமைக்கும் சூழலியல் சேவைகளை வழங்கி வரும் காடுகளை, மேல்தட்டு வர்க்கத்தின் குறுகியகால லாபத்துக்கு பலியிடுவதைத் தடை செய்ய வேண்டும். அது மட்டுமில்லாமல், மரங்களே உலகுக்கு உயிர்ப்பை வழங்குகின்றன, அறிவை போதிக்கின்றன, கடவுளின் பரிசாகத் திகழ்கின்றன, காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் மிகப் பெரிய அளவில் நமக்குத் துணையாக இருக்கப் போகின்றன என்கிறார் வாங்காரீ.

மாத்தையைப் பற்றியும், அவரது பணியைப் பற்றியும் மேலும் அறிய: www.greenbeltmovement.org, www.unep.org/billiontreecampaign

நன்றி: பெங்களூரிலிருந்து வெளியாகும் Bhoomi, ஆங்கில சூழலியல் இதழ்

தமிழில் : ஆதி வள்ளியப்பன்

Pin It