இயற்கை ஆர்வலர்களின் வற்புறுத்தலினாலும் பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத் தின் பெருமுயற்சியினாலும், பறவையியலில் அக்கறை கொண்ட பன்னாட்டு நிறுவனங்களின் அழுத்தத் தினாலும் கால்நடைகளுக்கு டைக்குளோ பினாக்கைப் பயன்படுத்தத் தடை விதித்து இந்திய அரசின் மருந்து கட்டுப்பாட்டு ஆளுநர் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

தடைக்குப் பின் தற்போதைய நிலவரம் என்ன? என்று அறியவும் அடைப்பிடத்தில் வளர்க்கப்படும் பிணந்தின்னிக் கழுகுகளைப் பறக்கவிட உகந்த சூழல் நிலவுகிறதா என்று அறியவும் பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகம் இந்திய அளவில் ஒரு கணக்கெடுப்பை முடுக்கிவிட்டது. அக்கணக்கெடுப்பை தமிழகத்தில் மேற்கொள்ள வாய்ப்பு கிட்டியது.

பறவையியலாளர்கள் சசிக்குமார், கிறிஸ்டோபர் வழிகாட்டுதலின்படி மேற்கொண்ட இக்கணிப்பை இரண்டு வழிகளில் மேற்கொண்டோம்.

முதல் கட்டமாக டைக்குளோபினாக் உள்ளிட்ட எந்தெந்த வலி நிவாரணிகள் கடைகளில் தாராளமாகக் கிடைக்கின்றன என்று நேரடியாக விலைக்கு வாங்கி பதிவு செய்தோம்.

இரண்டாவதாக பிணந்தின்னிக் கழுகுகள் குறித்த பார்வை, புரிதல் பொதுமக்களிடம் எப்படி உள்ளது என்பதையும் பதிவு செய்தோம். கால்நடைகளுக்கான மருந்து விற்பனை செய்யும் கடைகளில் மனிதர்களுக்கு உபயோகப்படுத்தப்படும் டைக்குளோபினாக்கையே கால்நடைகளுக்கும் விற்பனை செய்வது தெரியவந்தது. முன்பு 3 மி.லி அளவுகளில் வந்துகொண்டிருந்த மருந்து, இன்று 30 மி.லி அளவுள்ள புட்டிகளில் “கால் நடைகளுக்கு ஏற்றதல்ல” என்ற பொடி எழுத்துகளில் அச்சிட்டு டொலோனக், டைக்ளோனக், ஒவிரான், ஆக்டிமோல் போன்ற பெயர்களில் விற்பனைக்கு கிடைத்து வருகின்றன.

இரண்டாவது கட்டமாக விவசாயப் பெரு மக்கள், கால்நடை வளர்ப்போர், பாரம்பரிய வைத்தியர்கள், பால் கூட்டுறவு சங்க அங்கத்தினர்கள், வனத்துறையைச் சேர்ந்தவர்கள், கால்நடைத்துறை மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், மருந்துக்கடை விற்பனையாளர்கள், மொத்த விற்பனையாளர்கள் உள்ளிட்டோரிடம் கணக்கெடுப்பு மேற்கொண்டோம்.

விவசாயிகளிடமும், இடையர்களிடமும், பால்கூட்டுறவு சங்க அங்கத்தினர்களிடமும் பிணந்தின்னிக் கழுகுகளைப் பார்த்திருக்கிறீரா? கடைசியாக எப்போது கண்ணுற்றீர்? கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்வதுண்டா அல்லது கட்டுத்துறையில் கட்டிப்போட்டு தீனி போடுகிறீரா? சாதாரணமாக என்னென்ன நோய் கால்நடைகளைத் தாக்குகின்றன? எப்படி வைத்தியம் பார்க்கிறீர், கால்நடை மருத்துவரின் உதவியுடனா? பாரம்பரிய வைத்தியமா? தன் மருத்துவமா? பிறரிடமா? நோய் வந்தால் என்ன மருந்து தருகிறீர்கள்? எந்த அளவுகளில் தருகிறீர்கள்? யாருடைய ஆலோசனைப்படி தருகிறீர்கள்? கால்நடைகள் மரித்தால் என்ன செய்கிறீர்கள்? புதைக்கிறீர்களா? எரிக்கிறீர்களா? விற்றுவிடுகிறீர்களா? ஊருக்கு ஒதுக்குப் புறமாக போட்டுவிடுகிறீர்களா?அல்லது தோல் சேகரிப்போரிடம் கொடுத்து விடுகிறீர்களா? இதில் எம்முறையைக் கையாளுகிறீர்!

கால்நடைத் துறையினரிடம் பின்வரும் கேள்விகளை முன் வைத்தோம். கடைசியாக எப்போது டைக்குளோபினாக்கைப் பயன்படுத்தினீர்கள்? தற்போது வேறு என்ன வலிநிவாரணிகளை பரிந்துரைக்கிறீர்கள்! டைக்குளோபினாக் தடை பற்றித் தெரியுமா? எதற்காக தடை செய்யப்பட்டது என்று தெரியுமா?

கால்நடை மருந்து விற்கும் கடைக்காரர்களிடம் கால்நடைகளுக்கு டைக்குளோபினாக் வேண்டும் என்றாலும் தருவதுண்டா? எந்த அளவில்? எந்த வடிவில் பரிந்துரைக்கிறீர்கள்? மனிதர்களுக்கென தயாரிக்கப்படும் டைகுளோபினாக்கை கால்நடைகளுக்கும் தரலாமா, இல்லாவிடின் ஏன் தரக்கூடாது? இம்மருந்தால் பிணந்தின்னிக் கழுகுகள் அழிவுக்கு ஆட்பட்டது தெரியுமா? என்பது போன்ற கேள்விகளைக் கேட்டோம்.

வனத்துறையினரிடம் பிணந்தின்னிக் கழுகுகளைக் கண்டதுண்டா? எப்போது எந்த இடத்தில் பார்த்தீர்கள்? கடைசியாக எப்போது பார்த்தீர்கள்? கூடு ஏதாவது கண்டதுண்டா? முன்பு போல் அவை ஏன் நம் பகுதியில் தென்படுவதில்லை? என்ன காரணம்? டைக்குளோபினாக் பற்றி தெரியுமா? காட்டில் ஏதாவது கூட்டமாக செத்துக் கிடந்ததைப் பார்த்துள்ளீரா? போன்ற கேள்விகளை முன்வைத்;தோம். முடிவுகள் கவலை அளிக்கும்படியே இருந்தன. விவசாயிகள், இடையர்கள் பிணந்தின்னிக் கழுகுகளை 20 ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் கண்டதாகப் பதிவு செய்தனர். தற்போது அவை வருவதில்லை எனவும் உறுதிப்படுத்தினர். ஏன் வருவதில்லை என்பதற்கு பூச்சி மருந்து, தீனி கிடைப்பதில்லை என்பது போன்ற காரணங்களைச் சொன்னார்கள். சேலம், களக்காடு, முதுமலை, சத்தியமங்கலம் பகுதியில் உள்ளோர் மட்டும் அண்மையில் கண்டதாகப் பதிவு செய்தனர்.

கால்நடைத் துறையினரிடம் பேசியபோது அரசு இம்மருந்தை நிறுத்தி விட்டது. அதனால் பயன்படுத்துவதில்லை எனவும் டைக்குளோபினாக் தான் உடனடியாக வேலை செய்கிறது எனச் சான்றளிக்கவும் தவறவில்லை.

2006க்கு முன் ஓய்வு பெற்றவர்கள் இத்தடை குறித்து அறிந்திருக்கவில்லை என்பது தெரிய வந்தது. இதற்கு பெரிய பொறுப்பில் இருந்தவர்களும் விலக்கு அல்ல. ஓய்வுபெற்ற கால்நடைத்துறை இயக்குநரிடம் பேசியபோது இத்தடை குறித்து அறியவில்லை. இன்னமும் வைத்தியத்திற்கு டைக்குளோபினாக்கைத் தான் பயன்படுத்துகிறேன் என்றும் கூறினார்.

இதேபோல கால்நடைப் பல்கலைக்கழக பேராசிரியை ஒருவரிடம் பேசியபோது தடைக்கு குறிப்பான காரணம் பற்றித் தெரியவில்லை. கோப்புகளைப் பார்த்துவிட்டு சொல்லட்டுமா? எனக் கேட்டார். மேலும் கால்நடை ஆய்வாளர்களும் சொந்தமாக வைத்தியம் செய்பவர்களும் டைக்குளோ பினாக்கைத்தான் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர் எனத் தெரியவந்தது.

மருந்துக் கடைக்காரர்களிடம் வினவியபோது இம்மருந்துக்கான தடை பற்றிப் பரவலாகத் தெரிந்திருந்தது. ஆனால் டைக்குளோபினாக்கை எந்த வடிவில் கேட்டாலும் விற்பனை செய்யத் தயங்கவில்லை. ஆனால் அதே சமயம் எச்சரிக்கையுடன் விற்பனை செய்தனர். மருந்து இல்லாத கடைகளிலும்கூட முன் தொகை கொடுத்து விட்டுச் சென்றால் வாங்கித் தருவதாகவும் வாக்களித்தனர்.

ஒரு சில மருந்துக் கடைக்காரர்கள் தடை பற்றிய அறியாமையால் கால்நடைகளுக்கு என்றே எழுதியும் தந்தனர். மாற்று மருந்தான மெலாக்சிகம் பரவலாக எல்லா இடங்களிலும் கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. வனத்துறையினர் 30 பேரிடம் கணக்கெடுப்பு மேற்கொண்டோம். அதில் 9 பேரைத் தவிர ஏனையோர் பிணந்தின்னிக் கழுகுகள் குறித்தும் டைக்குளோபினாக் குறித்தம் அறிந்திருக்க வில்லை.

உடனே செய்ய வேண்டியது :

நீலகிரி உயிரின மண்டலத்திற்கு உட்பட்ட மருந்துக் கடைகளின் முன்பு டைக்குளோபினாக்கை கால்நடைகளுக்குப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை குறித்து எச்சரிக்கை வாசகம் அடங்கிய துண்டறிக்கை, சுவரொட்டி, பதாகை வைக்க வேண்டும். அவ்வப்போது மருந்துக் கடைகளில் சோதனை மேற்கொள்ள வேண்டும். 30 மி.லி குடுவை டைக்குளோபினாக், கால்நடைகளை மையப்படுத்தியே தயாரிக்கப்படுகிறது. உடனடியாக இதன் உற்பத்தியை நிறுத்த வேண்டும். முதல் கட்டமாக நீலகிரி உயிரின மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களிலாவது இத்தடையை மாவட்ட ஆட்சியர் உதவியோடு அமல்படுத்த வேண்டும்.

பிணந்தின்னிக் கழுகுகளுக்கென சிறப்பு வனக்காவலர்களை நீலகிரி உயிரின மண்டலத்தில் நியமிக்க வேண்டும்.

எதிர்பாராத, தவிர்க்கவியலாத தருணங்கள் தவிர பிற நேரங்களில் கானகத்தில் செத்த விலங்குகளைப் புதைப்பதில்லை என வனத்துறை எடுத்த முடிவை தொடர வேண்டும். இதை சரணாலயத்தை ஒட்டியுள்ள ஏனையப் பகுதியிலும் செயல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

பசுமைப் பரப்பை அதிகரிப்பதற்காக அடர்த்தியாக மரம் நடுவதால் பிணந்தின்னிக் கழுகுகள் இரையை அணுகுவது கடினமாகும். எனவே காடுகளுக்குள் மரம் நடுவதை நிறுத்த வேண்டும்.

நீலகிரி உயிரின மண்டலத்தில் பிணந்தின்னிக் கழுகுகளுக்கென காப்பிடம் உருவாக்க வேண்டும்.

ஊனுண்ணிகளுக்கு கால்நடைகள் இரையாக நேர்ந்தால் அதற்கான இழப்பீட்டுத் தொகையை உடனே வழங்கினால், செத்த விலங்கின் மீது விஷம் தடவிக் கொல்லுவது நிறுத்தப்படும். இதன்மூலம் பிணந்தின்னிக் கழுகுகளும் காப்பாற்றப்படும்.

Pin It