ஆப்பிரிக்காவின் வஸாங் (Wazang) பகுதியில் உள்ள மஞ்சள் நிற தினைக் குருவிகளுக்கு மழைக்காலம் முடிந்ததும் உண்பதற்கு தினை கிடைக்காது. அப்போது அவை எறும்புப் புற்றுகளின் அருகில் சென்றமர்ந்து இனிமையாகப் பாடுமாம். அதைக் கேட்ட எறும்புகள் தங்கள் புற்றில் சேமித்து வைத்திருக்கும் தினைகளை வெளியே கொண்டு வந்து வெயிலில் உலர்த்தும். அவற்றில் தேவையான அளவை அத்தினைக் குருவிகள் உண்பதற்கு அந்த எறும்புகள் அனுமதிக்கின்றன. ஏனெனில், அது சமயம் அந்தக் குருவிகள் உண்ணுவதற்கு உணவு கிடைக்காது என்பது அந்த எறும்புகளுக்குத் தெரியும். எறும்புகளின் இந்த உதவிக்கான நன்றிக் கடனை அறுவடைக் காலத்துக்கு முன்பாக தினைக்குருவிகள் தீர்க்கின்றன. எப்படியென்றால், வயலில் தினைகள் முற்றியவுடன் அதன் மேல் அமர்ந்து அக்குருவிகள் தினைகளை உதிர்க்க வைக்கின்றன. அவற்றை எறும்புகள் எடுத்துக் கொண்டு போய் தங்கள் புற்றுகளில் மீண்டும் சேமித்துக் கொள்கின்றன.

உயிர்கள் ஒன்றையன்று சார்ந்து வாழ்கின்றன என்பது அறிவுப்பூர்வமாக மட்டுமின்றி ஆக்கப்பூர்வமாகவும் அமைகின்றன என்பதற்கு அருமையான ஆதாரம் இது. இந்த பல்லுயிரிய வாழ்வுச் சங்கிலியில் ஒரு கண்ணி அறுபட்டாலும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் மிகப் பெரிய அளவில் அமைகின்றன. இதனால் எதிர்கால வாழ்வு கேள்விக்குறியாகிறது. எனவே, வருங்கால தலைமுறையினருக்கு இது குறித்து விரிவாகவும் தெளிவாகவும் போதிக்க வேண்டிய காலக் கட்டாயம் கல்வித் துறையினருக்கு இருக்கிறது.

ஆனால் அங்கு என்ன நடக்கிறது? வழக்கமான மனப்பாட பாணியில் மதிப்பெண்கள் பெறுவதற்கு ஏதுவாக, “பல்லுயிரியம்” என்றால் என்ன? பல்லுயிரியம் என்பது உலகில் உள்ள உயிரினங்கள் இடையே காணப்படும் வேறுபாடுகளை பன்முகத்தன்மையை குறிக்கும் ஒரு பொதுவான சொல் என்ற ரீதியில் பாடங்களை அமைத்து தன் கடமையை முடித்துக் கொள்கிறது. உயிர்கள் ஏன் ஒன்றையன்று சார்ந்து வாழ்கின்றன? அப்படி வாழ வேண்டிய அவசியம் என்ன? இதில் மனிதனின் பங்கு என்ன? என்பது போன்று மாணவர்களை சிந்திக்கத் தூண்டும் செயல்பாடு அங்கு இல்லை.

மாணவர்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் இது குறித்த ஒரு புரிதலை ஏற்படுத்தும் வண்ணம் வழமை போலவே கல்விப் புலத்துக்கு வெளியே இருந்து “பல்லுயிரியம்” என்ற தலைப்பில் வாசல் வெளியீடாக இயற்கையியலாளர் ச.முகமது அலி ஓர் அருமையான நூலைத் தந்துள்ளார்.

உலகில் உள்ள உயிரினங்களில் அதிகமாகக் காணப்படுவது பூச்சியினங்கள்தான். ஆனால் இவை தம் உணவாக 99 விழுக்காடு தாவரங்களையே உண்கின்றன. இத்தாவரங்கள் இல்லாவிட்டால் நமது நிலை என்னவாகும்? எனவே, இப்பூச்சி இனத்தைக் கட்டுப்படுத்த இயற்கை பறவையினங்களை ஏற்படுத்தியுள்ளது. பறவைகளின் உணவில் 80 விழுக்காடு இந்தப் பூச்சிகள்தான் என்கிறார் நூல் ஆசிரியர்.

அதேபோல் இரு சிறிய பெருச்சாளிகள் இணைந்து ஒரு வருடத்தில் 4226 கிலோ தானியங்களை உட்கொண்டதாக அறியப்பட்டுள்ளது. இது 7,000 மனிதர்களுக்கான ஒரு நாள் உணவு. இந்த எலிகளின் எண்ணிக்கை பெருகினால் என்னவாகும்? ஆனால் இதற்கும் இயற்கையில் மாற்று ஏற்பாடுகள் இருக்கின்றன. அவை பாம்புகள், ஆந்தைகள் போன்ற உயிரினங்கள். இதில் ஆந்தைகள் ஓர் இரவுக்கு சராசரியாக நான்கு எலிகள் வரை உண்கிறதாம். இதைத்தான் நாம் “சனியன்” என்று இகழ்கிறோம்.

எந்த ஓர் உயிரினமும் தன் இனத்தை தானே அழித்துக் கொள்வதில்லை, மனிதனைத் தவிர. தான் வாழ இருக்கும் ஒரே வாழ்விடமான இப்புவியை தன் உணவுக்காக அல்ல, தன் ஆடம்பரத்துக்காக அழித்துக் கொண்டிருக்கிறான் மனிதன்.

ஓர் ஏக்கரிலுள்ள மரங்கள் ஒரு வருடத்துக்கு 18 நபர்களுக்குத் தேவையான உயிர்க் காற்றை வழங்குகின்றன. ஒரு தனி மனிதனின் அன்றாட சுவாசத்துக்கு 642 சதுர அடி அளவு தாவரங்கள் கொண்ட பசுமைப் பகுதி அவசியம். அவ்வாறு இல்லாவிட்டால், அவன் மற்றவர்களின் ஆக்சிஜன் பங்கை திருடிக் கொள்கிறான் என்று பொருள். அப்படியெனில் நமக்கு உண்டான பங்கை நாம் உருவாக்கி விட்டோமா என நம்மை சிந்திக்கத் தூண்டுகிறது இந்நூல்.

அத்துடன் பூக்களை செடியில் இருக்க விடாமல் பறித்து தலையில் சூடுவதாலும், வழிபாடு, சடங்குகளுக்கு பயன்படுத்துவதாலும் நாம் வருடத்துக்கு 7,50,000 கிலோ தேனை இழக்கிறோம். அத்துடன் மகரந்தச் சேர்க்கையையும் தேனீக்கள், குருவிகள் போன்ற உயிரினங்களையும் பாதிக்கச் செய்வதோடு, பொருளாதார ரீதியாகவும் இது எவ்வளவு பெரிய இழப்பு!

மேலும் பல அரிய தகவல்களை நாம் அறியத் தருகிறது இந்நூல். எறும்புகள் தூங்குவதில்லை. பறவைகளில் கிவிக்கு மட்டுமே மோப்ப சக்தி உண்டு. ஒட்டகத்துக்கு நீந்தத் தெரியாது. கோலா தண்ணீர் குடிப்பதில்லை. உலகிலேயே நான்கு முழங்கால்களை உடையது யானை மட்டுமே. நீரை உறிஞ்சிக் குடிப்பது புறா மட்டுமே.

நாம் தவறாகப் புரிந்து கொண்டிருக்கும் செய்தி களையும் பட்டியலிடுகிறது இந்நூல். நண்டுக்கு இருப்பது கொடுக்கு அல்ல, அவை முன் கை இடுக்கிகள். திமிங்கிலம், ஆவுளியா (கடல்பசு), ஓங்கில் (டால்பின்) ஆகியவை மீன் இனமல்ல. பாலூட்டிகள்.

சூழலியல் பாதுகாப்பில் தமிழகம் பெருமை கொள்ளும் செய்திகளும் உண்டு. இந்தியாவின் மிகச் சிறந்த காட்டுயிர் சரணாலயம் களக்காடு. இந்தியாவிலேயே தமிழ்நாட்டு மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகள்தான் அதிக வகை தாவரங்களைக் கொண்டுள்ளன என்பது போன்ற செய்திகளோடு ஆசியாவிலேயே மிகப் பெரிய விலங்கு காட்சியகம் வண்டலூர் எனக் குறிப்பிடுகிறார்.

இத்துடன் விலங்குக் காட்சி சாலைகள் அவசியம் தேவை எனக் குறிப்பிடும் அவர், அது ஏன் அவசியம் என்பதையும் விரிவாக விளக்கியிருக்கலாம். சுதந்திரமாய் திரிய வேண்டிய விலங்குகளை மனிதனுக்கான காட்சிப் பொருளாக, பரிதாபமாக சிறைப்படுத்தி வைப்பதால் இக்கேள்வி எழுகிறது.

உலகின் மிகப் பெரிய பூச்சி இனமாக ஆப்பிரிக்க சாணி வண்டுகளையும் மலேசியாவின் குச்சிப் பூச்சியையும் (சுமார் 1 அடி நீளம்) ஆசிரியர் குறிப்பிடுகிறார். இத்துடன் ஒரு கூடுதலான செய்தி. உலகின் மிக நீளமான பூச்சியாக தற்போது பதிவு பெற்றிருப்பது சான்ஸ் மெகா ஸ்டிக் ((Phobaeticus Chani - Chans mega stick)) என்று செல்லமாக அழைக்கப்படும் ஒரு வகை குச்சிப் பூச்சியே. இது மலேசியாவில் உள்ள போர்னியோ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீளம், 56.7 செ.மீ. அதாவது சுமார் 22 அங்குலம். டுரியன் மரங்களின் அயல் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் வெளவால்கள் மாலை நேரங்களில் பூக்களுக்கு வருவதாக இந்நூல் கூறுகிறது (கேள்வி எண் 220). நானறிந்த வகையில் காட்டில் உள்ள டுரியன்கள் நள்ளிரவில் மலர்கின்றன. அதன் கடும் வாசனையை முகரும் வெளவால்கள் அதிகாலையில்தான் இம்மலருக்கு தேன் உறிஞ்ச வருகின்றன. ஏனென்றால் விடிவதற்குள்ளாகவே இம்மலரின் பாகங்கள் (சூலகத்தைத் தவிர) உதிர்ந்துவிடும். இதனால் தானோ என்னவோ, இந்த வகை வெளவால்களை ஆங்கிலத்தில் Dawn Bats (Eonycteris spelia) என அழைக்கின்றனர் போலும்.

இதேபோல் Orang Hutan என்ற சொல்லை, ஆங்கில உச்சரிப்பைப் பின்பற்றி அனைவரும் ஒராங் உட்டான் என்றே எழுதி வருகின்றனர். காட்டு மனிதன் என பொருள் தரும் இச்சொல் உண்மையிலேயே ஒரு மலாய் மொழிச் சொல். இதன் சரியான உச்சரிப்பு ஓராங் ஊத்தான் என்பதுவே.

இந்நூலின் ஓரிடத்தில் உலகில் வாழும் உயிரினங்களில் பூச்சிகள் 85 விழுக்காடு எனவும் (கேள்வி எண்: 7), மற்றொரு இடத்தில் இதுவே 70 விழுக்காடு என்றும் (கேள்வி எண்: 281) பதிவாகியுள்ளது. காட்டுயிர் சிந்தனையில் நிபுணரான ஆசிரியர், அடுத்த முறை இக்குழப்பம் நேராத வண்ணம் கவனம் கொள்ள வேண்டும்.

எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய வினா&விடை வடிவில் அமைந்துள்ள இந்நூலில் செல்வி கா. கீர்த்தனா மற்றும் ஆசிரியரின் அழகான கோட்டோவியங்கள் தனிச் சிறப்புடன் அமைந்து செய்திகளை உடனடியாகப் புரிந்து கொள்ள உதவுகின்றன.

பாஸ்டன் நகரில் உள்ள School for field studies இன் வாசகமாக இந்நூல் குறிப்பிடும் என்னைக் கவர்ந்த வாசகம்: மழைக்காடுகள் மைக்ராஸ்கோப்புக்குள் தெரியாது. ஒட்டகச் சிவிங்கிகள் சோதனைக் குழாயில் மேயாது.

நம் கல்விப் புலங்கள் ஒட்டகச் சிவிங்கியை பிடித்து சோதனைக் குழாயில் திணிக்க முயற்சிக்கையில், ச. முகமது அலி இந்நூல் மூலம் ஒட்டகச் சிவிங்கி மேயும் நிலத்துக்கே நம்மை கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார். அவ்வகையில் தமிழுக்கு அவர் அளித்துள்ள மற்றொரு நன்கொடை இந்நூல்.

ஆசிரியர்: ச. முகமது அலி, வெளியீடு வாசல், 40டி/3 முதல் தெரு, வசந்த நகர், மதுரை 625 0003 தொலைபேசி: 98421 02133 விலை ரூ. 120.

Pin It