கடலின் அலைகளைப் போல தொடர்ந்துவரும் பத்திரிகைகளை யாரும் தவிர்க்க முடியாது. அவ்வகையில் ரீடர்ஸ் டைஜஸ்ட்டைப் போல சென்னையிலிருந்து பவுண்டைன் இங்க் (Fountain Ink) என்ற ஆங்கில மாத இதழ் வெளிவருகிறது. மிகச் சிறந்த புகைப்படங்களுடன், அதிக வெற்றிடங்களைக் கொண்ட வடிவமைப்புடன் நேர்த்தியாக இவ்விதழ் வெளிவருகிறது. ஒரு சமூகப் பண்பாட்டு இதழாக இது வந்தாலும் ஒவ்வொரு இதழிலும் சுற்றுச்சூழல் குறித்த ஆழமான புகைப்படக் கட்டுரை வெளிவருகிறது. ரூபாய் இருபதுக்கு வண்ணப் படங்களுடன் ஆர்ட் பேப்பரில் வரும் இவ்விதழை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். ஒவ்வொருவரும் ஆண்டுக்கட்டணம் செலுத்த வேண்டிய இதழ் இது. 

****

கூடங்குளம் அணுஉலைக்கெதிரான இடிந்தகரை மக்களின் போராட்டத்தில் இதுவரை பின்னடைவு என்பதே இல்லை. முந்நூறு நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக தொடர்ந்துகொண்டிருக்கும் இப்போராட்டம் இன்று அனைத்துலகப் போராட்டமாக மாறியுள்ளது. இருபது வருடங்களாக கல்லுளிமங்கன் போல இருந்துவந்த அணுசக்தித் துறை நாம் கேட்கும் அறிவியல் சார்ந்த கேள்விகளுக்கு பதில் சொல்லும் நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் போராட்டத்திற்கான ஆதரவு பெருகிக்கொண்டேயிருக்கிறது. மும்பையில் கூடங்குளம் மக்களைப் போல தேசத் துரோக (?) வழக்கில் கைதுசெய்யப்பட்ட பினாயக் சென் தலைமையில் கூடங்குள மக்களுக்காக ஆனந்த் பட்வர்த்தன், வந்தனா சிவா, அருணா ராய், பிரஃபுல் பித்வாய் மற்றும் மும்பையின் சுற்றுச் சூழல் ஆதரவாளர்கள், அணுஉலை எதிர்ப்பாளர்கள் 20.05.2012 அன்று அம்பேத்கர் நினைவிடத்தில் போராட்டங்களை நிகழ்த்தினார்கள். பெரும் வரவேற்பு பெற்ற இந்நிகழ்வு இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் தொடர வேண்டும். 

***

கடந்த முந்நூறு நாட்களில் கூடங்குள மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள். போஸ்கோ போராட்டத்தைப் போல இம்மக்கள் தனித்தக் குடியரசாகத் துண்டாடப்பட்டுவிட்டார்கள். ஐம்பதாயிரத்திற்கும் மேலாக வழக்குகள், யுத்த கால வாழ்க்கையை அவ்வப்போது தொடர்ந்து அனுபவித்து வருகிறார்கள். சாகும்வரை உண்ணாவிரதமும் இருந்தார்கள். இதற்கு ஆதரவாக சென்னை தாயகத்தில் 100 மணி நேர தொடர் உண்ணாவிரதப் போராட்டமும் நடந்தது. பரிமளா, ஜான்சன், சமந்தா (நடிகை அல்ல) ஆகியோருடன் பூவுலகின் நண்பர்களின் ஜார்ஜ் உண்ணாவிரதம் இருந்தது மகிழ்ச்சியளிக்கிறது.

***

2012 மும்பை குறும்பட, ஆவணத் திரைப்பட விழாவில் கானுயிர் ஆவணப்பட இயக்குநர் மைக் பாண்டேவுக்கு சாந்தாராம் வாழ்நாள் சாதனை விருது அளிக்கப்பட்டது. இவ்விருதுக்கு முற்றிலும் தகுதியான சுற்றுச்சூழல் இயக்குநர் மைக் பாண்டே ஆவார். இவருடைய ஒவ்வொரு திரைப்படங்களும் ஒவ்வொரு வகையில் மனிதனுக்கும் இயற்கைக்குமான கண்ணியை நுட்பமாக விளக்கி வருகிறது. கண்ணி அறுபடுவதையும் அவர் சித்தரிக்கிறார். இவரின் அனைத்துத் திரைப்படங்களையும் கொண்ட திரைப்பட விழாவை விரைவில் பூவுலகின் நண்பர்கள் நடத்த இருக்கிறது.

Pin It