“Water will be to the 21st Century what oil was to the 20th.”-Fortune Magazine

“இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியால் ஏற்படப் போகும் விளைவுகள்” என்னும் கட்டுரையில் கார்ல் மார்க்ஸ் இவ்வாறு கூறுகிறார்: “வரலாற்றின் முதலாளித்துவ கால கட்டம் புதிய உலகத்திற்குரிய பொருளாயுத அடித்தளத்தைப் படைத்துருவாக்க வேண்டுமெனில்:ஒரு புறத்தில் மனிதகுலத்தின் பரஸ்பர சார்பு நிலை மீது தோற்றுவிக்கப்பட்ட சர்வவியாபகமான ஒட்டுறவையும் அந்த ஒட்டுறவுக்கான வழிவகைகளையும் உருவாக்க வேண்டும்; மறுபுறத்தில் மனிதனின் உற்பத்தி ஆற்றல்களை வளப்படுத்துவதும்பொருள்வகை உற்பத்தியை இயற்கை காரணத்துவங்களை (Natural Agencies) விஞ்ஞான பூர்வமான மேலாண்மையாக உருமாற்றப்படுவதையும் வளர்த்துச் செல்ல வேண்டும். மண்ணியல் புரட்சிகள் பூமியின் மேல் பரப்பைப் படைத்துருவாக்கியிருப்பது போன்று அதே வழிகளில் முதலாளித்துவத் தொழில்துறையும் வாணிகமும் புதிய உலகத்துக்கான இந்தப் பொருளாயத நிலைமைகளைப் படைக்கின்றன.” மார்க்ஸின் கூற்றை உண்மையாக்கும் விதமாக உலகமயமாக்கல் தற்போது உலகை கிராமமாக சுருக்கி, மனிதகுலத்தை நாடுகளில் எல்லை கடந்த “சர்வவியாபகமான ஒட்டுறவு உடைய வர்த்தக” சமூக மாக மாற்றியுள்ளது. அதேபோல இயற்கை வளங்களை, “விஞ்ஞான பூர்வமான மேலாண்மை” மூலம் வர்த்தக பண்டங்களாக மாற்றி உள்ளது உலகமயத்தின் தத்துவமான சந்தை பொருளாதர வணிகம்.

அந்த வகையில் இயற்கையின் கொடையான எண்ணெய்க்கு அடுத்தப்படியாக நீர் இன்று மிக பெரிய வர்த்தகப் பொருளாக மாறிவருகிறது. நீருக்கு தனி கடவுகளை கொண்டிருக்கும் இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. “தேசிய நீர்க் கொள்கை வரைவு - 2012” என்கிற திட்ட வரைவு ஒன்றை இந்திய நீர்வள அமைச்சகம் சில மாதங்களுக்கு முன்பாக தனது இணைய தளத்தில் வெளியிட்டது.இந்த கொள்கை வரைவு குறித்தான பொது கருத்தும் கேட்கப்பட்டுள்ளது. இதற்கு முன் 2002-ல் ஒரு தேசிய நீர்க்கொள்கை வெளியிடப்பட்டு அது அமலிலும் இருந்து வருகிற நிலையில், எவ்வித காரணமும் முன்தேவையும் கூறாமல் புதிய தேசிய நீர்க்கொள்கை வரைவு தீட்டப்பட்டுள்ளது.

“இந்தியாவில் மிகவும் அடிமட்ட விலையில் விற்கப்படும் ஒரே பண்டம்தான் தண்ணீர். இதை மாற்றியமைக்க வேண்டும்” என்று கூறிய திட்டக் கமிசனின் துணைத் தலைவர் மான்டேக்சிங் அலுவாலியாவின் வழிகாட்டுதலில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

உலகமயமும் தண்ணீர் வர்த்தகமும்:

சந்தைப் பொருளாதரத்தை முன்னெடுத்து செல்லும் உலக வர்த்தகக் கழகத்தின் காட் (GATT) ஒப்பந்தம் தண்ணீரை வர்த்தக பண்டமாக வரையறுத்துள்ளது. ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு வர்த்தக அடிப்படையில் நீர் உள்ளிட்ட இயற்கை வளங்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படுவது தடைச் செய்யக் கூடாது என்று கூறுகிறது காட் ஒப்பந்தம். இதன் பொருள் பன்னாட்டு நிறுவனங்கள் இயற்கை வளங்களை சுரண்டி விற்கும் வர்த்தகத்தை சமூக நலன், சூழலியல் பாதுகாப்பு என்னும் பெயரில் தடை செய்ய கூடாது என்பது தான்.

Farmers-7_380உலக வர்த்தகக் கழகத்தின் கொள்கைப்படி தண்ணீர் வினியோகம், மற்றும் மேலாண்மை போன்றவற்றை தனியார் நிறுவனங்களிடம் விட்டுவிட வேண்டும். அதாவது அரசு என்பது தண்ணீரை வினியோகம் செய் யும் சேவை மையமாக இருப்பதில் இருந்து தன்னை விடுவித்து கொண்டு, அந்த பொறுப்பை தனியார் நிறுவனங்களுக்கு விட்டுவிட வேண்டும். கூடுதலாக, தண்ணீர் தொடர்பான வர்த்தகம் செயல்களை வரையறுத்து உலக வர்த்தக கழகத்தின் மற்றொரு ஒப்பந்தமான காட்ஸ் (GATS) கூறுகிறது.

இந்த ஒப்பந்தம் வர்த்தக சேவை துறையில் தண்ணீ ரின் பங்காக, அதாவது நீர் வணிகம் செய்ய ஏற்ற செயல்களாக இவற்றை எல்லாம் கூறுகிறது: நீர்க் கழிவு மேலாண்மை, குடிநீர் வழங்குதல், கழிவு நீர் அகற்றல், நீர்க் குழாய்களை அமைத்தல், குடிநீர் தொட்டிகளை அமைத்தல், நிலத்தடி நீர் மேலாண்மை, விவாசயத்திற் கான நீர்ப்பாசனம், அணைகள் கட்டுமானம், தண்ணீர் வியாபாரம் மற்றும் தண்ணீர் போக்குவரத்து சேவை. இந்த பணிகளை மேற்கொள்ளும் பல பன்னாட்டு இன் னாட்டு நிறுவனங்களை நாம் அறிவோம். விவெண்டி, சூயஸ், பெக்டெல் முதலான உலக அளவில் தண்ணீர் வியாபாரத்தில் முதன்மையாக உள்ள பத்து நிறுவனங் கள், 150 நாடுகளில் 200 கோடி வாடிக்கையாளர்களுக்குத் தண்ணீர் விநியோகம் செய்து வருகின்றன.

சுருக்கமாக கூறவேண்டும் என்றால் தண்ணீர் தனியார்மயமாக வேண்டும் என்று உலக வர்த்தகக் கழகம் கூறுகிறது. உலக வங்கியும் கூறுகிறது. பல நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறைகளைக் கொண்டு தண்ணீர் தனியார்மயமாகும் வழிவகைகளாக மூன்றை கூறலாம்: முதலாவது ஒட்டுமொத்தமாக தண்ணீர் வினியோகம் மற்றும் மேலாண்மையை தனியாரிடம் ஒப்படைத்துவிடுவது. இந்த முறை இங்கி லாந்து நாட்டில் பின்பற்றப்படுகிறது. இரண்டாவது, நீர் வினியோகம் மற்றும் மேலாண்மையை நீண்ட காலத்திற்கு தனியார் நிறுவனங்களுக்கு குத்தகை விடு வது. இந்த முறை பிரான்சு நாட்டில் பின்பற்றப்படுகிறது. மூன்றாவது முறை தனியாரிடம் நீர் மேலாண்மையின் நிர்வாகத்தை ஒப்படைத்துவிடுவது.

இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகள் உலக வங்கியின் கடன் பெரும் திட்டங்களில் பெரும்பாலா னவையில் இடம்பெறும் ஓர் முக்கிய நிபந்தனை தண்ணீர் தனியார்மயமாக வேண்டும் என்பதுதான். தண்ணீர், சுகாதாரம் முதலான மக்களின் அடிப்படைத் தேவைகளை அரசாங்கம் செய்து தர வேண்டியதில்லை என்பதும் உலக வங்கி மற்றும் உலக வர்த்தகக் கழகத் தின் விதி. இதுபோன்ற நீர் வியாபாரத்தை ஊக்குவிக்கும் வகையில் தான் புதிய வரைவு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வரைவுக்கான அடிப்படை, உலக வங்கியின் கீழ் இயங்கும் “நீர் ஆதாரக் குழு -2030” என்ற அமைப்பு வழங்கிய “தேசிய நீராதார திட்டவரைவுக்கான பரிசீலனை - சீர்திருத்தங்களுக்கான திசை வழிகள்” என்ற அறிக்கையே ஆகும்.

அடிப்படை உரிமையான நீர்:

இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடி மகனுக்கும் வழங்கியுள்ள வாழ்வதற்கான அடிப்படை உரிமை என்பது தூய்மையான குடிநீரை உள்ளடக்கியதே என்று இந்திய உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அந்த வகையில் தண்ணீர் தனியார்மயமாகுவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கே புறம்பானதாகும். மேலும், இந்திய அரசிலமைப்புச் சட்டம் நீர் பாசனம், கால்வாய்கள், நீர்த்தேக்கம், நீர் மின்சாரம் ஆகியவை மாநில அதிகாரங்களுக்கு உட்பட்டதாக வரையறுத்துள் ளது. எனவே நீர் குறித்தான எந்த மாற்றமும் மாநில அளவில் முதலில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அந்த வகையில் உலக வங்கியின் கொள்கையை ஏற்று இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் நீர் தொடர் பான கொள்கை திட்டங்களை வரைய துவங்கியன. குறிப்பாக உத்திர பிரதேசம் (1999), ராஜஸ்தான் (1999), கர்நாடகா (2002), மற்றும் மகாராஸ்டிரா (2003) ஆகிய மாநிலங்கள் நீர் திட்டக் கொள்கைகளை வகுத்தன. நீருக்கான அதிகார மையங்களை அமைக்கும் விதமாக 1997-ம் ஆண்டு ஆந்திரா தனி சட்டம் இயற்றியது. இதன் இடையே மத்திய அரசு தேசிய நீர் கொள்கை 2002யை கொண்டு வந்தது. இந்த திட்ட கொள்கை நீர் தனியார்மயமாக வேண்டும் என்று கூறியது.

2012-ம் ஆண்டு புதிய வரைவு கொள்கையானது நீர் குறித்தான மாநில அரசுகளின் அதிகாரத்தை மறுத்து, பொது அதிகாரப் பட்டியலுக்கோ அல்லது மத்திய அரசின் அதிகார பட்டியலுக்கோ மாற்றியமைக்க ஒரு சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. 1882 - ம் ஆண்டின் இந்திய சொத்துக்களின் மீதான உரிமை கட்டுப்பாடு சட்டம் திருத்தப்பட்டு, நிலத்தடி நீரின் மீது நிலச் சொந்தக்காரர்களுக்கு உரிமையில்லை என்று மாற்ற வேண்டுமென்கிறது இந்த கொள்கை. நீரின் மீது உள்ள மக்களின் பாரம்பரிய உரிமையும், மாநிலங்களின் உரிமையையும், உள்ளாட்சி அமைப்புகளின் உரிமையும் ஒருங்கே பறித்து மத்திய அரசின் கட்டுப்பாடில் முழு அதிகாரத்தையும் கொண்டு செல்ல மறைமுகமாக வழி செய்கிறது புதிய தேசிய நீர்க் கொள்கை முன்வரைவு.

இந்த வரைவு அறிக்கையானது, தண்ணீர் துறையில் சேவையை அளிப்பவர் என்ற பொறுப்பிலிருந்து அரசு விலகிக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அதற்கு பதிலாக, சமூகக் குழுக்களும் தனியார் துறை யினரும் இச்சேவையை அளிப்பதை ஊக்குவித்து ஆத ரிக்க வேண்டும் என்கிறது. தண்ணீர் மற்றும் கழிவு நீருக்கு வரி விதிப்பது என்றும் வரைவில் கூறப்பட் டுள்ளது.

மின்சாரம் தனியார்மயமாக மாற்றுவதற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட்டது போல நீர் ஒழுங்குமுறை ஆணையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று இந்த அறிக்கை கூறுகிறது. இந்த ஆணையம் கட்டண நிர்ணயம், நீர் ஒதுக்கீடு, கண் காணித்தல், ஆலோசனை வழங்குதல் முதலானவற்றைச் செய்யும்.

தேசிய நீர்க் கொள்கை - 2012 இன் முன்வரைவில், 7 வது அத்தியாயத்தில் முதல் பிரிவு நீர் வர்த்தக பண்டமாக கருதப்பட்டு விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறது. மக்கள் மத்தியில் ஏழுந்த கடும் எதிர்ப்பின் காரணமாக இந்த அத்தியாயம் திருத் தங்கள் மேற்கெள்ளப்பட்டுள்ளது. புதிய திருத்தப்படி விவசாயிகளுக்கு நீர் மானிய விலையில் தரப்படும்.

இப்படி இந்த வரைவு மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நேரத்தில் மத்திய அரசு நீர் தொடர்பாக National Water Framework Act என்கிற புதிய சட்டத்தை இயற்ற முன்னாள் திட்ட குழு தலைவர் ஆலாக் தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளது. மேலும் நதி வாரிய சட்டத்திலும் திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய நீர்வள துறை முன்னாள் நீதிபதி டோபியா தலைமையில் ஒரு குழு அமைத்துள்ளது. இவை நமக்கு சுட்டிக்காட்டுவது என்னவெனில் மத்திய அரசு திட்ட வரைவின் அம்சத்தை பல்வேறு வழிகளில் அமல்படுத்த துவங்கிவிட்டது என்பதே.

ஆண்டுதோறும் தூய குடிநீர் கிடைக்காமலும் சுகாதார வசதி இல்லாமலும் உலகெங்கும் ஐந்து வயதுக்கும் குறைவான 21 லட்சம் குழந்தைகள் மாண்டு போகின்றன. மிகக்கொடிய இரு பெரும் நோய்களான எயிட்ஸ் மற்றும் மலேரியாவினால் கொல்லப்பட்டவர் களைவிட, தூய குடிநீர் கிடைக்காமல் மாண்டவர்களின் எண்ணிக்கை அதிகம். ஐ.நா.வின் கணக்கீட்டின்படி, உலகில் ஏறத்தாழ 200 கோடி மக்கள் தண்ணீர் பற்றாக் குறையால் அவதிப்படுகின்றனர். உலகின் 88 கோடியே 40 லட்சம் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர்வசதி இல்லை. 260 கோடி மக்களுக்குக் கழிப்பறை வசதி இல்லை.

இந்த நிலையில் இந்தியாவில் தண்ணீர் தனியார்மயமானல் அது மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே சென்றடையும் என்பதை கூறத் தேவையில்லை. இதற்கு உதராணமாக தில்லியில் தனியார்மயமாக்கப்பட்ட தண்ணீர் எப்படி மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே பயன் அளிக்கிறது என்பதை ஓர் ஆய்வு தெளிவுப் படுத்துகிறது (பார்க்க: Sujith koonan & Preeti Sampat, “Delhi Water Supply Reforms”, EPW, 28th April 2012 ).இந்தியாவில் தண்ணீர் தனியார்மயமாவதை எதிர்த்து வெற்றி கண்ட ஒரே போராட்டம் பிளாசிமேடா மக்களுடையது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்பாகவும் அவர்களால் வெற்றி பெறமுடிந்தது. இப்படிப்பட்ட போரட்டங்கள் இனி தொடர்கதை ஆகபோவது நிச்சயம்.

Pin It