இந்திய விவசாய அரசியலின் அரசியல் - பசுமைப் புரட்சியின் கதை கடந்த இதழின் தொடர்ச்சி

farmer-suicide01_450_copyஆந்திரா, மகாராஷ்ரா முதலிய மாநிலங்களில் விவசாயிகளை பெருமளவில் நஷ்டப்படுத்திய நிகழ்வுகள் போலவே தமிழ்நாட்டிலும் சில நிகழ்வுகள் நடந்தன.ஆனால் இங்கு தற்கொலைகள் நடக்கவில்லை.மிக மிகக் குறைவான கடன் தொல்லை தற்கொலைகள் மட்டுமே தமிழ்நாட்டில் நடந்துள்ளது -இன்று வரையும்.

80கள் கடைசியில் பருத்தியில் ஏற்பட்ட வெள்ளை ஈக்கள் பிரச்னையில் ஏற்பட்ட இழப்பு மிகவும் அதிகம். தற்கொலைக்கு பதிலாக நிலத்தை விற்றுவிட்டு, அதற்கு வாய்ப்பு இல்லாத போது தரிசாகப் போட்டுவிட்டு,பிழைப்புக்கு வெளியேறுவதையே, தமிழக விவசாயி களின் செயல்பாடாக இருந்துள்ளது.

ஒவ்வொரு பகுதியில் இருந்தும் ஒரு கூட்டம் ஏதாவது ஒரு தொழில் செய்ய வெளியேறுகிறார்கள். தமிழ் நாட்டிற்கு இவர்கள் திருப்பூர், கோவை, சென்னை முதலிய நகரங்கள் உள்வாங்குகிறது.

வடஇந்தியா,ஆந்திரா பகுதிகளில் கடலைமிட்டாய் முறுக்கு முதலிய திண்பண்டங்கள் விற்பவர்களாக ஒரு பகுதியினர் உள்ளனர்.

திருநெல்வேலி மணியாச்சியை அடுத்த ஒட்டநத்தம் கிராமம். சுமார் 3000 ஏக்கர் பருத்தி சாகுபடி செய்யும். பருத்தி விவசாயம் கைவிடப்பட்டதும், அவ்விவசாயிகள் காரச்சேவு விற்பனையாளராக,திருநெல்வேலி தூத்துக்குடி,கோளாப்பட்டி முதலிய ஊர்களுக்கு நூற்றுக்கணக்கில் போனார்கள். காராச்சேவு, பெரிய தொழிற்சாலை போல அங்கு உற்பத்தியானது. மாற்று ஏற்பாடு என ஏதாவது ஒரு மாற்று வழியை தேடு கிறார்கள் - பருத்தி விளைந்த பூமி இன்று வெறும் சூலை புல் காடாக கிடக்கிறது.

தற்கொலைகளுக்குப் பதிலாக இந்த வெளியேற்றங்கள்.தற்கொலைக்குச் சமமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

பொதுவாக இன்றைய கிராமங்கள் நிதிபலம் இல்லாத கிராமங்களாக இருக்கின்றன. 50கள் வாக்கில் ஒவ்வொரு கிராமமும் நல்ல நிதி - பரவலாக எல்லா விவசாயிகளிடமும் பலம் உள்ளதாக இருந்தது.நிதி ஆதார இழப்பு,அவர்களை தன்னம்பிக்கையை இழக்கச் செய்துவிட்டது. அதனால்தான் இந்தவெளியேற்றம்.

 இந்த வெளியேற்றத்தின் விளைவாக பரம்பரை விவசாய அறிவு உள்ளவர்கள் இல்லாததால் ஏற்படும் இழப்புகள் அதிகம். எ.கா. 2007இல் மார்ச் மாதத்தில் புயலடித்து திருநெல்வேலிப் பகுதி குளங்கள் பல நிறைந்தது. ஊர்மக்கள் நஞ்சை விவசாயம் செய்தனர்.

அந்தப் பட்டம் - மார்ச் மாதம் கடைசி - நஞ்சைக்கு சரியில்லாத பட்டம். இதைச் சொல்ல பழைய விவசாயிகள் இல்லை.ஜுன் மாதத்தில் தென்மேற்கு பருவ மழை ஆரம்பிக்கும்போது பலத்த மேல் காற்று வீசும் போது குளங்கள் வறண்டு பயிர்களும் கருகும். சொல்ல ஆள் இல்லாததால், பெரிய அளவில் விவசாயிகள் இந்த அழிவை எதிர் கொண்டனர்.

பிற மாநிலத்தவர்களை விட தமிழர்கள் தாங்கும் சக்தி உள்ளவர்களாக இருக்கிறார்கள் எனக் கொள்வதா அல்லது உள்ள நிலைக்கு கீழே இறங்கி வாழும் மனநிலை படைத்தவர்களாக இருக்கிறார்களா? என்பது விளங்கவில்லை.

தொடரும்                                    

Pin It