E_380“இந்த ஈயைப் பார் அது எவ்வளவு பயங்கரமாக, அழுக்காக, அடிமுட்டாளாக இருக்கிறது. நோய் பரப்பும் கிருமிகளை வேறு அது சுமந்து செல்கிறது. அது ஒரு கொலைக்காரன்.”

ஈயைப் பற்றி நமது பொதுவான எண்ணம் மேற்கூறி யது போலவே இருக்கும்.ஈக்கள் அசிங்கமானவை என்பது நமது மனதில் ஆழமாக வேரோடிவிட்ட ஒரு சிந்தனை.ஆனால் இது அப்பட்டமான பொய் என்பது உங்களுக்குத் தெரியுமா?

நீங்கள் நம்புவீர்களோ, மாட்டீர்களோ. உலகிலேயே சுத்தமான பூச்சி எதுவென்று கேட்டால், அது ஈதான்.அது தனது உடலை மிகுந்த கவனத்துடன் தூய்மையாக வைத்துக் கொள்கிறதாம். அசிங்கத்திலிருந்தும் அழுக்கிலிருந்தும், வெளிப்பொருள்களில் இருந்தும் அது தன்னைத் தானே தூய்மைப்படுத்தி வைத்துக் கொள்கிறது. நம் ஒவ்வொருவரைக் காட்டிலும் மிக அதிகமான நேரம் கழிவறையிலேயே ஈ செலவழிக்கிறது. அது “ஙொய்” என்று சுற்றாத நேரத்திலும் சாப்பிடாத நேரத்திலும், ஈயின் முக்கியமான வேலையே ஒரு துளித் தூசிகூட இல்லாவிட்டாலும்கூட இறக்கைகள், கண்கள், தலை, சொல்லப்போனால் உடலின் ஒவ்வொரு பாகத்தின் மீதும் தனது கால்களை தேய்த்து சுத்தப்படுத்திக் கொள்வதுதான். ஈக்களுக்கு தங்களது உடலை தூய்மையாக வைத்துக் கொள்வது என்பது ஒரு வெறிப்பிடித்த வேலை மாதிரி.

மேலும் ஈ நிச்சயம் பயங்கரமான ஓர் உயிரினம் அல்ல.ஏதாவது ஒரு உருப்பெருக்கி கண்ணாடி கொண்டு ஈயை கொஞ்சம் உற்றுநோக்கிப் பாருங்கள்.கச்சிதமான சமச்சீர் தன்மையையும், அதன் உடலில் உள்ள வடிவ அழகையும், எதனுடனும் ஒப்பிட முடியாத கூட்டுக் கண்களையும்,இறக்கைகளின் நிறப் பொலிவில் உள்ள அழகையும் கொஞ்சம் பொறுமை யாகப் பார்த்து ரசியுங்கள். ஈ ஓர் அற்புதமான பூச்சி என்பது புரியும்.

மேலும் ஈயை சுத்த முட்டாள் என்று சபிப்பது நமது அறியாமையையே காட்டுகிறது. ஈயின் மூளையும், அதன் மற்ற உணர்ச்சிகளும் கடுமையான வாழ்க்கை நெருக்கடிகளையும் தாண்டி வாழும் திறனை அதற்கு தந்திருக்கின்றன.எப்படிப் பறப்பது,எப்படி நேராகத் தரையிறங்குவது அல்லது மேலும்கீழுமாகப் பறப்பது,எப்படி உணவு தேடுவது, எங்கே முட்டையிடுவது,மனிதர்கள் கொடுக்கும் அடிகளில் இருந்து எப்படித் தப்பிப்பது என நானாவித விஷயங்களும் அதற்குத் தெரிந்திருக்கின்றன.

பல மணி நேரங்களுக்கு அதனால் பறந்து கொண்டே இருக்க முடியும்.ஃபிளைட்களில் அத்தியாவசியத் தேவையான ரன்வே இல்லாமலேயே நிலத்தில் லேண்ட் ஆக முடியும்.ஈ எப்படி பறந்து வந்து நிலத்தில் லேண்ட் ஆகிறது என்பதை சற்று கவனித்துப் பாருங்கள். அது அவிழ்க்க முடியாத ஒரு புதிரைப் போலவே இருக்கும்.

பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக விழிப்புடன் இருப்பது மட்டுமில்லாமல், தனது பார்வையில் துல்லியமாகவும்,மின்னலைப் போல சரக்கென்று எழுந்து பறந்துவிடும் தன்மையும் ஈக்களுக்கு உண்டு.

எவ்வளவோ திறமைகளைப் பெற்ற ஒரு பூச்சியாக இருந்தும்,ஒரு ஈயால் வெட்டுக்கிளியைப் போல திட உணவை அப்படியே கடித்துச் சாப்பிட முடியாது. பாவம், அதனால் கடிக்க முடியாது.மேலும் வேறு பூச்சிகளைப் போலவோ அல்லது வண்ணத்துப்பூச்சியைப் போலவோ திரவ உணவை இயற்கை ஸ்டிரா மூலம் உறிஞ்சிக் குடிக்கவும் முடியாது.ஈரமான பரப்புகளில் உள்ள திரவச் சத்துகளை ஸ்பாஞ்ச் போலாக்கவே முடியும். ஏதாவது ஓர் உணவு வறண்டு இருந்தால், தனது எச்சிலால் ஈ அதை முதலில் ஈரப்படுத்தும். பிறகு அந்த ஈரப்பகுதியை அப்படியே நக்கும். இதன்மூலம் ஸ்பாஞ்ச் செய்யப்பட்ட சத்துக்கள் அதன் உடலுக்குள் போகும். ஈக்களின் இயற்கையான, நிஜமான உணவு என்பது புளித்துப் போன (அழுகிய)தாவரப் பொருள்களும், தாவரஉண்ணிகளின் கழிவும்தான்.

மக்கக்கூடிய அழுகிக் கொண்டிருக்கும் பொருள்களில் ஈ முட்டைகளை இடுகிறது. ஓரிரு நாள்களில் இந்த முட்டைகள் பொரிக்கும்.அதிலிருந்து மஞ்சள் நிறத்தில் கால்களற்ற மக்காட் எனும் இளம்புழுக்கள் வெளிறியேறும். அழுகிக் கொண்டிருக்கும் பொருளை இந்த இளம்புழுக்கள் உணவாகக் கொள்ளும். இந்த இளம்புழுக்கள்தான் முக்கியமான இயற்கைத் துப்புர வாளர்களாகச் செயல்படுகின்றன.இயற்கைக் கழிவை விரைவாக அகற்ற அந்த சின்னஞ்சிறிய புழுக்கள் உதவுகின்றன.மண்ணுக்கு அடியில் நான்கைந்து நாள்களில் முழுமையாக வளர்ந்து, 5-7 செ.மீ. கொண்ட உருளை வடிவமும் பழுப்புநிறமும் கொண்ட வளர்ந்த புழுவாக அவை மாறும்.

Pin It