emufarmingbangalore_450ஈமு. ஈமு கோழி என்ற பறவை, இன்று தமிழகத்தில் பெரும்பாலானோர் வெறுக்கப்படும் பறவையாக மாறிவிட்டது. காரணம் ஈமுவின் பெயரால் இன்று நடைபெற்று வந்துள்ள எண்ணற்ற மோசடிகள். ஈமு கோழியின் பெயரால் 250க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தொடங்கப்பட்டு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மக்களிடம் இருந்து ஏமாற்றுப் பேர்வழிகளால் பிடுங்கப்பட்டு விட்டது.

ஈமுவின் வரலாறு

ஈமு கோழி ஆஸ்திரேலிய நாட்டை தாயகமாக கொண்ட பறவை. கங்காரு எப்படி ஆஸ்திரேலியாவின் சிறப்போ அதுபோல் ஈமுவும் அந்நாட்டின் சிறப்பு. ஈமு கோழி ஜோடியாக மட்டுமே வாழும் பழக்கத்தைக் கொண்டது. ஓர் ஆண் ஈமுக்கு ஒரு பெண் ஈமு என்ற கணக்கில் சேர்ந்து வளரக்கூடியது.

ஈமுவின் தாயகமான ஆஸ்திரேலியாவில் 1980வரை ஈமு கோழிகள் இயல்பாக வளர்க்கப்பட்டது. 1985இல் தான் வணிகரீதியான ஈமு பண்ணைகள் தொடங்கப் பட்டது. வளர்ச்சிப்போக்கில் ஆயிரக்கணக்கான ஈமு கோழிகளை கொண்ட பண்ணைகள் உருவானது. 1997 வாக்கில் சுமார் 2 லட்சம் ஈமுகோழிகள் பண்ணை முறையில் வளர்க்கப்பட்டது. ஆனால் அது தொடர முடியவில்லை. காரணம் ஈமுவின் தாயகமாக கருதப்படும் ஆஸ்திரேலியாவிலே உள்ளூர் மக்களால் ஈமுவின் இறைச்சி பெருமளவில் விரும்பப்படவில்லை. ஈமுவின் மற்ற எந்த பொருட்களும் சந்தைப்படுத்தப்படும் நிலை ஏற்படவும் இல்லை. இதனால் 2 லட்சமாக இருந்த ஈமு கோழியின் எண்ணிக்கை 2005ல் 19,000 ஆக குறைந்து விட்டது. ஈமுவின் தாயகத்திலேயே ஈமு பண்ணைகள் வெற்றி பெற முடியவில்லை. உள்ளூரி லேயே விலை போகாத ஈமு கோழிகள், சிலரால் நமது நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

ஈமு கோழி வருகையும், ஈமுவை வைத்து மோசடி தொடக்கமும்:

தொடக்தத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திரா வில் சிலரும், தமிழகத்தில் பல்லடத்திற்கு அருகில் சிலராலும் நூற்றுக்கணக்கான ஈமு கோழிகளை கொண்டு பண்ணைகள் தொடங்கப்பட்டது. ஆனால் வணிகரீதியான எவ்விதமான வாய்ப்பும் இல்லாததால் தொடங்கப்பட்ட சில ஆண்டிலேயே இப்பண்ணைகள் முடங்கி அப்படியே அழிந்துவிட்டது.

இப்பண்ணைகள் அழியும் காலத்தில்தான் மகாராஷ் டிராவிலும், தமிழகத்திலும் “ஈமு வளர்த்தால் குபேரனா கலாம்“ என்ற முழக்கத்தை முன்வைத்து ஒப்பந்த பண்ணைகள் எனும் முறையை அறிமுகப்படுத்தி ஈமு பண்ணைகள் புற்றீசல்களாய் தொடங்கப்பட்டது. இந்த ஒப்பந்த பண்ணை முறை என்ற மோசடி முறை தமிழகத்திற்கு புதிதன்று. ஏற்கனவே மரம் வளர்ப்பு பண்ணை என்ற பெயரில் அனுபவ் போன்ற நிறுவனமும், முயல் வளர்ப்பு பண்ணை என்ற பெயரில் சில நிறுவனங்களும் தமிழக மக்களை, விவசாயிகளை மொட்டையடித்ததும் நாம் அறிந்ததே.

ஆறு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு 3 மாத வயது கொண்ட ஒரு ஜோடி ஈமு குஞ்சுகளை 10 ஆயிரம் முதல் 15,000 வரை இந்நிறுவனங்கள் விவசாயிகளிடம் விற்றது. குஞ்சுகள் வளர்ச்சி அடைந்து முட்டை இடும் போது முட்டை ஒன்றை ரூ.2000க்கு பெற்றுக் கொள் கிறோம் என விளம்பரம் செய்தன. பலர் இதில் முதலீடு செய்தனர். ஈமு கோழியும் வளர்ந்தது. முட்டையும் இட்டது. முதலில் ரூ.2000 கொடுத்தவர்கள் பின்பு ரூ.1000-க்கு கூட வாங்குபவர்கள் இன்றிப் போனது. தொடங்கப்பட்ட பல நிறுவனங்கள் மூடிவிட்டு சென்ற தால் ஈமு முட்டையையோ, ஈமு கோழியையோ வெளி யில் விற்க முடியவில்லை. ஈமுவுக்கு தீவனம் போட்டே பல லட்ச ரூபாய் கடனாளியான விவசாயிகள் பலர்.

பின்பு பல நிறுவனங்கள் 1 1.2 லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் உங்கள் நிலத்தில் எங்கள் நிறுவனத்தின் செலவில் ஈமு கோழிகளுக்கான கொட்டகை போட்டு ஆறு குஞ்சுகள் விடப்படும். அதற்கான தீவனமும் வழங்கப்படும். ஈமு கோழி வளர்ப்புக்கு மாதக் கூலியாக ரூ.6000 முதல் ரூ.9000 வரை வழங்கப்படும் என்றும் ஈமு 18 மாதமாகி முட்டையிடும் தருவாயில் கோழியை எடுத்துக் கொண்டு முதலீட்டு பணத்தை முழுமையாக தருவோம் என விளம்பரம் செய்தன சில நிறுவனங்கள். எண்ணற்ற விவசாயிகளும், பொதுமக்களும் இம்மோசடி திட்டத்தில் இணைந்தனர்.

வி.ஐ.பி. திட்டம் எனக் கூறி ஈமு கோழி வளர்ப்புக்கு நிலமும், நேரமும் இல்லாதவர்களுக்கு இந்நிறுவனங்களே முதலீடு செய்பவரின் சார்பில் ஓர் இடத்தில் பண்ணை களை அமைத்து கோழிகளை பராமரிக்கும் திட்டமும் அறிவித்திருந்தார். இதில் முதலீடு செய்த பலருக்கும் ஒரே பண்ணையை திரும்ப, திரும்ப முதலீட்டாளர்களுக்கு காட்டி இதுதான் உங்கள் பண்ணை என்று வி.ஐ.பி திட்டம் என மோசடி திட்டத்தை அரங்கேற்றினர்.

மக்கள் இம்மோசடி முறையில் எளிமையாக பலியாவதை அறிந்த பலரும் இதில் குதித்தனர். தமிழகத்தில் இன்று 250க்கும் மேற்பட்ட மோசடி ஈமு பண்ணைகள் உள்ளதாக அறியப்பட்டு உள்ளது.

ஒப்பந்தப் பண்ணைகள் தாக்குப் பிடித்த கதை:

இன்று ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை மோசடி செய்தன எனக் கூறப்படும் ஈமுகோழி நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக இடைவெளி இல்லாமல் முதலீடு செய்தவர்களுக்கு எவ்வாறு பணம் கொடுத்தனர், எப்படி தொழில் நடத்தினர் எனும் கேள்வி எழுவது தவிர்க்க முடியாததே.

இத்திட்டத்தில் ஆரம்ப காலத்தில் சேர்ந்தவர்களுக்கு அடுத்தடுத்து வந்து சேரும் முதலீட்டாளர்களிடம் பெறப்படும் முதலீட்டு பணத்திலிருந்து எடுத்துக் கொடுக்கப்பட்டது. “எனக்கு முறையாக பணம் கிடைத்து வருகிறது!” என்று இத்திட்டத்தில் சேர்பவர்கள் தெரிவித்ததால், மற்றவர்களும் நம்பிக்கை பெற்று பணம் கட்டினார்கள். இது சங்கிலி போல் வளர்ந்து சென்றது. முதலில் வருபவருக்கு பின்னால் வருபவரின் முதலீட்டு பணத்தை கொடுத்து இத்திட்டம் நடைபெற்று வந்தது.

விவசாயிகள் ஈமு கோழியை வளர்த்து முட்டையிடும் பருவத்தில் நிறுவனத்திற்கு கொடுத்தனர் அல்லது முட்டையை நிறுவனத்திற்கு கொடுத்தனர். முட்டை வியாபாரம் நடைபெற்றதே ஒழிய வேறு எந்த வியாபாரமும் ஈமு கோழி வளர்ப்பில் நடைபெறவில்லை. தற்போது புற்றீசல்களாக, புதிய புதிய பல நிறுவனங்கள் தொடங்கப்பட்டு கவர்ச்சிகரமான பல பரிசு திட்டங் களை அறிவித்ததன் காரணமாக ஏற்கெனவே உள்ள பல நிறுவனங்களுக்கு புதிய முதலீட்டாளர் சேர்க்கை யின்றி தேக்கமுற்று நின்றுவிட்டது. சங்கிலித் தொடர் அறுந்ததால் ஈமு நிறுவனங்கள் பெரும்பாலானவை முதலீட்டாளர்களுக்கு பணம் கொடுக்காமலும் ஈமுகோழிக்கு தீவனமும் கொடுக்காமலும் ஓடி ஒளிந்து வருகின்றனர்.

நாம் இவ்வாறு கூறும் போது ஈமு கோழியினால் கிடைக்கும் கறி, கொழுப்பு, இறகு, தோல் ஆகியவை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படவில்லையா, வியாபாரம் நடைபெறவில்லையா எனும் கேள்வி எழுவது இயல்வே. உண்மையில் நடந்த கதை இதுதான்.

ஈமு வர்த்தகத்தின் உண்மை நிலை:

ஈமுவின் கொழுப்பு அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கவும், மூட்டுவலிக்கு நிவாரணியாகவும் பயன்படுத்தலாம். ஈமுவின் இறைச்சி உணவுக்காகவும், ஈமுவின் தோல் மற்றும் இறகுகள் பல்வேறு தேவை களுக்காக பயன்படுத்தலாம் எனக் கூறியும், ஈமுவினால் கிடைக்கும் அனைத்தும் ஏற்றுமதி செய்யப்படுகிறது எனக் கூறியே ஈமு கோழி வளர்ப்பை நிறுவனங்கள் அறிவித்து ஒப்பந்தப் பண்ணைகள் அமைக்கப்பட்டது.

உண்மையில் ஈமு கோழியை 16-&18 மாதங்கள் வளர்த்து விற்றுவிட வேண்டும். காரணம் இப்பருவத்தில் உள்ள கோழிகள்தான் விற்பனைக்கு ஏற்றவை. 18 மாதத்திற்கு மேல் வளர்த்தால் வளர்ந்த கோழிகளின் கறியும், கொழுப்பும் சரிப்படாது. 18 மாதத்திற்கு மேல் ஈமு கோழி தின்னும் தீவனத்திற்கு ஏற்ப எடை கூடாது. தீவனம் போட்டதற்கான செலவு நட்டம்தான் ஏற்படும்.

சுமார் 16 மாதம் வளர்ந்த ஈமு கோழி 40 கிலோ எடை இருக்கும். தனது உடல் எடையை போல் 5 மடங்கு தீவனம் சாப்பிடும். 16 மாதம் வளர்ந்த ஈமு கோழியில் கறியின் அளவு பாதிதான் 50% (சுமார் 20 கிலோ) இருக்கும். 7 கிலோ அளவிற்கு கொழுப்பு கிடைக்கும்.

ஒரு 16 மாத ஈமு கோழியை வளர்த்து விற்பனை செய்யும் போது ஈமுவில் கிடைக்கும் கொழுப்பு 7 கிலோ ரூ.750 வீதம் விற்பதன் மூலம் 5,250 ரூபாயும், தோல் ரூ.500 விலை போகும், கறி ரூ.350 என விற்றால் 20 கிலோவிற்கு ரூ.7000 என ஈமுகோழியில் ரூ.12,750 மட்டும்தான் தற்போது கிடைத்து வருகிறது.

ஈமு வளர்க்க ஒரு குஞ்சு ரூ.3000, தீவனம் 40கிலோ ஈமுவுக்கு 5 மடங்கு எனும் போது 1 கிலோ தீவனம் ரூ.30 என ரூ.6000மும், பராமரிப்பு செலவு என ரூ. 1,000மும் என மொத்தம் ரூ. 10,000 செலவாகும். இம்முறையில் கணக்கிட்டு பார்த்தால் ஓர் ஈமுவின் மூலம் 11/2 ஆண்டில் கிடைக்கும் லாபம் ரூ.2,750 மட்டுமே இருக்கும்.

ஈமு கறி எவ்வித சுவையும், ருசியும் இல்லா தது. ரப்பர் உருண்டையை மெல்லுவது மாதிரி சவுக்கு, சவுக்குன்னு வாயில் துள்ளும், நமது பல்லுக்குள் அடங்காது. தமிழக மக்களின் நாக்கு சுவைக்கு ஏற்ப ஈமு இறைச்சி இல்லாததால், ஈமு கறி விற்பனை எங்கும் பெரிதாக இல்லை. ஈமு இங்கு வந்து பத்தாண்டாகியும் ஈமு இறைச்சி கடை எங்கும் இல்லை. காங்கயம் பகுதியில் ஈமுவில் இருந்து கொழுப்பு எடுப்பவர்கள் கறியை ரூ.100க்கு விற்பனை செய்தால் கூட வாங்குவதற்கு ஆட்கள் இல்லை.

இதில் ஈமு கறி எவ்வித சுவையும், ருசியும் இல்லா தது. ரப்பர் உருண்டையை மெல்லுவது மாதிரி சவுக்கு, சவுக்குன்னு வாயில் துள்ளும், நமது பல்லுக்குள் அடங்காது. தமிழக மக்களின் நாக்கு சுவைக்கு ஏற்ப ஈமு இறைச்சி இல்லாததால், ஈமு கறி விற்பனை எங்கும் பெரிதாக இல்லை. ஈமு இங்கு வந்து பத்தாண்டாகியும் ஈமு இறைச்சி கடை எங்கும் இல்லை. காங்கயம் பகுதியில் ஈமுவில் இருந்து கொழுப்பு எடுப்பவர்கள் கறியை ரூ.100க்கு விற்பனை செய்தால் கூட வாங்குவதற்கு ஆட்கள் இல்லை. ஈமு கறி உணவகம் என நிறுவனங்கள் பெருந்துறை, ஈரோடு என சில இடங்களில் உணவகம் நடத்தினாலும் பெயருக்குத்தான் கடை உள்ளதே தவிர மக்களின் ஆதரவை இது பெறவில்லை.

ஈமு கோழி இங்கு வந்து பல ஆண்டாகியும் இது வரை ஈமுவின் இறைச்சியோ, ஈமுவால் தயாரிக்கப்பட்ட எவ்வித அழகு சாதனப் பொருட்களும் ஒரு ரூபாய்க்கு கூட எந்த நாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படவில்லை என்பதே அப்பட்டமான உண்மை. இது அரசு தரும் புள்ளி விபரமாகும்.

ஈமுவின் பெயரால் நடந்த விளம்பர யுத்தம்:

(பேனை பெருமாளாக்கிய கதை)

ஈமுவின் பெயரால் நடைபெற்ற இம்மோசடிக்கு மூல காரணமும், முதல் காரணமும் விளம்பரமேயாகும். உலக மயமாக்கலினால் விவசாயிகளுக்கு விவசாயத்திலே நட்டம், விவசாயம் செய்வது தற்கொலைக்கு சமமானது என்ற மன நிலையில், விவசாயம் தவிர்த்து மாற்றுத் தொழில் தேடி அவர்கள் நிர்பந்திக்கப்பட்டு உள்ளனர். விவசாயத்துடன் இணைந்து ஈமு கோழி வளர்ப்பது மூலம் முன்னேறலாம் என மோசடி பேர்வழிகளின் விளம்பர உத்தியாலும், விவசாயி மக்களின் நம்பிக்கைக்கு பாத்திர மான நாளிதழ்கள், வார இதழ்கள், தொலைக் காட்சி களில் ஈமுவுக்கு ஆதரவான விளம்பரங்களாலும், திரைப் பட நடிகை, நடிகர் விளம்பரங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் நடிகைகள் ஈமு நிறுவனங்களை தொடங்கி வைத்தது என விளம்பர வெள்ளத்தில் அப்பாவி மக்கள் மூழ்கடிக்கப்பட்டு ஈமு நிறுவனங்களில் பணத்தைக் கொட்டினர்.

முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த ஈமு பண்ணை உரிமையாளர் பல்வேறு பல்கலைக்கழகங்களில் இருந்து போலியாக டாக்டர் பட்டம், சிறந்த தொழில் முனைவோர் பட்டம், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமுடன் இருப்பது போன்ற படத்துடன் பேட்டி, கால்நடை பல்கலைக்கழக துணைவேந்தர், கால்நடை கல்லூரி முதல்வர்களை வரவழைத்து ஈமு பண்ணையை திறக்க வைத்த தந்திரம் என எண்ணற்ற வகையில் மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தி அவர்களை முட்டாளாக்கி வந்தனர் இம்மோசடி பேர்வழிகள்.

ஜனநாயகத்தை பாதுகாக்கிறோம் எனச் சொல்லும் நான்கு தூண்களில் ஒன்றான பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் சிலவற்றைத் தவிர பெரும்பால னவைகள் இம்மோசடி நிறுவனத்தை அம்பலப்படுத்தாமல் கோடிக்கணக்கில் விளம்பரம் மூலம் பணம் கிடைக்கிறது என்பதால் இக்கொள்ளையர்களை பாதுகாத்து வந்தது மட்டுமின்றி ஈமுக்கோழிக்கென சிறப்பு மலரும் வெளி யீட்டு அவர்களின் பங்குதாரர் போலவே செயல்பட்டன. எவ்வித சமூக அறமின்றி “மாப்பிள்ளை செத்தால் என்ன; மணப்பெண் செத்தால் என்ன; மாலைப்பணம் வந்தால் போதும் எனக்கு” என்ற நிலையில்தான் இவை இருந்தன.

அரசியல்கட்சிகளின் பாராமுகம்:

ஈமு ஒப்பந்த பண்ணைகள் என்பது மோசடியான திட்டம் என்பது அரசியல்கட்சிகள் அனைத்திற்கும் நன்கு தெரியும். ஆனால் எந்த ஒரு கட்சியும் இம்மோசடி நிறுவனங்களை எதிர்க்கவில்லை. (பா.ம.க போன்ற ) ஒரு சில கட்சித் தலைவர்களோ, இந்நிறுவனங்களை திறந்து வைக்க வருகை தந்து இந்நிறுவனத்தின் விவசாயிகளைத் தள்ளி பலியாக்கினர்.

மக்களின் மீது எவ்வித பற்றுமின்றி, தனது லாபம் (பணப்பை நிரப்புவதை) மட்டுமே லட்சியமாக கொண்ட இக்கட்சிகள் மக்கள் ஏமாற்றப்படுவதை பற்றி அக்கறையின்றி இந்நிறுவனங்கள் விவசாயிகளிடம் பறிக்கும் பணத்தில் ஒரு பகுதியை தனது கட்சிக்கென பிடுங்குவதை வழக்கமான கொண்டிருந்தன. இக்கட்சி களின் மாவட்ட, ஒன்றிய தலைவர்களுக்கோ “இந்நிறு வனங்கள் கற்பகவிருட்சமாய் கேட்கும் போதெல்லாம் பணத்தை அள்ளித் தருவாய் இருந்தது. அனைத்து கட்சிகளின் தொலைக்காட்சிக்கும் விளம்பரமாய் பணத்தை கொட்டியது இம்மோசடி நிறுவனங்கள்.

சில முற்போக்கு அமைப்புகளும், விவசாய அமைப்பு களும், நுகர்வோர் அமைப்புகள் மட்டுமே இந்நிறுவனங் களின் மோசடியை இடையறாது தொடர்ந்து எதிர்த்து வந்தன. மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டின.

அதிகாரிகளின் செயல்பாடின்மை:

ஈமு கோழி ஒப்பந்த பண்ணைகளால் எதிர்காலத்தில் மக்கள் மிகப்பெரிய அளவில் ஏமாற்றப்படுவர் என மோசடிப் பண்ணைகளை பற்றி பல ஆண்டுகளாகவே மாவட்ட ஆட்சித்தலைவர், வருவாய்துறை, காவல்துறை என பலரிடம் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து புகார் கொடுத்தே வந்தனர்.

Emu_450மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் மாவட்டத்தில் ஈமு ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் 200 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றதாக அம்மாநில சட்டமன்றத்தில் அறிக்கை தாக்கலாகி இருந்தது. இந்த செய்தியை எந்த ஊடகமும் வெளியிடவும் இல்லை. ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதுபற்றி கூறிய நடவடிக்கை கோரிய போது “நான் இங்கு பதவியில் இருக்க வேண்டாமா?” எனக்கூறி ஒதுங்கிக் கொண்டார்.

பல்வேறு புகார்கள் அதிகாரிகளிடம் கொடுக்கப்பட் டாலும் புகாரைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள் முறை யற்ற வகையில் தொழில் நடத்தும் இப்பண்ணையாளர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்காமல் மக்களுக்கு போது மான விழிப்புணர்வு இல்லை; மக்கள் பேராசைப்படு கின்றனர்; மக்கள் ஏமாறக்கூடாது; மக்கள் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும் எனப் புகார் கொடுத்தவர்களிடமே கூறி வந்தனர். இப்படி செயல்பாடின்றி அனைத்துத் துறை அதிகாரிகளும் இருந்தால்தான் இம்மோசடி நிறுவனங்கள் புற்றீசல்களாய் கிளம்பி இன்று பல்லா யிரக்கணக்கான மக்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டது.

இதுமட்டும் இன்றி ஈமு கோழி மோசடியை அம் பலப்படுத்தியவர்கள் மீது ஈமுபண்ணை உரிமையாளர் களால் பொய்வழக்கு கொடுக்கப்பட்டு அவர்கள் வழக்கை சந்திக்கும் நிலையும் ஈரோடு மாவட்டத்தில் ஏற்பட்டது.

அதிகாரிகள் என்போர் பிரச்சினை வந்த பிறகு நடவடிக்கை எடுப்பவராக அல்ல, பிரச்சனை வரும் முன்பே அதை கண்டுணர்ந்து நடவடிக்கை எடுப்பவராய் இருக்க வேண்டும்.

இயற்கையை பாதுகாக்க மக்களின் பிரச்சனைக்காக இன்றும் குரல் கொடுப்பவர்கள் மீது எண்ணற்ற பொய் வழக்குகள் போட்டு, அவர்களை சிறையில் தள்ளி அவர்களின் செயல்பாட்டை முடக்கும் காவல்துறை இதுபோன்ற மோசடி பேர்வழிகளை திரும்பிக்கூட பார்க்காத மர்மம்தான் என்ன?

மக்களின் நலன் முக்கியம் அல்ல. தங்களுக்கு கையூட்டும், அரசியல் வாதிகளுக்கு சலாம் போடுபவ ராகவே பெரும்பாலான அதிகாரிகளின் நிலை உள்ளது. மக்களுக்கு கட்டுப்படாத, மக்களால் கேள்வி கேட்க முடியாத நிலையில் அதிகாரிகள் இருக்கும் வரையில் இதுபோன்ற மோசடிகளும், மோசடிப் பேர்வழிகளும் உலா வந்து கொண்டுதான் இருப்பார்கள்.

மக்கள் இதுபோன்ற மோசடிகளால் தெருவிற்கு வரும் போது மட்டும் அதிகாரிகளால் கண்துடைப்பாக சில நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஏற்கனவே அனுபவ் தேக்கு மர வளர்ப்பு திட்டம், சந்தன மரம் வளர்ப்பு, கண்வல்லி கிழங்கு விவசாயம், முயல் வளர்ப்பு, மருந்து நறுமண செடிகள் வளர்ப்பு, போன்ற திட்டத்தாலும் தற்போது ஈமுகோழி வரிசையில் நாட்டுகோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, கொப்பரை தேங்காய் உடைப்பது என்ற மோசடி திட்டங்களால் விவசாயிகளும் மக்கள் தெருவிற்கு வந்து உள்ளார்கள்.

இதுபோலவே கோல்ட் குயிஸ்ட், டேட்டா எண்டரி, இரிடியம், திருப்பூர் பாசி நிறுவன மோசடி, ஸ்பீக் ஆசியா சதன்லைன், மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் லாட்டரி பரிசு, மல்டி லெவல் மார்க்கெட்டிங், காந்தப்படுக்கை என நகர்புற படித்த மேல்தட்டு வர்க்கத்தை ஏய்ப்பதற்கான மோசடிகள் உலாவந்தன, வந்து கொண்டும் உள்ளன.

இன்று உலகமயமாக்கலினால் மக்களின் உத்தரவாத மான வேலைவாய்ப்புகள், விவசாயம், இயற்கை வளங்கள், மக்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு சூறையாடப்படுகிறது. மக்களிடையே நுகர்வு கலாச்சாரமும், நுகர்வு வெறியும் வலிந்து திணிக்கப்படுகிறது. இதனால் “உழைப்புக்கு அஞ்சாத ஊரில் ஏமாற்றி பிழைப்பவனுக்கு வேலையில்லை. இலவசங்களுக்கு ஏங்கும் ஊரில் ஏமாற்றுக்காரனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை” என்பதற்கு ஏற்ப மக்களிடம் வருமானம் ஈட்டுவதற்கான நெறிமுறைகள் எல்லாம் அழிக்கப்பட்டு வருகிறது. சுரண்டல் மட்டு மின்றி, மக்கள் ஏமாற்றப்படுவதும் தொடர்கதையாக மாறிவிட்டது. அறம் சார்ந்த வாழ்க்கை கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. எப்படியும் வாழலாம்; எவரை அழித்தும் வாழலாம் என்ற நுகர்வு வெறி பெரும்பாலானோரை ஆட்டி வைக்கிறது.

உலகமயமாக்கலினால் ஏற்படுத்தப்பட்டுள்ள நுகர்வு வெறியை களைந்து, தற்சார்பு கொண்ட உற்பத்தி முறையை உயர்த்திப் பிடித்து நமது வாழ்வாதாரத்தை, இயற்கை வளத்தை மீட்டு பாதுகாக்க வேண்டும். அலை அலையாய் வரும் ஈமுகோழி போன்ற மோசடியை மூலதனமாக கொண்ட திட்டங்களை எதிர்த்தும், மக்களிடம் விழிப்புணர்வு ஊட்டியும், தொடர்ந்து நாம் போராடவும் வேண்டும்.

Pin It