naali_380மனிதன் உள்ளிட்ட எல்லா வகையான உயிரினங்களும் வாழ்வதற்கு அடிப்படையான ஆதாரம் மரங்கள் மற்றும் அது சார்ந்த காடுகள். காடுகள் மீதும், காடு களை தங்கள் தெய்வமாகவும் மதித்து வாழும் பழங்குடி யின மக்கள் மீதும் அதீத அக்கறை காட்டி வெளியாகி இருக்கும் ஆவணப்படம் “நாளி”.

வழக்கறிஞரும், சுற்றுசூழலியலில் முக்கிய ஆளுமை யுமான இரா.முருகவேளும், ‘ஒடியன்’ லட்சுமணனும் இணைந்து உருவாக்கி இருக்கும் ஆவணப்படம் “நாளி”. வெட்ட வெட்ட வளரும் மூங்கிலையும், அதிகம் வளர்ந்தால் காட்டில் தீப்பற்றக்கூடிய சூழலை ஏற்படுத் தும் நாணலையும்தான் பழங்குடியின மக்கள் தங்களின் வீடுகளை அமைக்க பயன்படுத்துகிறார்கள் என்கிற வரிகளில் தொடங்கும் பழங்குடியின மக்களின் காடு சார்ந்த அறிவும், காடு சார்ந்த அக்கறையும்தான் இன்று வரை சில காடுகளாவது மிஞ்சுவதன் காரணம் என்கிறது இந்த ஆவணப்படம். உலகின் ஏழு மிக முக்கியமான உயிர்க்கோளங்களில் ஒன்றான மேற்குத் தொடர்ச்சி மலை பற்றியும், அதிலுள்ள மிக முக்கியமான மரங்களை எல்லாம் அழித்து பணப்பயிர் செய்யும் அதிகார வர்க்கத்தின் சூழ்ச்சியையும் சன்னமாக தொட்டுச் செல்கிறது நாளி ஆவணப்படம்.

இயற்கையோடு இயைந்து, இயற்கையாக வாழும் ஓர் இனத்தின் மீது அரசர்களாலும், நவீன யுகத்தின் அரசுகளாலும் தொடுக்கப்பட்ட மிக பெரிய போர் ஜீவராசிகளின் முக்கியமான ஆதாரமான காடுகளையும் அழிக்கிறது. மிளகு, தேயிலை, தேக்கு, புலி இவையெல் லாம் சேர்ந்து எப்படி ஓர் இனத்தையும், அது சார்ந்த காடுகளையும் அழிக்கிறது என்பதை நம்மை புரட்டிப் போடும் பல ஆதாரங்களோடு விவரிக்கிறது இந்த படம்.

எந்த காடுகளில் புலிகள் இருக்கிறதோ அந்த காடு களோ மிக சிறந்த சமநிலைக் காடுகள் என்று நமக்கு பல காலமாக சொல்லப்பட்டு வருகிறது. அதற்காக பல அரசு சாரா அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுத்தும், இந்திரா காந்தியின் "operation tiger" திட்டத்தின் மூலமும் இவர்கள் காப்பாற்றிய புலிகளின் எண்ணிக்கை ஆயிரத்தி சொச்சங்கள் மட்டுமே.. ஆனால் பழங்குடியின மக்கள் மலைகளின் வாழும் தங்கள் வாழவின முறையின் மூலம் காடுகளை அதன் சமநிலை மாறாமல், உணவுச் சங்கிலி அறுந்துப் போகாமல் பாதுகாத்து வந்துள்ளனர்.

ஆனால் இந்த நாட்டில் தோன்றிய அரசர்களும், அவர்களை தொடர்ந்து இங்கு ஆட்சிபுரிய வந்த ஆங்கிலேயர்களும், மலையின் ஸ்த்திரத்தன்மையை காப்பாற்றும் மரங்களை எல்லாம் அழித்துவிட்டு மண்ணை மணலாக மாற்றி, மலைகளை, அதன் உறுதித் தன்மையை, குலைக்கும் தேக்கு உள்ளிட்ட மரங்களை மலைகளில் பயிரிட்டு வந்துள்ளனர். மலைகளும், மலைகளில் உள்ள காடுகளின் சமநிலையும் ஒழுங்கான போக்கில் இருக்கும் வரை சமவெளியில் வாழும் மனிதர்களுக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை. அது மலைகளில் வாழ்ந்து, மலைகளை பாதுகாத்து, மலை களையே தங்கள் தெய்வமாக மதிக்கும் பழங்குடியின மக்களால் மட்டுமே சாத்தியமாகும்.

சர்வாதிகார அரசும், அறிவற்ற சில அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து பழங்குடியின மக்களை மலைகளில் இருந்து அகற்றுவதன் மூலம் மலைகளையும், அதன் காடுகளையும் காப்பாற்றலாம் என்கிற போலித்தனமான மாயையை உருவாக்கி வைத் துள்ளன. இந்த அரசுக்கும், போலி வியாபாரிகளுக்கும் உண்மையாகவே அறிவில்லையா என்ன? இல்லை இவர்கள் நிரம்ப அறிவுப்படைத்தவர்கள். பழங்குடியின மக்களால்தான் காடுகளை காக்க முடியும் என்பது இவர்களுக்கு தெரிந்தே இருக்கிறது. அதனால்தான் அவர்களை காடுகளை விட்டு வெளியேற்றுகின்றனர். காரணம் காடுகளின் மூலம் கோடிகளை ஈட்டும் அரசின் நயவஞ்சகம்தான்.

இன்று சாதாரண மக்கள் கூட உல்லாச பயணம் சென்று வரும் மலை வாழ் இடங்களுக்கு இன்னும் சில ஆண்டுகளில் பணம் படைத்த பெருமுதலைகள் மட்டுமே சென்று வர முடியும். கார்பன் ட்ரேடிங் எனும் ஒப்பந்தத்தின் அடுத்த விளைவு அதுதான்.

இங்கு யாருக்கும் சுற்றுசூழல், காடுகளின் சமநிலை, அதை பாதுக்காக்கும் புலி என எவற்றின் மீதும் உண்மை யான அக்கறை இல்லை. மாறாக இவைகளின் மீது அக்கறை காட்டுவதுபோல நடிப்பதன் பொருட்டு தங்களுக்கு ஏற்படும் அறிவுஜீவிகள் எனும் சமூக நிலைப்பாடும், பணமுமே முக்கியம். பழங்குடியின மக்க ளின் வயிறு காய்ந்தால் மலைகளில் ஓடும் ஆறுகளும், ஓடைகளும் சேர்ந்தே காய்ந்துப் போகின்றன. காரணம் அவர்கள்தான் காடுகளை காக்கும் பிரம்மாக்கள். அவர்கள் இல்லாத காடுகளில் சமநிலை, உயிர்க்கோளம் என்பதெல்லாம் சாத்தியமில்லை என்பதை உணர்ந்தே, ஒப்புக்கொள்ள மறுக்கிறது அரசும் அதன் அதிகார எந்திரங்களும்.

டிவிடி பெற லட்சுமணன் 98433 70752

முருகவேள் 94430 14445

Pin It