அக்டோபர் 29  சட்டசபை முற்றுகைnie-wieder-krieg_450

நிலையற்ற தன்மையை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் அணுஉலைகளை உலகம் முழுவதும் மக்கள் எதிர்க்கிறார்கள். தமிழகத்தில் அணுஉலைகள் தொடங்கிய காலத்திலிருந்து அதன் அழிவை உணர்ந்தவர்கள். தொடர்ச்சியாக எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள், இன்றுவரை. மிகச் சிலரே இருந்த இப்போராட்டம், இன்று மக்கள் போராட்டமாக, கடல் பழங்குடிகளின் போராட்டமாக மாறியுள்ளது. உண்மையில் இதனை அறிவின் வளர்ச்சியாக, மனித நாகரிகத்தின் வளர்ச்சியாக, பண்பாட்டின் வளர்ச்சியாகக் கருதப்பட வேண்டும். 400 நாட்களுக்கும் மேலாகத் தொய்வின்றி போராடி வரும் இடிந்தகரை மக்கள் 2500 வருட தமிழின வரலாற்றில், நாகரிகத்தின் உச்சத்தைத் தொட்ட மக்கள், அமைதியான நல்வாழ்விற்காக மாபெரும் போராட்டங்களை நடத்தியவர்கள் என்று உலகத்தினரால் பாராட்டப்படும் காலம் வெகுதொலைவில் இல்லை.

ஆனால் அரசோ தனக்குத் தேவைப்படும்படி இவர்களை அமைதியானவர்களாக (தேர்தலுக்குமுன்), பின்பு இப்பொழுது தீவிரவாதிகளாகச் சித்தரிக்கிறது. தேர்தலுக்கு முன் ‘போராட்டத்தில் இம்மக்களோடு நிற்பேன்’ என்று முதல்வர் அறிவித்தார். அப்போது காங்கிரஸ்காரர்கள், சோ, சரத்குமார், பா.ஜ.க. மற்றும் இதர ஒட்டுண்ணிகளான தா.  பாண்டியன், பிற ஆதரவாளர்கள் எங்கே போனார்கள்? தேர்தலுக்குப் பின் துரோகம் செய்தது யார்? நம்முடைய முதல்வர்தான்! முதல்வர் அணுஉலையை எதிர்க்கும்போது தா.பாண்டியன் முதல்வரை எதிர்த்தாரா? இல்லையே! அம்மாவின் கைப்பேசியாக, சைலண்ட் மோடில் இருந்தார். இன்று உழைக்கும் மக்களின் போராட்டத்தை அவமதிக்கும் கம்யூனிஸ்டாக மாறிவிட்டார்.

அணுஉலையைப் பின்னிப் பிணைந்திருப்பது கற்பனையான மின்சாரப் பொய்கள்தாம். அணுஉலையினால் மின்சாரம் கிடைக்கும் என்பது, முதல்வர் இடிந்தகரை மக்களை ஆதரித்த மாதிரி வெறும் மாயை, அது அப்பட்டமான பொய். மின்சாரப் பற்றாக்குறையின் காரணங்களை ஆராய்ந்தால் நமக்கு ‘ஷாக்’கடிக்கும் உண்மைகள் தெரிகின்றன. கூடங்குளம் அணுஉலையிலிருந்து மின்சாரம் வருவதினால் நம்முடைய மின்சாரப் பற்றாக்குறையில் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை. இன்னும் சொல்லப்போனால் இன்னும் இரண்டு வருடங்களுக்கு கூடங்குளத்திலிருந்து எவ்வித மின்சாரமும் வரப்போவதில்லை என்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

கற்பனையான, மின்சாரம் குறித்த பொய்களுக்கு இடிந்தகரை மக்கள் பலியாவது எவ்விதத்தில் நியாயம். வன்கொடுமைகள், மதவெறுப்பு, கொலை, கின்னஸில் இடம்பெறும் வழக்குகள் என்று தமிழக அரசு தன்னுடைய வழக்கமாக கோரமுகத்தைக் காட்டத் தொடங்கிவிட்டது. அமைதிவழியில் போராட்டத்தைத் தொடரும் மக்களின் போராட்டத்தைக் கூர்ந்து கவனியுங்கள், அக்டோபர் 29 சட்டசபை முற்றுகையில் அனைவரும் பங்குபெறுங்கள்.

Pin It