பசுமை விகடன் நவம்பர் 10. இதழில் பூச்சிகளும் பூச்சிக்கொல்லிகளும் பற்றி வந்துள்ள செய்தி அன்று என்ன நிலையில் பருத்திக் காடுகள் இருந்தன, விவசாயிகள் என்ன செய்தார்கள் என்பதைத் தெளிவாகக் காட்டும்.... இது எவ்வளவு பெரிய பாவச் செயல்னு எங்களுக்கும் தெரியும். நினைச்சா வேதனையாத்தான் இருக்கு. இதை அறுவடை செய்துதான் நாங்களும் சாப்பிடப் போகிறோம். பொதுவா அறுவடை சமயத்துல யாருமே பூச்சிக் கொல்லித் தெளிக்கமாட்டாங்க. ஆனா, எங்களுக்கு வேற வழி தெரியல்ல. இடி விழுந்த மாதிரி, இந்த வினோதப் பூச்சிங்க எங்க இருந்துதான் திடீர்னு வந்துச்சோ தெரியல. குறுவை மகசூலை சாசம் பண்ணி, மீள முடியாத நஷ்டத்தை ஏற்படுத்திடுச்சி, மிச்ச சொச்சத்தையாவது காப்பத்தலாமேனுதான் இந்த விஷத்தைத் தெளிக்கிறோம்.... -தஞ்சை அருகேயுள்ள சங்கரசாமந்தம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம விவசாயிகள்.

பெரும்பாலும் குறுவைக்கு பூச்சிக் கொல்லி தெளிக்கிறதில்ல. சமயத்துல லேசா புகையான் தாக்குதல் வரும். அப்ப வேர் தண்டு பாதிப்புக் குள்ளாகி கீழே சாயும். ஆனா, இங்க பாருங்க வேர்தண்டு வலுவா இருக்கு. பயிரோட மேல் பகுதி மட்டும் பாதிச்சிருக்கு. எந்தப் பூச்சித் தாக்குதலா இருந்தாலும் நடவு செஞ்ச 90 நாட்களுக்    குள்ளதான் வரும். அதாவது, கதிர் விட்டு பால் பிடிக்கத் தொடங்கிட்டா, எந்தத் தாக்குதலும் இருக்காது. இந்தத் தடவை வந்திருக்கற பூச்சித் தாக்குதல் புதுசா இருக்கு. அனுபவசாலியான எங்க ஊரு பெரியவங்களே இதைப் பார்த்துட்டு அதிர்ச்சி அடைஞ்சிட்டாங்க. கதிரெல்லாம் வெறும் பதரா இருக்கு.

எங்க பகுதியில ஏக்கருக்கு 45 மூட்டை வரைக்கும் மகசூல் கிடைக்கும். இந்த வருசம் 15 மூட்டை கிடைச்சாலே பெரிய விசயம். குறைந்த பட்சம் 20 மூட்டைகளாவது கிடைச்சாதான் செலவு செஞ்ச காசாவது தேறும்... வேளாண்துறை அதிகாரிகளும், உரக்கடைக்காரர்களும் வீரிய விஷமுள்ள, விதவிதமான, பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பரிந்துரை செய்தாங்கஅத்தனையும் வாங்கி அடிச்சிப் பார்த்தாச்சி... எதுக்குமே கட்டுப் படல.      ஏக்கருக்கு 1,500 ருபாய்க்கு மேல பூச்சிக்கொல்லி மருந்துக்கே பணம் விரய மாயிடுச்சி. வழக்கமா, புகையான், இலை சுருட்டுப் புழு, பட்டைப்புழு, சாறு உறுஞ்சும் பூச்சி, குருத்துப் பூச்சினு தாக்குதல் நடத்தும். அதுவும் தொடர்ச்சியா ஒரு வாரம் வரை முழுக்க மேகம் சூழ்ந்துகிட்டு, வானம் மூடியிருந்தாதான் தாக்குதல் இருக்கும். ஆனா, இப்ப வந்திருக்கற புதுப் பூச்சியோ, வெயிலு சுள்ளுனு காயும்போதே புகுந்து விளையாடியிருக்கு. இதுக்கு முன்ன இல்லாத அளவுக்கு மகசூலும் பாதிச்சிருக்கு

-ராஜேந்திரன்.  

தஞ்சாவூர் மாவட்ட, வேளாண் உதவி அலுவலர்

ராணி - மழை காரணமாகவோ.. அல்லது அதிக அளவு உரமிட்டதன் காரணமாகவோ தழைச்சத்து அந்த வயல்களில் அதிக அளவில் சேர்ந்திருக்கும். இதுதான் பூச்சித் தாக்குதலுக்கு காரணமாக இருக்கக் கூடும். விவசாயிகள் சொல்வது போல இந்தப் பூச்சி புதிதல்ல.. ஏற்கெனவே சின்ன அளவில் எங்கேயாவது இருந்துருக்கும். தற்போது அவை அதிக அளவில் பெருகி, இப்படியரு தாக்குதலை நடத்தியிருக்கலாம். இப்போதைக்கு பாதித்தது பாதித்ததுதான். அந்தப் பயிர்களை எதுவும் செய்ய முடியாது. அடுத்ததாக சம்பா, தாளடி போகம் செய்யும்போது உரத்தின் அளவை சரியாகக் கடைபிடித்தால் இந்தப் பிரச்னையிலிருந்து தப்பிக்கலாம்.

வழக்கமா குறுவைக்குப் போடற அதே ஏ.டி.டீ. 9 ரகம் நெல்லைத்தான் இந்த வருஷமும் போட்டோம். வழக்கமா போடற அளவுக்குத்தான் டி.ஏ.பி., யூரியா, சல்பேட் இதையெல்லாம் போட்டோம். கூடுதலாக எந்த     உரத்தையும் போடல. அப்படியே போட்டிருந்தா .. ஒன்னு ரெண்டு விவசாயிங்க போட்டிருப்பாங்க. சொல்லிவச்ச மாதிரி பத்து, பன்னிரெண்டு கிராமத்துல பல ஆயிரம் ஏக்கர்லயுமா போட்டிருப்பாங்க. -

குமரன்.

வைரஸ் தாக்குதல்தான் காரணம்னு வேளாண் துறை அதிகாரிங்க சிலர் சொல்றாங்க. ஆனா, அந்த வைரஸ் வந்ததுக்கு என்ன காரணம்னு சொல்ல மாட்டேங்கறாங்க. இந்த தடவை பயன் படுத்தப்பட்ட யூரியாதான் இதுக்கு காரணம்னு விவசாய அதிகாரிங்க தங்களுக்குள்ள பேசிகறாங்க. வெளிப்படையா சொல்ல மறுக்குறாங்க. யூரியா தான் காரணமா இருக்கும்னு எங்களுக்கும்தோணுது. ஏன்னா... வழக்கமா யூரியாங்கறது தூள் தூளாத்தான்     இருக்கும். இந்தத் தடவை உருண்டை உருண்டையா இருந்தது. முன்னயெல்லாம் யூரியா தெளிச்ச நாலாவது நாள், பயிரு சும்மா பச்சைப் பசேல்னு மாறிடும். இந்த வருசம் பத்து நாளாகியும் பச்சைக் கொடுக்கவே      இல்லை. அதெல்லாம் சந்தேகமாத் தான் இருந்தது..

களிமேடு, சீராலூர், சக்கரசாமந்தம். பிள்ளையார் நத்தம், தென்னங்குடி, கள்ளப்பெரம்பூர், ராயந்தூர், சித்திரக்குடி, பூதலூர், வெண்ணமங்கலம், பூதராய நல்லூர், ஆர்காடு, ஒரத்தூர், ஒம்பத்துவேலி, புதகிரி, பழவாநேரி, -ஊர்கள். சம்பந்தபட்ட பகுதிகளைச் சேர்ந்த வேளாண் உதவி அலுவலர்கள், இது தொடர்பாக அக்கறை எடுத்துக் கொண்டு செயல் படாமல், இஷ்டம் போல மருந்துகளை வாங்கி அடிக்கச் சொன்னதோடு, கையைக் கட்டிக்கொண்டு விட்டார்கள். உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு இந்த விஷயத்தை முன்கூட்டி கொண்டு போயிருந் தாலே, ஏதாவது *தீர்வு கிடைத்திருக்கக் கூடும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை.

களிமேடு தொடங்கி, கல்லணை வரை கிட்டத் தட்ட 30 ஆயிரம் ஏக்கர் குறுவைப் பயிரில் இந்த விரீதப் பூச்சித் தாக்குதல் பாதிப்பு ஏற்பட் டிருப்பதாக கூறும் விவசாயிகள், இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற யூரியாதான் காரணம். நேர்மையான முறையில் இதைப் பத்தி ஆய்வு நடத்தி அரசு முடிவு சொல்லணும். பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணமும் தரணும். - வைக்கப் பட்ட கோரிக்கை.

இதே போன்ற பாதிப்பு விழுப்புரம் பகுதிகளிலும் காணப்பட்டதாக திரு. கோமதிநாயகம், புளியங் குடி கூறினார்கள். மேலும் இதே பிரச்னை நெல்லைப் பகுதிகளிலும் காணப்பட்டதை தான் கேள்விப்பட்டதாகவும் சொன்னார்கள். நிலமை என்ன வென்றால் பசுமை விகடன் இது போன்ற பாதிப்புகளை நேரடியாகப் பார்க்கும் போது திகைத்து விடுகிறது. அது நினைப்பது போல - அல்லது விவசாயிகள் - அதிகாரிகள் கவனத்திற்கு இது முன்பே வந்திருந்தாலும் நிலமை இதுதான். விவசாயிகளும் இதை மறந்து விடுவார்கள்.அவர்களது பொருளாதாரம் சரிந்தது சரிந்ததுதான். ஒரு பத்து வருட காலத்திற்குள் இது போல இரண்டு மூன்று சோதனைகள் ஏற்பட்டால் அவர்களது பொருளா தாரம் தாங்காது. நில விற்பனை, ஊரைக் காலி செய்தல் முதலியன இப்படித்தான் ஏற்படுகிறது. ஏன் தனக்கு இந்த நிலை வந்தது என்று தொகுத்துச் சொல்ல முடியாமல் அந்த வருடத் தில் ஏற்படும் ஒரு நிகழ்வையே காரணமாகச் சொல் வார்கள். இதுதான் 1975 முதல் இன்று வரை நடக்கிறது. ஐ.ஆ. 8. நெல்லுக்கு, எல். ஆர். எ. பருத்திக்கு என்ன கதைகளைச் சொன்னார்களோ, அதே கதைகளைத் தான் இன்றும் சொல்கிறார்கள். 30,000 ஏக்கர் என்று பசுமை விகடன் எழுதுகிறது. இந்த அளவிற்கு ஒரு பரந்த நிலப்பரப்பில் ஏற் பட்ட பாதிப்பு பசுமை விகடன் சொல்லித்தான் அந்த அதிகாரிக்கு தெரியும் என்றால்... மாதா மாதம் சம்பளம் வாங்குவது மட்டுந்தான் அவர் வேலையா?.

1987 இல் சங்கரன் கோவிலை அடுத்துள்ள பாறைப்பட்டி கிராமத்தில் திரு. கணேசன் என்பவருடன் பருத்திக்கு அவர்கள் ஊர்க்காரர்கள் ஒரு வருடத்திற்கு எவ்வளவு பணம் செலவு செய்கிறார்கள் என்பதை, மிகக்குறைந்த அளவில் பூச்சிக் கொல்லிப் பயன்படுத்தியவருக்கு ஆனச் செலவை வைத்து மொத்த ஊருக்கும் கணக்குப் பார்த்தோம். சுமார் ரூ. 3,00.000 வரை ஆனது. பருத்தி விவசாயம் அவர்கள் பகுதியில் அதிகம்.. அதே வருடத்தில் புளியங்குடி திரு கோமதி நாயகம் அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தபோது அவர் சொன்ன செய்தி ; வயலுக்கு போய் திரும்ப வரும் போது, கட்டுமஸ்தான சில வாலிபர்கள் ஒரு மருந்து நிறுவனத்தின் பனியன்களை அணிந்து இருந்தனர் பக்கத்துப் புஞ்சைக்காரரிடம் பேசிக்கொண்டு இருந்தனர். என்னவென்று பார்த்தபோது, அந்த விவசாயியிடம் சில மருந்துகளை அவரது பயிருக்கு தெளிக்கும்படி சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களைச் சத்தம்போட்டு போகச்சொன்னேன். அந்த விவசா யியிடமும் இவர்கள் சொல்வதைக் கேட்காதீர்கள் என கூறி வந்தேன், என்றார். கொள்ளை அடிப்பதற்கு கிராமங்களில் இன்னும் பணம் இருக்கிறது. அவர்கள் தொடர்ந்து உழைக்கிறார்கள். கிராமங் கள் என்றுமே வற்றாத ஜீவநதி என்று நான் சொன்னதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனால் இன்றும் அதுதான் உண்மை.

மே 25 பசுமை விகடன் 44ம் பக்கத்தில்.... வங்கி மேலாளர் வந்து கடன் தருகிறோம் என்று சொல்கிறார்கள். அதை எப்படி மறுப்பது என்று தெரியவில்லை. வேளாண்துறை அலுவலர்கள் வந்து ரசாயன உரங்களைப் பரிந்துரை செய்தார்கள். நுண்ணூட்டங்களைத் தெளிக்கச் சொன்னார்கள். சவுக்கு எண்ணெய் பனை பயிர் செய்யச் சொன்னார்கள். மானியம் உண்டு என்றார்கள். மறுக்க முடியவில்லை. .... அவ்வாச கரின் வேண்டுகோள்.... எத்தனை போபால் வந்தாலும் .... எத்தனை காசர்கோடு வந்தாலும் ... இந்த *விஞ்ஞானிகளுக்குப் புத்தி வரவில்லையே இவர்களையெல்லாம் கிராத்துக்குள்ளேயே நுழைய முடியாதபடி ஏதாவது செய்யக்கூடாதா?.

*வாசகர் அறியாமை காரணமாக விஞ்ஞானிக்கு பட்டறிவு இல்லையே என ஆதங்கப்படுகிறார். அவ்வாசகரை விட இவ்விஞ்ஞானிகளுக்கு போபால் பற்றியும், காசர்கோடு பற்றியும் அதிகத்தகவலும், தற்போதைய நிலையும் கூடத்தெரியும். பிறகு ஏன் இதைச் செய்கிறார்?. அவரைப்போலவே படித்து வேலைப்பார்க்கும் பிற ஊழி யர்களைப்போல அவரால் கையூட்டு பெற வழியில்லை. ஆனால் இப்படிப்பட்ட சிபாரிசுகளை செய்தால் அப்பொருள்களின் உற்பத்தியாளர்கள், விற்பனை அடிப்படையில் அவர்களை கவனிக்கிறார்கள். கீழே உள்ள செய்தி இதைத்தெளிவு படுத்தும்.

ஜனவரி 10. 2009. பசுமை விகடன். ... ஆனா ஒரு கட்டத்துல ... நீ, கிராமத்துக்குப் போனலும் சரி, போகாட்டியும் சரி, எனக்கு இவ்வளவு டன் உரத்தை வித்துக் கொடுனு எங்களையெல்லாம் வியாபாரியா மாத்திட்டாங்க மேலதிகாரிங்க. அதிலிருந்து வெவசாயிங்க வெலகி ஓட ஆரம்பிச்சிட்டாங்க.

பசுமைப் புரட்சியும் நிலத்தடி நீர் வளமும்.

பசுமைப் புரட்சி முழு வீச்சில் செயல்பட்ட மூன்று வருடங்களுக்குள் பாதிக்கும் மேலான காளை மாடுகள் தீவனப் பிரச்னையால் காணாமல் போய்விட்டது. இதன் பாதிப்பு உடனடியாக நஞ்சைப் பகுதிகளில் தெரியவில்லை. சன்னம் சன்னமாக புஞ்சை விவசாயம் குறையத் தொடங்கியது. பெரும்பாலான கிராமங்களில் 75 - 80 இல் புஞ்சை விவசாயம் அனேகமாக நின்றே விட்டது. நஞ்சைப் பரப்புகளை விட புஞ்சைப் பரப்புகளே - மானாவாரி பகுதிகளில் அதிகம். இப்பகுதிகள் உழப்பட வில்லை என்றால் அதில் பெய்யும் மழை நீர் 90 விழுக்காடு அளவிற்கு அப்படியே வழிந்தோடிவிடும். ஒட்டு மொத்தத் தமிழகத்திலும் 1960 வாக்கில் எல்லாக் கிணறுகளிலும் நிலத்தடி நீர் மட்டம் சுமார் 15 அடி ஆழத்தில் இருந்தது. அனேகமாக எல்லோரும் கமலை ஏற்றத்தையே பயன்படுத்தி னார்கள். இப்படிப்பட்ட இடங்களுக்கு 50 களின் பிற்பகுதியில் மின்வாரிய அதிகாரிகள் தங்கள் அலுவலக வேலை முடிந்த பின்னர் கிராமத்து விவசாயிகளைச் சந்தித்து மின் மோட்டார்களைப் பயன் படுத்தும்படியும் அதன் சிறப்புகளையும் எடுத்துக்கூறி அவ்விவசாயிகளை இணங்க வைத்துள்ளனர்.

திருநெல்வேலியில் உள்ள கொல்லங்கிணறு என்ற கிராமத்தில் வெங்கட சுப்பா நாயக்கர் 1955 இல் தமது கிணற்றில் கமலைக்குப் பதிலாக மின்னிணைப்பு பெறுகிறார். கடையம் ராமசாமி ஐயர் - கிராம்டன் கம்பனி ஏஜண்ட் -அவருக் கும் அவர்களின் ஊர்க்காரர்களுக்கும் மோட்டார்கள் விற்பனை செய்துள்ளார். கையெழுத்து மட்டும் போட்டால் போதும் ரூபாய் 1000 கடன். அதையும் ஐயரே வாங்கிக் கொடுத்து விட்டு தமக்குறிய ரூ.550 எடுத்துக்கொள்வார். அரசு இருபது வருடகாலக் கடனாக வருடத்திற்கு ரூபாய் 75 என்று கடனை வசூல் செய்தது. கடன் வேண்டாம் என்று சொன்ன விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.75, 20 வருடங்கள். பொருள் வாங்கிய பின்பும் கையில் ரூ.450 மிஞ்சும் என்று ஐயர் சொன்ன கணக்கு மிகுந்த கவர்ச்சியை கிராமத்தினரிடம் ஏற்படுத்தியது. அதனால் எல்லோரும் *கடனாகவே வாங்கினார்கள்.

தகவல் அவர் பெயரன் தொக்கம் நாயக்கர் காந்தி நகர்.

*நாஞ்சில் நாட்டில் ஒரு கதை சொல்வார்கள்; ஒரு யானை இருக்கிறது வேண்டுமா? வேண்டாம். எனக்கே இருக்க இடமில்லை, சாப்பாட்டிற்கும் வழியில்லை இந்த லட்சணத்தில் .... யானை வேண் டாம் என்று சொன்ன போது, முதலில் கேட்டவர் இப்போது பணம் தரவேண்டாம். கடன் தான் என்று சொன்னாறாம். கடன்தானா? அப்படி யானால் வீட்டில் கட்டிவிட்டு போகட்டும், என்றானாம்

பசுமைப்புரட்சிக்கு முன்பாகவே அனேமாக எல்லாக்கிணறுகளிலும் மோட்டார் பம்பு செட் வந்துவிட்டது. ஐ. ஆர் 8 வகை நெல்வேர் பறந்து மேற்பரப்பில் அரை அடி ஆழம் - மட்டுமே இருக்கும் இயல்புள்ளது. மரபு நெல் வேர் 2 அடி ஆழம் வரை செல்லும் இயல்புள்ளது. அதனால் இப்புரட்சி நெல்லின் நீர்த்தேவை அதிகம். ஆகையால் கமலைக்குப் பதில் பம்பு செட் வைக்கப்பட்டது. விஞ்ஞான முன்னேற்றம் என்ற திரை மிகவும் வசதியாகப் போய் விட்டது. இதே வயல் வெளிகளுக்கு பல நூற்றாண்டு காலமாக - இதேப்பரப்பளவு நிலத்திற்கு - நெல்லுக்கு நீர் கொடுத்த இக்கிணறுகள் 15 அடி ஆழத்தில் நீருடன் இருந்தது. ஒரு 10 வருடகாலம் இப்புரட்சி நெல்லுக்கு நீர் கொடுத்து பாதாளத்தை நோக்கிச் சென்று விட்டது. மழை நீர் நிலத்தடிக்கு கிடைக்காமை, புதிய நெல்லுக்கு அதிகமான நீர் என இரண்டு விதத்தில் இப்பாதிப்பு ஏற்பட்டது. பசுமைப் புரட்சிக்கு முன்பு இக்கிராமங்கள் பொருளாதார வளமுடன் இருந்தது. இவ்வளத்தின் பெரும்பகுதி இக்கிணறுகளை ஆழப்படுத்தியதிலேயே காணாமல் போய்விட்டது.

....உடனே வசதியுள்ள விவசாயிகளின் கிணறு களில் மின்சாரத்தால் இயங்கும் நீரேற்றிகள் இயங்க ஆரம்பித்தன. அவை கமலை இறைத்த நீரைவிடப் பலமடங்கு ஆதிக அளவில் நிலத்தடி நீரை அள்ள ஆரம்பித்தன. 60களின் இறுதியில் தோட்டங்களில் கமலை களின் ஓசையும் ஓய்ந்தது. .... அதிக நீரை உட் கொள்ளும் பயிர் வகைகளும் பயிரிடப்பட்டன. ....70களில் கோவைக்கு அருகா மையில் நிலத்தடி நீர் மட்டம் 30 - 40 மீ. ஆழத்தில் இருந்தது. .... முன்பு விளைவித்த நாட்டுப் பயிர்களை விடுத்து நீரை அதிகமாக உட்கொள்ளும் வீரிய விதைகளை விதைத்து, மேம்பட்ட வேளாண்மை கருதி நிலத்தடி நீரை அதிகமாக உபயோகித்தனர்.

சு.கி. ஜெயகரன். காலச்சுவடு. இதழ் 92.

இன்று உள்ள புதிய தொழில்நுட்ப மின் இயந் திரங்கள் அன்று இல்லாததால் 40 அடிக்கு ஒன்று வீதம் 80 அடி கிணறுகளுக்கு இரண்டு மின் இயந்திரங்கள் தேவைப்பட்டது. அதாவது கிணறுகள் 80 அடிகளையும் தாண்டிக் கொண் டிருந்தது. இதற்கு ஏற்படும் செலவுகளும், அன்று மின்சாரத்திற்கு பணம் கட்ட வேண்டும் என்பதால் அவர் களுக்கு இரட்டிப்பு பணச்செலவு ஏற்பட்டது. இப்பின் புலத்தில்தான் நாராயண சாமி நாயுடுவின் விவசாய இயக்கம் எழுச்சி பெற்றது. விவசாயிகளின் ஒட்டுமொத்த கோபமும் மின் வாரியம் மீது சென்றது. இலவச மின்சாரம் என்ற மாயமானை பிடித்த பின்னாலும் அவர்களுக்கு விடிவு ஏற்பட வில்லை. ஆனால் மின்வாரிய விவசாயப் பகைமட்டும் அப்படியே நீருபூத்த நெருப்பாக இருக்கிறது.

இந்த காலகட்டத்தில்தான் சமூக நலக்காடு வளர்ப்பு திட்டம் செயல்பாட்டிற்கு வந்தது. அதன்படி குளங்களின் உட் பகுதிகளில் பாபுல் என்ற - கிழக்கிந்தியத் தீவு முள்மரம் - சீமைக்கருவேல் நடும் திட்டம் செயல்பட்டது. வனத்துறை இம்முள் மரங்களை வளர்த்து பஞ்சாயுத்துக்கள் வசம் அளிக்கும். இம்மரங்கள் நன்கு வளர்ந்த பின்பு அதன் அறுவடையில் ஒரு பங்கு அப்பஞ்சாயத்துக்களுக்கு எனச் சொல்லப்பட்டது. இத்திட்டத்திற்கு முன் பல நூறு வருடங்களாக நம் ஊர் மக்கள் குளங்களின் கரைகளில் மட்டுமே மரங்களை வளர்த்தார்கள். உட்பகுதிகளில் வளர்க்க மாட்டார்கள். அதற்கு அவர்கள் சொன்ன காரணம் காற்று அடிக்கும் போது காற்றுடன் வரும் மண் துகள்கள் இப்படி வளரும் மரங்களில் பட்டு கீழே விழும். அப்படி விழும் இடம் கரையாக இருந்தால் ஒன்றும் ஆகாது. உட்பகுதியாக இருந்தால் அப்பகுதி மேடாகும். அதனால் குளத்தின் கொள்ளளவு குறையும். இத் திட்டத்தில் மரம் வளர்த்த அத்தனைக் குளங் களும் ஒன்று முதல் இரண்டு அடிகள் வரை மேடானது தான் கண்ட பலன். 50 களுக்குப் பின்னால் கை விடப்பட்ட குடிமராமத்தும், வண்டி மாடுகள் இல் லாதால் வண்டல் அடிக்கும் வழக்கமும் அறிகிப் போனதால் சகல குளங்களும் தமது கொள்ளளவில் பாதியாகிப் போனது. மானாவாரி குளங்களிலும், பாசனக் குளங்களிலும் 70 களில் நிறைய கிணறுகள் உருவானது இதனால்தான். 15 அடி ஆழத்தில் நிலத்தடி நீரும், ஆர்ட்டீசியன் ஊற்றுகளும் தமிழ் நாட்டில் மெல்ல மெல்ல காணாமல் போனதும் இந்த காலகட்டத்தில்தான்.

80களின் ஆரம்பத்தில் நகர்புற வீடுகளில் குடி நீருக்காகப் போட்ட போர்கள், 80கள் முடிவில் ஏராளமான பாசனக் கிணறுகளிலும் இப்போர் களின் ஆக்கிரமிப்பை பரக்க காண முடிந்தது. கிணறுகள் தோண்டுவதை விட இதன் செலவு மிகவும் குறைவு என்பதால், 100 அடி, 200 அடி, 300அடி என முன்னேறியது. சப்மெர்சிபிள் பம்புகள் அவர்களுக்கு கண்கண்ட தெய்வமாக காட்சியளித்து. 400 அடிக்கு முன்னேறியபோது கம்ப்ரசர் பம்புகள் என்று ஆன போதுதான் கரும் பகுதிகள் என்று புதிய பெயர் சூட்டல் மூலமாக தமிழ்நாட்டின் பலபகுதிகள் ஆபத்தான நிலையில் இருப்பதாக அரசு அறிவித்தது. அதன் எந்த அறிவிப்பும் இப்போர்கள் போடப்படுவதில் எந்த மாறுதலையும் ஏற்படுத்தவில்லை. இதில் ஏற்பட்ட ஒரே முன்னேற்றம் 4.5 அங்குலம் போருக்குப் பதிலாக விவசாயிகள் 6.5 அங்குலம் போருக்கு மாறி னார்கள். சு.கி.ஜெயகரன் .... 86 - 87 இல் அமைத்த கசிவு நீர் குட்டைகளினால், அருகாமையிலுள்ள தோண்டு கிணறு களில் 25 இல் இருந்து 50 விழுக்காடு நீர் பெருக்கு ஏற்பட்டதாக ஓர் ஆய் வறிக்கை குறிப்பிடுகிறது - என எழுதுகிறார். 90 களில்தான் கம்ரசர்களின் படையெடுப்பு அதிகமாக இருந்தது இது ஒரு முறண்பாடாக இல்லையா?.

வீடுகளிலும், வயல் வெளிகளிலும் கடலை அடுத்து -அதிகமான இப்போர்களால் கடல் நீர் உள்நாட்டிற்குள், நிலத்தடி வழியாக வரும் வாய்ப் புகள் பிரகாசமாக இருப்பதாக 90 களில் இதே ஊடங்கள்தான் பேசியது. காவேரி, பெரியார் சிக்கல்கள் பெரிய அளவில் இருந்ததும் இந்த காலகட்டத்தில்தான். அரசு நீர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பாடம் எடுத்ததும் இந்த காலகட்டத்தில்தான். நெல்லைப் பகுதி ஆற்றுப் பாசனப் பரப்பில் பரவலாக

நாழிக் கிணறுகளைப் பார்க்கலாம். வைகாசி விசாகம் முடிந்தபின் இந்நாழிக் கிணறுகள் மூலமாக நற்றுப் பாவுவார்கள். நடுகைக்கு 10 நாட்கள் இருக்கும் போது கால்வாய்களில் தண்ணீர் திறப் பார்கள். தொழிகலக்கி நடுகைக்கு தயாராகும் போது நாற்றுகள் தயாராக இருக்கும். இவர்கள் நீர் மேலாண்மை குறித்த பேசியதற்கு பிறகு - தண்ணீர் திறப்பதில் குறிப்பிட்ட நாள் சொல்லாததால் தண்ணீர் வந்த பிறகுதான் நாற்றப்பாவுவதே நடக்கும். நாற்றுப் பாவலுக்கும் நடுகைக்கும் இடைப்பட்ட 20 நாட்களும் கால்வாய்களில் வரும் தண்ணீர் வீணாகத்தான் ஓடும். இதைத்தான் அவர்கள் நீர் மேலாண்மை என்று அழைக்கிறார்கள்?. இந்த தலைமுறை விவசாயிகளுக்கு இந்நாழிக் கிணறுகளின் பங்களிப்பு என்ன என்று தெரியாதது நீர் மேலாண்மைப் பிரச்சாரத்திற்கு வசதியாக இருக்கிறது.

Pin It