ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு வலைத்தளத்தில் அறிவியலாளர்கள் குழு ஒன்றின் அறிக்கையைப் படித்தேன். அதில் அடங்கியிருந்த விவரங்களைவிட ஒரு சாத்தியம் பற்றிய கூற்று என்னை மிகவும் கவர்ந்தது. துருவப் பகுதிகளிலும், சைபீரியா போன்ற நிலங்களிலும் பனிப் பிரதேசங்களின் பரப்பளவு மிகத்துரிதமாகக் குறைந்து வருவதைக் குறித்த அறிக்கை அது. ஆண்டுதோறும் கோடையில் உருகிப் பின்னர் திடப்படும் பனிப் பிரதேசங்களில், உருகுவது பத்து பங்கானால், மீண்டும் திடப்படுவது ஒன்பது பங்காக இருப்பதுதான் பிரச்சனை. அடுத்த ஆண்டு ஒன்பது பங்கு உருகி, ஏழரைப் பங்கு திடப்படுகிறது. (புரிதலுக்காக நான் தரும் விகிதாசாரமிது; துல்லியமானவையல்ல). அந்த அறிக்கை இவ்வாறு பனிப்பிரதேச இழப்பு ஆண்டுதோறும் முன் அனுமானங்களைவிட, கணிப்புகளைவிடத் துரிதமாக அதிகரிப்பதைச் சுட்டிக்காட்டி, இந்த இழப்பின் அதிகரிப்பு துரிதப் படுவது உச்சமடைந்தால், இன்னும் முப்பது வருடங்களில் மானுடம் வாழ்வதற்கேற்ற சூழல் பூமியில் நீடிக்காது போகவும் கூட வாய்ப்பிருக்கிறது என்று கூறியது.

எனக்குக் கணிப்புகள், கணக்குகள், அளவுகள் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கிடையாது. தங்களக்குள் முரண்பாடும் அவற்றை வைத்துக் கொண்டு ஆயிரக்கணக்கான பக்கங்கள் நிரப்ப ப்பட்டு வருகின்றன. நூற்றுக் கணக்கான கருத் தரங்கள் உலகெங்கும் நடக்கின்றன. அது அறிவியலாளர் களின் பணி. ஆனால் “முப்பது ஆண்டுகளில் மானுடம் அழியலாம்” என்ற சாத்தியத்தை அறிவியில் கணிப்பொன்று அனுமதிப்பதே எனக்கு முக்கியமாகப் பட்டது. தர்க்கரீதியாக இப்போது “நான் உயிருடன் இருக்கும் வரையோ அல்லது மானுடம் பூவுலகில் இருக்கும் வரையோ” என்று இரண்டு கால எல்லைகளைக் குறிப்பது சாத்தியம். அதாவது என்னுடைய தனிப்பட்ட வாழ்நாளின் சாத்தியமான கால அளவிற்கு முன்னதாக மானுடமே அழிய நேரலாம் என்ற அறிவியல் அனுமானத்தின் சாத்தியம் தத்துவத் தளத்தில் மிக முக்கியமான கேள்விகளை எழுப்புவதாக எனக்குத் தோன்றியது.

நண்பர்கள், சிந்தனையாளர்கள் பலரிடம் இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொள்ளத் துவங்கினேன். பலரும் இது ஒரு “இறுதி நாள் மனநிலை” என்று கூறினர். அதாவது உலகம் அழிவது குறித்துப் பல ஆரூடங்கள் உலகெங்கிலும் உண்டு. இப்போது 2012ஆம் ஆண்டு உலகம் அழியும் என்று மாயன் நாட்காட்டி கூறுவதாக ஒரு நம்பிக்கை உலகெங்கும் பரவியுள்ளது. ஒரு ஹாலிவுட் திரைப்படமும் வந்துள்ளது. நான் கூறும் அறிவியல் கணிப்பும் கூட அவ்வகையானது என்றே நண்பர்கள் எண்ணத் தலைப்பட்டனர். நான் யாரிடமும் வாதிடவோ, அறிவியல் தரவுகளை முன்வைக்கவோ விரும்ப வில்லை. ஐந்தாண்டுகளுக்கு முன்னால் புவி வெப்பமடைதல் குறித்துப் பரவலான அக்கறை தோன்றியிருக்கவில்லை. அமெரிக்க அரசும் அதை அதிகார பூர்வமாக ஏற்றிருக்கவில்லை. எனவே அழிவிற்குக் கட்டியம் கூறும் புராதன மனப் பான்மைக்கும், இன்று அறிவியல் திட்டவட்டமாக அறிந்து சொல்லும் பேராபத்திற்கும் உள்ள இடைவெளியை நண்பர்களால் உணர்ந்து கொள்ள முடியவில்லை.

இன்று உலக நாடுகளின் அரசாங்கங்கள் அனைத்தும் புவி வெப்பமடைகிறது; அதற்கு மனிதனின் நடவடிக்கைகள்தான் காரணம் என்பதை ஏற்றுக் கொண்டு விட்டன. இதை எழுதும் நேரத்தில் இனிவரும் உலக வரலாற்றின் துவக்கப் புள்ளியான ஐக்கிய நாடுகள் சபையின் கோபன் ஹேகன் சர்வதேச மாநாடு நடந்து முடிந்துவிட்டது. முதன்முறையாக உலகின் முக்கிய தேசிய அரசுத் தலைவர்கள் நேரடியாக நீண்ட விவாதத்தில் ஈடுபட்டனர். வளிமண்டலத்தில் கலக்கும் கரியமில வாயுவின் அளவை கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. உலகெங்கும் பனிப் பிரதேசங்கள் குறைந்து வருவதும் இமயமலை, ஆண்டிஸ் போன்ற மலைத் தொடர்களின் பனிப்போர்வை விலகிவருவதும் ஐயத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்பட்டு விட்டன. ஆனால், சுற்றுச்சூழல் குறித்த கோபன்ஹேகன் சர்வதேச மாநாடு எந்தத் திட்டவட்டமான முடிவையும் எடுக்காமல் கலைந்து விட்டது. “வளரும்” நாடுகள் “வளர்ந்த” நாடுகளிடமிருந்து நஷ்ட ஈடு கேட்கின்றன. “வளர்ந்த” நாடுகள், “வளரும்” நாடுகளை வளராதிருக்கச் சொல்கின்றன. வளர்ச்சி என்றால் என்ன என்பது மிக முக்கியமான கேள்வி.

பெருவாரியான மக்களைப் பொறுத்தவரை அவர்களது அடிப்படைத் தேவைகள் பூர்த்தியடைய வேண்டும். வாழ்க்கைத் தரம் மேம்பட வேண்டும். அதன் காரணமாகவே அவர்கள் “:வளர்ச்சி” என்ற கருத்தை விரும்புகிறார்கள். ஆனால் அவர்களது வாழக்கைத் தரம் சிறிய அளவு மேம்படுத்துவதற்கு முன்னால் பெரிய அளவில் நகர்ப்புற மேல்தட்டு, மத்திய தர வர்க்கத்தின் வாழ்க்கை நுகர்வுமயமாக வேண்டும் என்று முதலீட்டிய வளர்ச்சி விதித்துள்ளது. ஐம்பது கார்களம், இருநூறு இருசக்கர வாகனங்களும் விற்றால் ஒரு கிராமத் திற்குக் குடிநீர்த் தொட்டி கிடைக்கும் என்று நினைக்கிறேன். வளர்ச்சியின் மர்ம விகிதங்கள் எனக்குத் தெரியாது. ஆனால் அதன் உந்து சக்தி நுகர்வுக் கலாச்சாரத்தில்தான் இன்று இருக்கிறது என்பது வெளிப்டையாகத் தெரிகிறது. எனவே இன்று வளர்ச்சிக்கும், சூழலியல் நலனுக்கும் முரண் ஏற்படும்போது பொதுவில் யார் நுகர்வைத் தியாகம் செய்வது என்பதே சர்வதேச விவாதங்களின் கேள்வி. சொகுசுக் கார்களை வளர்ந்த நாடுகள் உற்பத்தி செய்யாமல் இருக்க முடியுமா? சர்வதேசத் தொழிலதிபர்களிலிருந்து தமிழ்த் திரை நட்சத் திரங்கள் வரை அவற்றை வாங்கி மகிழாமல் இருக்க முடியுமா? அதற்கு அதிகம் எரி பொருள் தேவைப்படலாம் என்பதால் அதைச் செய்யா மலிருக்க முடியுமா? ஒவ்வொரு தேசிய அரசும் கார் உற்பத்தியாளர்கள், நுகர் வாளர்களின் பிடியிலிருக்கிறதேயல்லாமல்,தண்ணீர்த் தொட்டிக்குக் காத்திருக்கும் மக்களின் பிடியில் இல்லை.

இப்போது நாம் பிரச்சனையின் மையத்திற்கு வந்து விட்டோம். புவி வெப்பமடைதல் உண்மைதான் என்றால், அதற்குக் காரணமான மானுட நட வடிக்கைகள் என்ன? அவற்றைக் குறைப்பது சாத்தியமா? அதிலுள்ள சிக்கல்கள் என்ன என்று பரிசீலிக்க வேண்டும். அதற்கு அடிப்படையாகப் புவி வெப்பமடையும் காலத்திற்கான தத்துவம் என்ன என்பதைச் சிந்திக்க வேண்டும்.

காலம் தோறும் தத்துவம் 

தத்துவம் என்பது காலாதீதமான உண்மைகளைப் பற்றியது என்று பரவலாக நினைக்கப்படுகிறது. ஆனால் தத்துவம் என்றால் என்ன என்ற கேள்வியே காலத்தால், இன்னும் சொல்லப்போனால் வரலாற்றால் தீர்மானிக்கப்படுவது. கான்ட்டின் “ஒளிமயமாதல் என்றால் என்ன?” என்ற கட்டுரையை விவாதிக்கத் தலைப்பட்ட ஃபூக்கோ கான்ட்டின் முக்கியக் கொடை “தத்துவம் என்றால் என்ன?” என்ற கேள்வியை “இன்று தத்துவம் என்றால் என்ன?” என்ற கேள்வியாக மாற்றியதுதான் என்று கூறுகிறார். என்றென்றைக்குமான உண்மை என்பது இன்றைய உண்மை என்ற புதிய பரிமாணத்தை அடைகிறது. இத்தகு புரிதலின் விளைவுகள் மிக ஆழமானவை.

இதுவரையிலான மனிதச் சிந்தனை இயற்கை யைத் தாயாகவும் அனுசரணையாகவும், எதிர்மறை யாகவும் - அடக்கியாளப்பட வேண்டியதாகவும் பார்த்திருக்கிறது. ஆனால் இன்று மானுடம் இயற்கையின் அங்கமாக மட்டுமல்ல, அதன் சிறு துளியாகத் தன்னை மீண்டும் கண்டு கொள்ள வேண்டிய சூழல் எழுந்துள்ளது. தன்னுடைய நடவடிக்கைகளில் எது தன் வசிப்பிடமான பூவுலகை வசிக்க சாத்தியமற்றதாக மாற்றுகிறது என்றும், அந்த நடவடிக்கைகளின் பின்னால் இயங்கிய சக்திகள் எது என்பதையும் புதிய தத்துவக் கண்கொண்டு பார்க்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது. அத்தகு தத்துவம் கான்ட், ஹெகல், கார்ல் மார்க்ஸ் உள்ளிட்ட தத்துவாசிரியர்கள் பலரையும் தீவிர மறுவாசிப்பு செய்வதாகவே இருக்க வேண்டியிருக்கும். முப்பது ஆண்டுகளில் மானுடம் அழியாமல் இருக்கலாம். ஆனால் புவி வெப்பமடைவது குறையாவிட்டால் மானுடம் அழிவை நோக்கிச் செல்கிறது என்பதில் சந்தேகமிருக்க முடியாது. இப்போது இன்னொரு முக்கியப் பிரச்சினை தோன்றுகிறது. அதுதான் தலைமுறைகளுக்கு இடையேயான உறவின் தர்மம். நூறுவருடங்கள் கழிந்து நானிருக்க மாட்டேன். ஆனால் அப்போது வாழக்கூடிய என் சந்ததியர்க்காக இன்று என்னுடைய நுகர்வினை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். மானுட இருப்பென்பது, “அழிவின் முன்னால் இருப்பு” என்று மறுவரை செய்யப்பட்டு அறிதல் குறித்தும், வரலாற்று இயக்கம் குறித்தும் மீண்டும் நாம் சிந்திக்க வேண்டும். அதற்கு முன்னால் எளிமையான கடந்த கால வரலாற்றுத் தகவல்களைத் தொகுத்துக் கொள்ள வேண்டும்.

தொழிற்புரட்சி - நிலக்கரி - போக்குவரத்து - எண்ணெய் - நிலத்தடி எரிபொருட்கள் - காற்றில் கலக்கும் கரியமிலவாயு வளிமண்டலத்தின் வெப்பம் சிறைபடுதல் புவி வெப்பமடைதல். இந்தக் காரண காரியத் தொடர்ச்சி வெளிப்படையானது. தொழிற்புரட்சிக்கு இட்டுச் சென்ற காரணிகள் என்ன என்பதே நாம் ஆராய வேண்டிய கேள்வி. அவற்றிலொன்று தான் மிக அருவமானதும், மானுடச் சிந்தையின் விளைபொருட்களிலேயே மாபெரும் ஆற்றல் மிக்கதுமான முதலீட்டியம் என்ற எதிர்கால உருவாக்க வரலாற்று சக்தி. இது பதினாறாம் நூற்றாண்டில் தோன்றியுடன், இறைமை, இறையாண்மை ஆகிய இரு மாபெரும் மானுட சிந்தனையின் மையங்களிலிருந்து விலகி மற்றொரு எல்லையற்ற குறியீட்டு ஆற்றலாகிய பணம் என்பதை செயலின் மையத்தில் வைத்தது. இங்கேதான் பெரியதொரு குழப்பம் நேரிடும்.

பணம் என்பது பண்டைய சமூகங்களிலேயே இருந்ததுதானே? அப்போது முதலீட்டியமும் பழைய சமாச்சாரம் தானே என நண்பர்கள் நினைக்கிறார்கள். “பணம் என்னும் பொய்த்தேவு” பேசி புலம்புகிற பூதலம் என்றுமே மனிதன் அறிந்ததுதான் என்று நினைக்கிறார்கள். இன்னொரு நண்பர் என்னிடம் உச்சகட்ட அபத்தமான கருத்தொன்றைச் சொன்னார். “என்றைக்கு குறி தோன்றியதோ அன்றே முதலீட்டியம் தோன்றி விட்டது.” குறியியலின் அடிப்படைகளும், முத லீட்டியத்தின் அடிப்படைகளும் அறியாத இவர்கள் கொஞ்சம் பொறுமையாக சிந்தித்தாலோ, அல்லது கொஞ்சம் மயற்சி செய்து அடிப்படையான நூல்களைப் படித்தாலோ தங்கள் பார்வை எவ்வளவு தவறானது என்பதை உணர முடியும். இருப்பு, குறியியல், வரலாறு, முதலீட்டியம் ஆகியவற்றின் இடையேயான உறவுகளை விளக்கும் விரிவான நூலை அடுத்து ஆண்டிற்குள் எழுத முயற்சிப்பேன்.

பணம் என்பது பண்டமாற்றுக்கு உதவும் பொருட்டு பண்டைய சமூகங்களால் உருவாக் கப்பட்டது. மனித சமூகங்களில் பொருள்களின் “மதிப்பு” என்பது சிக்கலான வலைப்பின்னலில் இருந்தபோது பணம் என்பது பரிமாற்றத்தை சுலபமாக்குவதாக இருந்தது. பணத்தை சேகரித்து வைக்கும் ஆசையும், பணத்தின் மீது பற்றும் கூட இருந்தது. ஆனால் பொதுவாக பணத்தை பெருக்குவதன் பொருட்டே பொருளுற்பத்தியில் ஈடுபடும் பழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. உற்பத்தியாகும் பொருள்களை பணத்தைக் கொண்டு வர்த்தகம் செய்யலாமே தவிர பணத்தை பெருக்குவதற்கென்றே குறிப்பிட்ட பொருட்களை அதிகம் உற்பத்தி செய்ய வைக்க பணத்தை மதலீடாக்குவது என்பது நடைபெறவில்லை.

தனிநபர்கள் தங்கள் பணத்தைப் பெருக்குவது என்பதைவிட மொத்தமாக பணத்தின் பயன்பாடே தன்னைத்தானே பெருக்கிக் கொள்வதுதான் என்று மாறுவதுதான் முதலீட்டியம். இப்படிப் பணம் தன்னைத்தானே பெருக்கிக் கொள்வதால் வரலாற்றின் பங்கு வருகிறது. பணம் தன்னைத்தானே பெருக்கிக் கொள்ள உற்பத்தியையும் நுகர் வையும் பெருக்குகிறது. அப்போது புதிய, புதிய பொருள்களெல்லாம் உற்பத்தியாகி மனித வாழ்க்கையை “மேம்படுத்துகின்றன”. உதார ணமாக தேயிலை, காப்பி, சர்க்கரை (கரும்பு) போன்ற தோட்டப் பயிர்கள் அடிமைகளைக் கொண்டு காலனிய நிலப்பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்டு ஐரோப்பாவிலும், உலகெங்கும் மனிதர்களின் அன்றாட வாழ்விற்கு இன்றியமை யாத பொருள்களாக மாற்றப்பட்டன. இந்த வர்த்தகங்களில்ஈடுபட்டோர்அரசியலில் செல்வாக்குமிக்கவர்களாயினர். பணம் புதிய அதிகாரமாகவும், புதிய அதிகாரமென்பது பணமாகவும் மாறியது. அப்போதுதான் “அரசியல் பொருளாதாரம்” என்ற அறிவுத் துறை தோன்றியது.

இந்தப் பின்னணியில்தான் நவீன இயந்திரங்கள் தோன்றின. இன்னொரு புறம், இறை-இறையாண்மை மையங்கள் பலவீனப்பட்டபோது, தனி மனிதன் என்ற புதிய அரசியல் தத்துவ அலகு தோன்றியது. இது மனிதனையும் இயற்கையையும் பிரித்தது. நவீன அறிவியல் பிறந்தது. நவீன இயந்திரங்களின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் இயற்கையை அடிமைகொள்ள விரும்பும் அறிவியலும் உதவியது. தனி மனிதர்களின் அரசத்துவத்தையும் சொத்துரிமையையும் உறுதிசெய்யும் புதிய அரசமைப்புகள் மக்களாட்சி என்ற பெயரில் உருவாயின. அதைச் சாத்தியமாக்க தேசம் என்ற கற்பிதம் தேவையானது. தேசிய அரசுகள் உருவாகி நிலைபெறத் துவங்கின.

இதெல்லாம் ஒரு வகையில் பூர்வ கதை. முதல் உலகப் போருக்குப் பிந்தைய பொருளாதாரம் என்பது மிகத்துரிதமான மாற்றங்களைக் கண்டது. தேசிய நாணயங்கள், அவற்றின் மதிப்பு, சர்வதேச வர்த்தகம் போன்ற விஷயங்கள் புதிய கோட்பாடுகளின் அடிப்படையில் நடக்கத் துவங்கின. முதலீட்டியம் என்பது நிரந்தரமாக நெருக்கடி உருவாக்குதல் - நெருக்கடி கடத்தல் என்ற செயல்பாடுகளுக்கிடையே பயணிக்கும் அபூர்வ நிலையானது. ஏனெனில், பணம் பெருகும் அளவு உற்பத்தியும் நுகர்வும் பெருகவில்லையென்றால் பொருளாதாரத் தேக்கம் ஏற்பட்டு விடும். இதிலிருந்து மீள முதலீட்டியம் பல நூதன நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. ஆனால் தொடர்ந்து மதிப்பின் குறியீட்டுத் தளத்தைச் சிக்கலாக்கிக் கொண்டே வந்தது.

இன்றைய நிலையில் நம் கையிலுள்ள தேசிய நாணயத்தின் மதிப்பு எப்படித் தீர்மானமாகிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கு நாம் பொருளாதார நிபுணராக மாற வேண்டும். நாம் உழைக்கலாம். உற்பத்தி செய்யலாம். ஆனால் நமது உழைப்பின் மதிப்பை நம்மால் ஒருபோதும் தீர்மானம் செய்ய முடியாது. கூலி உயர்வு கோரலாம். ஆனால் நமக்குத் தேவையான பொருட்களின் விலையை நாம் தீர்மானிக்க முடியாதே? அதை யார் அல்லது எந்த சக்தி தீர்மானிக்கிறது என்று நம்மால் இன்று புரிந்துகொள்ளவே முடியாது. பங்குச்சந்தை, எதிர்கால வர்த்தகம், வட்டி விகிதங்கள், சர்வதேச நாணய வர்த்தகம், கடன் வர்த்தகம் இதையெல்லாம் யாரால் புரிந்து கொள்ள முடியும்? உதாரணமாக சீனாவில் தயாராகும் பொருள்களையெல்லாம் அமெரிக்கா வாங்குகிறது. அமெரிக்காவின் கடன் பத்திரங்களையெல்லாம் சீனா வாங்குகிறது. இரண்டு நாடுகளில் யாருக்கு அதிகாரம் அதிகம்? இதையெல்லாம் எளிதில் விளங்கிக் கொள்வது சாத்தியமில்லை. இரண்டு நாடுகளும் ஒன்றோ டொன்று பிணைக்கப்பட்டுள்ளன. முதலீட்டிய சிக்கல்களுக்கு ஒரு உதாரணமது.

இன்றைய நிலையில் முதலீட்டியம் என்றால் என்ன? புலிவால் பிடித்த கதைதான். வாலை விட்டால் புலி அடித்து விடும் என்பதால் அது ஓடுகிற ஒட்டத்திற்கு நாமும் ஒடியாக வேண்டும். எங்காவது உற்பத்தி நுகர்வுச் சுழற்சி தேங்கினால் ஆபத்து. மதிப்புகள் சரிந்து பொருளாதார வீழ்ச்சி தொடங்கிவிடும். ஆகவே எதையாவது உற்பத்தி செய்தேயாக வேண்டும். எதையாவது நுகர்ந்தே ஆக வேண்டும். அதற்கு எரிபொருள் இல்லாமல் முடியாது. பிறகெப்படி காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவைக் குறைப்பது? எப்படி புவி வெப்பமடைவதைத் தடுப்பது? முதலீட்டியத்திற்கு மாற்றான புதிய தத்துவ அடிப்படையில் அமைக்காமல், மானுடத்தை அழிவிலிருந்து காப்பது சாத்தியமில்லை.

எரிபொருள் கேள்விகள்

புவி வெப்பமடைதல் குறித்த கேள்விகள் ஒருபுறமிருக்க, எரிபொருள் பிரச்சனை இன்னொரு “எரியும்” பிரச்சனையாக இருக்கிறது. நமது ஊடகங்கள் அனைத்தும் நம்மீது ஒரு மாயப் போர்வையைப் போர்த்தி, மிக மிக முக்கிய மான இந்த பிரச்சனையை நாம் கருத்தில் கொள்ளா திருக்க வகை செய்கின்றன. மேலும், கருத்தில் கொண்டால் மட்டும் என்ன செய்து விட முடியும் என்ற கேள்வியும் பலரிடம் இருக்கிறது. பிரச்சினை என்னவென்றால் பெட்ரோல் முதலிய எரிபொருட்கள் தீர்ந்து போய் வருகின்றன. இவற்றின் உற்பத்தி ஏற்கனவே உச்சத்தை எட்டி விட்டது எனப் பலரும் கருதுகின்றனர். இனிமேல் உற்பத்தி குறையலாமே தவிர அதிகரிக்காது. ஆனால் எரிபொருட்களுக்கான தேவையோ கடுமையாக அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும், சைனாவிலும் கோடிக்கணக்கான மக்கள் நிலத்தடி எரிபொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கு கிறார்கள். தங்க நாற்கரச் சாலைகளும், விமானப் போக்குவரத்தும் அதிகரிக்கின்றன. ஒரு இலட்சம் ரூபாயில் மலிவு விலை கார்கள் தயாராகின்றன. இது என்ன பைத்தியக்காரத்தனம் என்று கேட்க யாருமில்லை. அறிவியல் ஏதாவது புதிய அற்புதத்தை நிகழ்த்தும் என அனைவரும் நம்புகிறார்கள். புதிய எரிபொருட்களைக் கண்டுபிடிக்கும் என நினைக்கிறார்கள். அணுசக்தி என்று எல்லையற்ற ஆற்றல், முதலீட்டியத்தின் எல்லையற்ற விரிவாக்கக் கற்பனையை உண்மையில் நிகழ்த்திவிடும் என நம்புகிறார்கள். சிலர் செவ்வாய்க் கிரகத்தில் நிலம் வாங்கப் பணத்தைச் சேமிக்கிறார்கள்.

பொருளாதாரச் சிந்தனையாளர்களில் ஒரு சாராரைப் பொறுத்தவரை சந்தை விதிகள் கடவுளின் விதிகளைவிட ஆற்றல் மிக்கவை. எந்தச் சிக்கலையும் சந்தை நடவடிக்கை சரிசெய்து சமூக ஒழுங்கைப் பராமரிக்கும். ஆனால் சந்தையின் சரிசெய்யும் நடவடிக்கையில் பாதிக்கப்படப் போகும் மக்கள் யார் என்பதை அவர்கள் கூறுவதில்லை. ஒவ்வொரு பொருளாதாரத் தகவமைப்பின் போதும் விளிம்பு நிலையிலுள்ள விவசாயிகளும் ஆதிவாசிகளுமே நேரடி அழிவைச் சந்திக்கிறார்கள். இந்த இடத்தில்தான் வெகுஜன அரசியலும் சரி, தலித் அரசியலும் சரி விழிப்புடனிருக்க வேண்டும். பணம் என்பது அதிகாரம். பொருளாதார நடவடிக்கைகளில் தேக்கமேற்பட்டால் பணம் படைத்தவர்கள், பாதிப் பினை விளிம்பு நிலை ஏழைகளின் மேல்தான் போடுவார்கள். சுற்றுச்சூழல் சீர்கேடுகளிலும், எரி பொருள் பொருளாதாரச் சிக்கல்களிலும் முதலில் மிக மோசமாகப் பாதிப்படையப் போவது தலித்-வெகுஜன ஏழை மக்கள் தான் என்பதில் எந்த சந்தேகமு மிருக்க முடியாது. சந்திர பான் பிரசாத் போன்ற தலித் சிந்தனையாளர்கள் முதலீட்டிய வளர்ச்சியை வரவேற்பதில் உள்ள பிரச்சினை, அந்த வளர்ச்சி ஏற்கனவே தேய்மானமாக மாறி வருகிறது என்பதுதான். எரிபொருள் சிக்கல் குறித்து அரசியலாளர்கள் தீவிர கவனத்துடன் இருக்க வேண்டும் குறிப்பாக விவசாயம் சார்ந்து வாழ்பவர்களின் வாழ்வாதாரங்கள் காப்பாற்றப்பட வேண்டும்.

முக்கியமான ஒரு விஷயத்தை மறந்து விட்டேன். அது மார்க்சிய, மாவோயிச அரசியல், முதலீட்டியத்திற்கு மாற்று கம்யூனிஸம் என்று நண்பர்கள் பலரும் நம்புகிறார்கள். நினைக்கிறார்கள். மக்களாட்சி என்ற கற்பனையின் தீவிர வடிவம்தான் கம்யூனிஸம். மக்களாட்சி தனிநபர் என்ற அடிப்படை அலகையும், தனிச் சொத்துரிமையையும் மையமாகக் கொண்டது. கம்யூனிஸம் சமூக மொத்தத்தையும்,பொதுவுடைமையையும் மையமாகக் கொண்டது. ஆனால் உற்பத்திப் பெருக்கம், நுகர்வுப் பெருக்கம், உபரி மதிப்பு ஆகியவை இரண்டிலும் உண்டு. மக்களாட்சியின் ரகசியம் வம்சாவழிச் சொத்துரிமை என்றால் கம்யூனிஸத்தின் ரகசியம் சொத்துரிமையின் பதிலிகள். இது வம்சாவழி அரசியலதிகாரமாகவும், செல்வாக்காகவும் இருக்கும்.

மக்களாட்சியிலாவது சொத்துரிமைக்கும், வெகுஜன அரசியலுக்கும் நிலவும் வெளிப்படையான முரண்பாடு முதலீட்டியத்தின் கோரைப் பற்களிலிருந்து தப்பிக்க மக்களுக்குச் சில சாத்தியங்களை ஏற்படுத்தும். அல்லது “வளர்ச்சியில்” பங்கைக் கேட்கும் ஆற்றலைக் கொடுக்கும். கம்யூனிஸம் மக்களாட்சி தவிர்த்த அரசு முதலீட்டியமாக இயங்குவதால், “உபரி மதிப்பு” எங்கே முதலீடு செய்யப்படுகிறது என்பதைக் கட்டுப்படுத்த மக்களுக்கு வாய்ப்பிருக்காது. இதுதான் அமெரிக்காவின் சர்வதேசக் கூட்டாளியாக சீனா மாறி நிற்கும் நிலை. எனவே “அரியும் சிவனும் ஒண்ணு, அரியாதார் வாயிலே மண்ணு” என்பதைப் போல “முதலீட்டியமும், கம்யூனிஸமும் ஒண்ணு; அரியாதார் சந்திப்பர் பேரழிவு” என்று நாம் உணர வேண்டும். நமக்கு தேவை உபரி மதிப்பையும் நுகர்வையும் உற்பத்தி பெருக்கத்தையும் தவிர்க்கும் புதிய வாழ்வியல் நெறி. அதை நாம் யாரிடம் கற்கிறோம் - காந்தியிடம் / புத்தரிடம் / சூஃபிக்களிடம் / ஜென் பௌத்தத்திடம் / ஃபிரான்ஸிஸ் ஆஃப் ஆஸிஸியிடம் / கபீரிடம் / அம்பேத்கரிடம் / குலசேகர ஆழ்வாரிடம் / பசவண்ணரிடம் / பெரியாரிடம் / சித்தர்களிடம் என்பது முக்கியமில்லை. உலகின் ஒவ்வொரு மக்கள் தொகுதியும் இன்று புதிய தத்துவத்திற்கான ஆற்றலை வழங்கக் கூடிய மகானை எக்காலத்திலாவது உற்பத்தி செய்திருக்கும் என நம்புகிறேன்.

நம்முடன் உள்ள கேள்விகள்

மிக முக்கியமான கேள்வி : இன்றைய பிரச்சனைக்கான தீர்வு அரசியலிலா? அறிவியலிலா? என்பது அறிவியல் எப்படியாவது அணு ஆற்றலைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்து எரிபொருள் மற்றும் புவி வெப்பமடையும். பிரச்சனையைத் தீர்த்து விடும் என நம்பலாமா? அப்படி நடந்து விரும்பத்தகாத பின்விளைவுகள் ஏற்பட்டால் அவற்றைப் பிறகு பார்த்துக் கொள்ளலாமா? அல்லது ஒரு சூதாடியைப் போல அறிவியல் தீர்வுக்குக் காத்திராமல், அரசியல் தீர்வுக்கு வழி வகுத்து மீண்டும் வரலாற்றைப் புதுப்பிக்கலாமா என்பதுதான். இதில் இரண்டாவது வழியைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொண்டு முதல் வழியை ரகசியமாகப் பின்பற்றுகிறது முதலீட்டியம். இன்று உண்மையான மக்களாட்சியின் பிரச்சினை சொத்துரிமை மட்டுமல்ல. மொத்த வாழ்வுமே நிபுணர்களின் கைவசமாயிருப்பதுதான். அறிவியல் நிபுணர்களும், பொருளாதார நிபுணர்களுமே அனைவரது வாழ்வையும் தீர்மானிக்கிறார்கள். அவர்களை இயக்குவது முதலீட்டியத் தர்க்கமென்பதால் அவர்களெடுக்கும் தவறான முடிவுகளைப் பிற நிபுணர்கள் சுட்டிக்காட்டினால்கூட அரசியல் ரீதியாக அந்த விவாதம் நடைபெற வாய்ப்பின்றி இருக்கிறது. எனவே நமது கேள்விகள்.

1. மக்கள் சக்தி என்பதும், வரலாற்றின் ஆன்மா என்பதும் இன்று முதலீட்டிய தர்க்கத்தைக் கடந்து அல்லது எதிர்த்துச் செயல்பட முடியுமா?

2. அறிவியல், பொருளாதாரம் போன்ற நிபுணர்த்துவத் துறைகளை எப்படி உண்மையான அரசியலுக்கு உட்பட்டதாக மாற்ற முடியும்?

3. அறிவுப்பரவல் போன்ற “ஒளிமயமாக்கல்” நம்பிக்கைகள் இனி சாத்தியமா? குறிப்பாக இன்றைய ஊடகம் என்ற முதலீட்டியப் பாழ் நிலத்தைப் பொது மன்றம் என்ற சோலையாக மாற்ற முடியுமா?

Pin It