பத்து தலைப்புகளில் கொத்துக் கொத்தான அல்லது முத்தான நமது சொத்துரிமையை, நம் பண்டையர்களின் பாரம்பரிய மண்ணுரிமையை, எப்படி மண்மூடிபோகும் ஆபத்து நம்மீது திணிக்கப்பட்டு வருகிறது என்பதை அழகு தமிழில் அமுத மாக அதே சமயத்தில் கவலையின் விளிம்பில் நின்று விவாதிக்கிறது. மு. பாலசுப்பிரமணியின் “உயிரியியல் புரட்சியின் ஒடுக்குமுறை” என்கிற நூல்! இதை பூவுலகின் நண்பர்கள் வம்சி புக்ஸ் நிறுவனம் மூலம் வெளியிட்டு இருக்கிறார்கள்.

ஒன்றுக்கு பத்து உருவில் கைக்கு அடக்கமாக நாற்பது ரூபாய் விலையில் நூறு பக்கங்களே கொண்ட நூலாகும். நூறு பக்கங்களும் ஆயிரம் ஆபத்துக்களை, அதிலும் குறிப்பாக முழுக்க முழுக்க வேளாண் தளத்தில் ஏற்பட்டுள்ள ஆபத்துக்களை வெகுஇயல்பாக, மிகநுட்பமாக, ஆழமாகப் பதிவு செய்கிறது. சில நாளேடுகளின் பாணியில் கூறுவதென்றால் - ‘திடுக்’ தகவல்களை தீர்மானகரமாகப் பதிவு செய்கிறது; தர்க்கரீதியாகவும் விவாதிக்கிறது.

இன்றைக்கு; நாம் எதிர்நோக்கியுள்ள உணவு பாதுகாப்பு குறித்து, பேசாமடந்தைகள் கூட இன்று பேசத் துவங்கியுள்ளன; இது ஒரு புறத்தில் சாதகமாக தெரிந்தாலும், இன்னொரு புறத்தில் பாதகம் ஏற்படும் ஆபத்தும் இல்லாமல் இல்லை.

உணவு பாதுகாப்பு அச்சுறுத்தலின் முக்கிய காரணிகள் என்ன? என்ன? என்னென்னவோ ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், பிரதான காரணம் உணவுப் பொருள்கள் உற்பத்தி குறைவே எனலாம்; இதற்கு என்ன காரணம்? விவசாயிகள் உற்பத்திப் பொருள்களுக்கு நியாயவிலையின்மையும், விவசாயி இடுபொருள்களுக்கு அநியாய விலையும் தான்! இதில் மாற்றுக் கருத்துக்கு வாய்ப்பில்லை அல்லவா? ஆக இது ஒரு நெருக்கடி அல்லவா? இந்த நெருக்கடியை சமாளிக்க என்ன வழி?

அந்த வழிதான் அன்று சொன்ன ‘பசுமைபுரட்சி’, இன்று சொல்லுகிற ‘மரபணு மாற்று புரட்சி’. அந்த அனுபவம் - நெருக்கடியை சமாளித்தாலும் கசப் பானது; இந்த அனுபவமோ, அதாவது மரபணு மாற்று விஷமானது! காப்பைக் கூட மருந்தாக, கண்களை மூடிக் கொண்டாவது சாப்பிடலாம்; விஷத்தை சாப்பிட முடியுமா? உயிர் போய்விடுமல் லவா? மனித உயிர் மட்டுமல்ல, மண்ணின் உயிரும் போய்விடும்! என்று இந்நூல் தேசபக்தியோடு விவாதிக்கிறது.

இந்நூல் தேசபக்தியோடு தான் விவாதிக்கிறது என்பதற்கு இதோ. “... எந்த நுட்பமானாலும் ஒரு கருவியாக இருக்கலாமேயன்றி அது ஒரு தீர்வாக அமைய முடியாது. ஆனால் இந்த கருவி இன்று யார் கையில் உள்ளன என்பது அடிப்படையான வினா? கொள்ளையூதிய வேட்டைக்காரர்களின் கையில் இருக்கும்போது அவற்றின் வேலை, மக்களை உறிஞ்சுவதாகத்தான் இருக்கும்.” (பக்கம் - 30)

வேளாண்மைக்கு அடிப்படை மூன்று எனலாம். 1. விதை, 2. நிலம்., 3. விலை! இதன் உரிமை காக்கப்படும்போதுதான் வேளாண்மை காக்கப்படும்; தேசமும் காக்கப்படும்! இவை இன்று பன்னாட்டு கொள்ளையர்களாய் எப்படி சீரழிகிறது அல்லது சிக்கவைத்து சீரழிக்கப்படுகிறது என்பதை ஆதியும் அந்தமுமாக ஆய்வு செய்கிறது இந்நூல்!

இன்றைக்கு சற்றேறக்குறைய விதையின் பிடி பன்னாட்டு கொள்ளையர்கள் பிடியில் சிக்கி விட்டது என்றால் அது மிகையல்ல! அதைபற்றி நூல் பகருகிறது...”... பொதுவாக பன்னாட்டு நிறுவனங்கள் தமது விதைகளில் முடிவிப்பு நுட்ப வியல் (Terminater Techonology) மடிவிப்பு நுட்பவியல் (Verminater Technology) எனப்படும் நுட்பங்களை பயன்படுத்தி, விதைகளை இரண்டாவது தடவை யாக விதைப்பதற்கு உதவாமல் மலடாக்கி விடுகின்றன..” “இந்த புதிய விதைகளை வாங்கும் போதே பன்னாட்டு நிறுவனங்கள் பல்வேறு சட்ட திட்டங்களை உழவர்களோடு போட்டுக் கொள்கிறது. 1. ஒரு பருவத்திற்கு மட்டுமே விதைக்க வேண்டும். 2 அறுவடைக்கு பின்பு பொறுப்பு ஏற்க வேண்டும் (விதையை மீண்டும் பயன்படுத்தாமல்), 3. இவர்கள் விதை மட்டுமே வாங்க வேண்டும். 4. மான்சான்டாவின் காவலர்கள் (Monsanto Police) அமர்த்தப்படுவார்கள். 5. உழவர்கள் விதையை மாற்றும் பொறுப்பு (வேறு ஒருவருக்கு விதையைக் கொடுக்க இந்நிறுவனத்தின் இசைவு பெற வேண்டும்...” “... இவ்வாறாக இந்நுட்பவியல் பன்னாட்டு நிறுவனங்களின் கருவியாக மாறி ஏழை நாடுகளை சுரண்ட முயல்கிறது...” (பக்கம் - 21, 22) 

நிலவளம் பாதிப்பை இந்நூல் கவலையோடு பதிவு செய்கிறது பாருங்கள்.. “... பாலையாவதும், மண்வளமிழப்பதும் வெறு மண் அரிபாடுகளால் மட்டுமல்ல; உவராதல், களராதல், நீர்தேங்குதல் போன்றவற்றாலுமே என்கின்றனர் மண்ணியல் அறிஞர்கள். இவையெல்லாம் புதிய பாசனத்திட்டங்களில் வந்த கோளாறுகள், பெருமளவு நீரானது ஓரிடத்தில் சேர்க்கப்படும்போது” அங்கு பல்வேறு உப்புகளும், தாதுக்களும். பாசனம் நடக்கும் தளத்தில் நீர்மட்டும் ஆவியாவதால், உப்பும் தாதுக்களும் அங்கேயே தங்கிவிடும். இதனால் முறையே உவராதலும், களராதலும் ஏற்படுகின்றன. மேலும் பல இடங்களில் வடிகால் வசதிகள் இல்லாததால், நீர்தேங்கி நிலத்தடி உப்புகளைக்கூட மேலே கொண்டு வருகின்றன. நோய்களும் கூடவே பரவுகின்றன. மேலும் செடிகள் தம் வேர்களை மண்ணுக்கள் இறக்க முடியாமல் போகின்றன. இவ்வாறு நிலம் தவறாக கையாளப்பட்டு பாழாகிறது. இவ்வாறாக உலக பெரும் பாசனநிலம் பாதிக்கும்மேல், மேலே சொன்ன இடர்பாடுகள் உள்ளன. ஆண்டுதோறும் 1 கோடி எக்டர் பாசன நிலம் கைவிடப்பட்டு வருகின்றது என்று சூழல் மேம்பாட்டு அறிக்கை குறிப்பிடுகின்றது... (பக்கம் - 40)

எத்தனை வேளாண் நுட்ப வியல் களை நுழைத்தாலும், வேளாண் விளைப் பொருள் விலை வீழ்ந்துக் கொண்டே போவதும், வேளாண் இடுப் பொருள் விலை உயர்ந்து கொண்டே போவதும் வாடிக்கை யாகிவிட்டது. இதற்கு கடிவாளமிட முடியாமல் இருப்பது என்பதுதான் அனுபவம்; அதுதான் உலகை சுரண்டும் கொள்ளையர்களின் நோக்கமும் ஆகும். அதில் பெரிய ‘தூண்டில்’ தான் மரபணுமாற்று நுட்பவியல், சரி, இதிலாவது நெருக்கடி தீந்து விடுமா? உதட்டைப் பிதுக்குகிறது இந்நூல்.

“பாசில்லஸ் துருஞ்சியன்சு (BT) நுண்ணுயிர்களின் மரபீணியானது பயிரின் வேரிலோ, அல்லது தலைப் பகுதியிலோ தங்கியிருக்கக்கூடும். அது தனது கொல்லும் புரதத்தை வெளிபடுத்தியவாறும் இருக்கும். இவ்வாறு தொடர்ந்து புரதத்தை வெளியிடுவதும் சிக்கலானது. ஏனெனில் இந்த பாசில்லஸ் துருஞ்சியன்சஸ் மரபீணியை எதிர்க்கும் திறனுள்ள பல பூச்சிகளை அமெரிக்க செடி மரபீணியியல் பயிற்றகம் (Plant Genetic Institute) கண்டறிந்துள்ளது....” (பக்கம் - 58)

பூவுலகின் நண்பர்கள் படைப்பான, “உயிரியியல் புரட்சியின் ஒடுக்குமுறை” என்கிற நூல் இறுதியாக பூவுலகின் அன்பர்களை அழைக்கிறது.

இவற்றின் மீது (உணவு வழங்கல் அல்லது உணவு அளிப்பு) ஒற்றை யாண்மை இருப்பதால், எந்த உணவு உருவாக்கப்பட வேண்டும் என்பதே சில நிறுவனங்களால் தீர்மானம் செய்யப்படும். நாம் என்ன உண்ண வேண்டும் என்பதையும் சிலரே தீர் மானிப்பார்கள்”“..இதற்கு அடுத்தாற் போல் மாந்தர் உரிமை என்பதே கேள்விக்குறியாகிவிடும். மாந்தர் பலர் தம் உடலில் வணிக நிறுவனங்களின் காப்புரிமை பெற்ற உறுப்புகளோடு இருப்பர். பல பன்னாட்டு நிறுவனங்கள் பல மக்களின் உடல் உறுப்புகளின் உடமையாளர்களாக இருப்பார்கள்...” “...புதிய நுட்வியலாளர்கள் முலக்கூறு களையும், மரபீனிகளையும் தெரிந்து வைத்துள்ளார்கள். ஆனால் உள்ளூர் உழவர்களோ தமக்கும், தம் சுற்றத்திற்கும் தொடர்ந்து எவ்வாறு உணவு வழங்க முடியும் என்று தெரிந்து வைத்திருக்கின்றனர்..” “.. ஒரு திறமான மக்கள் சார்ந்த உயிரிநுட்பவியலை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஓரின சாகுபடிக்கு மாற்றாக, முறையான பன்மயதன்மை கொண்ட அணுகுமுறைகள் உருவாக்க வேண்டும்...” “... வணிக நோக்கு கொண்ட அறிவியல் அறிஞர்கள் முறையாக எதிர்கொள்ள மக்களை நேசிக்கின்ற அறிவிய லாளர்கள் முன்வரவேண்டும். அப்பொழுது தான் மூன்றாம் உலக நாடுகளும், நம் இந்திய துணைக்கண்டமும் இந்த சிக்கலில் இருந்து மீள முடியும்...” (பக்கம் - 89-99

ஆக உலகையும், உழவர்களையும், உழவையும் மீளாதுயரில் ஆழ்த்தும், ‘மரபணு மாற்று...; மாற்றல்ல..! மக்களின் துயர் துடைப்பதே மாற்று!’ என்று அழுத்தமாக பதிவு செய்துள்ளது இந்நூல். இது உழவர் பெருமக்கள் மட்டுமல்ல, உவகை நேசிக்கும் அனைவரும் வாசித்து சுவாக்க வேண்டிய நூலிது. 

ஆக மேற்சொன்னதைப் போல எத்தகைய ‘நுட்பவியல்’ கருவிகள் வந்தாலும், யார் அதனைப் பயன்படுத்துகிறார்களோ அவர்களின் நலனைத் தான் அது பேனும் என்பதை இந்நூல் வாசித்து முடிக்கும் போது, உணரமுடிகிறது. அதுவே இந்நூலின் வெற்றி! எதையும் - கண்மூடித்தனமாகவும், பன்னாட்டு பெரும் நிறுவனங்களுக்கு ஆதர வாகவும் செயல்படுத்தப் படுவதன் விளைவால், சுற்று சூழலும் பாழாகிறதென்பதையும் இந்நூல் சுட்டுவதிலிருந்து தவறவில்லை. அட்டைப்படம், வடிவமைப்பு, மிக நன்று, பூவுலகின் நண்பர்கள் முயற்சி தொடரட்டும்!

Pin It