தனியாருக்கு ஊழியம் செய்யும் அரசு

இன்ட்ரோ: ஒரிசாவிலும் நாட்டின் மற்ற பகுதிகளிலும் வலுக்கட்டாய இடப்பெயர்வுக்கு எதிராகப் போராடுபவர்களை குற்றவாளியாக்கும் முயற்சியே அரசின் தொடர்ச்சியான செயல்முறையாக இருந்து வருகிறது.

கொரிய பன்னாட்டு நிறுவனமான பாஸ்கோவுக்காக ஒரிசா மாநில அரசு மேற்கொண்ட வலுக்கட்டாய நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக, காவல்துறையினருக்கு எதிராக நரம்புகளை சில்லிடச் செய்யும் வகையில் மக்கள் வெளிப்படுத்திய எதிர்ப்பு தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது. இப்போது திங்கியா, கோவிந்தபூர் கிராமங்கள் சற்று நிதான நிலையை அடைந்துள்ளன.

“எங்களை வெளியேற்றுவதற்காக இங்கே வந்த 24 பிரிவு காவல்துறையினர் புரி ஜகந்நாத ரத யாத்திரைக்குச் (அங்கே சாமியார்களை அவர்கள் அடித்துத் துரத்துவார்கள்) சென்றுவிட்டதால் சற்று நிதானமடைந்துள்ளோம்" என்கிறார் அபே சாகு. நில கையகப்படுத்தலை எதிர்த்து போராடி வரும் பாஸ்கோ பிரதிரோத் சங்கர்ம் சமிதி (பி.பி.எஸ்.எஸ்.) அமைப்பின் தலைவர் இவர். ஜூன் மாதத்தில் எல்லா விஷயங்களையும் குழப்பி விட்டதால், ஒரிசா அரசு சற்று இக்கட்டான நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான இந்த மோதலில் சற்று இடைவெளி ஏற்பட்டுள்ளது. பாஸ்கோவுக்கு எதிரான தங்கள் மனநிலையையும் தங்கள் வலிமையையும் கிராம மக்கள் நிஜமாகவும் ஊடகங்கள் வழியாகவும் உணர்த்திவிட்டனர். ஆனால் காவல்துறையினரோ பாஸ்கோ இரும்பு ரதத்தை ஆண்டு முழுவதும் இழுப்பதற்கான பொறுப்பை ஏற்றிருக்கிறார்கள். அதனால் இந்த கிராமங்களுக்கு அவர்கள் திரும்பவும் வந்துவிடுவார்கள். அப்படி காவல்துறை திரும்ப வரும் போது, உறுதியான நெஞ்சம் படைத்த இந்த மக்களை சந்தித்தாக வேண்டும். தங்களது விளைச்சல் நிலங்களை தென்கொரிய பெருநிறுவனத்துக்கு வழங்கும் மாநில அரசின் முடிவை எதிர்ப்பதில் இந்த மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். ஒருங்கிணைந்த மின் உற்பத்தி, இரும்பு ஆலை, சிறு துறைமுகம் ஆகியவற்றை பாஸ்கோ நிறுவனம் நிறுவ உள்ளது. அத்துடன் 6000 லட்சம் டன் (டன் = 1000 கிலோ) இரும்புத் தாதுவையும் இப்பகுதியில் வெட்டியெடுக்க உள்ளது.

வெற்றிலைத் தோட்டங்கள்

இங்கு வாழும் மக்கள் ஒரிசாவில் வாழும் விவசாய சமூகங்களிலேயே மிகவும் நல்ல நிலையில் இருப்பவர்கள். இவர்களது வாழ்வாதாரத்தின் மையமாக வெற்றிலைச் சாகுபடி இருக்கிறது. பாஸ்கோ ஆலை செயல்படத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பகுதியில் 1,800 வெற்றிலை தோட்டங்கள் இருப்பதாக அரசுக் கணக்கு சொல்கிறது. ஆனால் வெற்றிலைச் சாகுபடியாளர்களோ 2,500 தோட்டங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். இத்தோட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவை திங்கியா, கோவிந்தபூர் பகுதிகளில் இருக்கின்றன. இந்தத் தோட்டங்களில் உழைத்தால் ஒரு நாளைக்கு ரூ. 200 கூலியும், நல்ல சாப்பாடும் கிடைக்கின்றன. மாநிலத்தின் விவசாயத் துறையில் கிடைக்கும் மிக அதிக சம்பளம் இது. புவனேஸ்வரில் உள்ள கட்டடத் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் சம்பளத்தைவிட இது அதிகம். அத்துடன் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (எம்.என்.ஆர்.ஜி.இ.ஏ) கீழ் ஒரிசாவில் வழங்கப்படும் சம்பளத்தைப் போல இரண்டு மடங்கு சம்பளம் இது.

வெற்றிலைத் தோட்டங்களில் செய்யப்படும் குறிப்பிட்ட சில சிறப்பு வேலைகளுக்கு ஒரு நாளைக்கு ரூ. 450க்கு மேல் சம்பளமும் ஒரு வேளைச் சாப்பாடும் கிடைக்கும். ஒரு ஏக்கரில் 10இல் ஒரு பகுதியில் அமைந்திருக்கும் ஒரு சிறிய வெற்றிலைத் தோட்டம், ஆண்டுக்கு குறைந்தபட்சம் 540 வேலை நாள்களை உருவாக்குகிறது. இது ஒரு தனிநபருக்கானது. குடும்பத்துக்கு என்று கணக்கிட்டால் ஓர் ஆண்டில் 600 வேலை நாள்கள் கிடைக்கின்றன. நிலமற்ற சில வேலையாள்களோ மீன் பிடிப்பதன் மூலம் இன்னும் கூடுதலாக சம்பாதிக்கிறார்கள். பாஸ்கோவின் தனித் துறைமுகம் ஜதாத்ரியில் வந்தால், அவர்களது மீன்பிடி வருமான ஆதாரமும் சிதையும். இந்தத் திட்டம் வேலையைக் கொண்டு வருவதாக கூறப்படுவதை உள்ளூர்வாசிகள் மிகச் சாதாரணமாகப் புறந்தள்ளுகிறார்கள். அந்த நிறுவனத்தால் எந்த வேலையும் கிடைக்கப் போவதில்லை என்கிறார்கள். அனைத்து வர்க்கங்களிலும், ஏன் வர்த்தகர்கள் மத்தியிலும்கூட, இந்தத் திட்டத்தால் தங்கள் வாழ்வாதாரம் பறிபோகும் என்ற மனநிலை இருக்கிறது. அதனால் வாழ்வாதாரத்தை விட்டுக் கொடுக்க அவர்கள் தயாராக இல்லை. கையகப்படுத்தலுக்கு கொடுக்கப்படும் நஷ்டஈடு அர்த்தமற்றது என்கிறார்கள்.

வழக்குகளும் பிடி ஆணைகளும்

பாஸ்கோவுக்கு எதிரான போராட்டத்தை மாநில அரசு கையாளும் விதம் பெரும் நெருக்கடியை உருவாக்கி உள்ளது. மேலோட்டமாகப் பார்த்தால் எல்லாம் அமைதியாகத் தெரிந்தாலும், பிரச்சினையின் ஆழத்துக்குச் சென்றால், நிலைமை மிக மோசம். போராடுபவர்களுக்கு எதிராக பல வழக்குகள், கணக்கற்ற பிடிஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த கிராமங்களில் வாழும் பலரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஊரைவிட்டு வெளியே செல்ல முடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். மற்ற கிராமங்களில் நடக்கும் உறவினர்களின் திருமணத்துக்கு பலராலும் செல்ல முடியவில்லை. உடல்நலம் குன்றியுள்ள தங்கள் பெற்றோர் அல்லது ரத்தஉறவுகளை பார்க்க முடியவில்லை என்கிறார்கள். திங்கியா, கோவிந்தபூரில் நிலம் கையகப்படுத்த வந்துள்ள காவல்துறைக்கு எதிராக மனித தடுப்புச் சுவராக நிற்கும் மக்கள், இதை துயரத்துடன் தெரிவித்தனர். இது ஒரு வகையில் அவர்களை முற்றுகையிட்டு சிறை பிடித்தது போலிருக்கிறது.

அபே சாகுவுக்கு எதிராக 49 வழக்குகள் தொடுக்கப்பட்டு, சௌத்வார் சிறையில் 10 மாதங்கள் அவர் அடைக்கப்பட்டிருந்தார். பாஸ்கோவை எதிர்த்ததற்காக இங்குள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு எதிராக கிட்டத்தட்ட 177 வழக்குகள் போடப்பட்டுள்ளன. ஒரிசாவிலும் நாட்டின் மற்ற பகுதிகளிலும் வலுக்கட்டாய இடப்பெயர்வுக்கு எதிரான போராட்டங்களை கையாளும்போது, போராட்டக்காரர்களை குற்றவாளிகளாக்கும் முயற்சியை அரசுகள் தொடர்ச்சியான செயல்முறையாக கடைப்பிடிக்கின்றன. இங்கிருந்து நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கலிங்கநகரில், டாடா இரும்பு ஆலைக்கான நிலம் கையகப்படுத்தலுக்கு எதிராக ரவி ஜரிகா என்ற பழங்குடித் தலைவர் போராடி வருகிறார். "எனது சொந்த ஊரான சண்டியா கிராமத்தைவிட்டு பல ஆண்டுகளாக வெளியே செல்ல முடியவில்லை. அனைத்து பிரிவுகளின் கீழும் 72 வழக்குகளை காவல்துறை என் மீது தொடுத்துள்ளது" என்கிறார் அவர்.

ஜகத்சிங்பூர் மாவட்ட எஸ்.பி. எஸ்.தேவதத் சிங், பி.பி.எஸ்.எஸின் கருத்து பொய் என்கிறார். "200300 பேருக்கு எதிராக வேண்டுமானால் வழக்குகள் இருக்கலாம். பி.பி.எஸ்.எஸ்ஸால் சித்திரவதைப்படுத்தப்பட்ட 52 குடும்பங்கள், அந்த கிராமங்களில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளன. பி.பி.எஸ்.எஸ்ஸால் பல அப்பாவி மக்கள் தவறான பாதைக்கு இட்டுச் செல்லப்பட்டுள்ளனர்" என்று பதில் குற்றச்சாட்டை அவர் வாசிக்கிறார்.

2005 புரிந்துணர்வு ஒப்பந்தம்

தரைச் சண்டையில் ஏற்பட்டுள்ள இடைவெளிக்கு, அரசியல் ரீதியிலான இக்கட்டே முக்கிய காரணம் என்கிறார் சாகு. திட்டப் பகுதியில் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதற்காக கட்டப்பட்டுள்ள பள்ளிகளில் தங்கியுள்ள காவல்துறையினரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று மாநில அரசுக்கு தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு கமிஷன் கடிதம் அனுப்பியுள்ளது. இது ஒரிசா அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் மற்றொரு விஷயம். பாஸ்கோ நிறுவனத்துடனான மாநில அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஓராண்டுக்கு முன்பே காலாவதியாகிவிட்டாலும், இப்போது அரசு வலுக்கட்டாயமாக நிலம் கையகப்படுத்தலை மேற்கொள்கிறது என்பதை விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். 2005ஆம் ஆண்டு பாஸ்கோ நிறுவனத்துடன் மாநில அரசு செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் சந்தை மதிப்பைவிட மிகக் குறைவான விலைக்கு இரும்புத் தாதுவைத் தர ஒப்புக்கொண்டது. ஆனால் இப்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் அமலில் இல்லாத நிலையிலும், 4,004 ஏக்கர் நிலப்பகுதியை கையகப்படுத்துவதில் அரசு தீவிரமாக ஈடுபடுகிறது. இந்தப் பரப்பு திங்கியா, கோவிந்தபூர் கிராமங்களில் பாதியளவு.

"நிலம் கையகப்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அவசியமில்லை. மாநிலத்தில் எந்த புரிந்துணர்வு ஒப்பந்தமும் இல்லாமல் 9,000 ஏக்கர் நிலப்பகுதியை தொழிற்சாலைகளுக்காக கையகப்படுத்தி இருக்கிறோம்" என்கிறார் நிலம் கையகப்படுத்துவதற்கான மாநிலத் தலைமை அதிகாரி பிரியபர்தா பட்நாயக்!

"பாஸ்கோ நிறுவனத்துக்காக அரசு நிலத்தைத்தான் நாங்கள் கையகப்படுத்துகிறோம். அதில் பெருமளவு காடு (!). நாங்கள் தனியார் நிலத்தை கையகப்படுத்தப் போவதில்லை, அதாவது வெற்றிலைத் தோட்டங்களை. அவை சமீபத்தில் தோன்றியவை" என்கிறார் ஒரிசா அரசின் தலைமைச் செயலர் விஜய் குமார் பட்நாயக். ஆனால் கிராம மக்களோ, 1927ஆம் ஆண்டிலிருந்து தங்கள் வெற்றிலைத் தோட்டங்கள் இருந்து வருவதாக நிலஅளவை (சர்வே) பதிவுகளைக் காட்டுகிறார்கள். அதற்கு முன்பிருந்தே நாங்கள் தோட்டங்களை வைத்திருக்கிறோம் என்கிறார் மிகச் சிறு வயதில் இருந்தே அங்கே வேலை பார்த்து வரும் 70 வயதுக்கு மேற்பட்ட குஜ்ஜாரி மொகந்தி.

எஸ்.பி. தேவதத் சிங் கூறுகையில், "திட்டப் பகுதியில் உள்ள ஏழு கிராமங்களில் கோவிந்தபூர், திங்கியா தவிர்த்த பகுதிகளில் எல்லா விஷயங்களும் சுமூகமாக நடக்கின்றன. அந்த இரண்டு ஊர்களில் கோவிந்தபூரில் பெரும்பாலோர் பி.பி.எஸ்.எஸ்ஸில் சேரவில்லை. திங்கியாவில் இருப்பவர்கள்தான் பி.பி.எஸ்.எஸில் இருக்க வேண்டும். இப்போது முதல் ஐந்து கிராமங்களில் வேலைகளைத் தொடங்கியுள்ளோம். பிறகு அடுத்த ஊர்களுக்கு வருவோம். இங்கே போர் எதுவும் நடக்கவில்லை. நாங்கள் எங்கள் வேலையைச் செய்கிறோம். ஆனால் காவல்துறையின் எத்தனை பிரிவுகளை அந்த கிராமங்களுக்கு அனுப்பப் போகிறோம் என்பதைப் பற்றி எதுவும் கூற முடியாது." என்கிறார்.

அவர் சொல்வது ரொம்பச் சரி. இங்கே போர் நடக்கவில்லை. ஏனென்றால் இங்கே அரசுப் படைகளை எதிர்த்துப் போராடுபவர்கள் கையில் எந்த ஆயுதமும் இல்லை. ஆனால் திங்கியா, கோவிந்தபூருக்குள் காவல்துறை நுழையும்போது, பாஸ்கோவின் இரும்பு ரதம், அந்த மனிதத் தடுப்பை அழித்த பிறகே முன்னேறும் என்பது மட்டும் உண்மை.

தமிழில்: ஆதி வள்ளியப்பன்

Pin It