டோங்க்ரியா கோந்த் பழங்குடிகளுடன் ஒரு பயணம்

பா.வினோத் ஒளிப்படக் கலைஞர்

எறும்புக் கூட்டம் போல மலையை நோக்கி நடந்து போய்க் கொண்டிருந்தோம். பழங்குடி நண்பர் சீதாராமும் நானும் நகரத்தைக் கடந்து நியமகிரி மலைப்பாதையில் நடந்தோம். நின்றபடி எங்களைக் கடந்து கொண்டிருந்தன பல நூற்றாண்டு வயது கொண்ட பெருமரங்கள். டோங்க்ரியா கோந்த் எனப்படும் பழங்குடி இனக்குழுவைச் சேர்ந்தவர் சீதாராம். அவர்களது வாழ்க்கையை அறிந்துகொள்ளும் ஆவலோடு ஆரம்பமானது எனது பயணம்.

நியமகிரி மலையின் அடிவாரத்தை அடைந்துவிட்டோம். பல ரகசியங்களையும் அனுபவம் மிகுந்த வாழ்க்கையையும் கொண்டிருந்த மலை, எங்கள் முன் மௌனமாகத் தவம் செய்து கொண்டிருந்தது. வெயில் தரையில் விழுந்து படுக்கத் தயாராக இருந்தது. காலின் அடியில் ஓடிய ஒற்றையடிப் பாதை எங்களை உள்ளிழுத்தது, தனது ஆச்சரிய எல்லைக்குள்.

இரவு மெல்லக் கவிந்திருந்தபோது நாங்கள் மலையினூடாக நான்கைந்து மைல்கள் கடந்திருந்தோம். தொலைவில் தெரியும் மலையுச்சியில் ஆங்காங்கே நெருப்பு பரவியபடி இருக்க, அதிர்ச்சியடைந்து அது என்னவென்று சீதாராமிடம் கேட்டேன். “விவசாயம் செய்வதற்காக டோங்க்ரியா மக்கள் மலைச்சரிவில் காய்ந்திருக்கும் மரங்களை எரித்துவிட்டு, பயிர் சாகுபடி செய்கிறார்கள் (பண்டைய காட்டெரிப்பு வேளாண்மை), அறுவடைக்குப் பின்னர் அந்த இடத்தை விட்டுவிட்டு வேறு இடத்தில் விவசாயம் செய்யத் தொடங்கிவிடுவார்கள்” என்றார்.

நடந்து சென்ற வழியில் அழகிய கிராமமான டூடா வீற்றிருந்தது. அந்த ஊர் பொழுது சாயும் நேரத்து வேலைகளில் அமைதியாக மூழ்கியிருந்தது. அதைப் பார்த்தபோது ஓர் ஓவியம் உயிர்ப்புடன் நிகழ்ந்து கொண்டிருந்தது போலிருந்தது. உலகத்தின் எந்த நவீனத்தின் சாயலும் தீண்டாத பழைய ஓவியம் அது. பெண்களும் குழந்தைகளும் என்னைப் பார்த்தவுடன் ஓடி ஒளிந்து கொள்ள, ஆண்கள் ஆச்சரியமும் சந்தேகமுமாக என்னைப் பார்த்தார்கள். என்னை அவர்களுக்கு சீதாராம் அறிமுகம் செய்து வைக்க, அவர்கள் என்னுடன் பேசத் தலைப்பட்டார்கள். மொழி தெரியாததால், சீதாராம் மொழிபெயர்த்துக் கூறிக் கொண்டிருந்தார். சீதாராம் வழியாக, சிறிது தெரிந்த இந்தியில் தொடர்புபடுத்திக் கொண்டேன். அவர்களுடைய மொழிக்கு வரி வடிவம் கிடையாது. அது வார்த்தைகளால் நிரம்பியது. ஆச்சரியம் என்னவென்றால், அது தமிழ் மொழியுடன் ஒத்திருப்பதுதான். அது ஒரு திராவிட மொழி. அந்தப் பழங்குடிகள் திராவிடப் பழங்குடிகள்.

மண்வீடு, சிறுவாசல், செம்மண்ணும் பாறைகளுமாய் ஆன பாதைகள் பத்துக்கும் குறைந்த எண்ணிக்கையுள்ள வீடுகளைக் கொண்ட கிராமம் அது. ஊரின் ஓரத்தில் கூட்டமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன மாடுகள். ஊருக்கு நடுவே அமைந்த கூரையில்லா மரக்கட்டுமானங்கள், சிறிய சிறிய மரக்கட்டில்கள், இங்கேயும் அங்கேயும் விளை யாடிக் கொண்டிருந்த தெரு நாய்கள், ஒற்றைச் சேலையை மேலும் கீழுமாய் அழகாய் சுற்றியபடி வீட்டுக்கு உள்ளிருந்து எட்டிப்பார்க்கும் சிறுமிகள். மூக்கில் மூன்று வளையங்களும், கழுத்து நிறைய வளையங்களும், வண்ணவண்ணமாய் கழுத்துப் பாசிகள் என ஒய்யாரமாக இருந்தனர் பெண்கள், முண்டு வேட்டி கட்டி, வெற்றுத் தோளில் தொங்கவிடப்பட்ட கோடரியுமாய் ஆண்கள். இந்த தனித்த தேசத்தில் மாறுபட்ட ஆளாக நின்றேன் நான். என்னை அழைத்துச் சென்று ஒரு நெடு மரம் அருகே அமரச் செய்து, விடுவிடுவென்று மேலேறிவிட்டார் ஒரு பெரியவர். ஆச்சரியத்துடன் கீழே இருந்து மேலே பார்த்தேன். நாற்பது அடிக்கும் மேலுள்ள உயரமான மரம். அதே உயரமுள்ள மூங்கிலால் ஆன ஏணி அம்மரத்தின் மீது சாய்த்து வைக்கப்பட்டிருந்தது.

ஊர் மக்கள் அனைவரும் மரத்தடியில் கூடிவிட, அனைவருக்கும் கள் இறக்கப்பட்டு சுரைக்குடுவையில் பரிமாறப்பட்டது. அவர்கள் மொழியிலும் கள் என்பது கள் என்றே அழைக்கப்படுகிறது.

சீதாராமின் கிராமத்துக்கு அதற்கும் மேலே ஏற வேண்டியிருந்ததால், அங்கேயிருந்து விடை பெற்றுவிட்டு, மேலே ஏறத் தொடங்கினோம். முற்றிலும் இருட்டிவிட்டது. ஏகாந்தமான சூழலாக இருந்தது, நட்சத்திரம் தரையிறங்கி எங்களுக்கு முன் நடந்து சென்று கொண்டிருந்தது மாதிரியான ஓர் உணர்வு. இரவில் கரடிகள் நடமாடும் காடு அது. சீதாராமுக்கு கரடிகளைப் பற்றியோ, காடுகளைப் பற்றியோ எந்த பயமும் இல்லை.

ஒரு மணி நேர பயணத்துக்குப் பின், இருளின் அடர்த்தியிலிருந்து மனிதர்கள் பேசும் குரல் வெளியே கேட்க ஆரம்பித்தது. கட்டராக்காபொன்டேல் என்னும் கிராமம் காது வழியாகக் கேட்டது.

அந்த கிராமத்தில் எனது வரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஊரில் பாதி பேர் சீதாராமின் வீட்டுக்கு முன்பாகக் கூடிவிட்டனர். ஊரே என்னைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தது. இவர்களுக்கு நடுவில் எதுவும் புரியாமல் நான் நின்று கொண்டிருந்தேன். சீதாராம் மொழிபெயர்த்தார். கிராமத்து மனிதர்கள் அனைவரும் நான் என்ன மொழி பேசுகிறேன் என்பதை தெரிந்துகொள்வதிலேயே ஆர்வமாக இருந்தனர்.

சீதாராமின் வீட்டில் சிறிய மினுமினுக்கும் விளக்கொளியில் இரவு உணவு. பெரிய இலையின் மீது சோறும் ஒரு சிறிய இலையில் வெங்காயமும் சிறு மிளகும் வைக்கப்பட்டிருந்தன. மசாலா, எண்ணெய் கலக்காமல் தட்டைப்பயறுக் குழம்பு பரிமாறப்பட்டது. அருகே சுரைக் குடுவையில் தண்ணீர், பாசத்துடன் பரிமாறினார் சீதாராமின் அம்மா.

கட்டராக்காபொன்டேலில் எனது முதல் பகல் சற்று அதிர்ச்சியாகத்தான் கழிந்தது. ஆண்டுதோறும் இறந்தவர்களுக்காக இறந்தவர் வீட்டில் நடத்தப்படும் பூஜையான சிராத்தா பர்பபோ அன்றைக்கு நடந்தது. ஊரின் பின்புறம் அனைவரும் கூட பூஜை ஆரம்பித்தது. வயதான பெண் பூசாரி மந்திரம் சொல்லச்சொல்ல, அனைவரும் உச்சரித்தனர். பின்னர் கோழிக்குஞ்சுக்கு அரிசி கொடுக்கப்பட்டது. கீழே ஊன்றப்பட்டிருந்த இரு குச்சிகளுக்கு முன்புறம் உட்கார்ந்து மந்திரம் ஓதினார்கள். ஒரு எருமை அழைத்து வரப்பட்டது. எருமையின் தலையில் சிறிது அரிசி வைக்கப்பட்டு, சேவலைப் பிடித்து வந்து அரிசியை கொத்த விட்டார்கள். பின் எருமையை ஆற்றுப் பகுதிக்கு இழுத்துச் சென்றார்கள்.

கண நேரத்தில் கோடரி கொண்டு மாடுகள் வெட்டப்பட்டன. சிறுவர்களும் இளைஞர்களும் ஆர்வமாக எருமையை வெட்டி மகிழ்ந்தார்கள். பின் மாட்டின் ரத்தம் தனியாக எடுக்கப்பட்டு பாத்திரத்தில் ஊற்றப்பட்டது. மாடுகள் தோலுரிக்கப்பட்டு, ஆற்றங்கரையில் பெரிய பெரிய பாத்திரங்களோடு சமையல் ஆரம்பமானது. வெளியூரில் இருந்து வந்த மற்ற பழங்குடிகளும் சமையலில் பங்கேற்றார்கள். இரண்டு மணி நேரத்தில் உணவு தயாராகிவிட்டது. சிறுவர்களும் பெரியவர்களும் இலையில் ஆன கோப்பையைத் தயார் செய்ய, ஊர் பொதுவில் பெண்கள் சோறு சமைத்தார்கள். ஆற்றங்கரையில் விருந்து பரிமாறப்பட்டது. மீதமுள்ள கறியும் கால் எலும்புகளும் பங்கிடப்பட்டன, கட்டைகளுக்கு நடுவே மாடு தொங்கவிடப்பட்டு இரண்டு நுனிகளையும் இருவர் பிடித்துக் கொள்ள மாட்டுக் கறியாக வெட்டப்பட்டு பங்கிடப்படுகிறது.

ஊரில் உள்ள ஒரு வீட்டில் என்னை தங்க வைத்திருந்தார்கள். இரவில் சிறுவர்களும் இளைஞர்களும் அங்கே வந்து படுத்துக் கொண்டார்கள். எங்களுக்கு இடையிலான புரிதல் சைகையாலும் புன்னகையாலுமே பெரும்பாலும் நகர்ந்து செல்லும். இரவில் தனிமை நிலவும். வானில் அந்த நேர்கோட்டு மூன்று நட்சத்திரங்கள்தான் எனக்கு பரிச்சயமானவர்களாக இருந்தார்கள். தெருவில் கட்டிலைப் போட்டு வானம் பார்த்தபடி படுத்திருந்தேன். வானம் எனக்கு இரண்டடி மேலேயிருந்தது போலிருந்தது.

மூன்று பழங்குடிகள்

கோந்த் இனக் குழுக்கள் மூன்று பிரிவுகளாக இருக்கிறார்கள். டோங்க்ரியா கோந்த், கோட்டியா கோந்த், ஜெசியா கோந்த். டோங்கிரியா கோந்த் மலையின் உச்சியிலும், கோட்டியா கோந்த் மலையடியிலும் வாழ்கிறார்கள். நியம் ராஜா என்று நியமகிரி மலையை இவர்கள் தெய்வமாக நினைக்கிறார்கள். டோங்க்ரியா கோந்த் இன மக்களை பாதுகாக்கப்பட வேண்டிய ஆதிப் பழங்குடிகளாக அரசு, சர்வதேச அளவில் பட்டியலிடப்பட்டுள்ளது. மலையின் சரிவில் விவசாயம் செய்வதால் அவர்களுக்கு டோங்க்ரியா என்ற பெயர் ஏற்பட்டது. இவர்களது வாழ்க்கை முற்றிலும் சுயசார்பு உடையதாக இருந்து வந்தது. உணவு, உறைவிடம், ஆடை அனைத்தையும் அவர்கள் சுயமாகத் தயார் செய்து பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். சிறிது காலத்துக்கு முன்பு வரை உப்பு, இரும்பு போன்ற சுயமாக உற்பத்தி செய்ய முடியாத பொருள்களை வாங்கவே இவர்கள் நகரத்து சந்தைகளுக்கு சென்றிருக்கின்றனர்.

முன்னாளில் பலர் தங்களது முழு ஆயுளுக்கும் மலையை விட்டு கீழே இறங்காதவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். தற்போது நிலைமை மாறி வருகிறது. உலகமயமாக்கலின் விளைவுகள் இங்கேயும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. ஜீன்ஸ், சட்டை போடும் இளைஞர்கள், மேக்கப் போட்டுக்கொள்ளும் இளம்பெண்கள், கிரிக்கெட் என பாதிப்புகள் நீள்கின்றன. ஆனால் மின்சாரம், கல்வி என எந்த அடிப்படை வசதிகளும் இவர்களுக்குக் கிடைக்கவில்லை. சற்று தொலைவில் வேறொரு கிராமத்தில் இருக்கும் பள்ளிக்கூடத்துக்குக்கூட தினமும் செல்ல வழியில்லாமல் இவர்கள் இருக்கின்றனர். அங்கே ஒரிய மொழியில் படிக்க வேண்டியிருப்பதால் அடிப்படையிலேயே சிக்கல் ஆரம்பமாகிறது. இதனால் மற்ற குழந்தைகளிடம் இவர்கள் பழகுவதற்கு தயக்கம் இருக்கிறது. அங்கிருக்கும் ஆசிரியர்களோ நகரத்து நவீனங்களை உள்ளிழுத்து வருபவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் மொழியில் கல்வியும் இவர்களது இனக்குழுவைச் சேர்ந்த ஆசிரியரும் எப்போது கிடைக்கும் நாள் என்றைக்கு என்று தெரியவில்லை.

மற்றொரு நாள் அருகிலிருக்கும் டபிபோடா கிராமத்தில் திருமண நிகழ்வு என்று கேள்விப்பட்டு அங்கே சென்றிருந்தேன். சுற்றியிருக்கும் கிராமங்களில் இருந்து இளைஞர்கள், இளம்பெண்கள் வந்திருந்தனர். பறை போன்றதொரு இசைக்கருவியின் சப்தத்தோடு நடனம் ஆரம்பமானது. இளைஞர்கள் நிறைய குடித்திருந்தார்கள். நீண்ட நேரம் உற்சாகமாக சேர்ந்து ஆடியபடி இருந்தார்கள். அரவாணி ஒருவர் பெண்களுடன் இயல்பாகக் கைகோர்த்து ஆடியபடி இருந்தார். இளைஞர்கள்தான் அவரை கிண்டல் செய்யும் வண்ணமாக இருந்தனர்.

திருமணத்துக்கு மணமகள் வீட்டாருக்கு, மணமகன் வீட்டிலிருந்து சீர் செய்ய வேண்டும். அரிசி, பருப்பு, கம்பு, கள்ளு, சிறிது பணம் வைத்துக் கொடுக்க வேண்டும். காதல் திருமணங்கள் இரு வீட்டாரிடமும் பேசி சம்மதம் பெறப்பட்டு நடத்தப்படுகின்றன. எல்லா டோங்க்ரியா கிராமங்களின் பின்புறமும் ஒரு சிறு வீடு இருக்கிறது. அங்கேதான் ஏழு, எட்டு வயதுக்குப் பின் சிறுவர், சிறுமியர் தங்க வைக்கப்படுகின்றனர். இவர்கள் தங்கள் துணையை பெரும்பாலும் அங்கேயே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். திருமணத்துக்கு முன் பல காதல்கள் கொண்டாலும்கூட, திருமணத்துக்குப் பின் ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்போடு வாழ்கிறார்கள்.

திருமண உறவுக்குள் சிக்கல் வந்தால், பிரிந்து செல்வதிலும் மறுமணம் செய்து கொள்வதிலும் சிக்கல் ஏதுமில்லை. திருமண நிகழ்வு அன்று ஜெனரேட்டரும் டிவியும் வாடகைக்கு எடுத்து வரப்பட்டு, படம் போட்டு பார்த்தார்கள். எந்த மொழியாக இருந்தாலும் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்தார்கள். அடுத்த நாள் நியமகிரி மலையையும் பழங்குடிகளின் நலன் கருதியும் போராடி வரும் சமூக ஆர்வலர் பிரதித்னி ஜெனா அவர்களுடன் வேதாந்தா நிறுவனத்தை நேரடியாக பார்க்க சென்றோம். இதற்கு முன்னால் சென்ற ஜெர்மன் பத்திரிகையாளர் வேதாந்தாவின் பாதுகாப்பு அதிகாரிகளால் தாக்கப்பட்டதால், நாங்கள் எச்சரிக்கையாக அதிகாலை சென்று படமெடுக்கத் திட்டமிட்டு இருந்தோம்.

நியமகிரி மலையின் அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ள பெரும் தொழிற்சாலையான வேதாந்தா, பாக்சைட் தாதுவைக் கொண்டு அலுமினியம் உற்பத்தி செய்யும் நிறுவனம். பெரும் காட்டின் நடுவே பல ஏக்கர் காடு அழிக்கப்பட்டு கட்டப்பட்டிருக்கிறது. வேதாந்தா நிறுவன ஊழியர்கள் தங்குவதற்காக வீடுகள், முதலாளிகள் வந்து செல்ல ஹெலிபேட் என சகல வசதிகளையும் காட்டுக்குள் நிறுவியிருக்கிறார்கள்.

வேதாந்தா நிறுவனத்தின் பின்புறம் திறந்தவெளியில் கொட்டி வைக்கப்பட்ட அலுமினிய மேடுகள் மலை போல் காட்சியளித்தன. சூழலியல் தொடர்பான விதிமுறைகளை மீறி இந்த நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியை சுற்றி வசிக்கும் பழங்குடிகள் சூழல் கேட்டால் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரவு நேரத்தில் ஆலைச் செயல்பாட்டால் இப்பகுதி வெப்பமாக இருக்கிறது. எந்நேரமும் உருவாகும் சத்தமும் புகையும் காடுகளின் இயல்பை மாற்றுகின்றன.

இந்த நிறுவனம் நியமகிரி மலை உச்சியில் பழங்குடி மக்களை வெளியேற்றிவிட்டு கச்சா பொருளான பாக்சைட் தாதுவை எடுத்து மலையை தின்று தீர்க்க முயற்சிக்கிறது. இதற்கு எதிராக பழங்குடி இனக்குழுக்கள், சூழலியலாளர்கள், ஆக்ஷன் எய்ட், சர்வைவல் இன்டர்நேஷனல், ஆம்னஸ்டி இன்டர் நேஷனல் போன்ற அமைப்புகள் தொடர்ந்து போராடி தற்போது வெற்றியும் கண்டுள்ளன.

உலகமயமாக்கலாலும் இந்நிறுவனத்தின் வருகைக்குப் பின்னும் கோந்த் இனக்குழுக்களின் வாழ்க்கையில், பண்பாட்டில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பழங்குடிகள் தங்களது இன அடையாளங்களை இழக்கிறார்கள். சுயசார்புத் திறனை இழக்கிறார்கள். நுகர்வோராக மாறுகிறார்கள். அழகாக வேண்டும் என்ற எண்ணம் உருவாக்கப்பட்டிருக்கிறது. உள்ளூர் பொருளாதாரமும் அவர்களது புதிய உருவாக்கங்களும் புதிய சிந்தனைகளும் குறைகின்றன. அவர்களது கலாசாரம், உடை, வாழ்க்கை முறை, நாட்டார் கலை அனைத்தும் மாற்றங்களைச் சந்திக்கின்றன.

மின்சாரம் போன்ற நவீன வசதிகள் நுழையாத இந்த மலைப்பகுதி கிராமங்களில் இப்போது கிரிக்கெட், மேக்கப், ஜாக்கெட், டிவி, செல்போன், ஜீன்ஸ் என்று உலகமயமாக்கல் பிரதிபலிக்கிறது. இங்கே பயிற்றுவிக்க வரும் வாத்தியார்கள் உலகமயமாக்கலின் விற்பன்னர்களாகத் திகழ்கிறார்கள். இவர்களிடம் படிக்கும் குழந்தைகள் உலகின் மற்ற பகுதிகளில் உள்ளவர்களைப் போலவே ஒற்றைத் தன்மையுடையவர்களாக வெளி வருகிறார்கள். இவர்களுக்கு அளிக்கப்படும் கல்வி ஒற்றைத்தன்மையாக இருப்பதே இதற்குக் காரணம். இவர்களது எதிர்காலம் எப்படியிருக்கப் போகிறது என்பது பெரிய கேள்விக்குறி. ஆனாலும் கடைசி நம்பிக்கை எஞ்சி இருக்கிறது.

ஆயிரக்கணக்கில் மங்கலாகினோம்

எம்மிடம் விதைகள் இருந்தன

காற்று மறுபடி கொண்டு சேர்த்த விதைகள்

பசி கொண்ட மலைகளை

மறுபடி அவை சேர்த்தன

பாறைகளின் வெடிப்பில்

அவை மறைந்து கொண்டன

முதல் மழை

இரண்டாம் மழை

மூன்றாம் மழை

மறுபடி அவை வளர்ந்தன

மறுபடியும் நாங்கள் ஒரு ஆரண்யம்.

ஆதாரம்: குளோபலைசேஷன் அண்ட் டிரைபல் எகானமி  பி.சி.ஜெயின் | டிரைபல் இஷ்யூஸ் இன் இந்தியா  டி.சி. ஷா, யதிந்த்ர சிங் சினோடியா | டிரைபல் ஐடென்டிட்டி, சுகந்த் கே. சௌத்ரி

Pin It