தொழிற்சாலைகளுக்கு எதிராக நடைபெறும் போரட்டங்கள் தேசம் முழுவதும் தொடர்ச்சியாக நடைபெறும் நிகழ்வாக மாறிவிட்டது. தொழிற்சாலைகள் தேசத்தின் வளர்ச் சிக்குத் தேவை என்றபோதிலும், அங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் சமூகத்தின் தேவைக்கு என்ற நோக்கத்தில் அல்லாமல் லாப நோக்கத்தில் உற்பத்தி செய்யப்படுவதால் அணைத்து சுற்று சுழல் சட்டங்களையும் மீறி அளவுக்கதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. அதனால் தொழிற்சாலைகளைச் சுற்றி உள்ள பகுதிகளை கடுமையாக மாசுபடுத்தப்படுகிறது. இந்த சுற்றுச்சூழல் மாசுபாடு இயற்கை வளங்களையும், மக்களுடைய சுகாதார வாழ்க்கையையும் கடுமையாக பாதிக்கிறது. ஆகவே மக்கள் தங்கள் வாழ்வாதாரமான இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், சுகாதாரமான வாழ்க்கைக்காகவும் தொழிற்சாலைகளுக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்து வருகின்றனர். இந்த பின்னணியில்தான் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் கிராமத்தில் அமைய இருக்கும் ராசி இரும்பு தொழிற்சாலைக்கு எதிரான போராட்டத்தை பார்க்க வேண்டி இருக்கிறது.

ராசி இரும்பு தொழிற்சாலைக்கு பெருங்குறிச்சி ஊராட்சி 07 ஆகஸ்ட் 2009 அன்று அனுமதி வழங்கியது. அதை தொடர்ந்து ஆலை நிர்வாகம் தமிழ்நாடு மாசுக் கட்டுபாட்டு வாரியத்திற்கு அனுமதி கேட்டு 19 ஆகஸ்ட் 2009 அன்று விண்ணப்பித்தது. பின்னர் 10 ஆகஸ்ட் 2009 அன்று சுற்றுச்சுழல் ஆணையத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்தது.

மறுபுறத்தில் மக்கள் ஆலைக்கு எதிராக திரண்டு தமிழ்நாடு மாசுகட்டுபாட்டு வாரியம் உட்பட ஒன்பது பேருக்கு 22 செப் 2009 அன்று மனு அளித்தனர். அதை தொடர்ந்து ராசி இரும்பு தொழிற்சாலைக்கு எதிராக பரமத்திவேலூர் நீதிமன்றத்தில் 28 அக் 2009 அன்று வழக்கு தொடுத்தனர்.

பொதுமக்களின் எதிர்ப்பின் காரணமாக கருத்துக் கேட்பு கூட்டம் 23 மார்ச் 2010 அன்று நடத்தப்பட்டது. இந்த கூடத்தில் பொதுமக்கள், விவசாயச் சங்கத்தினர், மனித உரிமைகள் கழகத்தினர் மற்றும் சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் என ஐநூறு பேர் கலந்துகொண்டனர். அதோடு ராசி தொழிற்சாலையின் பிரதிதிகளும் கலந்துகொண்டனர். ஆலை பிரதிநிதிகள் கூட்டத்தில் தொழிற்சாலையினால் விவசாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் எந்த விதமான பாதிப்பும் வராது என்று தெரிவித்தனர். அனால் கூடத்தில் பங்கெடுத்துகொண்ட பெரும்பாலனோர் இந்த கருத்தை மறுத்தனர். தொழிற்சாலையினால் சுற்றுச்சுழல் மாசுபடும், சுற்றியுள்ள கிராம மக்களின் சுகாதார வாழ்க்கைக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும், தொழிற்சாலை ஆரம்பித்தால் அதற்கு தண்ணீர் தேவையும் அதிகரிக்கும். இதனால் விவசாயத்திற்கு கிடைக்கும் தண்ணீர் குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்ட அதிக வாய்ப்பு இருக்கிறது, ஆகவே தொழிற்சாலை அமைக்கப்படக்கூடாது என்று வலியுறித்தினர். இந்த கூட்டத்தில் இரண்டு பேரைத் தவிர அனைவரும் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில் வந்த கருத்துக்களின் அடிப்படையில் ஆலை அமைக்க முடியாது என்று மாவட்ட ஆட்சி தலைவர் கீழ்க்கண்டவாறு கூட்ட அறிக்கையின் முடிவுரையில் குறிப்பிட்டு இருந்தார். “இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஏழை விவசாயிகளுக்கும், கிராம மக்களுக்கும் எதிரான ஒரு முடிவை எடுக்கும் நிலையில் நான் இல்லை. ஏற்கனவே விவசாயம் என்பது ஒரு லாபம் இல்லாத சிரமங்கள் மிகுந்த தொழிலாக மாறி விட்டது. அவர்கள் வேலைவாய்ப்பினைத் தேடி நகர மையங்களுக்கு செல்கிறார்கள். விவசாயிகளின் கருத்துக்களுக்கு எதிராக என்னுடைய அதிகாரம் பயன்படுத்தலாகாது. ஏழை கிராமத்தினரின் அமைதியான வாழ்க்கையை அழிக்கலாகாது. விவசாயிகளின் கருத்துக்களே முதன்மையானதாகவும் முக்கியமானதாகவும் ஆகும். இந்த தொழிற்சாலை நிறுவும் சில தனி நபர்களை விட, அதிக எண்ணிக்கையிலான விவசாயிகளின் கருத்துக்களே மேலோங்கி நிற்கிறது. எனவே சாதாரண விவசாயிகளின் மற்றும் கிராமத்தினரின் கோரிக்கைக்கிணங்க இந்த தொழிற்சாலைக்கு சுற்றுசுழல் அனுமதிக்கு மறுக்கப்படுகிறது”.

இவ்வாறாக கருத்துக்கேட்பு கூட்ட முடிவு ஆலை நிர்வாகத்திற்கு எதிராக முடிந்தது. அதை தொடர்ந்து பஞ்சாயத்திலும், கிராம சபை கூட்டத்திலும் ஆலைக்கு அனுமதி மறுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் நிர்வாகம் ஆலையை கட்ட ஆரம்பித்தது. அதை தொடர்ந்து பொதுமக்கள் சார்பாக மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு கொடுத்தனர். பின்னர் 20 டிசம்பர் 2010 அன்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆலை கட்டக் கூடாது என்று உத்தரவிட்டதை கடிதம் மூலமாக மக்களுக்கு தெரியப்படுத்தியது. அதை தொடர்ந்து ராசி இரும்பு தொழிற்சாலை நிர்வாகம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ஆலை கட்ட மாட்டோம் என்று ஜனவரி 2011ல் கடிதம் மூலமாக தெரிவித்தனர்.

ஆலை நிர்வாகத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான போராட்டம் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்த நிலையில், தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் அவர்கள் ஆலைக்கு அனுமதி அளிக்க கோரி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அனுப்பினார். அவருடைய செயல் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் 9 பிப்ரவரி 2011 அன்று ராசி தொழிற்சாலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. அந்த அனுமதி கடிதம் 11 பிப்ரவரி 2011 அன்று பத்திரிக்கையில் விளம்பரம் செய்யப்பட்டது.

ஆலை நிர்வாகம் பல பொய்யான தகவல்களை கொடுத்து அனுமதி பெற்றதாக மக்கள் கேள்வி எழுப்பினர். சாதாரண கிராமமக்கள் கூறும் கருத்தை ஏற்று கொள்ள முடியாது என்று சொல்லி ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டது போன்ற நடவடிக் கைகள் மக்களை கோபம் அடையச் செய்தது. இறுதியாக கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்தனர். இவ்வாறாக மாவட்ட ஆட்சித் தலைவரே அனுமதி வழங்க முடியாது என்று பதிவு செய்த பின்னர் ராசி இரும்பு தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கி இருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

Pin It