பசுமைப் புரட்சியின் கதை

பால்மாடுகள் இறக்குமதியால்  1975 க்குப் பின் புஞ்சை விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக நின்று விட்டது. புஞ்சை விவசாயம் நின்றதால் அந்த நிலங்கள் உழப்படாததால் மழைநீர் மேற்பரப்பை மட்டும் நனைத்துவிட்டு வழிந்தோடி விடுவதால் நிலத்தடி நீர்ச் சேமிப்பு  50 விழுக்காடு  வாய்ப்புகள் அனேகமாக 1975 முதல் இல்லாமலே போய் விட்டது. ஒரு தலைமுறைக்கும் அதிகமான காலம் ஆனதால் நிறைய கிராமங்களில் இப்போது தரிசாக இருக்கும் இந்த நிலங்கள் உலகம் தோன்றிய காலம் முதல் தரிசாக கிடப்பதாகத்தான் எண்ணுகிறார்கள். இராஜஸ்தான் விவசா யக்குழுவினர் புளியங்குடிக்கு வந்திருந்தபோது அவ்வூர் வழியாக கேரளத்திற்குச் சென்ற நூற்றுக்கணக்கான கால்நடைகளைப் பார்த்து நொந்து போயினர். விவசாய சேவா நிலைய செயலாளர் கோமதிநாயகத்திடம் கூறியது;

‘என்று இந்த கால்நடைகள் இப்படிப் போவது நிற்குமோ அன்றுதான் உங்கள் விவசாயத்திற்கு விடிவுகாலம் பிறக்கும்’. அவ்வடநாட்டு விவசாயிக்கு அந்த  ஒரு சாலை  வழியாகப் போன மாடுகளே இந்த அளவிற்கு மிகுந்த வருத்தத்தை அளித்ததால் அப்படி கூறினர். அவர் வருத்தப்பட்ட காலத்தில் நாகர்கோவில் திருவனந்தபுரம் சாலை, திருநெல்வேலி & மதுரை  புனலூர் சாலை, மதுரை  கூடலூர் சாலை, பொள்ளாட்சி  பாலக்காடு சாலை என்று வாராவாரம் நூற்றுக்கணக்கான மாடுகள் கேரளத்திற்கு அடிமாடுகளாக* சுமார் 100 அல்லது 150 கி.மீ. தூரம் நடந்தே, தீவனம் இல்லாமல், தண்ணீரை மட்டும் குடித்து கொண்டு போய்க் கொண்டிருந்தன. அபூர்வமாக சிலர் இரவு மட்டும் வைக்கோலைத் தீவனமாகக் கொடுத்தனர்.

*மறுகால்தலை ஐயனார் கோவில் தர்மகர்தா திரு. ஜான் பாண்டியன் அவர்கள் சொன்ன செய்திகள்; இன்றும்   அவர்கள் ஊரில்  2008 நூறு ஏர்களுக்கு குறையாமல் ஏர்களும் உழவு மாடுகளும் இருக்கிறதாம். ரூ.250 வரை ஒரு ஏருக்கு கூலி வாங்குகிறார்களாம். அந்த சுற்று வட்டாரத்திலேயே அவர்கள் ஊரில்தான் இந்த அளவுற்கு ஏர்கள் இருப்பதாகச் சொன்னார். அந்த ஊரில உள்ள மேச்சல் நிலங்கள் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அவர்கள் ஊரில் குத்துக்கல் குளம். சுமார் 30 ஏக்கர் , புதுக்குளம் சுமார் 100 க்கும் அதிகமாக இருக்கும். ஆனாலும் இந்த இரு குளங்களும் சேர்ந்து விவசாயம் நடப்பது சுமார் 30 ஏக்கர் நிலத்தில்தான். மீதி நிலமெல்லாம் சீமைக்கருவேல் நல்ல செழிப்பாக வளர்ந்து இருக்கிறது. மாடுகளின் தீவனப் பிரச்சினை மேச்சல் காட்டால்தான் சமாளிக்கப்படுகிறது. அடுத்து அவரது ஊரை விட ஒரு காலத்தில் அதிக அளவில் அவரது ஊரைச் சுற்றியுள்ள ஊர்களின் பட்டியலையும் கூறினார்.  சிங்கத்தாக்குறிச்சி, பூவாணி,        மணியாச்சி, ஒட்டநத்தம், பாறைக்குட்டம் முதலியன. சமீபத்தில் பாறைக்குட்டம் என்ற ஊருக்குப்போனதாகவும் 100 ஏர்களுக்கு மேல் இருந்த அந்த ஊரில் இன்று ஒரே ஒரு ஏர் மட்டும் இருப்பதை அவ்வூரார்கள் சொல்ல கேட்டபோது சங்கடமாக இருந்ததாகக் கூறினார். செல்வம் பொங்கும் பாறைக்குட்டம் என்று பாறைக்குட்டத்தை ஏன் சொல்லுகிறீர்கள் எனக் கேட்டதற்கு 75 க்கு முன் அந்த ஊர் அந்த அளவிற்கு செல்வச் செழிப்பாக இருந் ததாம். இன்று அப்படி இல்லை. ஒரு சம்சாரிக்கே உரிய ஆதங்கம்.

80 களில் வடஐரோப்பிய  சுவீடன் ?  நாட்டில் பால் உற்பத்தி அதிகரித்ததால், பாலின் விலையை கட்டுக்குள் வைக்க அந்நாடு சுமார் 2,50,000 பசுமாடுகளை கொன்றுவிடும்படி தன்மக்களைக்   கேட்டுக் கொண்டது.

காஞ்சி பெரிய பெரியவர் இத்தகவலை கல்கிப் பத்திரிகையில் வெளியிட்டு மிகவும் வருந்தி இக்கோமாதாக்களைக் காப்பாற்றும்படிக் கேட்டுக் கொண்டார். அவரது வேண்டுகோளை எத்தனைப் பேர்கள் கேட்டார்கள், எத்தனைக் கோமாதாக்கள் காப்பற்றப்பட்டன என்பது தெரியாது. ஆனால் ஐரோப்பாவில் இருந்து விமானம் மூலம் இந்தியா வந்த   ஒருகோமாதாவை நெருப்பு பூமியான சிவகாசியில்  ஒரு அன்பர் தமது      வீட்டில் குளிர்பதன அறையில் வைத்து வளர்த்தார். தன்னைக் காத்த அந்த நாட்டில் தன் இனத்தவர்கள் ஆயிரக்கணக்கில் நடந்தே சென்று படுகொலையாவது அந்த ஐரோப்பியக் கோமாதாவுக்கு தெரியவே தெரியாது.      

சிவகிரியை அடுத்துள்ள விஸ்வநாதபேரியில் இப்பால்மாடுகள் அறிமுகமான ஆரம்ப காலத்தில் சுமார் 4,000        லிட்டர் பால் உற்பத்தியானது. வடஐரோப்பியப் பிரச்சினை நம் நாட்டிலும் ஏற்பட்டு இருக்க வேண்டும். ஏன் ஏற்படவில்லை?. இப்பிரச்சனைக்கு எவ்வாறு தீர்வு கண்டார்கள்?. 2 அல்லது 3     வருடத்திற்கு ஒருமுறை மொத்தப் பால் பணத்தையும் பொறுப்பில் உள்ளவர்கள் சுருட்டிக் கொண்டு போய்விடுவதன் மூலம் மிகச் சுலபமாக இப்பிரச்சினையைப் பைசல் செய்தனர். அப்படியானால் சட்டம்?. கணக்கு ஒப்படைத்தால்தான் பணம் கொடுத்ததும் கொடுக்காததும் தெரியும். சட்டப்படி அவர் கணக்கைத்தான் ஒப்படைக்கவில்லை. கணக்கே பார்க்காதபோது பணப்பிரட்சனை எப்படி வரும். எனது நண்பர் மணி இத்துறையில் பணியாற்றும் போது சொன்னத் தகவல் ; குஜராத்தில் எனக்கு பயிற்சி கொடுத்தார்கள். அங்கு கூட்டுறவுத் துறை ஆய்வாளருக்கு ஜீப்பும் கைத்துப்பாக்கியும் கொடுத்துள்ளனர். கைது செய்யும் அதிகாரமும் உண்டு. ஒரு நாட்டிற்குள்ளாகவே இவ்வளவு வித்தியாசம் ஏனென்று புரியவில்லை. அங்கு இல்லாத அளவிற்கு இங்கு ஊழல் இருப்பதற்கு இவைகளும் காரணங்கள்.

பொலிச்சலுக்கு காளைகளுக்குப் பதிலாக செயற்கை முறையில் கரு ஊட்டம் நடந்தது. இதற்காக பரவலாக கால்நடை அலுவலகங்கள் தொடங்கப் பட்டது. ஆரம்பத்தில் ஒரு சில இடங்களில் சீமை மாடுகளும் பயன்படுத்தபட்டன. அரசின் இச்செயல்கள் மக்கள் நலன் செயல்களாகவே பார்க்கப்பட்டது. விவசாயத்தில் நடந்தது போன்ற மோசடியே இங்கும் நடத்தப்பட்டது. தற்போது செயற்கை முறையில் நடக்கும் கரு ஊட்டல்களால் கரு பிடிப்பதில் சிக்கல்கள் ஏற்படுகிறது. அதாவது பலமுறை முயற்சிக்க வேண்டியுள்ளது. இது எதேச்சையானதா அல்லது செயற்கை முறை கருவூட்டல்கள் மூலமாக மக்கள் இதை மட்டுமே நம்பி இருக்கவேண்டியதால்  உயிரற்ற கருவூட்டல்கள் மூலமாக  இனிசெயற்கை முறை கருவூட்டல்கள் பயனளிக்காது என்று சொல்லப்போகிறார்களா?. நெல்லில் தீவிர சாகுபடி காரணமாக நிலம் தனது சத்துகளை இழந்து விட்டதாக கதை சொன்னவர்களுக்கு இம்மாடுகளுக்கு கரு பிடிக்காததற்கு மட்டும் கதைகள் சொல்லத் தெரியாதா?. பாலின் அளவும் குறைகிறது.

நைனாரகம் மாட்டுச்சந்தை

பசுமைப் புரட்சியும் சுற்றுப்புறச் சூழல் சீர் கேடுகளும்.

நமக்கு அறிமுகப் படுத்தப்பட்டுள்ள இப்பூச்சி மருந்துகள் பொதுவாக இரண்டுவழிகளில் செயல்படுகின்றன. கரைசல்களாக இம்மருந்துகளைத் தெளிக்கும் போது பூச்சிகளின் நரம்பு மண்டலத்தை சீர்குலைப்பதன் மூலமாக அப்பூச்சிகளை அழிப்பது. அடுத்தவழி செடிகளின் எந்தவொரு பகுதியில் இப்பூச்சி மருந்து பட்டாலும் செடிமுழுவதும் பரவிவிடும். இச்செடிகளைச் சாப்பிடும் பூச்சிகளின் உடலில் இந்நஞ்சு கொஞ்சம் கொஞ்சமாக ஏறி பூச்சிகள் சாகும். இது பொதுவாக நடப்பது. இதற்கு மாறாகத்தான் நடந்தது. கூட்டுப்புழு பருவத்தில் இருக்கும் பூச்சிகள் இதிலிருந்து தப்பும்போது அதன் எதிர்ப்பு சக்தியும் அதிகமானது. இப்படியாகத்தான் வீரிய அதிவீரிய அதிஅதிவீரிய மருந்துகள் என்று பூச்சிக்கொல்லிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதைத் தெரிந்தேதான் செய்தார்கள். எ.கா. டி.பி. நோயாளி 120 நாட்கள் மருந்து சாப்பிட வேண்டும். அவர் பாதியில் மருந்து சாப்பிடுவதை நிறுத்தி விட்டால் சிறிது காலத்திற்குப் பிறகு மீண்டும் அந்நோய் வரும்போது பழைய மருந்துக்குப்பதில் சற்று வீரியம் கூடிய மருந்துதான் கொடுப்பார்கள். இது சாதாரண மனிதர்களான நமக்கே தெரியும் போது வேளாண் துறையினருக்கு தெரியாமலா இருக்கும்? தெரிந்தேதான் நமக்கு இவ்வீரியப் பூச்சிக் கொல்லிகள் அளிக்கப்பட்டன. இப்பூச்சிக் கொல்லிகள் அவர்கள் நாட்டில் தடை செய்யப்பட்டவையாகும். இத்தடை அதன் பின் விளைவுகளை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்டது. அந்த பின் விளைவுகள் நமது நாட்டில் நடந்த பின்னாலும் ஒரு சிலர் இத்தடைத் தகவலை சொன்ன பிறகும் இன்றும் இப்பூச்சிக் கொல்லிகள் தடை செய்யப்படவில்லை.

இப்பசுமைப் புரட்சிக்கு முன்னால் நம்நாட்டு விவசாயத்தைப் பூச்சிகள் தாக்கவில்லையா? தாக்கியது. 1980 களுக்குப்பின் சொல்கிறார்களே பொருளாதாரச் சேதம், இதற்கு உள்பட்டும் அதை மீறியும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. தங்களது மரபுவழி முறைகளால் இச்சேதாரங்களைத் தவிர்த்துள்ளனர். அம் மரபு முறைகள் வருமாறு;

1 நசுவினி பூச்சிகள். மிளகாய்ச் செடி. கத்திரி அவரை முதலியசெடிவகைப் பயிர்களிலும், நெற் பயிரில் பொதிப் பட்டத்திற்குப்பின் இப்பூச்சிகளால் அழிமானம் ஏற்படும். இதற்கு அதிகாலையில்  பனியிருந்தால் நல்லது  சுள்ளைச்சாம்பல் அல்லது வாழைமட்டை எரித்த சாம்பல் இதை பாதித்த பயிர்கள் மீது தூவுவார்கள்.

2 வேர்ப்புழுக்களுக்கு வேம்பு, எருக்கலை இவைகளின் குளைகளை வயலில் போடுவதன் மூலம்  வரும்முன் காத்தல்  வேர்புழுக்களைத் தவிர்த்துள்ளனர். மண் புழுக்களின் கழிவுகள் உள்ள இடத்தில் மண்புழுக்கள் வாழுமிடங்களில்  வேர்ப்புழுக்கள் இருப்பதில்லை என்கிறார்கள்.

3 ஆமணக்கு குரங்கு தட்டான்பயறு அகத்தி உழுந்து முதலிய ஊடுபயிர்களோ அல்லது சுற்றுக் கால் பயிர்களால் பூச்சிகளை கவர்வதன் மூலம் பயிரைத்தாக்கும் பூச்சிகளை தவிர்த் துள்ளனர்.

4 புஞ்சக்குரங்கு அல்லது கதிர்நாவாய் பூச்சி. கதிர் வெளிவரும்போது பால்பிடிக்கும் காலத்தில் தாக்கும் பூச்சி. மேற்கு தொடர்ச்சி மலையில் விளையும் சன்னம்பூவை சிறுவில்லைகளாக வெட்டி நனைந்த வைக்கோலில் சுற்றி கம்புகளில்கட்டி நெல்வயலில் பரவலாக நட்டு வைப்பார்கள்.

5 இவை எல்லாவற்றையும்விட வரும் முன் காத்தலே மிகப்பெரிய வழியாகக் கடைப்பிடித்துள்ளனர். உறக்க நிலையிலும் அரைகுறை நிலையிலும் இப்பூச்சிகளை அழிப்பதற்காக அவ்வப்போது இதை மழையே தீர்மானித்துள்ளது  நிலத்தை உழுவதன் மூலமாக செயல்படுத்தியுள்ளனர். இப் படி உழுகையில் காகங்களும் மைனா முதலிய பறவைகளும் வந்து இப்புழு அழிப்பை முழுமைப்படுத்தும். ஒன்றிரண்டு மண்புழுக்களும் இதில் அழியலாம்.

6 ஆட்டுக்கிடை அமர்த்துவதால் நிலத்திற்கு நோய் எதிர்ப்பு ஏற்படுகிறது என்று கேட்டிருக்கிறேன். குறிப்பாக வேர்பூச்சிகள் கட்டுப்படும்.

80 களில்தான் வேளாண்துறையினர் நன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகள் என இருவகைப்பூச்சிகளைக் குறித்து பேசினர். அப்போதும் கூட தீமை செய்யும் பூச்சிகளை அழிக்க ஐரோப்பியர்கள் சில பூச்சிகள் மூலம் கட்டுப்படுத்தும் முறையைப் பற்றி எதுவும் பேசவில்லை. பஞ்சாயத்து அலுவலகங்களில் இப்பூச்சி களின் படங்களை எல்லா சுவர்களிலும் வரைந்து வைத்தனர். இப்படி வரைந்து விட்டால் பூச்சித்தொல்லை தீர்ந்து விடும் என்று அவர்கள் நினைத்து விட்டார்களோ என்னவோ?. இந்த காலகட்டத்தில்தான் பொருளாதார சேதம் என புதிய சொல்லாடல்களை உபயோகித்தனர். பூச்சிகள் கட்டாயம் இருக்கும் அவை அளவுக்கு அதிகமானால்தான் பூச்சிக்கொல்லிகளை உபயோகிக்க வேண்டும். பொதுவாக இந்திய வானொலியின் பண்ணைச் செய்திகள் அல்லது வட்டாரச்செய்திகள் என ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பற்றிய அறிவுரைகள் வெளியாகும். எ. கா. ... வட்டார விவசாயிகளே இப்போது நீங்கள் .... பயிரிட்டிருக்கிறீர்கள். அதற்கு இத்தனாவது நாள் இந்த உரங்களையும் இத்தனா வது நாள் இந்த உரங்களையும் போடுங்கள் என்றோ, நீங்கள் .... பயிரிட்டுள்ளீர்கள் அதற்கு இந்த வகையான நோய்த் தாக்குதல் ஏற்பட்டிருந்தால் ... என்ற பூச்சிக்கொல்லியை வாங்கி ஒரு ஏக்கருக்கு .... மில்லி யை .... இவ்வளவு தண்ணீரில் கலந்து அடிக்கவும், என்றுதான் அவர்களின் வழிகாட்டுதல்கள் இருந்தது. இதனாலேயே இன்றும் சிலவிவசாயிகள் தங்களை இவ்வானொலி நிலையங்கள்தான் கெடுத்தது என்று குற்றம் சுமத்துகின்றனர்.

80களில் இவ்வேளாண் பல்கலைகழகத்தில்  பூச்சியியல் நிபுணராக பணியாற்றிய திரு. ஜெயபால் ஒரு கூட்டத்தில் பேசும்போது தான் தற்போது திராட்சைப் பழங்கள் சாப்பிடுவதில்லை என்றும் அதற்கு காரணம் அப்பழங்களுக்கு விவசாயிகள் காய் பருவத்திலும் நிறைய பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துகிறார்கள் என்றார். இச்செய்தியை அவர் வெட்க உணர்வுடன் சொல்லவில்லை, நகைச்சுவை உணர்வுடன் கூறினார். பூச்சியியல் நிபுணருக்கு நகைச்சுவை உணர்வு இருந்த அளவிற்கு தார்மீக உணர்வு... ஒட்டு மொத்த வேளாண் அமைப்பிலும் இந்த நிலைதான் இன்று வரையும் நிலவுகிறது.

*திராட்சைக் குலைகளில் உள்ள பூஞ்சைகளை அழிப்பதற்காக சம்சாரிகள் பூச்சிக்கொல்லிக் கரைசலில் அக்குலைகளை கொஞ்சம் நேரம் முக்கி வைத்திருப்பார்கள். இதை நேரில் அவர் கண்டதால்தான் அவர் இவ்வாறு சொன்னார். அவருக்கு அவ்விவசாயிகளின் அப்பிரச்னைக்கு உதவ வேண்டும் என்று எண்ணமில்லை. இதை நகைச்சுவை ஆக்கும் எண்ணத்திற்கு பதில் வேறு தீர்வே இல்லை என்றால் திராட்சையை கைவிடும்படி இச்சமூகத்திடம் சொல்வதுதானே நேர்மை யானதும், இச்சமூகத்தின் உடல் நலனுக்கும் நல்லது. ஆனால்      அவர் ஓய்வு பெற்று செல்லும் வரையிலும் பூச்சியியல் நிபுணரான  அவரிடமிருந்து இச்சமூகத்திற்கு நூற்றுக் கணக்கான விவசாயிகள், இதைச் சாப்பிடும் லட்சக் கணக்கான மக்கள் அவரது குடும்பத் தாரையும், உள்ளடக்கிய மக்கள்  ஒரு தீர்வு கிடைக்கவில்லை. 80கள் காலகட்டத்தில் அல்லது அக்காலகட்டம் வரையிலும் பொதுவான ஒரு எண்ணம் இருந்தது, அது; பயிர்களில் நாம் தெளிக்கும் பூச்சிக்கொல்லிகளின் நஞ்சுகள் 45 நாட்களில் அப்பயிர்களால் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றப்படும் என்பதே.      சமீபத்திய ஆய்வுகள் வரை நமக்குச் சொல்வது என்னவென்றால் முழுநச்சும் அப்பயிரிலிருந்து முற்றிலும் வெளியேறாது. எவ்வளவு நாட்கள் ஆனாலும் அதன் ஒரு பகுதி அப்பயிரிலும் அதன் விளைச்சலிலும் கட்டாயம் இருக்கும் என்பது மட்டுமல்ல அது சங்கிலித்தொடராக எல்லா ஜீவராசிகளையும் சென்றடையும் என்    பதால்தான் விவசாயம் என்றால் என்னவென்றே அறியாத எஸ்கிமோக்கள் உடலில் டீ.டி.டி பொருள்கள் இருப்பது இதை உறுதிப் படுத்துகிறது.

இந்த காலகட்டத்தில் வேப்பெண்ணையை பூச்சிக் கொல்லிக்குப் பயன் படுத்தும்படி சிபாரி சுகள் செய்யப்பட்டன.

வேளாண் துறையினர் வழக்கமாக அடிக்கும் பூச்சிக்கொல்லிகளுடன் வேப்பெண்ணையையும் கலந்து அடிக்கும்படி சிபாரிசுகள் செய்தனர். வேப்பெண்ணையைக் கரைப்பதற்காக காதி சோப்பில் கரைத்து அடிக்கும்படியும் சிபாரிசு செய்தனர். இதில் பயன்படுத்தப்பட்ட வேப்பெண்ணை ஒட்டு மொத்தமாக செடிகளில் பட்டுவழுக்கி கீழே சிந்தியது. இதனால் எந்த பலனும் விளையவில்லை. மிகவும் சாமர்த்தியமாக வேப்பெண்ணையை ஓரம் கட்டிய இந்த காலகட்டத் தில்தான் ஐரோப்பியர்கள் தமிழ்தாட்டில் 100 டன் வேப்பெண்ணயிலிருந்து கசப்புப் பொருளைமட்டும் பிரித்தெடுத்து தங்கள் நாட்டிற்குக் கொண்டு சென்று தங்கள் நாட்டு பூச்சிக்கொல்லிப் பிரச்னைகளை தீர்த்துக்கொண்டார்கள். இன்று வரையும் இதுதான் நடைபொறுகிறது. நம்மூர் வேப்பெண்ணையை அவர்களுக்கு பயன் படுத்தத் தெரிந்திருந்தது. நமக்கு ஏன் இதைப் பயன்படுத்தத் தெரியவில்லை?. நமக்குப் பயன்படுத்தத்தெரிந்தால் இப்பூச்சிக்கொல்லிகளை வாங்கி அந்நிறுவனங்களை வாழவைப்பது யார் என்ற கேள்விக்கு வேளாண் துறையினர் அல்லவா பதில் சொல்ல வேண்டும்.

இவ்வேளாண் துறையினர் ஊத்தி மூடிய அடுத்தத் திட்டம் விளக்குப் பொறி. உண்மையிலேயே இது ஒரு சிறந்தவழி தான். இதற்குச் செலவும் குறைவு. சுற்றுச் சூழலும் எந்தப் பாதிப்பும் அடையாது. கிராமத்தினருக்கு முறையான பயிற்சியும் அக்கிராமத்தினரை ஒருங்கிணைத்து இதைச் செய்தால் மட்டுமே இதை சிறப்பாக செய்ய முடியும் என்பதை நன்குணர்ந்த இத்துறையினர் ஏனோதானோ என்று இதைச் சொல்லி யாருமே இதை வாங்கவும் பயன்படுத்தவும் யாரு மே முன்வரவில்லை என்றுதான் இதை ஊத்தி மூடினார்கள்.

சங்கரன்கோவிலை அடுத்த பாறைப்பட்டி கிராமத்து விவசாயி கணேசன் இவ்விளக்குப் பொறி வாங்கி உபயோகித்தார். மாலையில் ஆரம்பித்து இரவு 11 மணி வரை இவ்விளக்குப் பொறியைப் பயன்படுத்த வேண்டும். இதனால் கவரப்படும் ஆண் பூச்சிகள் இதில் சிக்கி இறந்து விடும். இனச்சேர்க்கைக்கு வழி இல்லாததால்   பூச்சிகள் அடுத்த தலைமுறையை உருவாக்க முடியாதல் அழிந்துவிடும். இம்முறையின் சிறப்பு இதனால் பூச்சிகள் வீரியம் அடையும் தன்மை இல்லாமை.

Pin It