விஞ்ஞானம் எனும்
பெயரின் பின்னே சுருண்டு
ஒளிந்திருக்கிறது
பச்சோந்தியின் நாக்கு

எங்கள் கனவுகளை காலம்தோரும்
கொன்றவர்களின் பட்டியலில்
சோற்றுக்காக அல்ல சுகத்திற்காக
சோரம்போன உங்கள் பெயர்கள்
இரத்தம் நிரப்பப்பட்ட
ஊதிய பையாய் நிரம்பி வழிகிறது

உங்கள் கனவுகள் எங்கள் விந்துக்களை
தின்பதில்தான்
உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறது எனும்
உண்மையில்

"பசிக்கும்போதெல்லாம் ஓர் ஆடு கேட்ட
சிங்கத்தின் தோல் போர்த்திய அந்த
நரியைப்
பற்றியக் கதைகள் " தற்கொலை செய்து
கொள்கின்றன

உலகம் தன் அகராதியில்
விஞ்ஞானம் என்பதை வியாபாரம் என்றும்
விஞ்ஞானிகள் என்பவர்களை
வியாபாரிகள் என்றும்
விபச்சாரர்கள் என்றும்கூட

உளுத்துப்போன தன்பக்கங்களில்
மறுபடியும் பதிந்து கொள்கிறது.

ஆனாலும் ஒருநாள்
எம் மக்கள்கூண்டில் உங்களுக்கான
ஞாயத்தீர்ப்பு ஒரு பனிக்கட்டி கத்தியின்
கூரிய முனையைப்போன்று
காத்துக்கொண்டிருக்கிறது

Pin It