தமிழக முதல்வருக்கு பூவுலகின் நண்பர்களின் பகிரங்க கடிதம்

பெரும் மதிப்புக்கும் மரி யாதைக்கும் உரிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு எங்களின் பசுமை வணக் கங்கள்.

உங்களது மகத்தான ஆட்சி யில் சுற்றுச்சூழலை காக்கும் பொருட்டு நீங்கள் நிறைவேற்றி வருகின்ற பல்வேறு வகையான பசுமைத் திட்டங்கள் உதாரணமாக சூரிய சக்தி மூலம் வீடு, ஞெகிழி (பிளாஸ்டிக்) ஒழிப்பு இயக்கம் போன்ற முயற்சிகளுக்கு ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. உங்களுடைய இத்தகைய முயற்சிக்கு எங்களுடைய அத்தனை ஒத்துழைப்பையும் நல்கத் தயாராக இருக்கிறோம்.

அம்மா இன்று (16/09/11) உங்களின் கூடங்குளம் குறித்த அறிக்கையை படித்துப் பார்த்தோம். அதிலுள்ள மேலும் பல விஷயங்களை உங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம். நீங்கள் குறிப்பிட்டதைப் போல இதுவரை இந்தியாவில் 20 அணு உலைகள் மூலம் கடந்த (ஏறத்தாழ) 60 ஆண்டுகளில் 4780 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நம் நாட்டின் 2.7 சதவீதத் தேவையைத்தான் இது நிறைவு செய்கிறது. இதில் நாங்கள், தங்களுடைய மேலான கவனத்திற்கு கொண்டு வருவது என்னவெனில் தமிழ்நாட்டில் மட்டுமுள்ள குண்டு பல்புகளை மாற்றினாலே நம்மால் 2000 மெகாவாட் மின்சாரத்தை மிச்சப்படுத்த முடியும். இதனை மழைநீர் சேகரிப்புத் திட்டம் போல அதிரடியாக நிறைவேற்றுவதும் சாத்தியமே. இத்திட்டத்தையே இந்தியா முழுவதும் அமல்படுத்தினால் எவ்வளவு மின்சாரத்தை மிச்சப்படுத்த முடியும் என்பதை தங்களால் உணர முடியும். உங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி உலகம் முழுவதும் அணு உலைகளை பயன்படுத்தி 3 லட்சத்து 78 ஆயிரத்து 910 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளீர்கள். அதே நேரத்தில் 3 லட்சத்து 81 ஆயிரம் (2008ன் கணக்குப்படி) மெகாவாட் மின்சாரம் மரபுசாரா எரிசக்தியிலிருந்து பெறப் படுகிறது என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம்.

மேலும் இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே 2 அணு உலைகள் மத்திய அரசால் செயல்படும் அளவில் அமைக்கப்படுகின்றன. மற்ற மாநிலங்களில் புதிய அணுசக்தி திட்டங்கள் அறிவிப்பு அளவில் மட்டுமே உள்ளன. நீங்கள் அளித்துள்ள அறிக்கை யின்படி கூடங்குளத்தில் உருவாகி வரும் 2 அணு உலைகளிலிருந்து 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். ஆனால் அதில் தமிழகத் திற்கு 925 மெகாவாட் மின்சாரம் மட்டுமே வழங் கப் படும். மீதமுள்ள மின்சாரம், நமக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா, கேரளா உட்பட பிற மாநிலங்களுக்கே வழங்கப்படுகிறது. தங்களது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி இப்போராட்டம் சிலர் மட்டுமே கலந்து கொண்ட போராட்டமல்ல. மீனவர்கள் பொதுமக்கள், சூழல் மற்றும் சமூக ஆர்வலர்கள், அறிஞர் பெருமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டுள்ளார்கள், மேலும் நிலநடுக்கம் குறித்து நாங்கள் சில விவரங்களைத் தர விரும்புகிறோம். 2003 பிப்ரவதி 9ஆம் தேதி பாளையங்கோட்டையிலும், 2006 ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி கூடங்குளத்தை சுற்றியுள்ள அஞ்சுகிராமம், சாமித்தோப்பு, அழகப்பபுரம் போன்ற பல்வேறு கிராமங்களிலும் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் 7 மாவட்டங்களிலும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறியாதவர் அல்ல.

மேலும் பல்வேறு தரப்பட்ட சூழல் சீர்கேட்டால் அமெரிக்க நிலநடுக்கப் பதிவு நிறுவனம் (USGS  United States Geometrical Survey) உலகெங்கும் நிலநடுக்கப் பாதிப்பு அளவு அதி கரித்து வருவதாகத் தெரிவிக்கிறது. சமீபத்தில் ரஷ்ய அரசு தனக்கு கட்டுப்பட்ட அமைப்பின் மூலம் ரஷ்ய அணு உலைகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தியது. இதில் எந்த அணு உலையும் பாதுகாப்பானது அல்ல என்று அந்த அமைப்பு அறிக்கை அளித்துள்ளது. தங்களது நாட்டில் பாதுகாப்பான அணு உலைகளை அமைக்க முடியாத ரஷ்ய அரசுதான் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு தொழில் நுட்பத்தை வழங்குகிறது. மேலும் 2007 ஆம் ஆண்டில் தாங்கள் பொதுமக்கள் நலன் கருதி ஒரு அறிக்கை வெளியிட்டீர்கள் அதனை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறோம். 2007 ஆம் ஆண்டு ஜுலை 1ல் நிமிட்ஸ் என்ற அமெரிக்க அணுசக்தி கப்பல் சென்னை துறைமுகத்தை அடைந்தபோது நீங்கள் சென்னை முழுவதும் கதிர்வீச்சு ஏற்படும் அபாயத்தை வெட்ட வெளிச்சமாக்கியிருந்தீர்கள்.

உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும், ஜப்பான் எப்போதுமே இயற்கை பேரிடர்கள் சூழ்ந்த நாடு. அந்நாட்டினுடைய பேரிடர் மேலாண்மை நம் நாட்டை விட பல மடங்கு மேம்பட்டது. ஆனால், அவர்களாலேயே புகுஷிமா விபத்தை தவிர்க்க முடியவில்லை. சுமார் 5 லட்சம் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அணு உலை வெடிப்புக் குள்ளான அப்பகுதியில் இனி எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு உயிரினங்கள் வசிக்கும் அளவுக்கு மாற்றம் அடையும் என்பதை யாராலும் கூற முடியாது. போபாலில் 26 வருடங்களுக்கு முன்னாள் நிகழ்ந்த கோர விபத்துக்கு நம்முடைய மத்திய அரசால் நிவாரணம் இன்னும் வழங்க இயலவில்லை. அப்படியிருக்கும் நிலையில் நாம் எவ்வாறு மத்திய அரசை நம்முடைய பேரிடர் மேலாண்மைக்காக நம்புவது? இந்திய அணு உலைகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பல்வேறு நடவடிக்கைகளை நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். அதில், சுனாமியிலிருந்து அணு உலையை பாது காக்கும் பொருட்டு 7.5 மீட்டர் அளவில் கூடங்குள அணு உலைகள் அமைககப்பட்டிருப்பதாக தெரிவித் துள்ளீர்கள். சமீபத்தில் ஜப்பானைத் தாக்கிய சுனாமி சுமார் 30 முதல் 40 மீட்டர் அளவு இருந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நாம் எவ்வளவு தான் தயாராக இருந்தாலும் இயற்கையை நம்மால் அனுமானிக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

உலகில் நிலநடுக்கம் வருவதற்கு வாய்ப்பில்லாத பகுதி என்று இதுவரை எந்த பகுதியும் கண்டறியப் படவில்லை. நிலநடுக்கம் மிக அதிகமாக வரு வதற்கு வாய்ப்புள்ள பகுதிகள் இதுவரை இனம் கண்டறியப் பட்டுள்ளன. ஆனால் இதுவும் நிரந்தரமானதல்ல. நிலநடுக்கத்திற்கான வாய்ப்புகள் அதிகரிப்பதற்கான சூழல்கள் அதிகரித்துவருகின்றதே தவிர, நிலநடுக்கம் வருவதற்கு வாய்ப்புள்ள சூழல்கள் அதிகரிப்பதாக இதுவரை தகவல் இல்லை.

இந்திய அணுசக்தித் துறையும், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையமும், மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் அணுஉலைகள் அமைவதை தவிர்க்கவேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஆனால் தமிழ்நாட்டில் மக்கள் தொகை அதிகம் இருக்கும் கூடங்குளம், கல்பாக்கம் போன்ற பகுதிகளிலேயே அணு உலைகள் அமைக்கப்படுகின்றன. கூடங் குளத்தின் சுற்று வட்டாரத்தில் சுமார் 20 முதல் 30 கிலோ மீட்டர் தூரத்தில் மூன்றரை லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். கூடங்குளத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அது இந்த மூன்றரை லட்சம் மக்களையும் மிகத்தீவிரமாக பாதிக்கும்.

இதையெல்லாவற்றையும் விட உலகத்தில் எந்த நாட்டிலும் அணுக்கழிவுகளை கையாள்வதற்கான சரியான தொழில்நுட்பம் கிடையாது. அனைத்து அணுக்கழிவுகளும் கடலிலோ அல்லது பூமிக் கடியிலோ கொட்டப்பட்டு அதிக பொருட் செலவில் பாதுகாக்கப்பட வேண்டும். சில அணுக் கழிவுக்களின் அரை வாழ்வுக் காலம் 24 ஆயிரம் ஆண்டுகள் முதல் பல லட்சம் ஆண்டுகள் வரை இருக்கும் அதாவது அந்த அணுக் கழிவுகளின் கதிர்வீச்சுத் தன்மை பாதியாகக் குறைவதற்கு அத்தனை வருடங்கள் ஆகும். அத்தனை வருட காலங்களுக்கும் நாம் இந்த கழிவுகளைக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும். நம்முடைய வருங்காலத் தலைமுறைகளுக்கு நாம் இதைத்தான் விட்டுச் செல்ல வேண்டுமா? அணுசக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது என்பது ‘ஈயைச் சுடுவதற்கு பீரங்கி’யைப் பயன்படுத்துவது போன்றது. நமது நாடு 8 முதல் 10 சதவீத வளர்ச்சியை மேற் கொண்டால் நமக்கு 2030ல் 6 லட்சம் முதல் 8 லட்சம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் அதில் அணுசக்திக் கழகத்தின் அறிக்கையின்படி 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் அதாவது தேவையில் 10 சதவீதம் மட்டுமே அணு உலையிலிருந்து பெறப்போகிறோம். இதற்குப் பதிலாக நமது நாட்டில் மின் கடத்துதல் மற்றும் பகிர்மானம் செய்யும்போது சுமார் 17 முதல் 27 சதவீதம் இழப்பு ஏற்படுவதாக உலக அறிக்கை தெரிவிக்கிறது. இந்த இழப்பை நாம் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குறைத்தாலே நமக்கு அணுசக்தி மூலம் தேவைப்படும் மின்சாரத்தை குறைத்துவிட முடியும்.

       இதைத் தவிர காற்றாலை, (ரீ பவரிங்), கடல் அலை, சூரியசக்தி, பயோமாஸ் போன்றவற்றைப் பயன்படுத்தியும் தமிழகத்தில் 1000 கீலோ மீட்டர் உள்ள கடற்கரையைப் பயன்படுத்தி காற்றாலைகள் அமைத்தும் கடல் அலைகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும் நாம் நம்முடைய மின்சாரத் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும். இது போன்ற திட்டங்களை நீங்கள் அறிமுகப்படுத்தி மற்ற மாநிலங்களுக்கும் நாடுகளுக்கும் முன்னுதாரணமாகத் திகழ்வீர்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே இவற்றை கவனப்படுத்தியுள்ளோம். நீங்கள் குறிப்பிட்டதுபோல மக்களுக்காகத்தான் திட்டங்களே ஒழிய, திட்டங்களுக்காக மக்கள் அல்ல, எனவே மேற்குவங்க மாநிலத்தின் முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி ஹரிப்பூர் என்ற இடத்தில் அணு உலை அமைக்க மேற்கொண்ட முயற்சிகளை அனுமதிக்க மாட்டோம் என நிலைப்பாடு எடுத்துள்ளதை இங்கே குறிப்பிடுகிறோம். மத்திய அரசாங்கத்தின் இந்த ஏகாதிபத்தியச் செயலை நீங்கள் உணர்வீர்கள் என்றும் இந்த சாமானிய மக்களின் போராட்ட உணர்வுகளை மதித்தும் கூடங்குளத்தில் கடந்த 7 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் 127 மக்களுக்காகவும் நீங்கள் அணு உலைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பீர்கள் என்றும் உறுதியாக நம்புகிறோம்.

உங்களின் பசுமைப் பயணம் தொடர வாழ்த்துகிறோம்.

இப்படிக்கு

பூவுலகின் நண்பர்கள்

Pin It