பசுமைப் புரட்சியின் கதை

குச்சிக்கிழங்கு பயிரிட்ட சேலம் நாமக்கல் பகுதிகளில் இப்போர்களால், போர்போட முடியாத விவசாயிகள் பக்கத்து புஞ்சைக்காரர்கள் தங்கள் நிலங்களை விற்க வேண்டிய புதிய நிலைகளும் ஏற்பட்டது. இந்த மாதிரியான செயல்கள் உச்சக் கட்டத்தை அடைந்த போது அரசு சொட்டு நீர் பாசன முறையை அறிமுகப்படுத்தியது. சொட்டு நீர் பாசனம் குறித்த சரியான செயல் விளக்கங்கள் நடத்தப்படாததால் புளியங்குடி போன்ற விழிப் பான விவசாயப்பகுதிகளிலும் இச்சொட்டு நீர் முறை நமக்குச் சரிப்பட்டு வராது என்று எல்லாவற்றையும் கழட்டி வீட்டில் வைத்த விவசாயிளும் உண்டு.

பலன்?. வங்கிக் கடன் மேலும் உயர்ந்ததுதான் கண்ட பலன். போதிய செயல் விளக்கங்கள் இல்லாமையும் லஞ்சம் காரணமாகவும் இதன் செலவுகள் அதிகமாக இருந்ததுமே இத்திட்ட தோல்விக்குக் காரணம். இந்த காலகட்டத்தில் பிளாஸ்டிக் ஓஸ்கள் மூலமாக தண்ணீர் பாய்ச்சல்கள் நடந்தது. பாண்டிச்சேரிக்கும் தமிழ் நாட்டுக்கும் உள்ள விலை வித்தியாசம் மிகவும் அதிகம். இவ்வோஸ்களை அரசு விவசாயிகளுக்கு மானியவிலையில் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு இம்முதலீடு பெரும் சுமையாக இருந்த போதும் தர முன்வரவில்லை. இவ்விலை உயர்வு பாதி சமுசாரிகளுக்கு பெரிய தண்டனையாகவே இருந்தது. இதன் உழைப்புக் காலமும் மிகவும் குறைவு.

70 களில் இருந்து 90 வரையிலான ஒரு 20, 25 வருட காலத்தில் தமிழகத்தில் கிணறுகளின் பெருக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. சுமார் 3 அல்லது 4 மடங்கு அளவில் இருந்தது. இதில் பாதிக்கும் மேலான கிணறுகளுக்கு மின் வசதிகளும் கிடைத்தது. நிலத்தடி நீரை வாரி யிறைத்ததில் இக்கிணறுகளுக்கும் முக்கியப் பங்கு உண்டு. புஞ்சைவிவசா யமாக இருந்த இந்த நிலங்களில் பணப்பயிர்கள் குறிப்பாக கரும்பு முக்கிய இடத்தைப் பிடித்து. மலையடிவாரமாக இருந்தபல இடங்கள் இதற்கு முன்பு பெரும்பாலும் தோப்புகளாகவும் இருந்தது. பாசன வசதி கிடைத்தபின் இதேத்தோப்புகள் அழிக்கப்பட்டு பணப்பயிர்கள் விளைவிக்கப்பட்டன.

தமிழ்நாட்டில் மழையும் குறைவு, ஆற்றுப்பிரச் னையும் இருக்கிறது. அதாவது ஒட்டு மொத்த நீர் வளம் மிகவும் குறைவு என்பதை அரசும் அதன் அமைப்புகளும் அனேகமாக மக்கள் மனதில் நன்றாகப் பதிய வைத்து விட்டன. ஒருகாலத்தில், இதே விவசாயிகளிடம் உங்களின் பெரிய பிரச்னை தண்ணீர் பிரச்னை தானே என கேட்டபோது, தண்ணீர் பிரச்னை மூன்றாவது நாலாவது இடத்தில் இருக்கிறது, முதல் பிரச்னை அரசுதான் என்று பதிலளித்துள்ளனர்.

பாளை வானவில் தன்னார்வ தொண்டு நிறுவனம் வெளியிட இருக்கும் புத்தகம்

நிலத்தடி நீர், மண் அரிப்பு குறித்து ஒரு பத்து வருட காலமாக டேனிடா என்ற அமைப்பு அடித்த கூத்தையும் அறிந்து கொள்வது அரசின் செயல்பாடுகள் குறித்து ஒரு சரியான பார்வை கிடைக்க வழிக்கும். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் புஞ்சைக் காடுகளில் வடகிழக்கு தென்மேற்குக்காக சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு 10 மீட்டர் அகலத்திற்கு மரங்கள், குத்துச்செடிகள் முதலியவைகளை நட்டு அதற்கு நீராதாரமாக அடிபம்புகளும் அமைத்து மேற் பார்வைக்கு ஆட்களையும் நியமித்து வளர்த்தார்கள். இதன் நோக்கம் இது ஒரு காற்றுத்தடுப்பு அரண் போன்றும் மேல் மண்ணைப் பாதுகாக்கும் அமைப் பாகவும் செயல் படும் என்று சொல்லப்பட்டது. பல பகுதிகளில் இது வரிசை வரிசையாக அணிவகுத்து நின்றது அப்பகுதி மக்களிடம் நம்பிகையை ஊட்டும் ஒன்றாக இருந்தது. குறிப்பிட்ட கால அளவு முடிந்தபின்னால் அதை அந்தந்த நில விவசாயிகள் பொறுப்பெடுத்துக் கொள்ளவேண்டும் என்பது திட்டம். இதற்கு டேனிடா திட்டம் என்று பெயரும் சூட்டினார்கள். சுமார் ரூ.100 கோடியை ஒரு ஐரோப்பிய அரசு வழங்கியதாகச் சொல்லப்பட்டது.

இத்திட்டத்தின் படி இராதாபுரம் வட்டம் கோலியன் குளம் கிராமத்தில் உருவான இக்காற்றரண் களை இத்திட்டம் காலாவதி ஆன உடன் அதில் பணியாற்றியவர்களே முற்றிலுமாக வெட்டி விற்றுவிட்டனர். நிலச் சொந்தக்காரர்களால் அவர் களை ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்நிகழ்வுக்குப்பின் இது செயல்பட்ட எல்லா இடங்களிலும் இக்காற்றண்கள் எல்லாம் இப்படித்தான் காணாமல் போய்விட்டது என்று தெரியவந்தது.

பசுமைப் புரட்சிக்கு முன்னோடியாக வந்த சில பயங்கரவாதிகள்

சுற்றுச் சூழலை மாற்றுவதற்கென்றே வெள்ளையர்கள் முதலில் அறிமுகப்படுத்தியது யூகலிப்டஸ் என்ற தைலமரம். ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டு வந்து பயிரிட்டனர். நீலகிரி மலைப்பகுதியில் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கினபோது மலைப்பகுதிகளில் பலஇடங்கள் சொதசொதப்பாக இருந்தன. அச்சொத சொதப்பை நீக்குவதற்கு நீரை வெளியேற்ற 1800களில் இத்தைல மரங்களை ஆஸ்திரேலியாவிலிருந்து தருவித்து வளர்த்து அப்பகுதிகளைத் தேயிலைத் தோட்டங்களாக மாற்றினர். மலைப்பகுதிளில் மட்டுமே இருந்த இத்தைலமரங்களை சமவெளிப் பகுதிக்கு கொண்டு வந்தது பசுமைப் புரட்சியை ஒட்டியே. மிகக்குறுகிய காலத்திற்குள் புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, தேவகோட்டை முதலிய பகுதிகளில் இவை வனத்துறையின் உதவியால் பயிரிடப் பட்டது. அரசுக்குச் சொந்தமான வனப்பகுதிகள் மலையில் பல்வேறு இடங்களிலும் உள்ளது. அங்கெல்லாம் இந்த மாதிரியான சுறுசுறுப்பைப் பார்க்க முடிய வில்லை. விவசாயிகள் மத்தியில் இம்மரங்களுக்கு எதிராகச் சிறு கொந்தளிப்பும் எதிர்ப்பும் ஏற்பட்டதால் MGR அரசு கொள்கையளவில் தைலமரங்களைப் பயிரிடுவதில்லை என்று அறிவித்தது. அறிவிப்போடு சரி வனத் துறையின் நாற்றாங்காலில் தைல மரக்கன்றுகள் எப்போதும் இருந்து கொண்டே இருப்பது அவர்கள் தைலமரங்களை தொடர்ந்து பயிரிட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தும். சுமார் 40 வருட காலமாக கொடைக்கானல், நீலகிரி, முதலிய மலைப்பகுதிகளிலும் பாபநாசம், மணிமுத்தாறு மலைப்பகுதிகளிலும் இம்மரங்கள் தொடர்ந்து பயிரிடப்படுகின்றன.

*தைலமரங்கள் நிலத்தடிநீரை அதிமாக உறிஞ்சி ஆவியாக்குதல் செய்வதால் நிலத்தடி நீராதாரங்களைக் காப்பாற்றுவதற்கு இம் மரங்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற அடிப்படையில் எதிர்ப்பு உருவானது. இம்மரங்கள் மிகவேகமாக வளரக்கூடியது. கடும் வறட்சியையும் தாங்க வல்லது என்றும், விவசாயிகள் கூறுவது போல இம்மரங்கள் அதிக அளவில் நிலத்தடி நீரை உறிஞ்சி இலைகள் வழியாக வெளியேற்றுவதில்லை என்று எதிர் வாதத்தை வனத்துறை முன் வைத்தது. உண்மையான காரணங்கள் இரண்டு. ஒன்று நிலத்தடி நீராதாரங்களை அழிக்க இம்மரங்கள் உதவியாக இருக்கும். மேலும் மழையளவும் கட்டாயம் குறையும். இதை நடைமுறையில் இத்தைலமரங்கள் பயிரிடப்பட்ட இடங்களைச் சுற்றியுள்ள இடங்களில் உடனடியாக உணரமுடிந்தது. அதனால்தான் விவசாயிகள் உடனே எதிர்ப்பு தெரிவித்தனர். இம் மரத்தின் கட்டைகள் பலம்பொருந்திய நபர்கள் நடத்தும் தொழிலுக்குத் தேவைப்படுவதே. இத்தொழிலுக்கு உதவாத கனங்குறைந்த கட்டைகள் விறகாகப் பயன்பட்டன.

தைலமரங்கள் பயிரிடப்பட்ட நிலங்களில் இதற்கு முன்பு ஆடு     மாடுகளுக்குப் பயன்படும் வேறுவகைத் தாவரங்கள் மரங்கள் இருந்தன. அதன் தழைகள் ஆடுமாடுகளுக்குத் தீனியானது. யூக்கலிப்டஸ் மரத்தின் எந்தப் பகுதியும் ஆடு மாடுகளுக்குப் பயன்படாது. அதன் இலைகள் மக்கி மண்ணுக்கு உரமாவதுவதற்கும் நீண்டகாலமாகும் . அப்படியரு நல்லமரம்! இத்தைலமரத்தின் அருகில் எந்த வகை செடி கொடிகளும் வளருவதில்லை. இதனால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட புதிய தொந்தரவு இதுவரை இக்காடுகளைச் சார்ந்திருந்த ஆடுமாடுகள் தங்கள் உணவுக்காக பயிர் சாகுபடி இடங்களை அணுகியதே. வெளியே தெரியாத இழப்பு காலங்காலமாக இந்த ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த அரியவகை மூலிகைச்செடிகள் மாறிய சூழலுக்குத் தாக்குப் பிடிக்காமல் காலப்போக் கில் அழிந்து போனது. உலக எரிபொருள் தேவை அதிகரிக்கும் என்பதால் ஐக்கியநாடுகள் சபை சில மரவகைகளை வளர்க்க சிபாரிசு செய்தது, அந்தப் பட்டியலில் இம்மரம் இடம் பெயரவில்லை. மாஞ்சோலைப் பகுதியில் (ஊற்று) ஊத்து இன்று இப்பெயரின் காரணத்தையே இழந்து வறண்டு காணப்படுவதும் 60களில் கடும் மழையை சந்தித்த இப்பகுதி மக்களின் நேரடி அனுபவமும் ஊற்று என்று ஒரு நிலப்பரப்பை அழித்ததும் இதை விளக்கும்.

அழிப்பு வேலைகளை 1920 வாக்கிலேயே செய்யத் தொடங்கி விட்டனர். மலைகளில் தான் முதலில் கை வைத்தனர். அவர்களின் குறி நீராதாரங்களின் மீதிருந்தது. உண்ணிப் புதர்களை (Lantena) மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச் சரிவுகளிலும் தமிழ் நாட்டு உள்பகுதி மலைகளிலும் பரப்பினர். இப்புதர்கள் பிறத்தாவர வகைகளை வளர விடாமலும், தானே மெல்ல மெல்ல மலைப்பகுதிகளில் பரவி மலையின் அடர்த்தி பழைய சூழல் முதலியவைகளை சீர் குலைத்தும், இறுதியாக மழையளவையும் குறைக்கும். இத்தாவரங்கள் வறட்சியையும் தாங்கும் சக்தி படைத்தவை. ஆடு மாடுகளாலும் இவைகளுக்கு ஆபத்தில்லை. தாமிரபரணி பாசனப்பகுதிகளில் இது கடற்கரை வரையிலும் பரவி உள்ளது. இதன் லட்சணம் தெரியாமல் சிலர் இதை அலங்காரச் செடியாக வளர்க்கிறார்கள்.

1940களில் வெள்ளையர்கள் அறிமுகப் படுத்திய தாவரங்கள் ஆகாயத்தாமரை, நெய்வேலி காட்டா?மணக்கு மலையடி வாரத்திலிருந்து பாசனப்பகுதியின் இறுதிப் பகுதி வரையிலும் பாசன ஆதாரங்களான கால்வாய்கள், குளங்கள், வாய்க்கால்கள், சமீப காலங்களில் வயல் வெளிகளையும் இத்தாவரங்கள் நாசமாக்கியுள்ளன. செடிவகை தாவரங்கள் பல அறிமுகமாகி இருந்தாலும் 1950களின் கடைசிக் காலத்தில் அமெரிக்கர்கள் பரப்பிய பார்த்தீனியனே* மிகப் பெரிய நாசத்தைச் செய்து கொண்டிருக்கிறது. இதே கால கட்டத்தில் அவர்கள் பரப்பிய தென்னமெரிக்க சீமைக்கருவேலின் ஆக்கிரமிப்பு சூழலியளாளர்களைப் பயமுறுத்துமளவிற்கு உள்ளது. இத்தாவரங்கள் நாட்டில் பரவிய வேகத்தைப் போலவே இத்தாவரங்கள் இங்கு வந்த பொய்க்கதையும் பரவியது. அது பார்த்தீனியச் செடி கோதுமை மூலமாகவும் சீமைக்கருவேல் *சைபீரியா விலிருந்து காமராஜர் கொண்டு வந்ததாகவும். இக்கதைக்கான காரணம் தெரியவில்லை. ஆனால் இக்கதை எதற்காக ஜோடிக்கப்பட்டது? அமெரிக்கர்கள் இதன் பின்புலத்தில் இருக்கிறார்கள் என்பது தெரியக்கூடாது என்பதற்காகவா?.

ஆகாயத்தாரை அல்லது வெங்காயத்தாமரை

தண்ணீரில் மிதக்கும் தன்மையுள்ள இத்தாவரம் 20 நாட்களுக்குள் தன் பரப்பளவை இரண்டு மடங்கு அளவுக்கு பெரியதாக்கும். மேம்போக்காகப் பார்க்கையில் இத்தாவரம் மாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படுகிறது. இத்தாவரம் குறித்து நடந்த பட்டிமன்றத்தில் இத்தாவரத்தின் நீர்த்தேவை அதிகமா அல்லது இத்தாவரம் இல்லாத நீர்நிலைகளில் வெப்பத்தால் வெளியாகும் நீரின் அளவு பெரிதா? என்று. தீர்ப்பு விபரம் தெரியாது. இத்தாவரத்தை பசுந்தழை உர மாக பயன்படுத்தலாம் என்ற யோசனையையும் வேளாண் துறையினர் சொன்னதுண்டு. அதாவது இத்தாவரத்தை விவசாயிகளே தங்கள் வயல்களிலும் பயிரிடும்படிக் கூறுகிறார்களா? அல்லது அந்த அளவிற்கு அதிகாரிகள் அறியாமையின் அவதாரமாக விளங்குகிறார்களா? சாண எரிவாயுக் கலங்களில்      இத்தாவரத்தை அரைத்து கூழாக ஊற்றி அதாவது சாணத்திற்குப்பதில் எரி வாய்வு உற்பத்தி செய்யாலாம் என்றும் யோசனை சொன்னார்கள். அதாவது நம்நாட்டில் உள்ள எல்லாச் சாணத்தையும் நாம் எரிவாயுவாக மாற்றி விட்டோம். அதனால் எரிவாயுவுக்காக இதை சிபாரிசு செய்கிறார்கள்...?

ஆபத்துக்கள்: நீர்நிலைகளை இவைகள் மூடி விடுவதால் நீருக்குப் போதிய சூரியவொளி கிடைக்காத காரணத்தால் முன்பு அந்நீரில் வாழ்ந்த பலஅரிய வகை மீன்களும் இன்னபிற உயிரினங்களும் அருகியும் காணாமலும் போய்விட்டன. இத்தாவரங்கள் காரணமாக கால்வாய்களும் குளங்களும் மேடாகியும் வருகிறது. வெள்ளக் காலங்களில் நீரில் மிதந்து மொத்த மொத்தமாக வருகையில் பல சந்தர்பங்களில் நீர் வழிகளை அடைத்து விடுவதால் பலத்த வெள்ளச் சேதங்களை எதிர்கொள்ள வேண்டியதாகிறது. இத்தாவரத்தை       ஆகாயத் தாமரை என்றும் வெங்காயத் தாமரை என்றும் கூறுவர். குளிர் தாமரை என்ற நம் நாட்டு மூலிகைச் செடியும் இதுபோலவே நீரில் மிதக்கும் தன்மையுடயதாயினும் அது மிகச்சிறிய செடி. மேலும் அதன் வளர்ச்சியும் மிகவும் மந்தமாக இருக்கும். இந்த வகைச்செடி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அந்த மூலிகைச் செடி அருகிக் கொண்டே செல்கிறது.

நெய்வேலி காட்டாமணக்கு

*இத்தாவரத்தை நெய்வேலி காட்டாமணக்கு என்றும் ஆடாதொடை என்றும் அழைக் கிறார்கள். (ஆடாதொடை    என்பது நம்நாட்டு மூலிகைத் தாவரம். இந்நச்சுத் தாவரத்தையும் இதேபெயரில் சில இடங்களில் அழைக்கிறார்கள்.) இதற்கு விதை கிடையாது. இதன் கிளைகளை ஒடித்து நடவேண்டும், துளிர்த்துவிடும். இவைகள் நீரிலேயே இருந்தாலும் அழுகாமல் வளரும். கடும் வரட்சியையும் தாங்கும் நீர்நிலைகளை மேடாக்கியதில் இதன் பங்குகணிசமானது. வெள்ளக்கால நீர் உடைப்புகளுக்கு இவைகளே மூலகாரணம் மேலும் கடைமடைகளுக்கு நீர் செல்லாமல் தடுப்பதும் இவைகளே. 4 அல்லது 5 வருடங்களானால் இதை வெட்டி அப்புறப்படுத்த கோடாலி வேண்டும். அந்த அளவிற்கு பருத்தும் வளர்ந்தும் விடும். நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள   நிலங்களை ஆக்கிரமிக்க இச்செடியைப் பயன்படுத்து கின்றனர். சமீபகால ஆபத்து இச்செடிகளால் இதில்     ஊறிய நீரினால், குளத்துத் தண்ணீரால் களைபறிக்கும் பெண்களின் கைகால்களில் அரிப்பெடுக்கிறது. மீன்களுக்கு புதுப்புது நோய்கள் ஏற்படுகின்றன.

சீமைக்கருவேல்

இம்மரங்கள் நீர்க்கருவை என்றும் அழைக்கப்படுகின்றன. 1950களின் பிற்பகுதியில் வேளாண் துறையினரால்    அறிமுகப்படுத்தப்பட்டது. வேகமாக வளரும் உயிர்வேலியாக எளிதாக வளர்க்கலாம். ஆடுமாடுகள் அழிமாணம் கிடையாது. இப்படியான கவர்ச்சிகரமான வார்த்தைகளைக்கூறி விவசாயிகளை வளர்க்கத் தூண்டினர். இவ்வளவு காணாதா நம்மவர்களுக்கு? இன்று சுற்றுப்புறச் சூழல் பயங்கரவாதியாக மொத்த விவசாயத்தையும்      அழிக்கும் விதமாகவும் ஏராளமான நாட்டு மூலிகைகளையும் அழித்து, செழித்து நிற்கிறது. இம்மரத்தின் விதைகளை சோவியத் யூனியன் சைபீரியாவில் இருந்து அன்றைய தமிழக முதல்வர் திரு காமராஜர் கொண்டு வந்ததாக பரவலாக கதைகள் சொல்லப் பட்டன. இதன் பழங்கள் நெத்துக்கள் மட்டுமே ஆடு மாடுகள் தின்னத் தகுந்ததாக உள்ளது. சூழலியலாளர்கள் இம்மரத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்கையில் கிராமமக்கள் வைக்கும் எதிர்வாதம் இம் மரங்கள் இருப்பதால்தான் பஞ்ச காலங்களில் இவைகளை வெட்டி விற்பனை செய்து உயிர்வாழ்வதாகக் கூறுவது. இம்மரங்களாலேதான் பஞ்சமே உருவாகும் உண்மையை இன்றுவரையும் அவர்களுக்கு புரியவைப்பதில் சூழலியளார்களால் முழுவெற்றி அடைய முடியவில்லை. இம்மரங்கள் தென் அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்டது. எதற்காக? கடும் வறட்சியையும் தாங்கும். மழையைக் கவரும் சூழலை உருவாக்காது. இச்சீமைக் கருவையும் தைலமரமும் வறட்சியைத் தாங்கும் என்று சொல்பவர்கள் இதன் இன்னொரு தன்மையான மழையை கவராத தன்மையை சொல்வதே இல்லை.

       ஆனால் இம்மரங்களை இங்கு கொண்டு சேர்த்த அமெரிக்கர்கள் இதன் மழையைக் கவராத தன்மைக்காகவே இவைகளை அறிமுகப்படுத்தினர். நாட்டு உடை மரங்களையும் இந்த மரத்தையும் அருகருகே 10, 15 வருடங்கள் வளர்த்தால் நாட்டு உடைகள் சீமைக்கருவேலை விட அதிக விறகு தருவதைக் காணலாம். இன்றும் விறகுக்காக அனுபவம் உள்ள விவசாயிகள் நாட்டு உடைகளைத்தான் வளர்க்கிறார்கள். மேலும் நாட்டு உடைகள் இச்சீமைக் கருவேலையும்விட வறட்சியைத் தாங்கும். நிழலுக்குகூட ஒதுங்குவதற்கு பயன்படாத இந்த மரம் உலகத்திலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமாக இருக்குமோ என எண்ணத்தோன்றும் அளவிற்குப் பரம்பொருளைப் போல் தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ளன. ஐ.நா. வெளியிட்ட எரி பொருள் தேவைக்காக    பயிரிடச் சிறந்த மரங்கள் பட்டியலில் இந்த மரம் கிடையாது என்பதே இதன் விபரீதத்தை விளங்கவைக்கும்

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சாமிநாதன் பேசும் போது, ... இந்த கட்டடத்திற்கு வெளியே நிறைய வேலிக்காத்தான் வளர்ந்து நிற்கின்றது. நம் விஞ்ஞானிகள் வேலிக்காத்தானின் மரபணுவில் இருந்து வறட்சியைத்தாங்கும் பயிர் ரகங்களை உருவாக்கும் ஆய்வில் உள்ளனர். ஆனால் இதே வேலிக்காத்தான் சிலருக்கு வேண்டாத பொருளாக உள்ளது. ராமநாதபுரம் சிவகங்கை மாவட்ட மக்கள் வேலிக்காத்தானை வளர்த்து வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். எனவே பூமியிலுள்ள எல்லா உயிர்களையும் காப்போம். அதன் மூலம் மனிதகுலத்தை வளப்படுத்திக் கொள்வோம் என்றார்.

சைபீரியாவிலிருந்து வந்ததாகக் கூறுவதன் நோக்கம் பழி அமெரிக்கருக்கு வந்துவிடக் கூடாது என்பதே. இம் மரங்கள் சைபீரியக் குளிர் பகுதியில் வளரவே முடியாது. இந்தக் காரணத்தால்தான் இம்மரங்களால் மலைப்பகுதியை ஆக்கிரமிக்க முடியவில்லை. 1920களில் அவர்கள் அனுப்பிவைத்த உண்ணிப் புதர்களைவிட 1950களில் அவர்கள் அனுப்பிய இம்முள்மரங்கள் அதிகமான இடத்தைப் பிடித்துள்ளது சமவெளிப் பகுதிகளில் இம்முள்மரங்கள் பரவியுள்ள அளவிற்கு உண்ணிப்புதர்கள் மலைப்பகுதிகளில் 1920 இல் அறிமுகப்படுத்தி இருந்தாலும் அமெரிக்கர்கள் எதிர்ப்பார்த்த அளவு மலைகளில் பரவவில்லை. மிகத் துல்லியமாக தேர்வு செய்த பின்புதான் அமெரிக்கர்கள் நமக்கு இம்மரங்களையும் கதைகளையும் அனுப்பி வைத்துள்ளனர்.

*1978 இல் The Tata Fundamental Research Institute மூலமாக சேஷகிரி எழுதி National Book Trust of Indiaவால் வெளியிடப்பட்ட The Weather Weapon, The Food Weapon என்ற இரண்டு புத்தகங்கள் இந்தியாவின் சுற்றுச்சூழல்களைக் கெடுப்பதற்கு இந்திய விவசாயச்சூழலை அழிப்பதற்காக என்னென்ன காரியங்கள் நடந்துள்ளன என்று விலாவாரியாகத் தெரிவிக்கிறது. அதில் பார்த்தீனியன் குறித்துள்ளச் செய்தி; தென்மேற்கு பருவக்காற்று காலங்களில் விமானங்கள் மூலமாக சுமார் 15,000 அடி உயரத்திலிருந்து பார்த்தீனிய விதைகள் தூவப்பட்டது என்பதற்கு பலகட்டுரைகளை ஆதாரமாக தந்திருந்தார். மேலும் இச்செடிகள் பூத்து காய்த்தால் குறைந்தது பத்து லட்சம் விதைகள் வரை உருவாகும் என்றும் இவை காற்றில் மிதந்து சுலபமாக வேறிடங்களுக்குச் செல்லுமென்றும் இவ்விதைகளின் முளைப்புத்திறன் 30 வருடங்கள் வரை நீடிக்கும் என்றும் ஆடு மாடுகளால் இச்செடிக்கு அழிவில்லை என்றும் இப்பூக்களின்  மகரந்தம் ஆஸ்துமா நோயைப் பரப்பவல்லது என்றும் இதன் இலைகள் நம்மீது பட்டால் அரிப்பெடுக்கும். நல்ல வறட்சியையும் தாங்கும் என்றும் எழுதியிருந்தார். பழைய கதை என்னவென்றால், நமக்கு அமெரிக்கர்கள் அனுப்பிய கோதுமையுடன் இப்பார்த்தீனியக் களைச்செடியின் விதைகள் கலந்து வந்து விட்டதாகவும், அது கோதுமையுடன் இரயிலில் கொண்டு செல்லப்பட்டபோது அப்பாதைகளில் சிந்தியதால் இந்நாடு முழுவதும் பரவிவிட்டது சமீபத்தில் பசுமை விகடன் இதழில் இக்கதையை ‘மலரும் நினைவாக’ ஆசிரியர் எண்ணிப்பார்த்து ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் கோதுமையுடன் இப்பார்த்தீனியன் போன்று ஏதாவது ஒரு பிசாசு வந்துவிடக்கூடாது என்று அப்பாவித்தனமாக வேண்டிய செய்தி     வெளியாகி இருந்தது. மேற்படி புத்தகங்கள் வெளியாகி 30 வருடங்கள் ஆனபிறகும் ஒரு பெரிய நிறுவனம் நடத்தும் பத்திரிகையின் ஆசிரியர் இப்படி வேண்டுதல் செய்தால் இந்திய விவசாயிகளின் தலையெழுத்து இவ்வளவு மோசமாகவா ......

இந்தியாவில் பசுமைப்புரட்சி செயல்படுவதற்கு ஏதுவாக பசுமைப்புரட்சியுடன் தொடர்புடைய வேறு சில பூர்வாங்க வேலைகள் தொடங்கப்பட்டன. இவைகள் தனித்தனி நிகழ்வுகள் போலக் காணப்பட்டாலும் பசுமைப்புரட்சியைத் திட்டமிட்டபடி நடத்துவதற்கு இவைகளும் இன்றியமையானவை என்பதால் இந்நடவடிக்கைகள் 1965 க்குள் நடத்தி முடிக்கப்பட்டன.

பால் உற்பத்தி என்ற பெயரில் வளர்ந்து வரும் இந்திய மக்கள் தொகைக்கு ஏற்ப எல்லோருக்கும் பால் தேவை என்பதால் ஐரோப்பியச் சீமைப் பசுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இப்பசுக்கள் நேரடியாக இறக்குமதி செய்தால் இந்தியச் சூழலைத் தாங்காது என்பதால் 50 விழுக்காடு ஐரோப்பிய மாட்டின் விந்தும் 50 விழுக்காடு இந்திய மாட்டின் விந்தும் சேர்த்து உருவாக்கிய பசுமாடுகளை அறிமுகப்படுத்தினார்கள். இவ்வகை மாடுகளுக்கு மட்டுமே வங்கிகள், மற்றும் பால் வள கூட்டுறவு அமைப்புகள் கடன் உதவி செய்யும் படியாக விதிகளையும் உருவாக்கினர். அம்மாடுகள் விலை அதிகம் என்பதால் கடன் மூலமாக மட்டுமே அவைகளைப் பரப்ப முடியும் என்பதால் இந்த ஏற்பாடு.

இந்த மாடுகளால் நம்நாட்டு வெயிலைத் தாங்க முடியாது. ஆகையால் இவை மேய்ச்சலுக்கு அனுப்ப முடியாது. அடர், உயர் தீவனங்கள் அளித்தால்தான் இவைகள் நன்றாகப் பால் சுரக்கும். மிக முக்கியமாக இதன் காளைகள் திமில் இல்லாமலும், வெயிலைத்தாங்க முடியாததாலும், உழுவதற்கோ, வண்டி இழுப்பதற்கோ பயன்படாது என்பதால் நீங்கள் டிராக்டரை கட்டாயம் வாங்க வேண்டும் என்ற நிலையும், அவை லட்சக்கணக்காண ரூபாய் விலை உள்ளவையாக இருந்ததால் அதற்கு வங்கிகளில் தாராளக் கடன் வழங்கல்களும் உருவாக்கப்பட்டன. நமது கோமாதா சிந்தனையால் ஜெர்சி மாடுகள் மேயக்கூடத் தெரியாத அப்பாவிகளாக இருந்ததையும் சகித்துக் கொண்டு அவைகளை காக்கும்படியாக நம்மை தயார்படுத்திக் கொண்டோம்.. பசுந்தீவனங்களை விரும்பும் அளவிற்கு இவை உலர்ந்த வைக்கோலை விரும்புவதில்லை. ஆகையால் பசுந்தீவனங்களும் நமக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.

கினியாப் புல், என்.பி.21 கோ.1 என்று வரிசையாக இப்பசுந்தீவனங்களை அறிமுகப் படுத்தினார்கள். இம்மாடுகளுக்கு சீமை மருந்துகளும் விற்பனைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

*நம்நாட்டு ஊடகங்கள் இரண்டு விதமாக செயல்படுகின்றன. தாய் மொழியில் ஒருவிதமாகவும் ஆங்கிலத்தில் வேறுவிதமாகவும் அல்லது இன்னும் கொஞ்சம் அதிகமான செய்திகள் ஆங்கிலேயர்களுக்கும் முழு உண்மைகள் சொல்லப்படுவதில்லைகாலங்காலமாகச் சொல்லப்படுகின்றன. அதில் ஆங்கிலேயர்களுக்காக பஞ்சாப் பகுதி விவசாயிகள் டிராக்டர்கள் வாங்கி சீரழிந்ததை The Hindu கொஞ்சம் சொல்லியது. அது சொல்லாதது; ஒரு டிராக்டர் வாங்க அரசும் வங்கியும் சில விதிமுறைகளை வகுத்துள்ளது. தமிழ் நாட்டில் பாதிக்குப் பாதி இந்த விதிமுறைகளை ஏமாற்றித்தான் இவ்விற்பனைகள் நடந்துள்ளது. மேலும் இதில் கொடுக்கப்படும் கொட்டேசனில் தில்லு முல்லு செய்து மார்ஜின் பணம் கட்டாமலும், ரொக்கமாகப் பணம் 50.000 வரை   கைக்கு கிடைக்கும் படியாகவும் ஏற்பாடுகள் செய்து தரப் படுகிறது. இதுபோன்ற வழிமுறைகளால்தான் இந்த அளவிற்கு அவர்களால் டிராக்டர்களை விற்பனை செய்ய முடிந்தது. ஒழுங்காகப் பணம் கட்டியவர்கள் எண்ணிக்கையைச் சரிபார்த்தால் இந்த உண்மை விளங்கும்.

தொட‌ர்ச்சி அடுத்த‌ இத‌ழில்..

Pin It