மனிதா
மரம் ஒன்றாவது நட்டு வை
மனிதப் பிறவியை நிறைவு செய்
நிழல் தர மரம் வேண்டும் அந்த
மரம் நட உன் கரம் வேண்டும்
படர்ந்திடும் செடி கொடிகள் வேண்டும் ஆங்கே
பறவைகள் நிதம் வந்திடல் வேண்டும்.
வீட்டிற்கு அழகு
குழந்தைகளின் ஆட்டம் கொண்டாட்டம்
காட்டிற்கு அழகு
ஓடை, நதிகளின்
பறவை, மிருகங்களின் நடமாட்டம்
பேரரசன் அசோகன்
மரங்களை நட்டார்
குளங்களை வெட்டினார்
இது மனப்பாடப் பகுதி
பேராசைக்காரன்
மரங்களை வெட்டி
குளங்களை நிரப்பி
விளை நிலங்களை வீணாக்கி
மனைப் பிரிவுகளாக்கி...
இது மரணப் பாதையின்
முதல் பகுதி

பிறந்த வீட்டையும், நாட்டையும் மறப்பாயா?
மனிதா
உனை வளர்த்த மரத்தையும், மாட்டையும்?
காட்டையும் மறப்பாயா?
அன்று
மண்ணையும்,
மழை நீரையும் சார்ந்த
விவசாய வாழ்க்கை
இன்று
எண்ணையையும்,
பங்குச் சந்தையையும் சார்ந்த
விவசாய வாழக்கை
மனிதா
மரம் நட உன் கரம் வேண்டும்
அது செழித்து வளர்ந்திட
உன் நெஞ்சில் உரம் வேண்டும்.

Pin It