சுனாமியால் கல்பாக்க அணு உலைகளுக்கு பாதிப்பு வராது ஒருவேளை பாதிப்பு வந்தாலும், அதை எதிர்கொள்வதற்கு கால அவகாசம் இருப்பதாக அணுசக்தி நிர்வாகம் கூறி வரும் நிலையில் இது தொடர்பான சில கேள்விகளை (Dose) சூழல் பாதுகாப்பிற்கான மருத்துவர் குழு முன் வைக்கிறது. அதற்கான விடைகளைத் தேடும் கட்டாயத்தில் தமிழக மக்கள் இருப்பதாக (Dose) நம்புகிறது.

கல்பாக்க அணு உலைகளிலிருந்து 104 கி.மீ. தொலைவிலும் பாண்டிச்சேரியிலிருந்து 100 கி.மீ. தொலைவிலும் கடலுக்கடியில் எரிமலை இருப்பதாக சர்வதேச அணுசக்திக் கழகம் கூறுவதை நிர்வாகம் மறுக்க முடியுமா? அந்த எரிமலை (உலக எரிமலை நிறுவனத்தால் அதற்கு இடப்பட்ட எண் 0305 & 01) 1757 ஜனவரி 20 நாள் வெடித்துச் சிதறியதையும் மறக்க முடியுமா?

2001 செப்டம்பர் 25ம் நாள் பாண்டிச்சேரியிலிருந்து கடலுக்கடியில் ஏற்பட்ட நிலநடுக்கமும் (ரிக்டர் அளவுகோலில், 5.5 ) 1995 ஆம் ஆண்டு திரு. ஏ.எஸ். சுப்பிரமணியம் அன்கோ, அவர்களால் இந்திய பூகோள பத்திரிகையில் ‘கல்பாக்கத்தின் கடல் தரையிலிருந்து வேதாரண்யத்தின் கடல்தரை வரை உள்ள பகுதியில் பூமியின் ஆழத்தில் எரிமலை செயல்பாடுகளின் காரணமாக பிதுங்கிக் கொண்டிருக்கும் பொருள் ஒன்று கடல் தரையிலிருந்து 6 முதல் 8 கி.மீ. ஆழத்திலிருக்கிறது. என்று வெளியான செய்தியிலிருந்தும் இப்பகுதி நிலையற்றத் தன்மையை கொண்டுள்ளதாக உள்ளது என்பதிலிருந்தும் இப்பகுதியில் எரிமலை செயலூக்கத்துடன் உள்ளது என்பதை நிர்வாகம் ஏற்குமா?

ஆக விசயங்கள் இவ்வளவு மோசமாக இருந்தும்கூட, ஃபுகுஷிமா விபத்திற்குப் பின் பிரதமர் / அணுசக்தி நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்ட குழுக்கள், சர்வதேச அணுசக்திக் கழகம் எரிமலை பாதிப்புகளை பரிந்துரைத்தும் கூட, கல்பாக்க எரிமலையால் அணு உலைகளுக்கு ஏற்படும் பாதிப்பை கணக்கில் கொள்ளாமலிருப்பதும் சுனாமியால் பாதிப்பு வராது எனத் திரும்ப திரும்பக் கூறுவதும் நியாயமா?

ஆய்வாளர் திவ்யலட்சுமி குழுவினரால் 2011ல் செய்யப்பட்ட ஆய்வில் கல்பாக்க அணு உலைகளுக்கு அருகில் கடலுக்கடியில் உள்ள பாலாறு பெரும்பள்ளம் எப்படி சுனாமி அலைகளை கல்பாக்க அணு உலைப் பக்கம் திருப்பி விட்டது எனத் தெளிவாக இருக்கையில், இப்பள்ளத்தாக்கினைக் குறித்து முழுமையான ஆய்வை மேற்கொள்ளாமலிருப்பது சரியா?

அந்தமான் நிகோபார் தீவுகளின் கடல் பகுதி-யிலிருந்தும் இந்துப் பெருங்கடலின் இந்திராணி நிலப் பிளவின் தென் கோடியிலிருந்தும் உருவாக வாய்ப்-புள்ள சுனாமிகள் இந்தியாவின் கிழக்கு கடற்கரையை வெகுவாகப் பாதிக்கும் தன்மை கொண்டவை என்பதை சுனாமி நிபுணர்களான டாட் மூர்த்தியும், அருண் பப்பத்தும் 1999ம் ஆண்டில் தம் ஆய்வுக் கட்டுரையில் வெளியிட்டுள்ளதை அணுசக்தி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்துவது நியாயம்தானா? சுற்றுப்புற மக்கள் மத்தியில் (8 கி.மீ.சுற்றளவு) நிர்வாகம் மேற்கோள் காட்டும் மஞ்சுளா தத்தா அவர்களால் செய்யப்பட்ட சுகாதார ஆய்வறிக்கை மீதான (Dose) குழுவினரின் கேள்விகள்:

உலகில் அணு உலைகளால்       சுற்றுபுற மக்களுக்கு பாதிப்பில்லை எனக் கூறும் நிர்வாகம் அமெரிக்கா, ஜப்பான் போன்ற மேலை நாடுகளில் பணியாளர்-களுக்கும் சுற்றுப்புற மக்களுக்கும் பாதிக்-கப்-பட்டவர்-களுக்கும் இழப்பீட்டு தொகை வழங்க தனி¢சட்டங்களே இருப்பது குறித்து என்ன பதில் சொல்லப் போகிறது? அணு உலைகளால் பாதிப்-பில்லை எனில் இழப்பீட்டுத் தொகை வழங்க சட்டங்கள் எதற்கு? நிர்வாகம் பதில் கூறுமா?

மஞ்சுளா தத்தா அவர்களின் ஆய்வறிக்கையை கூர்ந்து கவனித்தால் பல உண்மைகள் தெளிவாக விளங்கும்.

women_370தைராய்டு புற்று நோயைப் பொறுத்தவரை ஒருவர்தான் பாதிக்கப்பட்டதாக சொல்கிறது அந்த அறிக்கை. ஆனால் மருத்துவர் புகழேந்தி அவர்களால் 2010ல் பிரபல பத்திரிகையில் வெளி யிடப்பட்ட அறிக்கையில் மூன்று பேர் தைராய்டு புற்று நோயால் ஒன்றரை வருட கால அளவிற் குள் 5 கி.மீ சுற்றளவில் இறந்து போனது தெளிவாக இருக்கையில் 2011ல் வந்த இவ்வறிக்கையை எப்படி நம்புவது?

5கி.மீ சுற்றளவில் ஒன்றுக்கும் மேற்பட்ட தைராய்டு புற்றுநோய் பாதிப்பை நாங்கள் ஆதாரங்களுடன் நிரூபித்தால் அதை சரிபார்க்கும் பொறுப்பை நிர்வாகம் ஏற்குமா?

5கி.மீ. சுற்றளவில் தைராய்டு புற்றுநோய் பாதிப்பு அதிகம் இல்லை என நிர்வாகம் மேற்கோள் காட்டும் ஹேண்டு இன் ஹேண்டு தொண்டு நிறுவனத்தின் அறிக்கையை மருத்துவர் புகழேந்தி அவர்கள் பலமுறைக் கேட்டும் தராமல் மறுப்பது ஏன்?

தைராய்டு வீக்கம் / பாதிப்பு என்பதும், தைராய்டு புற்று நோய் / ஆட்டோ இம்யூன் தைராய்டு வியாதி, வேறு வேறாக இருக்கலாம் என இருந்தும் தைராய்டு புற்றுநோய் குறித்தோ, ஆட்டோ இம்யூன் தைராய்டு வியாதி குறித்து (இவை இரண்டும்தான் அணு உலை வாயுக் கழிவான அயோடின் 131ஆல் ஏற்படலாம் என இருந்தும்) முழு புள்ளி விவரத்தையும் அளிக்காமல் இருப்பது நியாயமா? தைராய்டு புற்றுநோய்/ஆட்டோ இம்யூன் தைராய்டு வியாதிக்கான நாட்டின் சராசரி அளவை ஏன் ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டவில்லை?

வெறும் தைராய்டு பாதிப்பை மட்டும் கணக்கில் கொண்டால்கூட நாட்டின் சராசரி தைராய்டு பாதிப்புடன் பொருத்திப் பார்ப்பது சரியாகுமா? ஆய்வில் எடுத்துக்கொண்ட பாதிக்கப்பட்டோரின்    எண்ணிக்கை குறைவாக இருக்கும்போது மட்டுமே  (1000க்கும் கீழ்) நாட்டின் சராசரியை எடுத்துக் கொள்ளலாம் என பொதுவாக இருக்கையில் 23,000 பேர் மத்தியில் செய்யப்பட்ட ஆய்வில் நாட்டின் சராசரியை எடுக்கத் தேவையில்லைதானே? சராசரியை கணக்கில் கொள்வது என முடிவு எடுத்தால் இந்தியாவில் அணு உலைகள் அமைந்த பகுதியிலுள்ள மக்களுக்கு ஏற்படும் தைராய்டு பாதிப்பின் சராசரியை எடுத்துக் கொள்வது இன்னமும் பொறுத்தமாக இருக்குமல்லவா?

உண்மையில் அணு உலைகளுக்கு அருகில் / தொலைவில் உள்ள நோய்களை உலக சுகாதார நிறுவனத்தாலும், நோய் தடுப்பு மையத்தின் நிறுவனத்தாலும்(CDC) உருவாக்கப்பட்ட statcalc EP16 மென்பொருள் மாதிரியை கணக்கில் கொண்டால் அணு உலைக்கருகில் உள்ள மக்களிடத்து 8 நோய்களின் பாதிப்பு 350 சதவீதம் அதிகம் உள்ளது என்பதே அதிர்ச்சி கலந்த உண்மை!

குறிப்பாக தைராய்டு பாதிப்பு, நோய், கட்டிகள், மூளை வளர்ச்சி பாதிப்பு குழந்தையின்மை, புற்றுநோய், வயிற்றுப்புண், டி.பி., இவையனைத்தும் அணு உலைகளுக்கு அருகிலுள்ள மக்களிடத்து புள்ளிவிவர அடிப்படையில் அதிகம் இருப்பதை நிர்வாகம் மறுக்க முடியுமா?

15,000 பேருக்கு செய்த இரத்த ஆய்வில் ஒருவருக்குக்கூட ரத்தப் புற்றுநோய் பாதிப்பில்லை என்று கூறும் ஆய்வறிக்கை உண்மைதானா? நாங்கள் சுற்றுப்புறத்தில் இரத்தப் புற்று நோயால் இறந்தவர்களின் பெயரை வெளியிட்டால் அதை சரிபார்க்கும் பொறுப்பை நிர்வாகம் ஏற்கத் தயாரா? பணியாளர்களுக்கும் சுற்றுப்புற மக்களுக்கும் பாதிப்பில்லை எனக் கூறும் நிர்வாகம் மருத்துவர் புகழேந்தி அவர்களை பணியாளர் / குடும்பத்தினர் மத்தியில் வீடு, வீடாகச் சென்று ஆய்வு நடத்த அனுமதிக்குமா?

22.09.2011 அன்று அணு உலை வளாகத்தில் நடந்த கருத்து கேட்பு நிகழ்ச்சியில் குன்னத்தூர் மக்களும் உய்யாலிகுப்பம் மக்களுக்கும் மஞ்சுளா தத்தா அவர்கள் அந்தப் பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வு யாருக்கும் தெளிவாக தெரிவிக்கப்படவில்லை என குரல் கொடுத்ததிலிருந்து, இந்த ஆய்வு முறையாக நடத்தப்படவில்லை எனும் சந்தேகம் எழுவதால் மஞ்சுளா தத்தா அவர்கள் புதிதாக அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆய்வை மேற்கொள்ளவும் ஆய்வுக் குழுவில் மருத்துவர் புகழேந்தியையும் இணைக்கத் தயாரா? என எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இதுவரை பதில் கொடுக்காமல் இருப்பது எதனால்?

ஆக எரிமலை தொடர்பான அணு உலை பாதுகாப்பு கேள்விகளுக்கும் சுகாதாரம் தொடர்பான மேல் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் விடையளிப்பது நிர்வாகத்தின் கடமையல்லவா?

அணுக் கதிர்வீச்சு பாதுகாப்பிற்கான மக்கள் இயக்கம், கல்பாக்கம்.

Pin It